தேடிப் போகவேண்டிய செல்வம்
அள்ள அள்ளக் குறையாதது அறிவு மட்டுமே.
இது புரியாத சிலர், `எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிக்கொடுத்தால், பிறரும் புத்திசாலி
ஆகிவிடுவார்களே! அப்புறம் என்னை யார் மதிப்பார்கள்?’ என்று கருமித்தனமாக
யோசித்து, அதன்படி
நடப்பார்கள்.
அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால், தெளிந்த மனத்தையும்
அன்பையும் வளர்க்காத அறிவால் யாருக்கு என்ன பயன்?
பிறரது மதிப்புதான் கிடைக்குமா?
தமிழில் கல்வி பயின்று, பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் படித்த மாதுரி, “நான் இப்போல்லாம் தமிழிலே
எதுவும் படிக்கிறதில்லே. விட்டாச்சு!” என்று பெருமை பேசுவாள்.
தாய்மொழியான தமிழால் அவள் பெற்ற அறிவு அவளுக்கோ, பிறருக்கோ பயன்படவில்லை.
அந்த அறிவைப் பெருக்கிக்கொள்ள அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தான் அறிந்தவற்றை தன் சொந்த வாழ்க்கைக்கும் பிறருக்கும் எவ்வாறு
பயன்படுத்துவது என்று யோசித்து, பிறரையும் சிந்திக்க வைப்பவரே அறிவாளி.
அறிவாளி அதிகமாகப் பேசமாட்டார். ஒருவர் தானே பேசிக்கொண்டிருந்தால், பிறரது கருத்தை
அறியமுடியாதே! பணிவுடன் பிறர் சொல்வதைக் கேட்பதாலும் அறிவைப் பெருக்கமுடியும்.
அவசியம் என்று வரும்போது, சுருக்கமாகச் சொல்வார்.
Any fool can know. The point is to understand (ஐன்ஸ்டீன்)
நிறையப் படித்தும், மனப்பாடம் செய்தும், பற்பல விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பவர்
அறிவாளி என்பதில்லை. தாம் அறிந்ததை – பிறர் கேளாமலேயே – சொல்லி, தமது விரிவான அறிவைப்
பறைசாற்றிக் கொள்கிறவர் இவர்.
பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தையைக் கேட்டுப்பாருங்கள், “இன்று என்ன படித்தாய்?” என்று.
“எல்லாம்!” என்று
கர்வத்துடன் பதில் வரும்.
ஆனால், வளர்ந்தபின்னரும், “எனக்கு எல்லாம்
தெரியும்!” என்று முழங்குபவன் அறிவிலி. அவ்வாறு நம்புவதால், மேன்மேலும் அறிவைப்
பெருக்கிக்கொள்ளும் ஆர்வம் அவனுக்கு இருப்பதில்லை.
பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பதால் அறிவு பெருகிவிடாது. அதை நாம்தான்
தேடிப் போகவேண்டும். காலம் முழுவதும் தேடிக்கொண்டிருந்தாலும். எல்லாவற்றையும்
அறியமுடியாது.
ஒரு துணுக்கு: உனக்குத் தெரிந்ததைப் பற்றி எழுது.
நிறைய ஓய்வு நேரம் கிடைக்கும்.
அதாவது, ஒருவனுக்குத்
தெரிந்ததைவிட, தெரியாதவைதான்
அதிகம்.
தனக்கு எவ்வளவு தெரியாது என்று தெரிந்து வைத்திருப்பவனைத்தான் அறிவாளி
என்கிறோம்.
அறிவைப் பெருக்கவேண்டுமா?
எதையும் விரைவாகத் தெரிந்துகொள்ள ஒரே வழிதான். கேள்விகள் கேட்கவேண்டும்.
குழந்தைகள் மூன்று வயதிலிருந்தே எல்லாவற்றையும் புரிந்துகொள்ள ஆர்வம்
காட்டுவார்கள். அவர்களது அறிவைப் பெருக்குவது வளர்ப்பவர்கள் கையில்தான்
இருக்கிறது.
`புத்திசாலி!’
என்று பிறரது பாராட்டைப் பெறும் குழந்தைகளை நிறைய கேள்விகள் கேட்கப்
பழக்கியிருப்பார்கள் பெற்றோர்.
`ஏன்? ஏம்மா? சொல்லு!’ இரண்டு வயதில்
நான் என் குழந்தைகளுக்குப் போதித்த மந்திரம்.
எதைப் பார்த்தாலும், அந்த வயதிலேயே என்னை அப்படிக் கேட்பார்கள். வயதாக ஆக, கேள்விகளும் தொடர்ந்தன.
::கதை::
என் வயிற்றில் இருந்த மூன்று மாதக் கருவைப் பற்றி ஆவலுடன் விசாரித்தாள் எட்டு
வயதான மகள்.
“அம்மா! இப்போ
குழந்தை எத்தனை பெரிசா இருக்கும்?”
“தெரியலியே!”
என்று ஒப்புக்கொண்டேன். எப்படியும், நான் எதையாவது தேடிப் படித்து, சொல்லிவிடுவேன் என்று
அவள் சமாதானம் அடைந்தாள்.
நான் என்ன பதில் அளித்திருந்தாலும் அவள் ஏற்றிருப்பாள். ஆனால், உண்மையை உள்ளபடிச்
சொல்வதுதான் சரி என்று நம்புகிறவள் நான்.
அப்போது இணையம் கிடையாது. வாசகசாலைக்குப் போனேன்.
“ஒரு கட்டை விரல்
நீளம்,” என்று நான்
சொல்லக் கேட்டு, “எனக்கு அவ்வளவு
குட்டி பேபியைத் தூக்கத்தெரியாதே!” என்று கவலை தெரிவித்தாள் மகள்.
