கடந்த சில ஆண்டுகளாக
ஒவ்வொரு பொங்கலிலும் விடியலைத் தேடுகிறேன். நம்பிக்கையும் முயற்சியும் என்னிடம்
நிறைய முன்பு இருந்தது, என்றாலும் நம்பிக்கை இப்ப மெல்ல மெல்ல மறைய தொடங்குகிறது.
ஆனால் நான் முயற்சியை, மாற்று வழிகள் தேடுவதை என்றும் நான் கைவிடவில்லை. தை
பிறந்தால் வழி பிறக்கும் என்று ஆண்டாண்டு காலமாக தமிழன் சொல்வதை, அதில் இப்ப எனக்கு
நம்பிக்கை இருக்கோ இல்லையோ, நான் அதை மறக்கவில்லை.
இன்று ஜனவரி 14, 2023 சனிக்கிழமை, மூன்றாவது இலங்கை இந்தியா
ஒருநாள் சர்வதேச துடுப்படி ஆட்டம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு அதில்
சலிப்புத்தான் வந்தது, இந்தியா 390 ஓட்டங்கள் எடுத்தவேளை, இலங்கை 75 ஓட்டமே பெறமுடியாமல்
திண்டாடிக்கொண்டு இருந்தது. அப்படித்தான் ஒவ்வொரு ஆண்டாக விடியல் [வெற்றி] என்னை
விட்டு விலகிக்கொண்டே இருந்தது. கொஞ்சம் வித்தியாசம். நான் திறமையாகத்தான்
தொடர்ந்து செயற்படுகிறேன், அதில் எந்த ஐயப்பாடும் இல்லை, ஆனால் முற்றும்
நேர்மையாக. அது தான் என்னைத் தடுத்துக்கொண்டு இருக்கிறது. கொஞ்சம் பொய்யும்
புரட்டும் கலந்து இருந்தால், எப்பவோ எனக்கு விடியல் வந்திருக்கும்!
நான், தொடர்மாடி குடியிருப்பில், இரண்டாவது மாடியில் உள்ள
என் அறையின் ஜன்னலின் ஊடாக வெளியே எட்டிப் பார்க்கிறேன். தொங்கிய தோள்களுடனும்
வாடிய முகங்களுடனும் அசையும் மக்களை காண்கிறேன். அவர்களின் நம்பிக்கை இழப்பையும்
பரிதாபகரமான விதியையும் நினைக்கிறன். நான் மட்டும் அல்ல, என்னுடன் ஒரு கூட்டமே
விடியலுக்காக அலைவதைக் காண்கிறேன். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேடுதல். இதை
பார்க்க பார்க்க என் மனதில் வெறுமையும் வெறுப்பும் கூடுவது போல இருந்தது. இந்த
பொங்கலில் ஆவது ஒரு விடியல் வருமா என்று என் மனம் தவித்துக்கொண்டு இருந்தது.
நான் என் படுக்கை அறையை
பார்த்தேன். அது வெறிச்சோடி இருந்தது. நான் கல்யாணம் கட்டி ஒரு ஆண்டுமட்டும் ஒரு
பிரச்சனையும் வரவில்லை. மிகச் சீராக மகிழ்வாக அது நகர்ந்தது. அதன் பலன் எமக்கு
அழகான மகள் பிறந்தாள். இருவருக்குமே அது மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது. நாம் வாடகைக்கு
இருந்த வீடு ஒரு அறை வீடு. தலை நகரில், வாடகை மிக மிக அதிகம் என்பதால் கல்யாணம் கட்டிய
புதிசில் அது போதுமானதாகவும் இருந்தது. ஆனால் மகள் பிறந்தபின், அவளுக்கு என ஒரு தனி அறை
தேவை பட்டது. அது மட்டும் அல்ல, வருங்காலத்தையும் எண்ணி மூன்று அறை வீடு தேவை
என்று மனைவி கேட்கத் தொடங்கினார்.
