பழகத் தெரிய வேணும் – 77

கஷ்டப்படு, வலிமை பெருகும்

கொடுத்துவைத்தவன்! பணக்கார வீட்டுச் செல்லப்பிள்ளை! கேட்டதெல்லாம் கிடைக்கிறது!”

 

இவ்வாறு பிறரது பொறாமைக்கு ஆளாகும் ஒருவன் எந்தவித கஷ்டத்தையோ, துயரத்தையோ அனுபவித்திருக்கமாட்டான். அவன் அதிர்ஷ்டசாலிதானா?

 

இல்லை. வாழ்வில் இடர்களைச் சந்தித்து, அவைகளிலிருந்து விடுபடும் முயற்சிகளால்தான் ஒருவன் வலிமை பெறுகிறான்.

 

::மாணவர்களிடமிருந்து நான் கேட்டறிந்த கதை::

காவல்துறையில் பெரிய பதவி வகித்திருந்தவரின் மகன் என் மாணவன் ரசாலி. அதனாலேயே, அவன் வயதுப் பையன்கள் செய்ய அஞ்சிய காரியங்களைத் துணிந்து செய்தான்.

 

பதினான்கு வயதில், தான் எவ்வாறு நீலப்பட வீடியோக்களைக் கடையிலிருந்து வாங்குகிறோம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்தபோது, எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாது கேட்டுக்கொண்டேன்.

 

தன் வகுப்பு நண்பர்களிடமிருந்து காசு வசூலித்து, யார் வீட்டிலேயாவது அவற்றைப் போட்டுக்காட்டுவான். (உடன் வரும் பெண்களுக்கு இலவசம்). அச்சமயத்தில் அவர்கள் `glue sniffing” என்ற முறையில் போதை அடைந்திருப்பார்களாம்.

 

அப்படியென்றால் என்ன?” என்று நான் அசட்டுத்தனமாகக் கேட்க, ஆசிரியைக்கே போதிக்கும் வாய்ப்பு வந்ததே என்ற மகிழ்ச்சியுடன், என்னைச் சூழ்ந்து உட்கார்ந்துகொண்டு, போட்டி போட்டுக்கொண்டு விளக்கினார்கள் பல மாணவர்கள்.

 

அந்த வகுப்பின் மாணவத் தலைவன் ஒருவன் மட்டும் தங்களிடமிருந்து விலகியிருந்தது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

நான் அவனை அழைத்து விசாரிக்க, “பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கின்றன இப்படங்கள்! எனக்குப் பிடிக்கவில்லை,” என்றான்.

 

போதை மற்றும் படங்கள் அளித்த பாதிப்பால், கைரி என்ற பையன் தன்னுடன் வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தான். `வேடிக்கை,’ என்றெண்ணி, அவனது நண்பர்கள் அவளது திமிறலை அடக்கி, உடலுறவுக்கு உள்ளாக்கினார்கள்.

 

அவள் கருவுற்றதும்தான் பெற்றோருக்குத் தெரிந்தது. போலீஸ் விவகாரமாகி, பள்ளிக்கூடத்தில் பலரும் வேடிக்கை பார்க்க, கைரியை விலங்கிட்டு அழைத்துப்போனார்கள்.

 

ரசாலியோ, “என் தந்தை எனக்குப் பக்கபலமாக இருக்கிறார். எனக்கு என்ன பயம்!” என்று திமிராக என்னிடம் கூறினான்.

 

மனம்போனபடி நடக்கலாம், தான் மாட்டிக்கொள்ளாமல் எவராவது பார்த்துக்கொள்வார் என்று, ரசாலியைப்போல் நடப்பவர்களுக்கு மனோபலம் கிடையாது. எத்தனை காலம்தான் பிறரைச் சார்ந்திருக்க முடியும்!

 

நான் இச்சம்பவத்தைச் சிறுகதையாக ஒரு பத்திரிகையில் எழுதினேன்.

 

ஓராண்டுக்குப்பின், வேற்றூரிலிருந்து ஒருவர் என்னைத் தொடர்புகொண்டார். “என் நண்பனும் அந்த வயசிலே இதே காரியம் செய்து, சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான். இப்போ, நல்லாயிருக்கான். சொந்தமா மினிமார்க்கெட் வெச்சிருக்கான்!” என்று கூறினார்.

 

அவன் நல்லாயிருக்கான்,” என்று, அழுத்தமாகப் பலமுறை கூறினார்.

 

`இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளலாமா?’ என்று நீண்ட காலம் யோசித்துவிட்டு, என்னுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்!

