"சாதனைகள் அதி தூரத்திலில்லை" (-சிறு கதை)

ன்று நவராத்திரி விழாவின் முதல் நாள். நான் எங்கள் சிறு குடிசையின் தூணை பிடித்துக்கொண்டு 'செல்வம், கல்வி, வீரம்' பற்றி என் அறிவுக்கு எட்டியவரை யோசித்தேன். நான் இப்ப சாதாரண வகுப்பு மாணவன். என் அப்பாவும் அம்மாவும் பாலர் பாடசாலையுடன் படிப்பை நிற்பாட்டி விட்டார்கள். அப்பா ஒரு நாட்கூலி தொழிலாளி, கிடைக்கிற எந்த வேலையும் செய்வார். இல்லாவிட்டால் குடும்பத்தை நடத்த முடியாது. அம்மா அப்பாவின் அந்த அந்த நாள் கூலியின் படி வாழ்க்கையை ஓட்டுவார், அதில் எப்படியும் ஒரு சிறு தொகை உண்டியலில், ஒரு அவசர தேவைக்கு என்று சேகரித்தும் வைப்பார்.  

 

நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் மறுநாள் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடினர் எனவும் துர்க்காதேவியின் அந்த சாதனைகள் தூரத்திலில்லாமல் ஒரே ஒரு ஒன்பது நாளிலேயே முடிந்து விட்டது எனவும் அம்மா எனக்கு ஒரு முறை கூறியது அப்பொழுது ஞாபகம் வந்தது.

 

நான் அடுத்தநாள், பாடசாலை போனதும் என் சமய ஆசிரியர் இடம் எப்படி பராசத்தி ஒன்பது நாளில் சூரனை வென்றார் என பணிவாக கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்தார். உங்களை எல்லாம் பாடசாலையில், இந்த ஆடை கோலத்தில் படிக்க விட்டதே போதாது, இப்ப கேள்வி ஒரு பக்கம் என என்னை உற்றுப் பார்த்தார். என் வகுப்பில் எல்லோரும் முழு நீள காற்சட்டை, சட்டை , கழுத்துப் பட்டி[tie], தோல் பட்டை [belt], சப்பாத்து என்று இருக்க, நான் அரைக் காற்சட்டை, சட்டை , வெறும் காலுடன் நிற்பது அவருக்கு ஒரு அருவருப்பு கொடுத்தது போல, விலகி நின்று பார்த்து விட்டு, மறுமொழியே தராமல் போய்விட்டார். இத்தனைக்கும் அவர் சமய ஆசிரியர்.! கடவுளின் முன் எல்லோரும் சமம் என்று போதிக்கும் ஆசிரியர்!!

 

இவரை சொல்லி ஒரு குற்றமும் இல்லை,  கூலி வேலை செய்து பிழைக்கும் திருநாளைப் போவார் நாயனார் என்ற நந்தனார், ஒரு நாள் சிதம்பரம் போனார். அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், அவரை சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வில்லை. ஒரு வேளை என் சமய ஆசிரியர் போல் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். ஆகையால் கோவில் வாசலில் இருந்தபடியே, எட்டி எட்டி உள்ளே பார்த்தார். இறைவனின் உருவம் தெரியவில்லை. கருவறைக்கு முன்பாக இருந்த பெரிய நந்தி, மூலவரை மறைத்துக் கொண்டிருந்தது. எனவே மனவருத்தத்துடன் இறைவனை மனமுருகி பாடினார். ஆனால் அந்த இறைவன் கூட உள்ளே வா என்று கூப்பிடவில்லை, என்றாலும் நந்தியை, சற்றே விலகி இருக்கும்படி பணித்து, வெளியில் இருந்த தன்னை பார்த்து வழிபட வழி செய்தார் என்று ஒரு புராணம் கூறுவது எனக்கு ஞாபகம் வந்தது. அப்படி என்றால் இவரை குறை சொல்லி என்ன பயன்?