உண்மையில் என் படிப்பு
மற்றும் வேலை திறமை அடிப்படையில் நோக்கின் எனக்கு எப்பவோ பதவி, சம்பள உயர்வு
வந்திருக்கவேண்டும். இப்ப நான் எடுக்கும் சம்பளத்தை விட குறைந்தது மூன்று
மடங்காவது இன்று நான் எடுத்திருப்பேன். ஆனால் என் படிப்பு தந்த திமிர், என் உயர் அதிகாரிகளுக்கு
சலாம் போட மறுத்துவிட்டது. என் எல்லா உயர் அதிகாரிகளும் என்னை விட படிப்பில்
குறைந்தவர்கள், ஆனால் நிறைய
சுற்றுமாற்றாக, நேரத்துக்கும்
சந்தர்ப்பத்துக்கும் தகுந்தவாறு
அமைச்சருடன் அல்லது அவரின் அதிகாரியுடன் கதைப்பதுடன், அவர்களை திருப்திப்படுத்தக்
கூடிய, வேலைக்கு
புறம்பான வசதிகளை,
கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதில் வல்லவர்கள். நான்
இவைகளுக்கு எதிர்மாறு மற்றும் நேருக்கு நேராக பிழையான செயல்களை கேட்டும் விடுவேன்.
என் மனைவி, 'நீங்க வாழத் தெரியாதவர், நீங்கள் நேர்மையாக
ஒழுங்காக வேலை செய்யுங்கள், அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை, உங்களுக்கு கீழே வேலை
செய்பவர்களையும் கட்டுப்படுத்துக்கள். அதில் தவறு இல்லை. உங்களுக்கு மேலே
உள்ளவர்களைப் பற்றி அதிகமாக கவலைப்பட தேவையில்லை. அது அமைச்சரின் பொறுப்பு. மற்றது
நீங்கள் மதிப்பு கொடுப்பது அவர்களின் பதவிக்கு மட்டுமே, அவர்களின் உண்மையான தகுதி
என்ன என்று யோசிக்காதீர்கள் , அப்ப தான் நாம், பிள்ளைகளுக்கும் ஏற்ற, தகுந்த வசதிகளுடன் வாழ
முடியும்' இப்படி பலதடவை
என்னிடம் கெஞ்சி, பின் வாதாடி, கடைசியாக 'குறைந்தது மூன்று அறை
வீடு எடுத்தால் தான் நான் இனி உங்களுடன் இங்கு இருப்பேன்'
என்று சொல்லிவிட்டு என் மகளுடன் தன் தாய் வீட்டுக்கு, தன் கிராமத்துக்கு
போய்விட்டார்.
நான் என் நம்பிக்கையை
என்றும் இழக்கவில்லை, உண்மை , நேர்மை ஒருநாள் வெல்லும், அவர்களின் பொய்
புரட்டுகள் அம்பலத்துக்கு வரும் அல்லது வரவைப்பேன் என்ற துணிவு மட்டும் மாறவில்லை.
நாளை, ஞாயிற்றுக்
கிழமையாக இருந்தாலும், அமைச்சர் மற்றும் அவரின்
அதிகாரிகள் எம் பணிமனைக்கு தைப்பொங்கல் தினத்தை ஒட்டி வருகிறார்கள். ஒக்டோபர் 6, 2022 இல் உலக வங்கியின்
அறிக்கையின் படி, மிக மோசமான
பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு
உற்பத்தி இந்த ஆண்டு 9.2 சதவீதமாகவும், 2023ல் மேலும் 4.2 சதவீதமாகவும் குறையும்
என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியது. அது தான் எனக்கு இவர்களின்
பித்தலாட்டத்தை, ஏமாற்று வேலையை வெளிக்கொணரவும். இம்முறை
கட்டாயம் அமைச்சர் அதை ஏற்று விசாரணை நடத்துவார் என்ற துணிவையும் தந்தது. அதன் படி
பல அத்தாட்சிகளுடன் நவம்பர் முதலாம் திகதி, என் பிறந்த நாளில், அமைச்சரிடம் ஒரு நீண்ட
அறிக்கை சமர்பித்தேன், அது என் உயர் அதிகாரிகளுக்கு தெரியா. அமைச்சர் தை முதலாம்
திகதி, புத்தாண்டு
வாழ்த்துடன், தான் தைப்பொங்கலுக்கு
பணிமனை வருவதாகவும்,
அதில் தன் முடிவு பகிரங்கமாக அறிவிக்கப் படும் என்றும், தான் தன் தேவையான அனைத்து
விசாரணையையும் முடித்துவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.
