"நானே வருவேன்"[ சிறு கதை]

 


உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, 'நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார் என்று என் அம்மா சொன்னது ஞாபகம் வருகிறது ஆனால் இவை எல்லாம் புராணத்தில் தான் காண்கிறோம். இந்த புராணங்கள் வாய் மொழிமூலம் சில நூற்றாண்டுகள் புழக்கத்தில் இருந்து, கி பி இரண்டாம் ஆண்டளவில் அல்லது அதற்குப் பின் எழுத்தில் எழுதப் பட்டவையாகும். நான் ஒரு கிழமைக்கு முன் தான் திருமணம் செய்து, என் மனைவியை, அவளின் சொந்த கிராமத்தில் இருந்து வெளியே, தலை நகரத்துக்கு கூட்டி வந்துள்ளேன். இங்கு, கொழும்பையும்  உள்ளடக்கிய மேல் மாகாணத்தில், தமிழ் பேசும் மக்கள் மொத்தமாக  [ தமிழர் + தமிழ் பேசும் முஸ்லீம்] 15 % தான் வரும். ஆனால் கொழும்பு என்று மட்டும் எடுத்தால் 50 % அல்லது சற்றுக்  கூட தமிழ் பேசும் மக்களாக இருப்பார்கள். எனவே கொழும்பில் வாழ்வது பெரிதாக வித்தியாசம் தெரியாது. நான் 2019/04/21 ஞாயிறு காலை, சில முக்கிய விடயங்களாக, வேலைத் தளத்துக்கு போகவேண்டி இருந்தது. எனவே அப்பொழுது, 'பயப்பட வேண்டாம் ... தனியே இருக்கிறேன் என்று .. தொலைக்காட்சி பெட்டி இருக்குது .. தொலைபேசி இருக்குது .. நீ அதை பாவிக்கலாம் .. நீ என்னில் நல்ல காதல் பக்தி கொண்டு இருப்பதால் .. உனக்கு ஒரு சங்கடமோ .. தேவையோ ஏற்பட்டால்,  'நானே வருவேன்' [ஒரு பகிடியாக] மற்றது பொன்னம்பலவாணேசுவரர் கோயில் மற்றும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் .. இங்கிருந்து  சொற்ப தூரத்திலேயே .. ஒரு 15 அல்லது 20 நிமிட நடக்கும் தூரத்திலேயே ... இரண்டும் அருஅருகே இருக்கு ..  நீ விரும்பினால் போய் பார்த்தும் வரலாம்', என்று அன்பாக அவள் கையை பிடித்து அணைத்துக்கொண்டு கூறி விடை பெற்றேன். 

 

முதன் முதல் பள்ளிக்கு குழந்தையை அனுப்பும் பெற்றோர் சொல்லும் பயப்படாதே என்ற உபதேசம் – முரட்டு சிறுவர்களோ, சிறுமியோ, உன்னை படுத்தினால் பயப்படாதே, டீச்சரிடம் சொல்லு என்று சொல்லுவது போலத்தான் அவளிடம் சொல்லிவிட்டு, கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுத்துவிட்டு, பேரூந்து தரிப்பு நிலையத்துக்கு போனேன். ஏன் என்றால் அவள் கொழும்புக்கு புதிது என்பதால்!   

 

நான் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் (St. Anthony's Shrine) அருகில் பேரூந்தில் ஏறி வேலைக்கு போனேன்.  நான் பொதுவாக எந்த ஆலயமும் போய் கடவுள் / தூதுவர் இப்படி எவரையும் வணங்குவதில்லை. 'நானே வருவேன்' என்றவர் வந்தபின்பு வணங்குவோம் என்று அதை பொருட் படுத்துவதில்லை. பேரூந்தில் இருக்கும் பொழுது கொஞ்சம் என் அறிவுக்கு எட்டியவரை யோசித்தேன். அதற்குப் பின்பு எந்த பெரும்பான்மையான மதங்களின் தூதுவர்களோ இல்லை கடவுளோ 'நானே வருவேன்' என்று வந்ததாக எந்த பிற்கால புராணமும் வரலாறும் இல்லை! 

 

நான் என் வேலையில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்த தருவாயில், திடீரென என் சக நண்பர் வந்து ஒரு அதிர்ச்சி தகவல் கூறினார். 'இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் சுமார் 290 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும், அதிலும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலேயே பெரும் உயிர் சேதம் என்றும் கூறினார். நான் உடனடியாக என் மனைவிக்கு தொலை பேசி எடுத்தேன். ஆனால், அவரின் தொலைபேசி பதில் இல்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. உடனடியாக வாடகை மோட்டார் [Taxi] எடுத்துக்கொண்டு வீடு போனேன். வீடு பூட்டி இருந்தது. எனவே தேவாலயத்தைச் நோக்கி நடக்க தொடங்கினேன். அப்ப அந்த வழியில் இருந்த, நான் வழமையாக போகும் பலசரக்கு கடைக்காரர் , என்னைக் கண்டதும், ஓடி அருகில் வந்து, உங்க மனைவி, மெழுகுதிரியும், அர்ச்சனை சாமான்களும் வாங்க்கிக்கொண்டு, தான் தேவாலயத்துக்கும் சிவன் கோயிலுக்கும் போவதாக கூறிச் சென்றதாக கூறினார்.

