உடல்மொழியும் நம்பிக்கையும்
மனிதன் தனி மரமல்ல. ஏதோ ஒரு விதத்தில் பிறருடன் தொடர்பு வைத்திருக்க
நேர்கிறது.
நாம் கூறுவது பிறருக்குப் போய்ச்சேர வேண்டுமானால், கேட்பவர்களுக்கு நம்மீது
நம்பிக்கை எழச் செய்யவேண்டும். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவது
அவசியம்.
மிகக் குண்டாக இருந்த ஒரு மாது சிறப்புரை ஆற்ற ஒரு கல்லூரிக்கு வந்தாள்.
அதை ஒட்டி, ஆங்கில
தினசரியில் வந்த ஒரு கண்டனக் கடிதம்: “தங்கள் உடலையே தகுந்தபடி பார்த்துக்கொள்ளத்
தெரியாதவர்கள் பிறருக்கு அறிவுரை கூற வருகிறார்கள்! முதலில் அவர்கள் தங்களைக்
கவனித்துக்கொள்ளக் கற்கட்டும்”.
ஆசிரியப் பயிற்சியின்போது எங்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டது: “அழகாக
உடுத்து வருகின்ற ஆசிரியை மாணவ மாணவிகளின் கவனத்தை ஈர்க்கிறாள்”.
சூழ்நிலைக்குப் பொருத்தமான ஆடை அணிவது தன்னம்பிக்கைக்கான முதல் படி. சுருங்கச்
சொன்னால், கல்யாணத்திற்கு
அணிவதை துக்கம் விசாரிக்கப் போகும்போதோ, கடைகண்ணிகளுக்கோ அணிவது
மடமை.
நான் பள்ளியில் பயிலும்போது, ஆசிரியை ஒருவர் பக்கவாட்டில் அசைந்தபடியே பாடம்
கற்பிப்பார். சற்றுப் பருமனான இருந்த இன்னொருவர் கரும்பலகைமீது சாய்ந்துதான்
பேசுவார். எங்களுக்குள் பேசி, கேலி செய்வோம்.
குரல், தொனி
“குரல் உரக்கவோ, அல்லது அதிகாரமாகவோ
இருப்பதுதான் ஒரு தலைவருக்கு ஏற்றது”. பலரும் இப்படித்தான் எண்ணுகிறார்கள்.
கீழ்ப்படியாதவர்களை வேண்டுமானால் இவ்வாறு அச்சுறுத்தலாம்.
கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் பெரும்பாலும் வசதிகுறைந்த இல்லங்களிலிருந்து
வருபவர்கள். பாடம் நடக்கும்போதே உரக்கப்
பேசுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, வாங்கும் சம்பளத்திற்கு ஆசிரியைகள் உயிரைக்
கொடுக்கவேண்டும்.
முதல் வருடம்,
என்னால் மாணவர்களை அடக்க முடியவில்லை.
“Your voice is not
commanding, Teacher!” என்று விளக்கினான் ஒருவன்.
நான் வேண்டுமென்றே குரலைக் குறைத்து, “உங்களுக்காக நான் சாகப்போவதில்லை. அக்கறை
இருந்தால், கவனியுங்கள்!”
என்றேன்.
`நான் உங்களைவிட
உயர்ந்த நிலையில் இருக்கிறேன்!’ என்பதுபோல் மாணவர்களை மிரட்டி, அதிகாரமாக நடத்தும்
ஆசிரியர்கள் அவர்களிடம் தோழமையை எதிர்பார்க்க முடியாது.
ஆசிரியையுடன் தோழமையா! நடக்கிற காரியமா?
தம் வகுப்பிலிருந்த மாணவர்கள் பிற ஆசிரியைகளுக்கு வைத்திருந்த
கேலிப்பெயர்களைக்கூட என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள் மாணவிகள். இது நம்பிக்கையுடன்
நட்பையும் குறிக்கிறது.
உருவத்துடன், நடை, உடை இதெல்லாம் சரியாக
இருந்தால் போதுமா?
முகபாவம், கையசைவு, கண்ணால் தொடர்பு கொள்வது
ஆகியவையும் உடல் மொழிதான்.
ஒரு பேச்சுப்போட்டியில், மனப்பாடம் செய்துவைத்திருந்தது மறந்துவிடுமோ
என்ற பதைப்புடன், தூரத்தில் ஒரே
இடத்தில் பார்வையைப் பதித்து, சொல்லி முடித்தேன்.
நீதிபதி கூறிய அறிவுரை: “பிறருடன் பேசும்போது, அவரைப் பார்த்துத்தான்
பேசுகிறோம். ஒரே நிலையில் பார்வை எங்கோ பதிந்திருந்தால், நீங்கள் கூறுவது
நம்பும்படியாக இருக்காது”.