நான் முன்பும் இரு தடவை
அவ்வற்றை சுட்டிக்காட்டினாலும், அந்த கோப்புகள் எல்லாம், தேடுவார் அற்று போனது
தான் மிச்சம். ஆனால் இன்று நிலைமை மாறி உள்ளது. 'ஆழமடைந்துவரும் பொருளாதார
நெருக்கடிக்கு வழிவகுக்க ஆழமான சீர்திருத்தங்களை இலங்கை விரைவாகக்
கடைப்பிடிக்கவேண்டும்' என்ற உலகவங்கியின் கோரிக்கை அரசை கொஞ்சம் சிந்திக்க
வைத்துள்ளது. இந்த நிலையில் நாட்டிலுள்ள 16 லட்சம் அரச ஊழியர்களில் 10 லட்சம் பேர் திறனுடன்
செயற்படுவதில்லை என,
அண்மையில் அமைச்சர் ரொஷான் ரணசிங்க கூறியதும் மற்றும் இன்று
இலங்கையில் இளைஞர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களும் இந்த தைப்பொங்கல் ஒரு விடிவை
தரலாம் என்று எனக்கு சொல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தன.
இந்த விடயங்கள் குறித்து
தென்கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல்துறை தலைமைப் பேராசிரியர் ஏ.எல். ரஊபிடம்
பிபிசி தமிழ் அண்மையில் [18 செப்டெம்பர் 2022] பேசிய போது "இலங்கையில் பொருத்தமான
வேலைக்கு பொருத்தமான நபர்கள் அநேகமாக உள்வாங்கப்படுவதில்லை" என்றும், "அரசியல்
நோக்கங்களுக்காகவே அதிகமானவர்ளுக்கு அரச தொழில்கள் வழங்கப்பட்டன" எனவும்
குறிப்பிட்டார். அது தான் எம் பணிமனையிலும் பிரச்சனை. அந்த பொருத்தமற்ற உயர்
அதிகாரிகளுக்கு, பொருத்தமான, உண்மையாக வேலை
செய்பவர்களை கண்டால் உள்ளுக்குள் ஒரு பயம், அதனால் தான் அவர்களை மேலே வரவிடாமல் ஏதேதோ
காரணங்கள் கூறி தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வால்
பிடிப்பவர்கள், கட்டாயம் மேல்
பதவிக்கு போவார்கள்,
ஆனால் நாட்டுக்கு, மக்களுக்கு உண்மையான சேவை அங்கு இருக்காது, அது தான் நான் அதை, அந்த நேர்மையற்ற வழிகளை
வெறுக்கிறேன். இதை மனைவி எனோ புரியவில்லை. அவரில் குறையில்லை. பிள்ளைகளில், குடும்பத்தில் உள்ள பாசம்
தான்!
இன்று தை 15, 2023 ஞாயிற்று கிழமை, தை பொங்கல் நாள், அமைச்சரும் அவரின்
அதிகாரிகள் எல்லோரும் எம் பணிமனைக்கு வந்து, கலகலப்பாக பொங்கல் நிகழ்வில் கலந்து
சிறப்பித்தார்கள்,
அதன் பின் என்னையும் என் உயர் அதிகாரிகளையும், மூடிய அறையில் சந்திக்க
ஏற்பாடும் செய்தார். எனக்கு எந்த பயமும் இல்லை. தேவையான அத்தாட்சிகள் எல்லாம்
வரிசை கிரமப்படி ஏற்கனவே சமர்பித்துவிட்டேன். ஆனால் என் உயர் அதிகாரிகள் கொஞ்சம்
பதட்டமாகவே காணப்பட்டனர், அது ஒன்றே இம்முறை, இந்த தைப்பொங்கல் விடியலைத் தரும் என்று எனக்கு
முன்கூட்டியே சொல்லிக் கொண்டு இருந்தது. ஆனால் நினைத்தது ஒன்று நடந்ததோ வேறு
ஒன்று. நான் திகைத்தே விட்டேன், என்னால் இன்னும் நம்பமுடியவில்லை, ஆமாம், நான் அந்த முழு
பணிமனைக்கும் மற்றும் அதன் கிளை நிறுவனங்களுக்கும் தலைமை அதிகாரியாக, ஆறு மடங்கு சம்பளத்தில், உடனடியாக, பாராட்டுடன் நியமிக்கப்
பட்டேன்.
