பழகத் தெரிய வேணும் – 75

அனுபவித்தால் புரியும்

சிந்திப்பது நல்ல குணம்தான். அதற்காக, சுவரை வெறித்துக்கொண்டிருந்தால் நன்மை விளைந்துவிடுமா?

புதிய அனுபவங்களை நாடப் பலருக்கும் பயம்.

`பிறர் என்ன சொல்வார்களோ!’

`எதற்காகப் புதிதாக எதையாவது செய்து, அதற்கான வேண்டாத விளைவுகளை அனுபவிக்க வேண்டும்? இப்போதே வாழ்க்கை சௌகரியமாகத்தானே இருக்கிறது!’

இப்படியெல்லாம் தமக்குத் தாமே தடை விதித்துக்கொண்டால், வாழ்வில் என்ன சுவாரசியம் இருக்கும்?

கனவிலேயே சிலர் சுகம் கண்டுவிடுகிறர்களே, ஏன்? கனவை நனவாக்கும் முயற்சியில் தோல்வி கண்டுவிடுவோமோ என்ற பயம்தான் காரணம்.

அனுபவம் என்றால், நன்மைகளும் இருக்கும், வேண்டாதவையும் எதிர்ப்படும்.

நாம் எண்ணியதுபோல் நடக்காவிட்டால், அதை அனுபவம் என்று கொள்ளவேண்டியதுதான். சரியாகத் திட்டமிட்டு இருக்கமாட்டோம் என்று, அடுத்த முறை கவனமாகச் செயல்படலாமே!

ஒரு காரியத்தைப் பலமுறை செய்தாலும், திருப்தி ஏற்படவில்லையா?

அப்படியானால், `இதில் நமக்குத் திறமை போதாது,” என்று தெளிந்து, வேறொரு காரியத்தில் ஈடுபட வேண்டியதுதான்.

தோல்விகளும் ஏமாற்றமும்தான் நல்ல அனுபவம். வெற்றி கிடைத்து, அதிலேயே மகிழ்ந்திருந்தால், ஒரே நிலையில்தான் இருக்க நேரிடும். முன்னேற இயலாது.

 

புத்தகப் படிப்பால் அனுபவம்?

சமையல் புத்தகங்களைக் கரைத்துக் குடித்தாலும், அக்கலையில் தேர்ச்சிபெற்ற ஒருவரைக் கவனித்தாலும் போதுமா?

அதன்படி தானும் செய்ய முயன்றால்தான் சுமாராகவாவது சமைக்க வரும்.

அனுபவமின்மையால், முதலில் சிறு சிறு விபத்துகள் நிகழும். கையில் சூடுபட்டுக்கொண்டு, கூரான கத்தியால் கீறிக்கொண்டு, மிளகாய் நெடியால் தும்மிக்கொண்டு, அதிகச் சூட்டில், போதிய நீர் இல்லாது பாத்திரத்தின் அடி பிடித்துக்கொண்டு — இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவற்றால் மனம் தளராது தொடர்ந்தால், பல வருடங்களுக்குப் பின், பிறருக்குச் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு உயர முடியும்.

 

குற்றம் கண்டுபிடிக்காதே!

தற்காப்புக் கலையில் தேர்ச்சிபெற்ற ஒரு சிறுமியின் நடை `அழகை’க் கண்டு, சற்றே பெரிய அவள் தோழிகள் செய்த விமரிசனம்: `ஆம்பளை மாதிரி நடக்குது!’

கால்களை அகட்டி வைத்துக்கொண்டு நடப்பது பெண்மைக்கு அழகில்லை என்று அவர்கள் சிறுவயதிலேயே கண்டிக்கப்பட்டு, அதன்படி ஒயிலாக நடந்த பெருமை அவர்களுக்கு.

கேலி செய்தால், அவள் நடை மாறிவிடுமா?

`ஒவ்வொரு காலையும் இன்னொரு காலுக்கு முன்னால் வைத்து நட! பக்கவாட்டில் இல்லை!’ என்ற அறிவுரை வழங்கப்பட்டபோது, முயன்று, சிறிது நாட்களில் தானே மாறினாள்.

 

குழந்தைகளிடம் போதனை

தாம் பெற்ற குழந்தைகளிடம், “தைரியமாக இரு!” என்று சொல்லி வளர்ப்பார்கள் பலரும்.

 

அப்படிச் சொன்னால் மட்டும் போதுமா?

அச்சம் தரும் சந்தர்ப்பத்தில் அவர்கள் தைரியத்தைக் கடைப்பிடிக்க வழிகாட்டுவதும் அவசியம்.

