பெண்களின் குற்ற உணர்ச்சி
மூன்றுவயதுக் குழந்தைகளாக இருக்கும்போதே, குற்ற உணர்ச்சி நமக்குள்
விதைக்கப்பட்டுவிடுகிறது.
`கூடாது’ என்று
அம்மா கண்டித்திருந்த காரியத்தைச் செய்துவிட்டு, பிடிப்பட்ட
குழந்தை திருதிருவென்று விழிக்கும்.
::கதை:: வதையும் குற்ற உணர்வும்
தான் ஏதோ ஒரு விதத்தில் தாழ்ந்திருப்பதால்தான் தந்தை வதைக்கிறார் என்று
தோன்றிப்போக, சிறு வயதிலேயே
தாழ்மை உணர்ச்சிக்கு ஆளானாள் சியாமளா. காரணம் அவரது குடிபோதை என்று அப்போது
புரியவில்லை.
பிறரால் பாலியல் பலாத்காரத்துக்கும் உள்ளானபோது, தன்மேல்தான் ஏதோ
தவறு என்று நினைத்தாள்.
பிறருடன் அதைப் பகிர்ந்துகொள்ளவும் தெரியாமல் போக, குற்ற உணர்வு
மிகுந்தது.
அவள் செய்த எந்தக் காரியத்திலும் ஓயாமல் குற்றம் கண்டுபிடிக்கும் ஒருவனை
மணந்ததும், குழப்பம்
எழுந்தது. இனம்புரியாத பயம். அவனுடன் தனிமையில் கழிப்பதைத் தவிர்த்தாள்.
மனைவியின் மன உளைச்சல் புரியாது, “நீ எட்டு மணிக்கே தூங்கப்போகிறாயே! அப்புறம் `ஏதாவது’ நடந்தால், என்னைக் குறை
சொல்லாதே!” என்று கணவன் மிரட்டுவானாம்.
எனக்கு சியாமளாவைச் சிறுவயதிலிருந்தே தெரியும். அவள் தன் மணவாழ்க்கையின்
அவலத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டதும், சிறு வயதில் அனுபவித்த கொடுமைகளால் அவளுடைய
உணர்வுகள் இப்படி ஆட்டுவிக்கின்றன என்று விளக்கினேன். சிலவற்றை அவளே
மறந்திருந்தாலும்,
அவற்றின் பாதிப்புகள் தங்கிவிட்டிருந்தன.
குற்ற உணர்ச்சி தன்னைத்தானே தாழ்மையாக ஒருவர் நினைக்க வழிவகுக்கும்.
இப்படிப்பட்டவரைப் பிறர் மிரட்டுவார்கள், எதிர்ப்பே இல்லாததால்.
“எந்தவித
வதையானாலும், உடனே
எதிர்க்கவேண்டும். பொறுமையுடன் சகித்துக்கொண்டால், அதிகரிக்கும்,” என்று நான் தூபம்
போட்டேன். அதற்கு உடனே பலன் கிடைத்தது.
அடுத்த முறை,
`ஏதாவது நடந்தால், என்னைக் குறை சொல்லாதே!’ என்ற வசனத்தையே கணவன்
திரும்பச் சொல்ல, அதற்குமேலும்
பொறுக்க முடியாது,
“நான் என்ன செய்தாலும் தப்பு என்கிறீர்கள். தப்பித் தவறி, கால் உங்கள்மேல்
பட்டால், அதற்கு வேறு
திட்டு வாங்கவேண்டும்!” என்று படபடத்தாள் சியாமளா.
நம்பமுடியாது அவளைப் பார்த்தான் அவன். “விளையாடுகிறாயா? அதற்கெல்லாமா
திட்டுவார்கள்!”
நிறைய அழுகை, சண்டை எல்லாம்
தொடர்ந்தன.
உள்ளுக்குள்ளேயே வைத்துப் புழுங்கினால் நிலைமை எப்படி
மாறும்?
ஒதுக்கிவிடு!
என்றோ நடந்தது – அது எவருடைய தவறாக இருந்தாலும் — அதையே நினைத்து, மறுகிக்கொண்டிருந்தாற்போல்
அது மாறிவிடப்போகிறதா?
நிலைமை இன்னும் மோசமாக, `செய்யக்கூடாததைச் செய்துவிடுவோமோ!’ என்ற
அச்சம்தான் அலைக்கழைக்கும்.
எதற்காக நம்மை நாமே தண்டித்துக்கொள்வது?
இவ்வாறு மகிழ்ச்சியை இழப்பதைவிட, `திரும்பவும் அதே தவற்றைச் செய்யமாட்டேன்!’ என்ற
உறுதிபூண்டு, பழைய நினைவுகளைப்
பின்னுக்குத் தள்ளவேண்டியதுதான்.