தன்னம்பிக்கை உடையவர்களின் அடையாளம்
தம் திறமை என்னவென்று புரிந்து, பழைய சாதனைகளை அலசுவது, ஏதாவதொரு இலக்கு மற்றும்
அமைதியோடு பயனும் அளிக்கும் பொழுதுபோக்கு என்று நாட்களைக் கழிப்பார்கள்.
“தன்னைத்தானே அறிகிறவனே எதிலும் வெற்றி
பெறுவான்” (தத்துவஞானி SUN TZU).
மற்றவர்கள் என்ன குறை சொன்னாலும், நான்
இருக்கிறபடியேதான் இருக்கமுடியும். எதற்கு மாற வேண்டும்?
இவ்வாறு நமக்கு நாமே தைரியம் அளித்துக்கொண்டால், தன்னம்பிக்கை தானே வரும்.
இது கர்வமில்லை. பிறர் புகழும்போது ஏற்படுவதுதான் கர்வம்.
ஏன் பயம்?
ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்குமுன், `பிறர் என்ன சொல்வார்கள்?’ `தோற்றுவிடுவோமோ?’ என்று பல எதிர்மறை
எண்ணங்கள் எழுவதால்தான் அச்சம் எழுகிறது.
பிறர் நினைப்பதைப் பற்றி என்ன யோசனை? அவர்களும் மற்றவர்களைப் பற்றித்தான்
கவலைப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்!
`பிரச்னைகளுக்கு
எவ்வாறு தீர்வு காணலாம்?” என்று நமக்கு எழும் குழப்பத்தை ஆக்ககரமாக
மாற்றிக்கொள்ளலாமே!
நம் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது நல்ல பயிற்சி.
எனக்குள் ஒவ்வொரு உணர்வு எழும்போதும், `ஏன் இப்படி?’ என்று அலசுவேன், எட்டு வயதிலிருந்தே.
`ஏன் இன்று
மகிழ்ச்சியாக இருக்கிறேன்?’
`எப்போதும்
திட்டும் ஆசிரியை இன்று புகழ்ந்தார்’.
இவ்வாறு யோசிக்க யோசிக்க, என் உணர்ச்சிகள் பிறரைச் சார்ந்திருக்கிறதென்று
புரிந்தது.
நாளடைவில், `நான் என்ன, அவர்கள் கைப்பாவையா, அவர்களுக்கேற்ப ஆட?’ என்ற எரிச்சலெழ, மாறிப்போனேன். பிறரது
கூற்று என்னை அதிகமாகப் பாதிக்கவிடாது பார்த்துக்கொண்டேன்.
அதன்பின், வெற்றியோ, தோல்வியோ, எது கிடைத்தாலும், வேடிக்கையாகத்தான்
இருக்கும். மிகுந்த மகிழ்ச்சியோ, வருத்தமோ எழுவதில்லை.
ஒருவர் தன்னம்பிக்கையோடு நடந்தால், பிறரும்
வெற்றி பெறத் தூண்டுகோலாக அமைகிறார்.
::கதை::
எங்கள் வருடாந்திர விளையாட்டுத் தினத்தன்று மற்றொரு பள்ளி ஆசிரியைகளுடன்
இழு-பறி (TUG OF
WAR) போட்டி.
“போட்டியில் பங்கு
கொள்வது வெற்றி பெறத்தான். அதற்கேற்ப உடை அணிந்து வாருங்கள்,” என்று எங்கள்
குழுவிலிருந்த ஒவ்வொருவரிடமும் தனித்தனியே வலியுறுத்தினேன்.
வேடிக்கையாகச் சொல்கிறேன் என்றெண்ணி முதலில் சிரித்தாலும், எல்லாரும் சம்பவத்தன்று
விளையாட்டு வீராங்கனைகளாக வந்தார்கள்.
அடுத்த பள்ளி தலைமை ஆசிரியை கவலைதோய்ந்த முகத்துடன், எங்கள் உடைகளையும், காலணிகளையும் பார்த்தபடி
குறுக்கும் நெடுக்கும் நடந்தாள். அப்போதே எங்களது தைரியம் கூடியது.
தங்கள் பள்ளி வெற்றி பெற்றதில் எங்கள் மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி, பெருமை.
பரிசாக, ஆளுக்கொரு ஒரு
சிறு குடை கிடைத்தது.
“நன்றாக
இழுத்தீர்கள், டீச்சர்!” என்று
என்னைத் தனியாகப் பாராட்டினான் ஒரு மாணவன்.
அதன்பின், இடுப்பு வலியால்
துடிதுடித்து, மருத்துவ
விடுப்பு எடுத்தது வேறு கதை!
கலாசார வேறுபாடு
`நிமிர்ந்து
நில். நேராகப் பிறர் கண்களைப் பார்த்துப் பேசு! அப்போதுதான் நீ சொல்வதில்
நம்பகத்தன்மை இருக்கும்’.
எல்லா கலாசாரத்திற்கும் இந்த அறிவுரை பொருந்தாது.