அடுப்பிலிருந்து அப்போதுதான் இறக்கிவைத்த பாத்திரத்தைத் தொட ஆர்வம் காட்டுவார்கள் ஒரு வயதே ஆகிய குழந்தைகள்.

சுடும்!” என்று எச்சரித்தால் புரியாது. ஏனெனில், அந்த வார்த்தை அவர்களுக்குப் பழக்கமில்லை.

இதற்கு நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். சற்றே ஆறிய பாத்திரத்தின் வெளியே குழந்தையின் கையை வைப்பேன். பயத்தில் அதன் விழிகள் விரியும்.

ஊ..!” என்று அதை விளக்குவேன்.

அடுத்த முறை, கத்தியைத் தொட முழலும்போது, “ஊ..!” என்று நான் எச்சரிக்கை விடுக்கையில், கை தானே பின்னால் போகும்.

நான் ஏதோ தைக்கும்போது, என் மகள் மிக அருகில் வந்து உட்கார்ந்து, எட்டிப்பார்த்தாள். குழந்தையை நகர்த்தி உட்கார வைத்தும் பயனில்லாது போயிற்று. மீண்டும், மீண்டும் அருகில் வந்தாள்.

நான் சற்று யோசித்து, அவள் விரலை என் கையால் பிடித்துக்கொண்டு, ஊசி முனையால் லேசாகச் சுரண்டினேன்.

ஊ..!” என்றாள், பயத்தால் கண்கள் விரிய. தானே பின்னால் நகர்ந்தாள்.

இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த என் தாய், “இப்போ மட்டும் எப்படிப் புரிஞ்சுது?” என்று கேட்டாள்.

சைகையால் விளக்கினேன், பெருமையாக.

அம்மா ஒரேயடியாக அதிர்ந்து, “ஒன்றரை வயசுக் குழந்தை கையைக் குத்தினியா? என்ன அம்மா நீ!” என்று வைதாள்.

பின்னே எப்படிப் புரியவைக்கறது!” என்று அலுத்தேன்.

சொல்வதைவிடச் செய்துகாட்டுவதுதானே பலனளிக்கும்!

 

வயதானதால் அனுபவம் அதிகமா?

காலத்தின் மாறுதல்களை மனதில் கொண்டுதான் அறிவுரை வழங்கவேண்டும்.

`எனக்கு உன்னைவிட வயது அதிகம். நான் சொல்வதைக் கேள்!’

வயதானால் மட்டும் நிறைய அனுபவம் கிடைத்திருக்கும் என்று அர்த்தமில்லை.

அந்தந்த வயதில், துணிச்சலுடன் அவர்கள் எத்தனை புதிய காரியங்களில் இறங்கி வெற்றியோ, தோல்வியோ பெற்றிருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

அத்துடன், `நான் உன் வயதில்..,’ என்று ஆரம்பித்தாலும் குழந்தைகளின் மரியாதை கிட்டாது.

 

குந்தைகளுக்கு நாம் எத்தனைதான் அறிவுரை கூறினாலும், அதை அவர்களே அனுபவிப்பதுபோல் ஆகாது.

 

::கதை::

பதின்ம வயதான ரூபாவிற்கு அவள் தாய் புத்திமதி கூறினாள்: “உன்னைவிட இரண்டு வயது பெரிய பையன்களால் தொந்தரவு அவ்வளவாகக் கிடையாது. ஆனால், உன்னைவிட மிகப் பெரிய ஆண்களிடம் பத்திரமாக இருக்க வேண்டும்”.

காரணத்தை மகள் கேட்டபோது, “உன்னைப் போன்ற விவரம் புரியாத பெண்களைப் பேசிப் பேசி மயக்குவது அவர்களுக்கு எளிது. உன் அழகை, புத்திசாலித்தனத்தை வானளாவப் புகழ்வார்கள். `உன் வயதுக்கு நீ எவ்வளவு அறிவு முதிர்ச்சி அடைந்திருக்கிறாய்! உன்னை யாராலும் புரிந்துகொள்ள முடிவதில்லை, இல்லையா?’ என்று பலவாறாகப் புகழ்ந்து, மனத்தைக் கலைப்பார்கள்”.

ரூபாவிற்குச் சந்தேகம் எழுந்தது. “என் வயதுப் பையன்கள்?”

அவர்கள் ஆத்திரத்தில் தவறு செய்யலாம். ஆனால், முதலிலேயே யோசித்து வைத்திருக்க மாட்டார்கள்”.

