நமது உடல் இயக்கத்திற்கு கல்லீரல் எவ்வளவு முக்கியம், அதை ஆரோக்கியமாக வைத்து கொள்வது எப்படி? கல்லீரலை தாக்கும் பொதுவான நோய்கள் என்ன? ஃபேட்டி லிவர் என்றால் என்ன? என்பது குறித்து நம்மிடம் உரையாடினார் கல்லீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர் ஜாய் வர்கீஸ்.
கல்லீரலின் முக்கியத்துவம் என்ன?
நாம் சாப்பிடும் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவற்றின்
செரிமானம் நடைபெறுகிற ஒரே இடம் நமது கல்லீரல் மட்டுமே. சிறுநீரகம் உடலில்
தேவையில்லாத கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுவதை போல தேவையில்லாத கழிவுகளை
பித்தநீரின் மூலம் கல்லீரல் வெளியேற்றுகிறது.
ஆல்புமின் புரதம் உற்பத்தியாக கூடிய ஒரே இடம் நமது உடலில் கல்லீரல் மட்டுமே.
ஆல்புமின் பல வேலைகளை செய்யும்.
அதில் ஒன்று நாம் எடுத்து கொள்ளும் மாத்திரைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு
இடத்திற்கு எடுத்து செல்வது.
ரத்தம் உறைவதற்கு தேவையான சில மூலப்பொருட்களை கல்லீரல்தான் உற்பத்தி
செய்கிறது. இம்மாதிரியாக பல்வேறு செயல்பாடுகளை கல்லீரல் மேற்கொள்கிறது.
தனித்தனியாக பார்த்தால் 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை கல்லீரல் மேற்கொள்கிறது.
கல்லீரல் ஆரோக்கியம் அவசியம் ஏன்?
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொண்டால் பிற உறுப்புகளும் நல்லபடியாக வேலை
செய்யும். கல்லீரல் முற்றிலுமாக பழுதடைந்தால், சிறுநீரக பாதிப்பும்
ஏற்படும். அதாவது சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஏற்படும். ரத்த அழுத்தம் குறைவாக
இருக்கும்.
கல்லீரல் பாதிப்படைந்தவர்களால் நான்கு அடிக்கூட இயல்பாக நடக்க முடியாது.
மூச்சு வாங்கும். நுறையீரலும் சரியாக செயல்படாது. இயல்பாக யோசிக்க முடியாது.
தூக்கம் வராது. ஏனென்றால் கல்லீரல் பழுதடைந்தால் மூளையின் இயக்கத்தில் பாதிப்பு
ஏற்படும்.
அதேபோல இவர்களுக்கு பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஒரு சாதரண தொற்று
ஏற்பட்டாலும், அதிகம்
பாதிக்கப்படுவர். எனவே கல்லீரல் நன்றாக இருந்தாலே பிற உறுப்புகளும் நன்றாக
செயல்படும்.
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தேவைக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. அதீத
புரத உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். நமக்கு தேவையான கலோரியின் அளவை காட்டிலும்
நாம் அதிக உணவை உட்கொள்ளும்போது அது கொழுப்பாக கல்லீரலில் சேர்கிறது. நமக்கு
தேவையான கலோரியை பொருத்து உணவை உட்கொள்ள பழகிக் கொண்டால் கல்லீரலில் கொழுப்பு
சேராது.
இனிப்புகள், உருளைக் கிழங்கு, குளிர்பானங்கள், மூன்று வேளை அரிசி என
அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும். அதே சமயம் கார்ப்போஹைட்ரேட்
எடுத்து கொள்ளும் அளவுக்கு இணையாக புரதத்தையும் எடுத்து கொள்ள வேண்டும்.
பருப்புகள், பயிறு, கடலை, தோல் நீக்கப்பட்ட கோழி
கறி, மீன், முட்டை வெள்ளைக் கரு, பால் என புரதம் நிறைந்த
உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
புரத உணவுகளை அதிகம் எடுத்து கொண்டு, கார்போஹைட் ரேட் உணவை குறைத்து கொள்ள வேண்டும்.