 

அது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது, தேவாலயம் சுற்றி ஒரே ராணுவம். கிட்ட போக எவரையும் விடவில்லை. இன்னும் அங்கிருந்து இறந்தவர்களையும் காயப்பட்டவர்களையும் , தேவையான முதல் உதவி செய்து வைத்தியசாலைக்கு அவசரம் அவசரமாக கொண்டு போய்க்கொண்டு இருந்தார்கள். எனவே நான் முதலில் பக்கத்தில் இருந்த சிவன் கோவில் போனேன்.

 

நான் பதறிக்கொண்டு வருவதைக்கண்ட குருக்கள், கிட்ட வந்து, நான் உங்களை , சிலவேளை பேரூந்து தரிப்பில் நிற்கும் பொழுது கண்டுள்ளேன், ஆலயத்தில் ஒரு நாளும் காணவில்லை, என்ன நடந்தது என்று ஆறுதலாக அமைதியாக கேட்டார். நான் என் தொலைபேசியில் இருக்கும் மனைவியின் படத்தை காட்டி, இவர் என் மனைவி, இவர் கிட்டடியில்  தான் என்னை திருமணம் செய்து கொழும்பு வந்தவர், ஆலயம் அர்ச்சனை செய்ய வந்ததாக அறிந்தேன், இவரை பார்த்தீர்களா என்று கவலையாகக் கேட்டேன்.

 

குருக்கள் என் முதுகை தட்டிக் கொடுத்துக் கொண்டு, பயப்பட வேண்டாம், அவளுக்கு ஒன்றும் நிகழவில்லை. நல்ல காலம் அவர் என்னுடன் ஆலய வரலாறு, பெருமைகளை, கடைசி நேரத்தில் கேட்டுக் கொண்டு இருந்ததால், குண்டு வெடிக்கும் பொழுது இங்கு தான் நின்றார். எனினும் அந்த சத்தம், அதிர்வு அவரை பயப்படுத்தி, அதனால் மயங்கி விழுந்து விட்டார், நான் நோயாளர் ஊர்தியில் (Ambulance) பக்கத்தில் இருந்த சர்வதேச மருத்துவ - அறக்கட்டளை தனியார் வைத்திய சாலையில் [International Medi-Trust (Pvt) Ltd] சேர்த்துள்ளேன் என்று கூறினார். மேலும் அவர் உண்மையில் அவள் கொஞ்சம் முந்தியே தேவாலயம் போய் இருக்கவேண்டும். இன்றைக்கு என்று எம் ஆலய மணியில் ஏற்பட்ட திடீர் கோளாறால், கொஞ்சம் சுணங்கிவிட்டது. உங்க மனைவியின் கடவுள் பக்தி, ஆண்டவனை குளிர்ச்சிப்படுத்தி, அவரை அந்த விபத்தில் இருந்து காப்பாற்ற, இப்படி செய்திருக்கலாம் என்று ஒரு போடும் போட்டுவைத்தார்.

 

எனக்கு இப்ப அவரின் 'கடவுள் நம்பினாரை விடமாட்டார் 'நான் வருவேன்' என்று சரியான நேரத்தில், எதோ ஒரு வழியில் காப்பாறுவார்' என்ற கூற்றை எதிர்த்து வாதாட விரும்பவில்லை. என்ன இருந்தாலும் என் மனைவியை கதையினால் தாமதித்ததே அவர்தானே! ஆனால் என் மனம் 'தேவாலயத்தில் இறந்தவர்கள் காயப்பட்டவர்கள் அநேகமானோர் தமிழரே, அதிலும் சிலர் சைவரே! அப்படி என்றால் ஏன் அவர்களை காப்பாற்றவில்லை. உயிர்களில் ஆண்டவனுக்கு வேறுபாடு இல்லையே!'  என்று அலட்டிக்கொண்டு இருந்தது.

 

நான் உடனடியாக வாடகை மோட்டாரில் அந்த குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு போனேன். நானும் அவருக்கு அருகில், அவர் இருந்த அறைக்குள் போக, அவரும், கண் துறக்க நேரம் சரியாக இருந்தது. 'நான் வருவேன் , என் செல்லத்துக்கு பக்கத்தில் எப்பவும்' என்று ஒரு நம்பிக்கைக்காக , தெம்பு கொடுப்பதற்காக சொல்லிக்கொண்டு அணைத்து ஒரு முத்தம் கொடுத்தேன்! அவள் தான் அந்த குருக்களிடம் முதலில் ஆசீர்வாதம் பெற்று, அங்கு  சிவனை வழிபட்டு  பூசை செய்தபின்பே வீடுபோவோம் என்று என்னிடம் உருக்கமாக கெஞ்சி கேட்டார். அந்த நேரம் அதற்கு ஆமா போடுவதைவிட எனக்கு வேறுவழி தெரியவில்லை?

 

'நான் வருவேன்' என்று அவரை காப்பாற்றியது கடவுளா ? குருக்களா? இல்லை தற்செயலான ஒன்றா ? இதைத்தான்  பாக்கியம் [அதிர்ஷ்டம்] என்பதா?

   

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]  

1 comment:

  1. உண்மையான விடயம் ,எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு

    ReplyDelete