பல வருடங்கள் கழித்து, வேறு நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த மகள், ”வயதில் மூத்த ஆண்களிடம் பத்திரமாக இருக்கவேண்டும் என்று நீ கூறியிருக்கிறாய். ஆனால், அப்போது அது விளங்கவில்லை. இப்போது அனுபவித்துவிட்டேன்,” என்று தாயிடம் கூறினாள்.

அடுத்த முறை கவனமாக இருப்பாள்.

சொல்லிக் கொடுத்த வார்த்தை எத்தனை நாட்களுக்கு வரும்!

 

புதிய அனுபவங்களைப் பெற

பயணங்கள் மேற்கொண்டால் அனுபவங்கள் பெருகும்.

எதிர்பாராத, அல்லது பழக்கமில்லாதவை நடந்தால், அவற்றை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் அனுபவம் பெருகுகிறது.

 

::கதை::

இருபது ஆண்டுகளுக்குமுன், கனடா நாட்டிலிருந்த விக்டோரியா தீவிற்குச் சென்றிருந்தேன். மலேசியாவில் சந்தித்த என் கனடா நாட்டுத் தோழி இசை, நாட்டியம் இரண்டிலும் வல்லவள். பொது இடங்களில் இருவரும் அவரவர் பாணியில் ஆட, உல்லாசமாக மூன்று வாரங்கள் கழிந்தன.

திரும்பும் நாள் வந்தது. மூன்றுமணி ferry படகில் தீவைக் கடந்து, வான்கூவர் (Vancouver) சென்றதும், அங்கிருந்து, விமானப் பயணம் – நியூயார்க் செல்ல.

என்னுடைய டிக்கெட்டில் விமானம் புறப்படும் நேரம் 2.00 மணி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நான் விடியற்காலை இரண்டு மணி என்றெண்ணி, நள்ளிரவில் விமான தளத்தை அடைந்தேன்.

மத்தியானமே அந்த விமானம் போய்விட்டதே!” என்று கேட்டு, அதிர்ச்சிதான் ஏற்பட்டது.

அடுத்த விமானம் மறுநாள் இரண்டு மணிக்குத்தான் என்று கேட்டதும், தண்டம் அழுது, புதிய டிக்கெட் வாங்கிவிட்டு, அடுத்த பன்னிரண்டு மணி நேரத்தை எப்படிக் கழிப்பது என்று யோசித்தேன்.

பெரிய சூட்கேஸைத் தள்ளிக்கொண்டு, காலம் கடத்த முடியாது. அதனால், முதல் வேலையாக, அதைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு செய்தேன்.

நியூயார்க்கிலிருந்த என் மகளுக்குத் தகவல் கூறியதும், “நாளைக்கு அதே நேரமா? சரி,” என்றாள், எதுவுமே நடக்காததுபோல். என்னைவிட அவளுக்கு அனுபவங்கள் அதிகம்.

இரவு அங்கேயிருந்த பெஞ்சில் படுத்தேன். ஆனால், தூங்கப் பயம். கைப்பையில் கடப்பிதழ், பணம்! நான் அணிந்திருந்த தங்க நகைகள் வேறு!

பொழுது விடிந்ததும், களைப்பைப் போக்க, நின்ற இடத்திலேயே யோகப் பயிற்சி செய்தேன்.

சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒருவர், என் அருகில் வந்து, உற்றுப் பார்த்துவிட்டுப் போனார்!

மலேசியாவில், பகல் பன்னிரண்டுக்குப் பிறகு மத்தியானம் இரண்டு மணியை 14.00 என்றுதானே குறிப்பிடுவார்கள்! அதுதான் இந்தத் தவறு நடந்திருக்கிறது,” என்றாள் மகள் அலட்சியமாக.

என் தோழியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டதும்,  “எதிர்பாராதது நடந்தாலும், அடுத்து என்ன செய்வது என்ற பதற்றமில்லாமல், பெட்டியை லக்கேஜில் வைத்தாயே! சமயோஜிதமாக நடந்ததற்கு உனக்கு 80% மதிப்பெண்கள் கொடுக்கிறேன்,” என்று பாராட்டினாள்.

அந்த அனுபவத்தால் இன்னொரு முறை ரயிலையோ, விமானத்தையோ தவற விடமாட்டேன் என்று அர்த்தமில்லை. ஆனால், எதிர்பாராதது நடந்தால், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் மிகாது.


::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா

No comments:

Post a Comment