ஆனால் நான் மிகவும்
பணிவாக முதலில் என் முன்னைய உயர் அதிகாரிகளிடம் போய் வணங்கி ஆசீர்வாதம் கேட்டதுடன், அதன் பின்புதான்
அமைச்சரின் ஆசீர்வாதத்தை கேட்டேன். அது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும், என் அந்த நடைமுறையை
அமைச்சர் மிகவும் போற்றினார். அவர்கள் எல்லோரும் போன கையுடன் நான் என் மனைவிக்கும், மகளுக்கும் தொலைபேசி
அழைப்பு எடுத்தேன். என் மனைவி மிக கோபமாக இருந்தார். 'இன்று தமிழர் பொங்கல்
விழா, எங்கே போனீர்கள் ?, ஒரு வாழ்த்து மகளுக்கு
கூட சொல்லவில்லையே?'
கொஞ்சம் கோபமாக கேட்டார். நான் முதல் மகளை கூப்பிடு
என்றேன். மனைவி இன்னும் கோபமாக ' இந்தா உன் அப்பா' என்று தொலைபேசியை அவளிடம்
தூக்கி எறிவதை கண்டேன்.
நான் அதை பெரிதாக
பொருட்படுத்தவில்லை. எனக்கு என் மனைவியைப் பற்றி நன்றாகத் தெரியும். ' அப்பா, இனி வரும் பொழுது எனக்கு
என்ன வாங்கி வருகிறீங்க?', மகள் நான் தை பொங்கல் வாழ்த்து கூறமுன் தானே கதைக்க
தொடங்கிவிட்டார். நான் வாழ்த்து கூறிவிட்டு, அம்மாவிடம் கொடு வாழ்த்து கூற என்றேன், ஆனால் மகள் 'சொல்லுங்க அப்பா , முதலில், என்ன வாங்கி வருவீங்க' திருப்பவும் கேட்டார்.
நான் உடனே 'இனி ஒன்றுமே
இல்லை' என்று பொய்க்கி
கூறியது தான் தாமதம், மனைவி தொலை பேசியை பறித்து நிறுத்தியே விட்டார். நான் இதை
எதிர் பார்க்கவில்லை. ஆகவே வேறுவழி இன்றி, மனைவியின் தங்கைக்கு உடனே எடுத்து, மகள் அல்லது மனைவியிடம்
கொடுக்கும் படி கூறினேன். மனைவி வாங்க மறுத்துவிட்டார், மகள் தான் அழுதுகொண்டு
எடுத்தார்.
'என் செல்லமே, இனி அப்பா வரத்
தேவையில்லை, நீ என்னுடனேயே
இருந்து படிக்கப் போறாய், அது தான்' என்றேன். சொல்லி
முடிக்க முன்பே. மனைவி, மகளிடம் இருந்து தொலைபேசியை பறித்து 'என்ன, என்ன, எப்போ?' அவசரம் அவசரமாக கேட்டார்.
நான் இன்றில் இருந்து எனக்கு பதவி உயர்வு வந்துள்ளதாகவும், அதனுடன் சேர்ந்து, தனி வீடும்
தந்துள்ளார்கள் என்றும் சுருக்கமாக சாதாரணமாக எடுத்து சொன்னேன். மனைவியின், மகளின் மகிழ்ச்சி என்னால்
உணரக் கூடியதாக இருந்தது. என் வாழ்வும் மீண்டும் முன்போல் இந்த தைப்பொங்கலில்
இருந்து மலரப்போகிறது என்று எண்ணும் பொழுது, 'விடியலைத் தந்த பொங்கல்' ஆக இந்த 2023 , என் வாழ்க்கை வரலாற்றில்
அமைய போவது உண்மையே!
இன்னும் ஒரு கிழமையில்
என் மனைவியும் மகளும் வந்துவிடுவார்கள். என்னதான் வசதி வந்தாலும் நான் கட்டாயம்
உண்மை நேர்மையில் இருந்து என்றுமே விலகமாட்டேன். இது சத்தியம்!
-நன்றி-
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment