பழகத் தெரிய வேணும் – 76

மறக்காவிட்டாலும், மன்னித்துவிடு!

எனக்கு அவளை/அவனைப் பிடிக்கவே பிடிக்காது!”

அந்த இனத்தைக் கண்டாலே எனக்கு வெறுப்பு!”

ஏதோ ஒரு தருணத்தில் இவ்வாறு கூறியிருப்பார்கள் பலரும்.

 

::கதை::

ஏதோ கட்டாயத்தின்பேரில், வேறொரு சாதியைச் சேர்ந்த ஒருவனை மணந்தாள் குமுதா.

கணவனிடம் வெகுவாக வதைப்பட்டபின், அவனை விவாகரத்து செய்தாள்.

ஈன ஜாதி இப்படித்தான் நடக்கும், நிர்மலா!” என்று குமைந்தாள், தான் மேல்சாதி என்ற பெருமையுடன்.

கணவன்மேல் கொண்ட ஆத்திரத்தில், அவனது துணிகளை எரித்து, அவன் நட்டுவைத்த மரத்தை எரித்து, என்று என்னென்னவோ செய்துபார்த்திருக்கிறாள்.

பழிக்குப் பழி என்று நடந்தால், அதற்கு ஏது முடிவு!

பல வருடங்களுக்குப் பின்னரும் குமுதா தன் கணவனை மறக்கவுமில்லை, அவன்பால் கொண்ட வெறுப்பும் தணியவில்லை என்றவரை எனக்குப் புரிந்தது.

ஆனால், என்னைவிடப் பெரியவளான அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. நிறையக் கேள்விகள் கேட்டு, அவள் மனப்பாரத்தைச் சிறிதாவது இறக்கிவிட முயற்சி செய்தேன்.

`நம்மை ஏன் ஒருவர் அவ்வாறு வருத்தினார்?’ என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை.

நாம் ஒருவரை எண்ணி ஆத்திரப்படுவதால், மன அமைதியை இழந்து, தன்னிரக்கத்துடன் வாடுவது நாமாகத்தான் இருக்கும். நம் வெறுப்புக்கு ஆளானவருக்கு என்னவோ, அது தெரியப்போவதில்லை. அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

யாரை மறக்கவேண்டும் என்று எண்ணுகிறோமோ, அவரைப்பற்றி ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருந்தால், அவரிடமிருந்து விலகமாட்டோம் – எத்தனை தொலைவில் இருந்தாலும். உணர்ச்சிபூர்வமாக தொடர்புகொண்டு, அவர் நம்மை வதைத்துக்கொண்டேதான் இருப்பார்.

`மெல்ல மெல்ல விஷம் அருந்துவதுபோல்’ என்று இப்போக்கைக் குறிப்பிடுகிறார்கள்.

`மறதிதான் மகிழ்ச்சிக்கு இன்றியமையாத மருந்து!’ என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்!

இதைத் தடுத்து, நிம்மதியும், மகிழ்ச்சியுமான எதிர்காலத்திற்கு வழிசெய்ய ஒரே வழி: மன்னிப்பு!

 

::கதை::

இரவில் நண்பர்களுடன் விளையாடப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு, அடிக்கடி வெளியில் போய்விடுவான் சாமா.

`நண்பர்கள்’ என்று கணவன் குறிப்பிட்டது தன் காதலியைத்தான் என்றறிந்து, தான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று தன்மேலேயே வெறுப்பு எழுந்தது சாவித்திரிக்கு. கொதித்தெழுந்தாள்.

எதையும் மறைக்காது, உண்மையை ஒத்துக்கொண்டான் சாமா. வழக்கம்போல், சண்டை, அழுகை.

விவாகரத்து வேண்டாம். இனி உன்னை ஏமாற்றவே மாட்டேன்!” என்று கணவன் கெஞ்சியபோது, அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு.