 

`நண்பன் செய்தான்’ என்று, தான் செய்ததை வேறு ஒருவரின் தலையில் கட்டப்பார்க்கிறாரோ என்ற ஐயம் எனக்குள் எழுந்தது.

 

யாராக இருந்தால் என்ன!

தவறு செய்து தண்டனை அனுபவித்ததால், நல்லதோர் அனுபவம் கிடைத்திருக்கிறது. இனியும் தவறு செய்யக்கூடாது, நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்ற உறுதி பிறந்திருக்கிறது அவருக்கு.

 

இப்படிப்பட்டவர்களுக்கு உண்மையை ஒத்துக்கொள்ளும் துணிவும், கடின உழைப்பும் இருக்கும்.

 

பழக்கமில்லாத காரியங்களில் ஈடுபடும்போது, அவற்றில் தேர்ந்த பிறரது ஆலோசனையை நாடலாம். அதனால் வலிமை குன்றிவிடாது.

 

எவருக்கும் தனக்குள் இருக்கும் திறமை தெரிவதில்லை. எதையாவது இழந்தபின்னரோ, அல்லது ஏமாற்றம் ஏற்பட்டாலோ, ஆழமாகச் சிந்திக்கும்போதுதான் திறமை வெளிப்படும்.

 

மாறவே மாட்டோம்!

என்ன, இப்படி மாறிவிட்டீங்களே!” என்று பிறரைப் பார்த்து அதிசயப்படுகிறவர், `நாங்க மாறவே மாட்டோம்!’ என்று பெருமை பேசுவார்.

மாற அஞ்சி, ஒரே நிலையில் இருந்தால், புதிய அனுபவங்கள் எப்படிக் கிடைக்கும்?

 

புதிய அனுபவங்களை நாடினால், `பிறரது கேலிக்கோ, ஏச்சுப்பேச்சுக்கோ ஆளாகிவிடுவோமோ!’ என்ற அச்சமே பலரை ஒரே நிலையில் இருக்கச்செய்கிறது. அதிகம் யோசிக்காது, பிறரது கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிடுவர்.

 

மற்றவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்று உன்னிப்பாகக் கவனித்து, அவர்களைக் கட்டுப்படுத்த நினைப்பவர் சுயக்கட்டுப்பாடு இல்லாதவர். ஆனாலும், தலைமைப் பதவியை நாடுபவர்.

 

இந்த உண்மை புரிந்து, இத்தகையவர்களை அலட்சியம் செய்தால், முன்னேறலாம்.

 

::கதை::

தான் மணக்கப்போகிறவர் எப்படி எப்படியோ இருக்கவேண்டும் என்று, (எல்லாப் பெண்களையும்போல்) கனவு கண்டிருந்தாள் சுகன்யா.

 

இறுதியில், அவளுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒருவன் வாய்க்க, `நினைத்ததெல்லாம் நடக்குமா!’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள்.

 

அந்த அனுபவத்தால், ஒரு கணவன் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று புரிந்தது. பிற இளம்பெண்களுக்கு ஆலோசனை கூறினாள்.

 

அவர்களில் எத்தனைபேருக்கு அது புரிந்ததோ!

 

ஊருக்கு உபதேசம்

பிறருக்கு அறிவுரை கூறினால், தம் வலிமை பெருகுகிறதென்று பலரும் நம்பி நடக்கிறார்கள்.

 

என் சக ஆசிரியை மூன்றாவது முறையாகக் கருவுற்றிருந்தபோது, அவள் உடலில் ஏதோ பாதிப்பு.

 

சும்மா விடுவார்களா பிற பெண்கள்?

 

அவரவருக்குத் தோன்றியபடி அறிவுரை கூற ஆரம்பித்தார்கள்.

 

நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

 

ஏதாவது சொல்லுங்களேன்!” என்று என்னை ஒருத்தி வற்புறுத்த, “நான் டாக்டரில்லை. கர்ப்பம் தரித்தவளின் உடலுடன் விளையாடக்கூடாது!” என்றேன் கடுமையாக.

 

காற்று போன பலூனைப்போல அவர்கள் சுருங்கிப்போய், கலைந்தார்கள்.

 

யாருடன் பழகுவது?

சிலர் அயல்நாட்டிற்குப் போய் தங்க நேரிட்டாலும், தம் நாட்டவர்களுடன்தாம் பழகுவார்கள். இவ்வாறு செய்வதில் ஒருவித பாதுகாப்பை உணர்ந்தாலும், புதிய அனுபவங்கள் கிடைக்குமா?

