சொல்லும் செயலும்
நாம் சொல்வதை ஒருவர் ஏற்க வேண்டுமென்றால், அவருக்கு நம்மேல்
நம்பிக்கை எழுவது முக்கியம். ஏதாவது ஒற்றுமை இருந்தால்தான் இது சாத்தியம். அது
வயதாக இருக்கலாம். அல்லது உத்தியோக நிலையிலோ அல்லது பொருளாதாரத்திலோ இருக்கலாம்.
சொல்லும் விதம்
நாம் சொல்லும் பாணி கேட்பவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்றவிதத்தில் அமைய
வேண்டும்.
`ஏதோ, எனக்குத் தெரிந்ததை, என்னால் முடிந்த முறையில்
சொல்லிவிட்டுப் போகிறேன்!’ என்ற அலட்சியத்துடன் ஒருவர் தன் கடமையை ஆற்றினால், யார் அவர் சொல்வதைப்
பின்பற்றுவார்கள்?
சிலருக்குப் பிறருடன் எப்படிப் பேசினால் பலன் கிடைக்கும் என்று இயல்பாகவே
தெரியும். அப்படி அமையாவிட்டால், இதைக் கற்கவும் முடியும்.
தூண்டுதல்
நாம் பிறருடன் பேசும்போது, நம்மையுமறியாது, அவரை நம் வழியைப்
பின்பற்றச் சொல்லிவிடுகிறோம்.
`நீ என்னுடன் வா!’
என்பதற்கும், `நீயும் வருவாயா?’ என்று எதிர்பார்ப்புடன்
கேட்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்!
முதலாவதில், அதிகாரம்.
`வருவாயா?’ என்று கேட்கும்போது, முடிவை மற்றவருக்கு
விட்டுவிடுகிறோம். அவருக்கு மரியாதை கொடுப்பதுபோலவும் ஆயிற்று.
இன்னொரு உதாரணம்: `இன்று என்ன சமைக்கப்போகிறாய்?’ என்று கேட்டுவிட்டு, `முருங்கைக்காயை
சாம்பாரில் போட்டால்தான் ருசி!’ என்று மெல்லக் கூறுவோம்.
`சாம்பாரில்
போடேன்!’ என்பது சமைப்பவருக்கு மரியாதை கொடுத்துப் பேசுவது.
`ருசி அதிகமாகும்,’ என்றால், நம் விருப்பத்திற்கு அவரை
இணங்கச் செய்வது.
தொனி
பேசுகிறவர்களின் தொனி முக்கியம்.
இயந்திரத்தைப்போல் உணர்ச்சியற்ற குரலில் பேசாது, தகுந்த ஏற்ற
இறக்கங்களுடன் பேசினால் பலன் கிடைக்கும். அதற்கேற்ற உடல் மொழியையும் சேர்த்து
மேற்கோள் காட்டுவதுடன், நடு நடுவே கதை சொன்னால், கேட்பவர்களின் உற்சாகம்
குன்றாது இருக்கும்.
தற்போது, கூந்தலை நீளமாக
எப்படி வளர்ப்பது என்று பல வழிகளைப் பெண்கள் காட்டுகிறார்கள், இணையத்தில்.
எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை – முழங்காலுக்குக்கீழ் தொங்குகிறது அவர்கள்
தலைமயிர். நம்பத்தான் தோன்றுகிறது. ஆனால், ஒரே வாரத்தில் இப்படி வளரும் என்றும் சிலர்
அளக்கிறார்கள்.
இதனால்தான், சொல்கிறவருக்கு
என்ன தகுதி, அவர் கூறுவதில்
எத்தனை உண்மை என்று ஆரம்பத்திலேயே யோசிக்க வேண்டுவது அவசியம்.
குழந்தையே பெறாதவர் குழந்தை வளர்ப்பைப் பற்றிப் பேசினால், அது
அனுபவத்தால் இருக்காது. படித்ததை வைத்துக்கொண்டு அவர் ஏதாவது கருத்தைத்
தெரிவிக்கலாம். ஆனால், நடைமுறைக்கு அது ஒத்துவராது.
::கதை::
ஏதோ ஒரு துறையில் பெரிய, பெரிய பட்டங்கள் பெற்றவள் சியாமளா. அதற்கேற்ற
உத்தியோகத்திலும் இருந்தாள்.
அதனாலேயே, தனக்கு எல்லாம்
தெரியும் என்பதுபோல், பிறர் வீட்டுக்குப் போனால், அந்த வீட்டுக்கார
அம்மாளிடம், `நீ சமைப்பது
சரியாக இல்லை. இப்படிச் செய்திருக்க வேண்டும்,’ என்று குற்றம்
கண்டுபிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
எல்லாருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்க முடியாது என்பது அவளுக்குப்
புரியவில்லை.
