உடல் நீரிழப்பு என்பது என்ன? அது எவ்வளவு ஆபத்தானது?

கோடை கால ங்களில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கூடவே, கோடைக்கால நோய்களான Heat Strokes (வெப்ப பக்கவாதம், Sun burns, Food Poisoning (உணவு நஞ்சாகுதல்) போன்றவையும் நம்மை பாதிக்கக் கூடும்.

 

இவற்றையெல்லாம் விட மிகவும் முக்கியமானதாகவும் அதேவேளையில் நாம் பெரிதாக கவனம் செலுத்தாததாகவும் டிஹைட்ரேசன் என்று அழைக்கப்படும் நீரிழப்பு உள்ளது. மயக்கம், உடல் சோர்வு தொடங்கி, கிட்னி செயலிழப்பு போன்ற பாதிப்புகளையும் நீரிழப்பு ஏற்படுத்திவிடும் என்பதால் இதற்கு நாம் கூடுதல் கவனம் கொடுப்பது அவசியமாகிறது.

 

நீரிழப்பு என்றால் என்ன?

நமது உடலில் திரவமே அதிகமாக உள்ளது. உடலுக்கு இன்றிமையாததும் தண்ணீர்தான். அதனால்தான் அதிகளவு தண்ணீரை பருக வேண்டும் என நம்மிடம் வலியுறுத்தப்படுகிறது. உடலில் உள்ள நீரில் இழப்பு ஏற்படுவதை நீரிழப்பு என்று அழைக்கிறோம் என்கிறார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணரான மீனாட்சி பஜாஜ்.

 

"எளிதாக கூற வேண்டும் என்றால் நம் உடலுக்கு தேவையான நீரை விட நாம் குறைவாக நீரை உட்கொள்வதன் மூலமோ, அதிகளவு நீர் நம் உடலில் இருந்து வெளியேறுவது மூலமோ நீரிழப்பு ஏற்படுகிறது. இரைப்பைக் குடல், தோல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றில் தான் நாம் அதிகமாக நீரை இழக்க வாய்ப்பு உள்ளது. வயிற்றுப்போக்கு, வாந்தி, அதிகப்படியாக வேர்வை வெளியேறுவது, அதிக முறை சிறுநீர் வெளியேறுவது போன்றவை மூலம் நீரிழப்பு ஏற்படும்," என்று விளக்கினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், "நீரிழப்பு அனைத்து வயதினருக்கும் பொதுவானதுதான் என்றாலும் குழந்தைகள், பெரியோர் ஆகியோருக்கு இதனால் அதிகம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். இதேபோல், ஒருசிலர் உடல் எடையை சீராக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக சாப்பிடுவார்கள், பின்னர் உடலில் இருந்து கலோரிகளை குறைக்க வேண்டும் என்பதற்காக அவர்களே வாயில் விரல்களை விட்டு வாந்தி எடுப்பது, பேதி மாத்திரையை உட்கொள்வது போன்ற செயலில் ஈடுபடுவர்கள். இதற்கு புலிமியா நெர்வோசா என்று பெயர். இத்தகைய செயலில் ஈடுபடுவர்களுக்கும் நீரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது," என்றார்.

 

இதேபோல், ஒருவர் அதிகமாக மது அருந்துபோது அவர் இயல்பை விட அதிகமாக சிறுநீரை வெளியேற்றுவார். உடலில் இருந்து நீர் அதிகமாக வெளியேறுவதால் இதுவும் நீரிழப்பின் ஒரு பகுதிதான் என்று குறிப்பிட்ட அவர், காபி, கார்பனேடட் குளிர்பானங்களை அதிகளவு குடிப்பதும் சிறு நீர் அதிகம் வெளியேற வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

 

நீரிழப்பின் அறிகுறிகள் என்ன?

காலநிலை, நாம் சாப்பிடும் உணவு, நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி போன்றவற்றை பொருத்து நீரிழப்பின் அறிகுறிகள் வேறுபடுவதாக மீனாட்சி தெரிவிக்கிறார். "நீரிழப்பு ஏற்பட்டால் நாக்கு, வாய் போன்றவை வறண்டு காணப்படும், தாகம் அதிகமாக இருக்கும். சோர்வாக இருப்பீர்கள், தலைவலி , தலை சுற்றல் ஏற்படும், சிறுநீர் மிகவும் அடர் நிறத்திலும் இயல்பை விட குறைவாகவும் வெளியேறும், தசைகளில் வலி ஏற்படும், இதயத்துடிப்பு அதிகப்படியாக இருக்கும், ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துவிடும்," என்றார்.