 

பாடசாலை விட நேரடியாக, நான் யாழ் நூலகத்துக்கு போய், அங்கு உள்ள புத்தகங்களை பிரட்டி காரணம் அறிந்தேன். அப்ப தான் எனக்கு முயற்சியும் நம்பிக்கையும், உடலில் வலிமையையும் இருந்தால் நாம் எதையும் சாதிக்கலாம் என்ற துணிவு பிறந்தது! அது மட்டும் அல்ல பராசத்தி ஒன்பது நாளில் வென்றதுக்கு முக்கிய காரணம் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை ஆனார்கள் என்று அறிந்தேன். எனக்கு அப்படி கைகொடுக்க இந்த சமூகத்தில் அப்படி மூவர் இருப்பார்கள் என்று எனக்கு தெரியா? ஆனால் இந்த நவராத்திரி சொல்லும் செல்வம், கல்வி, வீரம் , இவற்றில் குறைந்தது ஒன்றாவது இருந்தால் என் சாதனைகள் வெகு தூரத்தில் இருக்காது என்பதை உணர்ந்தேன்! 

 

இன்றில் இருந்து நவ [ஒன்பது] ஆண்டில், நான் அதை செய்யவேண்டும் என நான் சபதம் எடுத்தேன் சில ஆசிரியர்களின் போக்கு சரி இல்லை என்றாலும் , அங்கு நல்ல , எல்லோரையும் சமமாக மதிக்கும் சில ஆசிரியர்களும் இருந்தது எனக்கு ஒரு பலத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது, அதில் ஒருவர் தான் எமது வகுப்பு முதன்மை ஆசிரியரும் , உயிரியல் பாட ஆசிரியருமான சிவசேகரம் ஆவார். அவர் என் நிலையை உணர்ந்து, பாடசாலை விட்டபின் பிரத்தியேக வகுப்பு என்னுடன் சேர்த்து சிலருக்கு இலவசமாக நடத்தினார், அவர் தனிய பாடங்களை மட்டும் இல்லாமல், அதனுடன் சேர்த்து மானிடமும் சொல்லித் தந்தார்!

 

அது மட்டும் அல்ல 'சாதனைகள் எல்லா மனிதராலும் முடியும். அது உங்கள் கையிலேயே இருக்குது. நம்புங்கள்! நம்புங்கள்!! நம்புங்கள்!!! . உங்களை புரியுங்கள் முதலில், உங்களை தடுப்பவர்கள் உங்களை தாழ்த்துபவர்கள் எல்லோரும் ஒரு பயத்தில் தான், நீங்கள் வளர்ந்தால், சாதனை புரிந்தால் தங்கள் வண்டவாளம் வெளியே வரும், தாங்கள் இதுவரை சுரண்டி வாழ்ந்ததுக்கு முற்றுப் புள்ளி வரும். அந்த பயமே' என்று அடித்துக் கூறினார் . அது தான் என்னை உண்மையான மனிதனாக வளர்த்தது என்று சொன்னால் மிகையாகாது!!

 

நான் சாதாரண வகுப்பில் என் பாடசாலையில் மட்டும் அல்ல, என் மாகாணத்திலே முதலாவதாக வந்தேன், அது தான் என் முதல் சாதனை! எனக்காக பாடசாலை பரிசளிப்பு விழாவில் பல பரிசுகள் காத்திருந்தன, எனினும் பரிசளிப்பு விழாக்கு, மாணவர்கள் வரவேண்டிய உடை கட்டுப்பாடால், நான் அதற்கு போகவில்லை, பரிசும் வாங்கவில்லை, அது எனக்கு ஒரு பொருட்டும் இல்லை. என் நோக்கம் எல்லாம் சாதனை! சாதனை!! சாதனை!!!

