மாதவிடாய், கர்ப்பம், மெனோபாஸ்
காலங்களில் பெண்கள் எப்படி சிந்திப்பார்கள்? மூளையில்
ஏற்படும் மாற்றம் என்ன?
'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நின்றால், பெண்களின் மூளையை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து
தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தவர் நியூயார்க்கின் புகழ்பெற்ற கார்னெல்
பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை இணை பேராசிரியர் லிசா மாஸ்கோனி.
வெய்ல் கார்னெல் மருத்துவ மையத்தின்
அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய் தடுப்பு திட்டத்தின் இயக்குநருமான இவர், மனித மூளை குறித்த தமது 20 ஆண்டுகால நீண்ட ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளவை குறித்தும்,
'The XX Brain' என்ற தனது புத்தகம்
பற்றியும் பிபிசி முண்டோ சேவைக்கு (BBC Mundo) அளித்த பேட்டி பின்வருமாறு:
பெண்களின் மூளை குறித்த 20
வருட ஆராய்ச்சியில் நீங்கள் கண்டறிந்தவை என்ன?
ஆண் பெண் என இருபாலரையும் பல்வேறு
நரம்பியல் மற்றும் மனரீதியான நோய்கள் பல்வேறு விதத்தில், வெவ்வேறு விகிதாசாரங்களில் பாதித்து வருகின்றன. ஆயினும்
மூளையின் அமைப்பு, வயது உள்ளிட்ட காரணிகளால் ஆண்களைவிட பெண்களுக்கு மூளையின் ஆரோக்கியம் அதிகம்
பாதிக்கப்படுகிறது. இது ஏன், எதனால் என்பதை எனது ஆராய்ச்சிகள் முக்கியமாக
சுட்டிக்காட்டுகின்றன.
உதாரணமாக, மனக்கவலை அல்லது மனச்சோர்வு ஆண்களைவிட பெண்களுக்கு இரண்டு
மடங்கும், உடல் எதிர்ப்புசக்தி குறைபாடு ஆண்களை ஒப்பிடும்போது பெண்களுக்கு மூன்று மடங்கு
அதிகமாகவும் வர வாய்ப்புள்ளது. இவற்றின் விளைவாக multiple
sclerosis போன்ற மூளை தொடர்பான
நோய்க்கு பெண்கள் ஆளாகின்றனர்.
உங்கள் ஆராய்ச்சியில் பெண்களின் மூளை செயல்பாடு குறித்து
நீங்கள் கண்டறிந்த வியக்கத்தக்க விஷயங்கள் என்று ஏதேனும் சொல்ல முடியுமா?
தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி வரும்
வாய்ப்பு பெண்களுக்கு நான்கு மடங்கு அதிகம். மேலும் மூளையில் meningiomas
எனப்படும் கட்டியும், கடுமையான பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பும் ஆண்களை
ஒப்பிடும்போது பெண்களுக்கு அதிகம். டிமென்ஷியா எனப்படும் மனச்சோர்வால் ஏற்படும்
நோய்க்கு முக்கிய காரணமான அல்சைமர் எனும் மறதி நோயால் உலக அளவில் 35 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு பேர்
பெண்கள் என்பது மற்றுமொரு அதிர்ச்சியான தகவல். அதாவது மூன்று அல்சைமர் நோயாளிகள்
இருக்கிறார்கள் என்றால், அவர்களில் இரண்டு பேர் பெண்களாக உள்ளனர். ஆனாலும், அல்சைமர் உள்ளிட்ட மூளை தொடர்பான நோய்கள் பெண்களின்
உடல்நலன் சார்ந்த பிரச்னையாக இன்னும் கருத்தில் கொள்ளப்படவில்லை. 60 வயதை நெருங்கும் ஒரு பெண்மணிக்கு பிற்காலத்தில் மார்பக
புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைவிட அல்சைமர் எனப்படும் மறதி நோய் உண்டாகும் வாய்ப்பு
இருமடங்கு அதிகம்.
ஆனால், மார்பக புற்றுநோய் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான
பிரச்னையாக கருதப்படும் அளவுக்கு அல்சைமர் போன்ற நோய்கள் கவனத்தில்
கொள்ளப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் பெண்களின் மூளை பற்றியும், அதுதொடர்பான நோய்கள் குறித்துமான ஆராய்ச்சிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகளுக்கு மிகவும் குறைவான நிதியே
ஒதுக்கப்படுகிறது. பெண்களின் உடல் ஆரோக்கியம் என வரும்போது அவர்களின் மூளை சார்ந்த
நோய்களை களைவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.