எப்படி அவன் உனக்குச் செய்த துரோகத்தைப் பொறுத்துக்கொள்கிறாய்!” என்று ஆச்சரியப்பட்டுக் கேட்ட தோழியிடம், “நான் மட்டும் தப்பே செய்திருக்க மாட்டேனா! குழந்தைகளிடமும், என்னிடமும் அன்பாகத்தானே நடந்துகொள்கிறார்!” என்று பதிலளித்தாள் சாவித்திரி. “கடந்துபோனதை நான் நினைவுபடுத்துவதில்லை. அதற்காக, அதை மறந்துவிட்டேன் என்று அர்த்தமில்லை”.

 

மன்னிக்கலாம். ஆனால், எதற்காக மறப்பது?

ஒரு முறை அவதிப்பட்டால், அதன்பின் கவனமாக இருக்கவேண்டாமா?

மீண்டும் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி வருந்துவதோ, வதைப்படுவதோ என்ன புத்திசாலித்தனம்?

மன்னித்தபின், பாதித்தவரிடம் கடந்தவைகளைப் பற்றி நினைவுபடுத்துவதும் வேண்டாத வேலை. `குப்பை!’ என்று ஒதுக்கவேண்டியதுதான். இல்லாவிட்டால், நிம்மதி பறிபோய்விடும்.

நீண்ட காலம் இணைந்து வாழும் தம்பதிகளின் ரகசியம் புரிந்ததா? பல முறை மன்னித்து, ஒருவரையொருவர் ஏற்றிருப்பார்கள்.

ஒவ்வொரு முறையும் ஒருவரே மன்னிப்பு கேட்பார் என்பதில்லை. விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கமுடியுமா?

அவர்கள் சண்டையே போட்டிருக்க மாட்டார்களா, என்ன!

அவர்களில் ஒருவர் சில நாட்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டு போயிருக்கலாம். அதன் முடிவில், தம்பதியரில் ஒருவர், `ஸாரி,’ என்றுவிடுவார், யார்மேல் தவறு என்று அலசிப் பார்க்காது. இல்லையேல், சமாசாரத்தை அடியோடு மறந்துவிட்டதுபோல் நடந்துகொள்வார்.

மன்னிப்பு கேட்பதற்குக்கூட மனோபலம் வேண்டும். மன்னித்தபின் சக்தி கூடியதுபோல உணர முடியும்.

வெறுத்துக்கொண்டே இருந்தாலோ, அவர் நம்மீது செலுத்தும் ஆக்கிரமிப்பு குறையாதிருக்கும்.

 

யாரை மன்னிக்கவேண்டும்?

தவறு என்று புரிந்தே, நமக்குக் கெடுதல் செய்தவர்களை/அவமதிப்பவர்களை- இப்படிச் செய்பவர்கள் நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ இருக்கலாம்.

அவர்களை மன்னிப்பது நாம் அவர்களுக்குச் செய்யும் நற்காரியமல்ல. நமக்கே செய்துகொள்வது.

எத்தனை காலம்தான் கடந்தவைகளிலேயே நிலைத்து நின்று, வருந்துவது! அதனால் நம் முன்னேற்றம் தடைப்பட்டுவிடாதா!

பிறரை வருத்திக்கொண்டே இருப்பவர்கள்

 

::கதை::

அண்ணாசாமிக்கு யாரும் மரியாதையாகப் பேசக் கற்றுக்கொடுக்கவில்லையோ என்பதுபோல்தான் நினைக்கத் தோன்றும், அவன் வாயைத் திறந்தால். எல்லாரிடமும் சண்டை. தான் செய்த தவறு பிறரால் வந்தது என்று விதண்டாவாதம் புரிவான்.

அவன் குணம் புரியாதவர்கள் தம்மிடம்தான் தவறு என்று முதலில் நினைப்பார்கள்.

பெரிய குடும்பத்தில் வேண்டாத பிள்ளையானதால், இளம்பிராயத்தில் அவனை யாரும் சரிவரக் கவனிக்காததாலோ, சிறு தவறு செய்தாலும், அதற்காகத் தண்டனை பெற்றதாலோ அவன் வயதுக்கேற்ற முதிர்ச்சி அடையவில்லை.

அந்த வருத்தம் அவனையும் அறியாது, பிறரும் தன்னைப்போல் வருந்தி, குழம்பவேண்டும் என்பதுபோல் வெளிப்பட்டது.

இது புரிந்து, அவன் மனைவி மக்கள் அவனை எதிர்த்து வாயாடாது, அடங்கிப்போனார்கள்.

எப்போதோ ஒருமுறை மன்னித்து, மறந்தால் போதாது; அதை ஒரு பழக்கமாகவே ஆக்கிக்கொண்டால்தான் நிம்மதி கிடைக்கும் என்று புரிந்தவர்கள் அவனுடைய குடும்பத்தினர். அதனால், அவர்கள் பலவீனமானவர்கள் என்றாகாது.

 

சுயநலக்காரர்கள் ஒரு பொருட்டல்ல

இப்போதெல்லாம், பலரும் சுயநலமிகளாகத்தான் இருக்கிறார்கள். மற்றவர்களின் மனப்போக்கை அறிய அக்கறையோ, ஆர்வமோ காட்டுவதில்லை.

ஒருவர் வெற்றி பெற்றால், அவரது நட்பைப் பெற பலர் விரும்புவார்கள். ஒரு முறை தோல்வியடைந்தாலும், விலகிவிடுவார்கள். இவர்கள் உண்மையான நண்பர்களா என்பது யோசிக்கவேண்டிய சமாசாரம்.

முன்பு நண்பர்களாக இருந்தவர்களும், வெற்றி பெற்றவரிடம் குறை கண்டுபிடிப்பார்கள். விலகுவார்கள்.

 

::கதை::

சிறந்த அறிவாளியும், உழைப்பாளியுமான ரகுவிற்கு உத்தியோகத்தில் பெரிய பதவி அளிக்கப்பட்டது. அவன் கல்வித்திறனுக்குக் கூடுதலான அந்த உயர்வு பழைய நண்பர்களின் பொறாமையைத் தூண்டப் போதுமாக இருந்தது.

நீ படித்த படிப்புக்கு..! எந்த அதிகாரியை, எப்படியெல்லாம் காக்காய் பிடித்தாயோ!” என்று பலவாறாகக் கேலி செய்தனர். அவனுடன் முன்போல் பேசப் பிடிக்காது ஒதுங்கினர்.

நண்பர்களின் பராமுகத்தால் ஆரம்பத்தில் வருத்தம் ஏற்பட்டாலும், அப்படிப்பட்டவர்களின் ஏச்சுப்பேச்சை அலட்சியம் செய்யப் பழகிக்கொண்டான் ரகு.

`இவர்களுக்கெல்லாம் பயந்து, வெற்றி பெறத் தயங்கலாமா?’ என்று தன்னைத் தேற்றிக்கொண்டதில், முன்பு அவனுடைய மேலதிகாரியாக இருந்தவரைவிட அதிகமான பரிசுகளும் விருதுகளும் பெற்றான்.

`இதுதான் உலகம்!’ என்ற விரக்தி ஏற்பட்டு, அதிலேயே உழன்றிருந்தால், வாழ்வில் முன்னேற முடியாது என்று தெளிவுபெற்றான்.

 

முக்கியமான வேறுபாடு!

பிறர் தமக்குச் செய்த தீங்கை ஆண்கள் எளிதில் மறந்துவிடுவார்கள். ஆனால், மன்னிக்கமாட்டார்கள்.

பெண்களோ, மன்னித்துவிடுவார்கள். ஆனால், மறக்கமாட்டார்கள்!

எப்போதோ நடந்ததைக் கிளறும் குணம் பெண்களுக்குத்தான். சும்மாவா, பெண்களை கணினிக்கு ஒப்பிடுகிறார்கள்!

 

::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1

No comments:

Post a Comment