 

உயர் வகுப்பில் மீண்டும் நானே முதலாவதாக வந்து, மீண்டும் பரிசளிப்பு விழாவையும் , முதல்வர் உட்பட சில ஆசிரியர்களையும் புறக்கணித்து, அவர்களுக்கு என் நன்றி ஒன்றையும் சொல்லாமல், பல்கலைக்கழகம் சென்றேன் . அப்ப தான் முதல் முதல் காக்கி துணியில் நீள் காற்சட்டை, சப்பாத்து எல்லாம் போட்டேன். என்னை பொல்லாதவன், முரடன் என்று நீங்க நினைக்கவேண்டாம். கல்வியை, பண்பாட்டை மதிக்கத் தெரியாதவர்களையே புறக்கணித்தேன், ஆனால் அவர்கள் உலகத்துக்கு / பாடசாலைக்கு சரஸ்வதி பூசையை முன்னின்று நடத்தி, கல்வியின் பெருமையை இடித்து கூறுபவர்கள். அது தான் வேடிக்கை!   

 

நான் மீண்டும் பல்கலைக்கழகத்தில் முதலாவதாக வந்து, அங்கேயே விரிவுரையாளராகவும் வந்து விட்டேன்! சாதனைகள் தூரத்தில் இல்லை! எல்லாம் அருகருகே ஒன்றின் பின் ஒன்றாக வந்து கொண்டு இருந்தன. பல்கலைக்கழக வட்டாரத்திலும் என் மதிப்பு கூடிக்கொண்டே போனது. இன்று நான் சபதம் இட்டு நவ ஆண்டு. நான் படித்த பாடசாலை அதிபர் என்னை சந்திக்க வெளியில் காத்து நிற்கிறார். அவரின் வேண்டுகோள் பரிசளிப்பு விழாவுக்கு தலைமை தங்க வேண்டும் என்பதே என அறிந்தேன். நான் அவரை சந்திக்க, அல்லது நான் யார் என்பதை காட்டிட விரும்பவில்லை. என்றாலும் அவருக்கு ஒரு செய்தியை என் துணை விரிவுரையாளர் மூலம் அனுப்பினேன்.  ' பாடசாலை பரிசளிப்பு விழாவுக்கு ஒரு சீருடையுடன் மாணவர்களை அழைப்பதில் தவறு இல்லை, ஆனால் அந்த வசதி இல்லாத, ஆனால் திறமையாக சித்தி அடைந்து பரிசு பெறுபவர்களுக்கு, பாடசாலை தங்கள் நிதியில் இருந்து, சீருடை முழுமையாக கொடுத்து கௌரவப் படுத்தவேண்டும். சரஸ்வதி பூசைக்கு செலவழிக்க எப்படி பணம் சேர்த்தீர்களோ அப்படியே இதற்கும் சேர்க்கலாம்' என்று எழுதி இருந்தேன்!  

 

எந்த பரிசளிப்பு விழா , என்னை உடை காரணமாக நிராகரித்ததோ, அதே பரிசளிப்பு விழாவில் இன்று எனக்கு கம்பளி வரவேற்பு! உலகம் வேடிக்கையானது , அதில் மனிதர்கள் பாவம் நடிகர்களே !!. இதை விட எனக்கு இனி ஒரு சாதனை வேண்டுமா ?, அந்த, என் கடவுள் சிவசேகரத்தை தேடினேன், ஆனால் அவர் எம்மை விட்டு பிரிந்து விட்டார் என்ற செய்திதான் வந்தது. நான் முதல் பிள்ளையாரையோ சரஸ்வதியையோ வணங்காமல், சிவசேகரத்தை அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் என்று என் பேச்சை தொடங்க, அப்ப தான் அந்த முதல்வருக்கும், சமய ஆசிரியருக்கும் 'நான் யார்' என்று தெரிந்தது. அவர்கள் நடிகர்கள் தானே. மௌனமாக எழும்பி அவர்களும் அந்த வணக்கத்தில் பங்கு பற்றினார்கள்!

 

சாதனைகள் அதி தூரத்திலில்லை!

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

No comments:

Post a Comment