பிள்ளைகளின் கடமை?
தம்பிக்கு மூளையில் குறைபாடு இருந்ததால் பெற்றோர் மனம் வாடுகிறார்கள் என்பது
அருணாவுக்குச் சிறு வயதிலேயே புரிந்தது.
`நான் மட்டும்
புத்திசாலியாக இருக்கலாமா?’ என்ற குற்ற உணர்ச்சி எழ, பெற்றோருக்கு மிக
மிக நல்ல மகளாக, எல்லா
விதத்திலும் அவர்களுக்குப் பெருமை தேடித்தரும் வகையில் நடக்கத் தீர்மானித்தாள்.
அந்த சிறுபிள்ளைத்தனமான முடிவால், மன அழுத்தம் அதிகரித்தது. தன் இயலாமையை
நெருங்கிய தோழிகளுடன் பகிர்ந்துகொண்டாள்.
அருணாவின் தாய்,
“என் மகள் எங்கள் மனம் சிறிதும் கோணாது நடப்பாள். இப்படி ஒரு
மகளைப் பெற நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!” என்று என்னிடம் கூறினாள், பூரிப்புடன்.
எப்போதும் ஒரு சிறு தவறுகூடச் செய்யாது இருக்க யாரால்தான் முடியும்?
“தம்பியின் குறையை
ஈடு செய்வதற்காக, அரும்பாடுபட்டு
முயல்கிறாள்,” என்று
விளக்கினேன். “அவள் மிகுந்த பிரயாசைப்பட்டு நல்லவிதமாக நடந்துகொள்வது
உங்களுக்காக!”
“இது அவள் குற்றம்
இல்லையே!” என்று தழுதழுத்தாள் தாய். “நான் கவனிக்கிறேன்”.
“வெளிப்படையாகக்
கேட்டுவிடு,” என்று அழுத்திக்
கூறினேன்.
எதற்குத்தான் குற்ற உணர்ச்சி என்று பல பெண்களுக்குப் புரிவதில்லை.
::கதை::
இடைநிலைப் பள்ளியில் என் மகள் படித்தபோது, அவளுடைய
வகுப்புத் தோழிகள்,
`படித்தால் பெரிய வேலை கிடைக்கும். உத்தியோகம் ஆண்களுக்கு
அழகு என்றுதானே சொல்லிவைத்திருக்கிறார்கள்? நாம் அவர்களுடன் போட்டி போடலாமா? ஏதோ தப்பு
செய்வதுபோல் இருக்கிறது,’ என்பார்களாம்.
“எங்களுக்கு அந்த
குற்ற உணர்ச்சி இல்லையே! ஏன்?” என்று மகள் கேட்டாள்.
எங்கள் குடும்பத்தில், இப்போது சுமார் நூறு வயதாகி இருக்கக்கூடிய இரு பெண்மணிகள்
பெரிய படிப்பு படித்து, அதற்கேற்ற உத்தியோகமும் வகித்திருந்தனர்.
அந்தக் காலத்தில் படித்து, வேலைக்குப் போய், சுயசம்பாத்தியம், அதனால் கிடைத்த
சுதந்திரம் இதற்கெல்லாம் கிடைத்த அவதூறை அவர்கள் அனுபவித்திருப்பார்கள்.
அதற்குப்பின் வந்த என்னைப்போன்ற பெண்களுக்கு நல்லதொரு பாதை
வகுத்திருந்தார்கள்.
சாவினால் குற்ற உணர்வா?
நமக்கு நெருங்கிய ஒருவர் இறந்தால், முதலில் எழுவது குற்ற உணர்வு.
`அவருடன்
இன்னும் அதிக நேரத்தைக் கழித்திருக்கலாமோ!’
என்று நம்மையே வருத்திக்கொள்வோம்.
::கதை::
மாமியார் இருந்தவரை, அவளுடைய அன்பு புரியவில்லை சங்கரிக்கு.
அவள் மறைவுக்குப் பின்னர், `அம்மா,’ என்று யாராவது ஆரம்பித்தாலே, கண்களில்
நீர்ப்பெருக்கெடுக்கும்.
நான் அதிசயப்பட்டு, விசாரித்தேன்.
“`இன்னும் அன்பாக
நடத்தியிருக்கலாமோ?’
என்று வருத்தமாக இருக்கிறது. அம்மாவின் நல்ல மனம் அப்போது
புரியவில்லை!” என்று விம்மினாள்.
குற்ற உணர்வு குழப்பத்தை மட்டுமின்றி, ஏமாற்றத்தையும் அச்சத்தையும் விளைவிக்கிறது.
தன்னம்பிக்கை குன்றிவிடுகிறது.
