பழகத் தெரிய வேணும் – 65

 


ஓயாமல் யோசிப்பவர்கள்

சிலர் எதுவும் செய்யாது, ஒரே இடத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்கள்.

 

`என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டால், `யோசித்துக் கொண்டிருக்கிறேன்,’ என்ற பதில் வரும்.

 

எத்தனை நேரம்தான் யோசிப்பார்கள்?

 

இப்படிச் செய்தால், இல்லாத பிரச்னைகளும் இருப்பதுபோல் தோன்றும். அதனால், கனவிலும், எதிர்காலத்திலும் சிந்தனையைச் செலவிடுகிறவர்கள் எப்போதும் குழப்பத்தில்தான் ஆழ்ந்திருப்பார்கள்.

 

::கதை::

திருமணமான தன் மகளைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாள் கோமதி.

திரும்பும்போது, மிகுந்த கவலையோடு காணப்பட்டாள்.

`இனி தன்னை எப்போது பார்ப்பேனோ!’ என்ற கவலை அம்மாவுக்கு என்று மகள் நினைத்தாள். தாயைச் சமாதானப்படுத்த, “நான் மகிழ்ச்சியாகத்தானேம்மா இருக்கேன்,” என்றாள்.

 

நீ ரெண்டு சின்னக் குழந்தைகளையும் வெச்சுண்டு, தனியா எப்படி கஷ்டப்படப்போறியோன்னு கவலையா இருக்கு”.

 

கோமதி தன் குழந்தைகளை வளர்க்கச் சிரமப்படவில்லை. பல உறவினர்கள் உதவியாக இருந்தார்கள்.

அவளால், காலத்திற்கேற்ப மாற முடியவில்லை. மகள் தனியாக இருக்கிறாளே, தன்னால் அடிக்கடி வந்து உதவி செய்ய முடியவில்லையே என்ற கவலை ஏற்பட்டிருந்தது.

 

நிகழ்காலத்தில் இருப்பவர்கள் இவ்வாறு வேண்டாத யோசனையில் ஆழ்ந்துவிடுவதில்லை.

 

கவலைப்படுவதால், பிரச்னை தீர்ந்துவிடுமா?

 

அப்படியே பிரச்னைகள் வந்தால்தான் என்ன? சமாளிக்கத் துணிச்சல் வேண்டாமா?

 

::கதை::

விமான ஓட்டியான விக்ரம் தன்னுடன் வேலைபார்த்த ரஞ்சிதாவைக் காதலித்து மணந்தார்.

 

திருமணத்திற்குப்பின் அவள் உத்தியோகம் பார்க்காது, தன் சிறு குழந்தைகள் இருவருடன் வீட்டிலேயே இருந்தாள்.

 

கணவரோ, இரவு பகல் பாராது உலகெங்கும் சுற்ற வேண்டிய நிலையில், ரஞ்சிதா பெரும்பொழுது தனியாகவே இருக்க நேரிட்டது.

 

குருட்டு யோசனை கிளர்ந்தது: விமானத்தில் தன் கணவருடன் சேர்ந்து, இளம்பெண்களும் நாடு விட்டு நாடு பயணித்துக் கொண்டிருப்பார்களே! தன்னிடம் செய்ததுபோலவே, அவர் அவர்களிடமும் தன் காதல் லீலையைத் தொடர்வாரோ?

 

எப்போதாவது வீடு திரும்பும் கணவரிடம் இதைப் பற்றிப் பேச அஞ்சினாள் ரஞ்சிதா. மாறாக, தன் ஆண்குழந்தைகளை அளவுக்கு மீறி அடக்க ஆரம்பித்தாள்.

 

தப்பித் தவறி, அக்கம்பக்கத்தில் இருக்கும் எந்தப் பெண்ணுடனாவது கணவர் பேசுவதைப் பார்த்துவிட்டால், அந்தப் பெண்ணை இவளுக்குப் பிடிக்காது போய்விட்டது. அவள் பேச முயன்றாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டு போவாள்.

 

ஏன் அப்படி?

 

ரஞ்சிதா கடந்த காலத்திலும், எதிர்காலத்திலுமே வாழ்ந்துகொண்டு இருந்தாள். கடந்த காலத்தின் அனுபவமும், எதிர்காலமும் அப்படி அமைந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் அவளை ஓயாது அலைக்கழித்தன.

 

நிகழ்காலத்தில் செல்வச்செழிப்புடன் இருந்த மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அவள் கண்களுக்குப் புலப்படவில்லை.

 

தான் நினைப்பது எல்லாம் நடந்துவிடாது என்று புரியாது, தன்னையும் வருத்திக்கொண்டு, குழந்தைகளிடமும் அளவுக்குமீறிய கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாள்.

 

கணவருக்கு அவள் போக்கிற்கான காரணம் புரியவில்லை. ஆயாசத்துடன், பிறரிடம் கூறி, ஆறுதல் தேடினார்.

 

ஒருவர் தன்னைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால், `வாழ்க்கை ஏன் இவ்வளவு கரடு முரடாக இருக்கிறது!’ என்றுதான் தோன்றிவிடுகிறது.

 

::கதை::

விமலாவின் கணவர் உத்தியோகம் எதுவும் பார்க்கவில்லை.

 

பொழுது போக ஏதாவது வழி வேண்டாமா?

 

பிறர் பேச்சைக் கேட்டு, சூதாட்டத்தில் ஈடுபட்டு, சொத்தை அழிக்க ஆரம்பித்தார்.