மனிதனுக்கு உண்டாகும் உடல்நிலை
குறைபாடு, உடல்ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை அவனது வயதுடன்
தொடர்புப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த நேரியல் தொடர்பு பெண்ணின் மூளைக்கு
பொருந்தாது. பருவமடைதல், கர்ப்ப காலம் மற்றும் மெனோபாஸ் காலம் என மூன்று முக்கிய காலகட்டங்களில், பெண்ணின் மூளையானது பல குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு
உட்படுகிறது. இதனை நான் '3 Ps' என்று குறிப்பிடுவேன் ( Puberty, Pregnancy,
Perimenopause).
இந்த மூன்று முக்கிய நிலைகளில்
பருவமடைதல் மற்றும் கர்ப்ப காலம் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடையவை.
இதன் விளைவாக, பெண்ணுக்கு உடல்ரீதியாக எந்த அளவு மாற்றம் ஏற்படுகிறதோ அதே அளவு மூளையிலும்
தாக்கம் ஏற்படுத்துகிறது. இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பூப்பெய்தல் மற்றும் கர்ப்ப காலத்தில் பெண்ணின் சமூக
அறிவாற்றல் சார்ந்த மூளையின் சில பகுதிகள் சுருங்கிவிடுவதாக விஞ்ஞானிகள்
கருதுகின்றனர்.
பெண் பருவமடைந்ததற்கு பின் இளமைப்
பருவத்தை எய்தவும், அதன் தொடர்ச்சியாக தாய்மை அடைவதற்கும் ஏதுவாக தேவையற்ற நியூரான்களை அகற்றி, புதிய இடைவெளியை ஏற்படுத்தும் மூளையின் வழிமுறையாக
விஞ்ஞானிகள் இதனை பார்க்கின்றனர். இதன் விளைவாக, பூப்பெய்தல், பேறுகாலம் போன்ற முக்கிய தருணங்களில் பெண்ணின் மூளை சிறியதாகிறது.
ஆனால் அதேசமயம் அது அதிக செயல்திறன் மிக்கதாகவும் உள்ளது. மூளையின் இதேபோன்ற
செயல்திறன், மெனோபாஸ் காலத்திலும் ஏற்படும் என்று நாம் நம்பலாம்.
பெரிய உடலமைப்பு கொண்டுள்ளதால் ஆண்களுக்கு மூளையின் அளவு
பெரிதாக இருப்பதாகவும், அதேசமயம் பெண்களின் பெருமூளை
பகுதியில் கனமான செரிபிரல் கார்டெக்ஸ் (thicker cerebral cortex) உள்ளதாகவும்
'The
XX Brain' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதன்
பொருள் என்ன?
நோய், செல்களின் சேதம் மற்றும் வயோதிக்கத்தை தடுப்பதற்கான
மூளையின் செயல்திறனே அதன் இருப்பு (Brain Reserve) எனப்படுகிறது. இந்த காரணியும் ஆண்களைவிட பெண்களுக்கு
அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இதன் பயனாக, வயோதிகம் அல்லது நோய்களின் தாக்கத்தால் ஏற்படும் செய்கை
மாறுபாடுகள் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் குறைவாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
உதாரணமாக ஒத்த வயதுடைய ஆண், பெண் இருவருக்கும் நினைவாற்றல் சோதனை மேற்கொண்டால், அதில் பெண்களே அதிகம் வெற்றிப் பெறுகின்றனர்.
டிமென்ஷியாவுக்கு பெண்கள் ஆளான பின்பும் அவர்களின் நினைவாற்றல் ஆண்களைவிட நன்றாகவே
உள்ளது. ஆனால் இதன் எதிர்விளைவாக, பெண்களது மூளையின் அதிக செயல்திறன், டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகளை உணர முடியாமல் செய்து
விடுகிறது.
இதனால் சில பெண்களுக்கு டிமென்ஷியா
இருப்பது தாமதமாகவே தெரியவந்து, அவர்களுக்கு அதன்பின்பே சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டிய நிலை
ஏற்படுகிறது. டிமென்ஷியா போன்ற மனநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான
ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூளை ஆரோக்கியத்தில் பெண்களுக்கான ஹார்மோன்களின் பங்கு
மற்றும் பெண்களை ஆண்களிடமிருந்து வேறுபடுத்தும் X குரோமோசோம்களால்
மூளையில் ஏற்படும் பாதிப்பு என்ன?