 

பிறருடன் பழக நேரிடும்போது, நாம் கேலிக்கு உள்ளாகலாம். அது புரிந்தால், பெரிதாக பாதிப்பு அடையமாட்டோம்.

 

நான் இறைச்சி உண்ணமாட்டேன் என்று சொல்லக்கேட்டு, “அப்படிக்கூட உயிர் வாழ முடியுமா?” என்றாள் ஒருத்தி, கேலியாக. அவள் உணவில் மாட்டிறைச்சி உண்டு.

 

என்னைப் பார்த்தால், சாகப்போகிறவள் மாதிரியா இருக்கிறது?” என்று பதில் கேள்வி கேட்டு, அவள் வாயை அடைத்தேன்.

 

பிழைகளை எப்படித் தவிர்க்கலாம்?

பள்ளிப் பரீட்சை முடிந்து, வினாத்தாளை மாணவிகளுக்குக் கொடுத்தபின், ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடையை கரும்பலகையில் எழுதுவார்கள் சில ஆசிரியைகள்.

 

தாம் எங்கு தவறு செய்தோம் என்று சிலருக்குப் புரியும். அடுத்தமுறை, கவனமாக இருப்பார்கள்.

 

ஆனால், எல்லாரும் இவ்வகையில் கற்பார்கள் என்பதில்லை.

 

வாழ்க்கையிலும் இப்படித்தான். தவறு செய்பவர்களுக்கெல்லாம் அனுபவம் கிடைக்கும் என்பதில்லை. செய்த தவற்றையே மீண்டும் மீண்டும் செய்வதில்லையா!

 

சுயதணிக்கை ஏன்?

எழுத்தாளர்களாக விரும்புகிறவர்களுக்கு என்ன எழுதலாம், எத்தனை நீளம் எழுதலாம், இப்படியெல்லாம் எழுதினால் பெயர் கெடுமோ என்றெல்லாம் ஐயம் பிறக்கும். தவறு செய்யப் பயந்து, யோசித்தபடியே இருப்பதால், எழுதவே மாட்டார்கள்.

 

என் அனுபவம்: தோன்றுவதையெல்லாம், சுயதணிக்கை செய்துகொள்ளாது, எழுதவேண்டும். எழுதி முடித்ததும், அதை அப்படியே வைத்துவிட்டு, வேறு வேலைகளில் கவனம் செலுத்திவிட்டு, ஒரு வாரம் கழிந்தபின்னர் அந்த எழுத்துப்படிவத்தைப் படித்துப்பார்த்தால், சம்பந்தம் இல்லாதவை, வேண்டாதவை என்று சில தட்டுப்படும்.

 

`கஷ்டப்பட்டு எழுதினேனே!’ என்ற தன்னிரக்கத்திற்கு இடங்கொடாது, அவற்றை வெட்டிவிட வேண்டியதுதான்.

 

முக்கியமான எதுவுமே சொல்லிக்கொடுக்கப் படுவதில்லை” என்கிறார் அயர்லாந்து நாட்டவரும், பிரபல நாடகாசிரியருமான ஆஸ்கர் ஒயில்ட்.

 

வாழ்வில் சிறக்க, யாரும் சொல்லிக்கொடுக்கப் போவதில்லை.

வாழ்வினை கற்றுக்கொள்ள நாமே கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டும்.

 

எதிர்நீச்சல் போடு!

ஆசிய எழுத்தாளர்களுக்காக நடத்தப்பட்ட ஆங்கிலச் சிறுகதைப்போட்டி ஒன்றின் இறுதிச்சுற்றில் என் பெயரும் இருந்தது.

 

`அப்பட்டியலில் இடம்பெற்றிருந்த இருபது எழுத்தாளர்களுக்கிடையே இருந்த ஒற்றுமை’ என்று நீதிபதிகள் எதைக் குறிப்பிட்டிருந்தார்கள், தெரியுமா?

 

அவர்கள் அனைவரும் இரு நாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள்.

 

புதிய நாட்டின் மொழி, மதம், கலாசாரம் போன்றவற்றில் பற்பல வித்தியாசங்களைக் கண்டு, தான் எவ்விதத்திலோ தாழ்ந்துவிட்டோம் என்று அஞ்சி, சுருங்கிவிடாது, தைரியமாக எதிர்நீச்சல் போட்ட அனுபவம் பிறவற்றிலும் கைகொடுத்திருக்கவேண்டும்.

 

::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1

No comments:

Post a Comment