மாணவன் ஒருவன் மலாய் ஆசிரியரின் கண்களையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தால், அது மரியாதைக்குறைவு எனக்
கருதப்படுகிறது.
அவர் கூறுவது விளங்காமல் தமிழ் மாணவன் விழிப்பான். அவரோ, `என்ன முறைக்கிறே?’ என்று தண்டிப்பார்.
சில நாடுகளில்,
ஒருவரையொருவர் சந்திக்கும்போதும், விடை பெறும்போதும் கை
குலுக்குவார்கள். முன்பு இந்த கலாசாரம் நம்மிடையே இருக்கவில்லை.
இந்திய இளைஞன் ஒருவன் என்னிடம் கூறினான்: “சற்று வயது முதிர்ந்த பெண்களின்
கையைக் குலுக்கலாமா,
இல்லை, தவறாக எண்ணிவிடுவார்களோ என்று தயக்கமாக
இருக்கிறது!”
நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, என்னிடமிருந்து விடை பெறும்போது, “அணைத்து, முத்தம் கொடுக்கலாமா, இல்லை கைகுலுக்குவதா
என்று எனக்குத் தெரிவதில்லை,” என்று என் மகளின் நண்பன் குழம்ப, “கை குலுக்கு. போதும்,” என்று அலறினேன்.
மேற்பயிற்சியின்போது
`எங்கள் மதம்தான்
மிக உயர்வானது!’ என்று பெருமையுடன் கூறினாள் விரிவுரையாளர், ரோஸ்னா. தொடர்ந்து, “நிர்மலா!
கவலைப்படாதீர்கள்,”
என்றும் குரலெழுப்பினாள், கேலியாக.
அப்போதுதான் புரிந்தது, என் கையை மோவாய்க்குக் கீழே பதித்திருந்தேன்
என்று.
மற்றவர் சொல்வதை ஏற்கவில்லை என்றால், நம்மையுமறியாது அப்படிச் செய்துவிடுகிறோம்.
நிமிர்ந்த நடைகொண்ட பெண்களையே தன்னம்பிக்கை கொண்டவர்கள் என்கிறோம்.
ஆனால், தலையை அதிகமாக
நிமிர்த்தினால், `உன்னை
மீறுகிறேன். நீ சொல்வதைக் கேட்கமாட்டேன்,’ என்கிற எதிர்ப்பு வெளிப்படுகிறது. இந்த உடல்
மொழி இருபாலருக்கும் பொதுவானது.
பெண்களின் உடல் மொழி
எல்லாருடனும் இணக்கமாக நடக்கவேண்டும் என்று சிறுவயது முதலே பெண்களுக்குச்
சொல்லிக்கொடுக்கப்படுகிறது. தொட்டுத் தொட்டுப் பேசுவார்கள்.
நிறையச் சிரிப்பார்கள், இல்லையேல் முறுவலிப்பார்கள். முகபாவம் அதிகம்
காட்டுவார்கள்.
பெண்களின் குரல் உயரும், கோபத்தை வெளிப்படுத்த. (`இதை நீங்கள் சொல்லித்தான்
தெரிந்துகொள்ள வேண்டுமா? எவ்வளவு தமிழ் சீரியல் பார்க்கிறோம்!’ என்கிறீர்களா?)
பெண்களின் மூளையில் 14-லிலிருந்து 16 பாகங்கள்வரை மற்றவர்களின் நடத்தையை
அலசுகின்றனவாம். அதனால், பிறரது நடத்தை அவர்களுக்கு எளிதாகப் புரியும்.
ஆண்களோ!
இயற்கையில், ஆண்களுக்குப்
புன்சிரிப்பு, முகபாவம்
இரண்டுமே குறைவு.
மூன்று முறை தலையை மேலும் கீழும் அசைத்தால், `கவனித்துக் கேட்கிறேன்.
மேலே பேசு,’ என்று அர்த்தம்.
ஓர் ஆணின் பார்வை எதிரிலிருக்கும் பெண்ணின் கண்ணிலிருந்து வாய்வரை மட்டுமே
இருந்தால், அவள் அவனை
நம்பலாம்.
ஆண்குரல் அவ்வளவாக மாறுவதில்லை – அதிகாரம் தன் கையில்தானே என்ற மதர்ப்புடன்.
அடிக்கடி உயர்ந்தால், சுயக்கட்டுப்பாடு குறைவு.
பிறரது நடத்தையைப் புரிந்துகொள்ளும் முயற்சியில், ஆண்களின் மூளையில்
நான்கிலிருந்து ஆறு பகுதிவரைதான் வேலை செய்கின்றன.
இதனால்தான், `இந்தப் பெண்களைப்
புரிந்துகொள்ளவே முடிவதில்லை!’ என்று அயர்கிறார்களோ?
புரிந்துவிட்டால், அப்புறம் என்ன கவர்ச்சி!
::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக... Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1
No comments:
Post a Comment