ஒருவரது வீட்டுக்கு விருந்தினராகப் போகும்போது, அவர்கள்
மனதை நோகடிக்கலாமா என்று அவள் யோசிக்கவில்லை. புத்தகப் படிப்பு குணத்தை
வளர்க்கவில்லை.
புத்திசாலித்தனம் இருந்தும் வெற்றி பெறாதவர்
சிறு பிராயத்தில் புத்திசாலிகளாகத் திகழ்ந்த சிலர், `பெரிதாக எதுவும் சாதிக்காமல்
போய்விட்டோமே!’ என்று வருந்துவது உண்டு.
::கதை::
காந்தனின் புத்திகூர்மையைப் பற்றி அவனுடைய பெற்றோருக்கு அளவுகடந்த பெருமை.
`எத்தனை விஷயங்கள்
தெரிந்து வைத்திருக்கிறான்!’ என்று பிறர் பாராட்ட, அவன் தவறே செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் பிறர்
மதிக்க மாட்டார்கள் என்று எண்ணத் தலைப்பட்டார்கள்.
சிறுவனாக இருந்தபோது, பிறர் ஏற்கமாட்டார்கள் என்று அவர்களுக்குத் தோன்றிய
எதையாவது அவன் செய்தால், பல பேர் முன்னிலையில் திட்டு விழும்.
“அது என்ன, மூக்கிற்குள் விரலை
விடுவது? அசிங்கம்!
குளிக்கும்போது இதையெல்லாம் செய்யவேண்டும்,” என்று அவன் தாய் கத்தியபோது, அந்த பத்துவயதுப் பையனைக்
கவனிக்காதவர்கள்கூட இப்போது ஆர்வத்துடன் பார்த்தார்கள்.
அவனைத் திருத்துவதாக எண்ணி அவள் செய்த காரியத்தால் பையனின் முகம் அவமானத்தால்
சுண்டிப்போயிற்று.
அவளைப்போன்ற பெற்றோர் அறியவேண்டிய ஒன்று: பாராட்டும்போது பிறர் முன்னிலையில்
செய்யலாம். அதுவும் அளவோடுதான். குறை கூறுவதோ, தனிமையில்தான்
இருக்கவேண்டும். சிறு குறையைப் பெரிதுபடுத்தினால், குழந்தைகளுக்கு
ஆத்திரம் வரும். ஆனால், திருந்தமாட்டார்கள்.
வேண்டுமென்றே அதிகமாகச் செய்வார்கள்.
புதிதாகக் கல்யாணமான டெய்ஸி அலுத்தபடி கூறினாள், “என் கணவர் சாப்பிடும்போது
எல்லா விரல்களையும் வாய்க்குள் போட்டுக்கொள்வார். `என்னது இது!’ என்று நான்
கண்டித்தபோது, நிலைமை இன்னும்
மோசமாகிற்று. ஒரேயடியாக உறிஞ்சுவார். அதனால், நான் இப்போது எதுவும் சொல்வதில்லை!”
அவளுடைய கணவனைச் சிறுவயதில் ஓயாது கண்டித்திருப்பார்கள். மனைவியும் தாயைப்போல
நடக்க முற்பட்டபோது,
அவனால் பொறுக்க முடியவில்லை.
எட்டு வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவன் தவறு செய்யும்போது ஓயாது கண்டிப்பது
பெரியவர்களின் நிம்மதியைத்தான் கெடுக்கும். மாறாக, நகைச்சுவையாக ஏதாவது
கூறினாலோ, அல்லது அவன் செய்வதுபோல்
செய்து காட்டினாலோ,
சிரித்துவிடுவான்.
பதின்ம வயதுச் சிறுவர்களிடம் மிரட்டலாகச் சொன்னால் மேலும் முரண்டு
பண்ணுவார்கள். அவர்களுடைய செய்கைகளின் விளைவுகளை, அவற்றால் ஆபத்து
இருந்தால், தகுந்த
உதாரணங்களோடு விளக்கிச் சொன்னால் புரிந்துகொள்வார்கள். கெஞ்சலாகச் சொன்னால்
இன்னும் பலனளிக்கும்.
::கதை::
அவளுடைய சீனத்தோழிகள் அணிந்ததைப் பார்த்து, மேகலாவுக்கும் ஷார்ட்ஸ்
அணியவேண்டும் என்ற ஆசை கிளர்ந்தது.
அவளுடைய தாய்,
“அவர்களுடைய கால்கள் தந்தம் மாதிரி இருக்கின்றன. நாமோ, கறுப்பு. நன்றாகவா
இருக்கும்?” என்றாள்
நைச்சியமாக. இருந்தாலும், வாங்கிக் கொடுத்தாள்.