பெண்களின் மூளையானது முழுக்க முழுக்க
ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனை கொண்டு இயங்குகிறது. மூளைக்குள் இயற்கையாக
செலுத்தப்படும் ஈஸ்ட்ரோஜன், தங்களுக்கான ஏற்பிகளை (Receptors)
தேடி அடைகின்றன.
ஈஸ்ட்ரோஜனும், அதற்கு சரியான வடிவம் தரும் ரெசிப்டார்களும் இணைந்து
செல்களை தூண்டி மூளையை செயல்பட வைக்கின்றன. இதனை நாம் புரிந்து கொள்வதன் மூலம், மெனோபாஸ் எப்படி பெண்ணின் மூளையை பாதிக்கிறது என்பதை எளிதாக
அறிந்து கொள்ள இயலும்.
மெனோபாஸ் காலத்தில் பெண்ணின் இனப்பெருக்க திறன் முடிவுக்கு
வருவதுடன், மூளையின் செயல்பாட்டிலும்
பெருமளவில் தாக்கம் ஏற்படுகிறது என்கிறீர்கள், இது
ஏன்?
அத்துடன் மெனோபாஸ் அறிகுறிகள் மூளையில்
இருந்துதான் தொடங்குகிறது எனவும், கருப்பையில் அல்ல என்றும்
நீங்கள் கூறுவது எப்படி?
மெனோபாஸ் நேரத்தில் கருப்பையானது
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடுகிறது.
இதனால் பெண்ணின் இனப்பெருக்க திறன் அனேகமாக முடிவுக்கு வருகிறது. இருப்பினும், மூளையின் செயல்பாட்டை கட்டுப்படுத்துவதிலும் இந்த
ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் மெனோபாஸ் என்பது இனப்பெருக்கச்
செயல்முறை மட்டுமல்ல; நரம்பியல் நடைமுறையுடன் தொடர்புடையது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
மனக்கவலை, சோர்வு, பதற்றம், நினைவாற்றல் குறைதல் போன்ற மெனோபாஸ் அறிகுறிகள் கருப்பையில்
அல்லாமல், மூளையில் இருந்தே உருவாகின்றன. இதனால் இவற்றை நரம்பியல் சார்ந்த அறிகுறிகளாகவே
கருத இயலும். பெண்ணின் மூளையில் மெனோபாஸ் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து நான்
ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தபோது, அதுதொடர்பாக யாரும் பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை.
விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே மெனோபாஸுக்கும், மூளைக்கும் இடையேயான தொடர்பு குறித்து அறிந்திருந்தனர்.
தற்போது இதுதொடர்பான விவாதங்கள் அதிகரித்து வருவதை கண்டு நான் பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.
மெனோபாஸ் நேரத்தில் சிரமங்களை சந்திக்கும் பெண்களுக்கு
உங்களின் அறிவுரை என்னவாக இருக்கும்?
நீங்கள் உடலளவிலும், மனதளவிலும் இப்போதும் சரியாகதான் இருக்கிறீர்கள் என்றும், மெனோபாஸ் காரணமாக உங்கள் மனநிலையில் எதுவும் பாதிப்பு வராது
எனவும் அவர்களுக்கு கூறுவேன். மெனோபாஸ் காலத்தில் யாரும் கஷ்டப்பட தேவையில்லை
என்பதையும் அவர்களுக்கு சொல்வேன். மெனோபாஸ் அறிகுறிகள் சற்று குழப்பமாகவும், கவலை அளிக்கும் விதத்தில் இருந்தாலும், இவை எல்லாவற்றுக்கும் நம்மிடம் மருத்துவரீதியான தீர்வுகள்
உள்ளன என்பதை பெண்கள் கவனத்தில் கொள்வது முக்கியம்.
மெனோபாஸுக்கு பிந்தைய ஹார்மோன் மாற்று
சிகிச்சையில் (HRT) தற்போது பலர் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்த சிகிச்சை முறை அல்லாத
மருத்துவத்திலும், இயற்கை மருத்துவம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களிலும் பெண்களின் ஆர்வம்
அதிகரித்து வருகிறது.
நன்றி- பி.பி.சி தமிழ்
0 comments:
Post a Comment