நல்ல மனைவியாக இருப்பது எப்படி?
இந்தக் கேள்விக்குப் பதிலை தமிழ் திரைப்படங்களிலிருந்து கற்காதீர்கள், பெண்களே! அது
ஆண்களுக்குச் சாதகமாக இருக்கும்.
கணவனுடைய
ஒவ்வொரு தேவையையும் கவனித்து, ஏதோ கைக்குழந்தைபோல் அவனைப் பாவித்து
நடத்தினால்தான் நல்ல மனைவியா?
கொண்டவன் மனம் கோணக்கூடாது, அவன் என்ன சொன்னாலும் ஏற்றால்தான் பிறரது
பாராட்டுக்கு உரியவர்களாகலாம் என்று நினைத்து, அதன்படி
நடப்பார்கள் பலர்.
அப்படி இல்லாதவளை, “மோசமான மனைவி” என்று பிறர் கருதலாம். அவர்களை நம்பினால், குற்ற உணர்வுதான்
மிகும்.
விடியற்காலையில் எழுந்து, சமையலறையில் உழன்று, அவன்
அலுவலகத்திற்குப் புறப்படும்வரை, `தனக்கும் தேவைகள் இருக்கலாம்’ என்பதையே மறந்த
நிலையில் இருக்கும் பெண், `நான் ஆதர்சமான மனைவி!’ என்று பெருமை கொள்ளலாம்.
ஆனால், ஓயாமல்
உழைப்பதால் எழும் எரிச்சல், அவளையுமறியாது சிடுசிடுப்பாக மாறும்.
அவள் வெகுவாகக் களைத்திருக்கும்போது, அன்பு செலுத்துவதாக நினைத்து, கணவன் அவள்
கையைப் பிடித்தால் அவளால் ரசிக்க முடியுமா?
நான் நல்ல தாய் இல்லை
உத்தியோகத்திற்குப் போகும் பெண்களில் சிலர் தாம் சிறுவயதில் அனுபவித்ததுபோல்
தாயின் கவனிப்பு ஒவ்வொரு நிமிடமும் தம் குழந்தைகளுக்கும் கிடைக்கவில்லையே என்று
வருந்துவார்கள்.
அப்படிப்பட்ட இளம்தாய் ஒருத்தி, “என் மகளுக்கு எதுவுமே சொல்லிக்கொடுக்க எனக்குத்
தெரியவில்லை. நான் ஒரு நல்ல அம்மா இல்லை,” என்று, அழமாட்டாக்குறையாக என்னிடம் முறையிட்டாள்.
பெரிய உத்தியோகம் வகித்த அப்பெண் ஓய்வு தினங்களில் மகளுக்குப் பிடித்ததைச்
சமைத்துப்போடுவாள். அன்புடன் அவளை நடத்துவாள்.
குழந்தைக்கு அந்த அன்பு புரிந்தது. “அம்மாவை ரொம்பப் பிடிக்கும்,” என்று தானே
என்னிடம் கூறினாள்.
காலம் மாறுவதற்கேற்ப நாமும் மாறவேண்டியிருக்கிறது. இது புரிந்தால், மனைவியோ, தாயோ, தன்னையே
வருத்திக்கொள்ள வேண்டியதில்லை.
பெண்களுக்குள் இந்த குற்ற உணர்வை வலியப் புகுத்த
முயல்கிறவர்களும் உண்டு.
::கதை::
“என் மகள், கணவர் இருவரும், `உனக்கு
எங்கள்மேல் அக்கறையே கிடையாது. அதுதான் எங்களுடன் போதிய நேரத்தைக் கழிக்காது, வேலைக்குப்
போகிறாய்,’ என்று தினமும்
குற்றம் சாட்டுகிறார்கள்,” என்று வருத்தத்துடன் முறையிட்டாள் என் தோழி மாலினி.
“வேலையை
விட்டுவிடுகிறேன் என்று மிரட்டு!”
“சொல்லிப்பார்த்தேனே!
அதற்கும் இணங்கவில்லை!”
போதிய அனுபவம் இல்லாத மகளுக்குத்தான் புரியவில்லை.
தந்தையாவது, “அம்மாவும்
சம்பாதிப்பதால்தான் நாம் தாராளமாகச் செலவு செய்ய முடிகிறது!” என்று புத்தி சொல்லி
இருக்கவேண்டாமோ?
மனைவியைக் குற்ற
உணர்ச்சிக்கு ஆளாக்கி வருத்துவதில் அப்படி என்ன மகிழ்ச்சி?
::நிர்மலா
ராகவன்-/-எழுத்தாளர், சமூக
ஆர்வலர். மலேசியா.
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக... Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1
No comments:
Post a Comment