ஒரு சிறிய ஆசையைத் தீர்த்துவிட்டால், அது ஓயாது நம்மை அலைக்கழிக்காது என்று
புரிந்திருந்தாள் அந்த தாய்.
அந்த ஒரே ஆடையில் மேகலாவின் ஆசை தணிந்துபோயிற்று. `கால்களை இறுக்க, எப்படித்தான்
போட்டுக்கொள்கிறார்களோ!’ என்று தோன்றிப்போயிற்று.
என் தோழிகள் கூறுவார்கள், “வேலை முடிந்து வீட்டுப் போனதும், நான் செய்யும் முதல்
காரியம் ஷார்ட்ஸூக்கு மாறுவதுதான்!”
(சில தலைமுறைகளுக்குமுன்
மலேசியா வந்திருந்தாலும், சீனர்களுக்கு வெயில் தாங்காது. எந்த வயதுப் பெண்டிராக
இருந்தாலும், வீட்டுக்கு அந்த
ஆடைதான். அவர்கள் வெளியில் அப்படி வந்தாலும், யாரும் உற்றுப் பார்ப்பது கிடையாது).
பள்ளியில் பண்பு
மாணவர்களுக்கு ஒரு பாடம் பிடிக்க வேண்டுமென்றால், முதலில் அதைப் போதிக்கும்
ஆசிரியரைப் பிடிக்கவேண்டும்.
தனது அதிகாரத்தைத் தவறான வகையில் பயன்படுத்தி, மட்டம்
தட்டிப்பேசினால், யார்தான் அவரை மதிப்பார்கள்?
::கதை::
`முட்டாள்’ என்று
அவர் கருதிய ஒரு மாணவியிடம் தன் முதல் கேள்வியைத் தொடுப்பார் எங்கள் பள்ளி விஞ்ஞான
ஆசிரியை, மிஸஸ்
ஜெயலட்சுமி.
கேள்வி முடிவதற்குள், `ரமாமணி!’ என்று அதிகாரமாக அவளுடைய பெயர் ஒலிக்கும்.
அந்தப் பெண்ணோ,
பதில் சொல்லத் தெரியாமல், ஆசிரியை வகுப்பைவிட்டு
வெளியேறும்வரை, தண்டனையாக, கால்கடுக்க
நின்றுகொண்டிருப்பாள். வருடம் முழுவதும் இதே கதைதான்.
மற்ற மாணவிகளுக்கு ஆசிரியையின் போக்கு வேடிக்கையாகப் போயிற்று. அந்த
ஆசிரியைப்போலவே அவளை அழைத்துக் கேலி செய்தனர்.
ஒவ்வொரு முறையும், அவர்களைப்போன்ற ஒரு மாணவியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்
என்று புரியவில்லை.
::கதை::
பல வருடங்களுக்குப்பின் நானே ஆசிரியையாக ஆனபோது, மாணவ மாணவிகள்
ஒருவரையொருவர் இப்படி நடத்துவதை அனுமதிக்கக்கூடாது என்று தீர்மானித்தேன்.
ஒரு வகுப்பில்,
மலாய் மற்றும் சீன மாணவிகள் மட்டும் இருந்தார்கள்.
ஆரம்பப்பள்ளியில் சீனமொழி கற்றிருந்த சீனர்களுக்குக் கோபம், ஏன் இடைநிலைப்பள்ளியில்
மலாய் மொழியில் விஞ்ஞானம் கற்க வேண்டும் என்று.
அந்தக் கோபம்,
இயலாமை, தம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்த அப்பாவி
மாணவிகள்மேல் திரும்பியது. அவர்களில் ஒருத்தி தவறான விடை அளித்தால், இளக்காரமாகச் சிரிப்பதை
வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
`உங்களில் ஒருவர்
தவறாக விடையளித்தால், அதைக் கேலி செய்யக்கூடாது!’ என்று உத்தரவு பிறப்பித்தால்
எந்தப் பலனும் இருக்காது என்று புரிந்தது.
நான் கடினமான கேள்வி கேட்டால்தானே ஏளனச் சிரிப்பு?
அதைத் தவிர்க்க எண்ணி, மலாய் மாணவிகளைக் கேள்வியே கேட்கமாட்டேன்.
அவர்களுக்கு என் திட்டம் புரிந்ததோ, என்னவோ, அவர்களுடைய நன்றியையும், மதிப்பையும் பெற்றேன்.
மாணவர் மனங்களை நேசித்தால் ,ஆசிரியர்
கற்பித்தலில்,
அவர்களுக்கு ஏற்படும் ஈடுபாடு ,கல்வியில் வெற்றிபெறும்
மாணவர்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக... Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1
0 comments:
Post a Comment