அதேபோல நடைபயிற்சி மிக அவசியம். ஏனென்றால் முன்னர் சொன்னது போல நமது உடலுக்கு
எத்தனை கலோரிகள் தேவை என்பது நமக்கு தெரியாது. எனவே தேவையில்லாத கலோரிகளை
குறைப்பதற்கு உடற்பயிற்சி அவசியம். மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்தாலும்
போதும்.
மொத்தத்தில் என்ன தேவையோ அந்த அளவிற்கு உணவை உட்கொள்ள வேண்டும். எடுக்கும்
உணவு ஆரோக்கியமானதா என்பதை பார்த்து கொள்ள வேண்டும். முறையான நடைபயிற்சி வேண்டும்.
இதை சரியாக கடைப்பிடித்தால், கல்லீரலுக்கு மட்டுமல்ல நமது இதயம், நுரையீரல், மூட்டுகளுக்கும் நல்லது.
ஆரோக்கியமான வாழ்வை நம்மால் பெற முடியும்.
கல்லீரலை பாதிக்கும் நோய்கள் என்னென்ன?
கல்லீரலை பாதிக்கக்கூடிய சில தொற்றுகள் உண்டு. அவ்வாறு தொற்றுகள் ஏற்பட்டால்
முறையான பரிசோதனைகளுக்கு பிறகு அது என்ன மாதிரியான தொற்று என்பதை கண்டறிய
முடியும்.
சில தொற்றுகள் கெட்டுப்போன நீரின் மூலமோ அல்லது உணவின் மூலமோ கூட ஏற்படலாம்.
உதராணமாக ஹெபடிடிஸ் பி, ஹெபாடடிஸ் இ போன்ற தொற்றுகளை சொல்லலாம். சில தொற்றுகள்
ரத்தம் ஏற்றுதல், வைரஸ்
பாதிக்கப்பட்டவர்களின் ஊசியை நாமும் பயன்படுத்துதல், பாதுகாப்பற்ற பாலியல்
உறவு மூலமும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இதில் ஹெபடிடிஸ் பி
மற்றும் சி கல்லீரலை பாதிக்க கூடியது.
அதேபோல குடிப்பழக்கம், கல்லீரலை அதிகம் பாதிக்கும்.
'ஃபேட்டி லிவர்' பிரச்னை என்றால் என்ன?
பொதுவாக கல்லிரலில் கொழுப்பு இருக்காது. அதிக கொழுப்பை அது செரிமான
முறையின்போது அழித்துவிடும். கல்லீரல் செல்லுக்குள் உள்ள மைட்டோகாண்ட்ரியாதான்
கொழுப்பை சிறு சிறு மூலக்கூறுகளாக கரைக்கும் செயல்முறையை நடத்துகிறது.
இந்த கொழுப்புக்கென்று ஒரு அளவு உள்ளது அந்த அளவை மீறும் போது அதனால்
மெட்டாபலிசத்தை செய்ய முடியாது. அது தேவையில்லாமல் செல்லுக்குள் சென்று
சேமிக்கப்படும்.
எடுத்துக்காட்டாக ஒரு 100 கிராம் கல்லீரலில் 5 கிராம் கொழுப்பு
இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் 100 கி கல்லீரலில் 10 கி, 20கி, 30 கி கொழுப்பு என்பது
அதிகடிப்படியான கொழுப்பாக உள்ளது.
சிலருக்கு இதன் அளவு 50 கிராம் என்ற அளவிலும் இருக்கும் இவ்வாறு கொழுப்பு அதிகம்
இருக்கும் பட்சத்தில் அது கல்லீரலின் இயல்பான இயக்கத்திற்கு பாதிப்பை
ஏற்படுத்தும். அதனால் அவர்களுக்கு படிபடியாக வியாதிகள் வரத் தொடங்கும்.
கல்லிரலின் முக்கியத்துவம் காரணமாகவே,ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 19ஆம் தேதி கல்லீரல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
விஷ்ணுப்ரியா ராஜசேகர்-/-பிபிசி தமிழ்
No comments:
Post a Comment