“எனக்கும்
தெரியாது. ஆனா, பெரிசாப்
போயிடும்”.
“நான் படுத்தாம
சாப்பிட்டாதான், பெரியவளாப்
போயிடுவேன்னு சொன்னியே! பேபி எப்படி சாப்பிடும்?”
“அதுக்காக நான்
சாப்பிடறேன்”.
இந்த ரீதியில் கேள்விகள் தொடர்ந்தன.
`அசடாப் போயிட்டே!
இந்தமாதிரி கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது,’ என்று நான் கண்டிக்கவில்லை. ஏனெனில், குழந்தைகள் எந்தவிதமான
கேள்விகள் கேட்டாலும், அதற்கான பதிலை அவர்களால் ஏற்க முடியும்.
தர்மசங்கடமான சில கேள்விகளுக்குப் பதிலை ஒத்திப்போடலாம். “குழந்தை எப்படி ஒன்
தொப்பைக்குள்ள போச்சு? ஏன் முழுங்கினே?”
முதல்முறையாக நான் சிடுசிடுத்தேன். “நீ இன்னும் கொஞ்சம் பெரியவளாப்போனதும்
சொல்றேன். இப்போ போய் விளையாடு”.
கண்ணீருடன் அவள் முறைத்தாள். “என்னை அசடாக்கணும்னு பாக்கறே! அப்புறம் நான்
எப்படி அம்மாவா ஆகமுடியும்?”
சற்றுப் பொறுத்து, “ஏம்மா, நான் எது சொன்னாலும் நீ சிரிப்பே?”
இவ்வாறு ஆரம்பிக்கும் அறிவுத் தாகத்திற்கு ஆரம்பம் உண்டு. ஆனால், முடிவே கிடையாது.
அறிவினால் ஏற்படும் சக்தியைத்தான் Knowledge is power என்கிறார்கள்.
எதற்கு அறிவைப் பெருக்குவது?
புதிய சமாசாரங்களை ஆர்வத்துடன் கற்பதாலும், புதிய அனுபவங்களை
நாடுவதாலும் அடையக்கூடிய நன்மைகள் பல.
வீண் கவலை மறைந்துவிடும்.
எந்த வயதிலும் உற்சாகம் குன்றாது, மேலும் பலவற்றை எளிதாகக் கற்க முடியும்.
எல்லாச் சூழ்நிலைகளிலும், புதியவர்களுடன் பழக முடிகிறது.
தன்னம்பிக்கையுடன், பிறரது மதிப்பையும் பெறலாம்.
ஆனாலும், புதிதாக ஓர்
அனுபவம் ஏற்படும்போது சற்று பயம் எழக்கூடும். இது இயற்கை. பயத்தைப்
பொருட்படுத்தாது, துணிவுடன்
இறங்கினால் அறிவு பெருகும்.
நாம் பெறும் அறிவை நன்மை, தீமை இரண்டிற்கும் உபயோகப்படுத்த முடியும்.
இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் இருக்கிறது.
நாம் பெற்ற அனுபவம் நம்மை நல்லவிதமாக மாற்றுவதாக இருக்கவேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், காதல், செக்ஸ் போன்ற வார்த்தைகள் நம்மிடையே
சொல்லத்தகாதனவாக இருந்தன.
இந்த `கெட்ட
வார்த்தைகளை’ப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பியவர்கள் ரகசியமாகப் படித்தார்கள், கண்ட கண்ட படம்
பார்த்தார்கள்.
அவை சரியான விளக்கங்களை அளித்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
::கதை::
நான் வானொலியில், `செக்ஸ்’ என்ற தலைப்பில் பேசினேன்.
உறவினர்கள் அதிர்ந்தார்கள், `வெளிப்படையாக எப்படித்தான் இதைப் பற்றியெல்லாம்
பேசுகிறாயோ!’ என்று.
அதன்பின், ஆங்கிலத்தில்
நிறைய எழுதினேன்.
`கடவுளைப்போல்
படைப்புத் தொழிலை மனிதனும் செய்யும் வழி இது. சொல்லக்கூடாத வார்த்தை என்று
சொல்லிச் சொல்லியே,
இதைக் கெட்ட வார்த்தையாக ஆக்கியிருக்கிறார்கள். அதனாலேயே
இதை முறைகேடான வழிகளில் அறியும் ஆர்வம் தூண்டப்படுகிறது,’ என்ற ரீதியில் எழுதினேன்.
ஒரு திருமண வைபவத்தில் என்னைச் சந்தித்த இளைஞன் ஒருவன், “நீங்க `அதைப்பத்தி’ எழுதினது
எல்லாத்தையும் நான் படிச்சிருக்கேன்,” என்றான், ரகசியக் குரலில்.
“அந்த வார்த்தை
சொல்லக் கூடாதது இல்லேன்னு புரிய வைக்கிறதுக்காகத்தான் நான் எழுதறேன்,” என்றேன், சற்று அலுப்புடன்.
செல்வத்திற்கும், அறிவுத் தேடலுக்கும் இடையே ஓர்
ஒற்றுமை: எவ்வளவுதான் அடைந்தாலும், திருப்தி என்னவோ கிடைக்காது.
ஒருவர், `எதையாவது
புதிதாகக் கற்றால்,
பணம் சம்பாதிக்க முடியுமா?’ என்று கணக்குப்
பார்த்துக்கொண்டிருந்தால், அந்த இலக்கே தவறு.
இப்படிப்பட்டவர்கள், தாம் நம்பியவை தவறு என்று ஒத்துக்கொள்ள பயந்து, புதிய விஷயங்களை அறிய
ஆர்வம் காட்டமாட்டார்கள்.
அறிவு எப்படித்தான் வளரும்?
::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக... Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1
No comments:
Post a Comment