 

வயதானவர்களுக்கு நீரிழப்பால் பாதிப்பு அதிகம் என்று குறிப்பிட்ட அவர், வயதானவர்களுக்கு சர்க்கரை வியாதியும் இருந்து நீரிழப்பும் ஏற்பட்டால், பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரித்தார். தீவிர நீரிழப்பு ஏற்பட்டால், கிட்னி செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

 

நீரிழப்பு ஏற்பட காரணங்கள்

போதிய அளவை நீரை பருகாமல் இருப்பது பிரதானமான காரணமாக உள்ளது. இதை தவிர்த்து, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை காரணமாகவும் நீரிழப்பு ஏற்படும். வயிற்றுப் போக்கின்போது நமது உடலில் இருந்து குறைந்த நேரத்திலேயே அதிகளவு நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் வெளியேறிவிடும். இதனுடன் வாந்தியும் சேர்ந்தாலும் உடலில் இருந்து மிதமிஞ்சிய அளவு நீர், உப்பு சத்துகள் போன்றவை வெளியேறும் என்பதால் நீரிழப்பு ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்யும்போது, அதிகளவில் வேர்க்கும் என்பதால், உடலில் இருந்து வேர்வையாக நீர் அதிகளவு வெளியேறுகிறது. இதனாலும் நீரிழப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

கோடைக்காலத்திற்கும் நீரிழப்புக்கும் என்ன தொடர்பு என்று மருத்துவர் மீனாட்சி பஜாஜிடம் கேட்டப்போது, "பொதுவாக கோடைக்காலம் சிறுவர்களுக்கு ஆண்டு விடுமுறை நாட்களாக இருக்கிறது. அந்த நேரத்தில் அவர்கள் வெளியே அதிக நேரம் விளையாடுவார்கள் என்பதால் அவர்களுக்கு நீரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். உடலில் இருந்து சோடியம் குறைந்தால் நீரும் குறைந்துவிடும். அதனை சரி செய்ய, மோர் எலுமிச்சை சாறு போன்றவற்றை பருவ வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் போன்ற வெயிலில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளவர்களுக்கும் நீரிழப்பு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது," என்றார்.

 

கடைகளில் சமைக்கப்படும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது வயிறுப்போக்கை ஏற்படுத்தும். இது நீரிழப்பு நோய்க்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கும் மீனாட்சி பஜாஜ், "அசைவ உணவுகளை முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடவேண்டும் அல்லது தரமான உணவகங்களில் சாப்பிட வேண்டும். ஆரோக்கியமற்ற முறையில் சமைக்கப்படும் உணவுகளை சாப்பிடுவது, வாந்தி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்," என்றார்.

 

நீரிழப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முடிந்தவரை உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது நல்லது. கேரட், வெள்ளரி, வெங்காயம், தக்காளி, முட்டைக்கோஸ், பூசணி போன்ற காய்கறிகளை உணவுகளில் சேர்த்துகொள்வது நீரிழப்பு ஏற்படுவதை கட்டுப்படுத்தும் என்கிறார் அவர்.

 

"சிலர் கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துகொள்வதற்காக கார்பனேடட் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை எடுத்துகொள்வார்கள். ஆனால், இது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தாது, மாறாக நீரிழப்பையே ஏற்படுத்தும். எனவே, கார்பனேடட் குளிர்பானங்களை பருகுவதற்கு பதிலாக மோர், எலுமிச்சை சாறு, நெல்லிக்காய் சாறு, இளநீர், எலுமிச்சை கிரீன் டீ போன்றவற்றை பருகலாம். தர்பூசணி, மாம்பழம் போன்ற பழங்களை அதற்கேற்ற சீசனில் சாப்பிடலாம். சரியாக சமைக்காத உணவுகள், அசுத்தமான தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்ளும்போது, டைஃபாய்டு, மஞ்சள் காமாலை, அமீபியாசிஸ் ஆகிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது," என்றார்.

 

அதே நேரத்தில், இணை நோய் இருப்பவர்களுக்கு நீரிழப்பு ஏற்படும் போது மருத்துவர்களின் ஆலோசனைபடி அவர்கள் உணவுமுறையை பின்பற்றுவதே சரியாக இருக்கும் என்றும் மீனாட்சி பஜாஜ் பரிந்துரைக்கிறார். சர்க்கரை வியாதி உள்ள ஒருவருக்கு வெயில் காலத்தில் தினமும் இளநீர் பருக வேண்டும் என்று நாம் பரிந்துரைக்க முடியாது. அப்படி செய்தால் உடலில் சர்க்கரையின் அளவுதான் அதிகரிக்கும். சிறியளவில் மட்டுமே நீரிழப்பு ஏற்பட்டால் மோர், கஞ்சி, ஜூஸ், இளநீர் போன்றவற்றை பருகுவதன் மூலம் வீட்டிலேயே சரி செய்துகொள்ளலாம். ஆனால், இதுவே கடுமையான நீரிழப்பு என்றால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துகொள்வதே சரியாக இருக்கும் என்றார்.

 

நன்றி- பி.பி.சி தமிழ்

No comments:

Post a Comment