 

`இப்படியே போய்க்கொண்டிருந்தால், என்ன மிஞ்சும்?’ என்ற விமலாவின் கவலை நியாயம்தான். ஆனால், அது ஒன்றையே தன் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அளவுக்கு யோசித்தது மனச்சோர்வில் (depression) கொண்டுவிட்டது. தலைவலி, உடல் வலி, வயிறு சம்பந்தமான கோளாறுகள் என்று அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். கணவரைப் பார்த்தாலே பிடிக்காமல் போயிற்று. கத்தலே அவள் அவருடன் தொடர்புகொண்ட மொழியாகியது.

 

பிரச்னை என்று வந்துவிட்டால், அதைப் பற்றி ஓயாமல் யோசிப்பதால் மட்டுமே தீர்வு காண முடியாது. அது மறைந்தும் விடாது.

 

பின் எப்படி விடுபடுவது?

 

ஓயாத சிந்தனை வேண்டாமே!

 

உடற்பயிற்சி, தியானம் இரண்டும் மனத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவரும் வல்லமை கொண்டவை.

 

ஏதாவது பொழுதுபோக்கில் ஈடுபட்டு, அடுத்து என்ன செய்வது என்று திட்டமிடலாம்.

 

கதைப்புத்தகம் படிப்பதும் நல்ல வழக்கம்தான். பிறருடைய வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களில் ஆழ்ந்து போகையில், நம்மையே மறந்துவிடுவோம்.

 

நம்மை வாட்டுவதைப் பிறரிடம் பகிர்ந்துகொண்டால், சற்று நிம்மதி கிடைக்கும். ஆனால், ஓயாமல் தன் சோகக் கதையையே சொல்லிக்கொண்டிருப்போரைக் கண்டால் பிறர் அஞ்சி விலகும் அபாயம் உண்டு.

`நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் எத்தனைபேர் இருக்கிறார்கள்!’ என்று சற்றே யோசித்தால், எதையும் ஏற்கும் நெஞ்சுரம் வரும்.

 

நானாக இருந்தால்!

ஒரு காரியத்தை எவ்வாறு செம்மையாகச் செய்யலாம் என்று, ஆரம்பத்திலேயே சிந்திக்க வேண்டுவது அவசியம்.

 

நாம் ஒரு காரியத்தைச் செய்து முடித்தபின், அதைக் கேட்டு மற்றொருவர், `நானாக இருந்தால், இப்படிச் செய்திருப்பேன்,’ என்பார். அவர் உருப்படியாக எதையும் செய்திருக்க மாட்டார். ஆனால், முனைந்து செய்பவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பார்.

((ஈழப்போராட்டம் முடக்கப்பட்ட பின்னர், கெட்டித்தனம் பேசும் இப்படியான கெட்டிக்காரர் நம் மத்தியில் இல்லாமலில்லை))

 

அத்தகையவரை அலட்சியம் செய்ய வேண்டியதுதான். நாம் எப்படி யோசிக்கவேண்டும், அல்லது நடக்கவேண்டும் என்று பிறர் தீர்மானிப்பதை இம்மிபிசகாது ஏற்பது,, தோல்வியில்தான் முடியும்.

 

கனவில் சுகம் காண்கிறவர்கள்

 

::கதை::

பாலன் ஒரு போட்டிக்குக் கதை எழுதி அனுப்பியிருந்தான்.

 

கண்டிப்பாக, முதல் பரிசு தனக்குத்தான் என்ற நம்பிக்கை ஏற்பட, பரிசுத்தொகையில் என்னென்ன வாங்கவேண்டும் என்று பட்டியல் தயாரித்தான். அந்த இன்பக் கனவிலேயே ஓரிரு மாதங்கள் கழிந்தன.

 

போட்டி முடிவு வந்தது — எதிர்பார்த்த பரிசுதான் வரவில்லை. முடிவு அவன் கையில் இல்லை என்று உணராததால் வந்த வினை!

 

ஏமாற்றம் குடும்பத்தில் உள்ளவர்கள்மேல் ஆத்திரமாக மாறியது.

 

நடப்பதற்குமுன் திட்டமிடுவானேன், ஏமாற்றத்தால் நொறுங்கிப்போவானேன்!

 

ஓயாமல் சிந்திப்பவர்கள்:

`இப்படி நடந்துவிட்டால்,’ என்ற அச்சம் கொண்டவர்கள்.

 

`பிறர் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்களோ!’ என்று குழம்புகிறவர்கள்.

 

அவமானகரமாக, அல்லது மரியாதைக்குறைவாக, எப்போதோ நடந்த ஒன்றைப்பற்றியே எண்ணி எண்ணி ஆத்திரப்படுகிறவர்கள்.

 

தான் செய்த தவற்றையே யோசித்து, `இப்படிச் செய்திருக்கலாமே!’ என்று நடந்து முடிந்ததை மாற்ற எண்ணுகிறவர்கள்.

 

எங்கே ஆரம்பிப்பது?

ஒரு காரியத்தைப் பற்றி அதிகமாக யோசித்து, `முடியாது. எதற்கு வீண் வம்பு!’ என்று கைவிடுவதற்குள், அதைச் செய்ய ஆரம்பிக்கவேண்டும்.

 

ஒரு காரியத்தைப் பற்றி யோசிக்க யோசிக்க, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வெளிவந்து பயமுறுத்தும்.

 

ஒரு பெண் என்னிடம் கூறினாள், “ஆண்களும் தப்பு செய்வாங்கன்னு எழுதலாமான்னு தோணும். ஆனா, இதையெல்லாம் எழுதலாமா, கூடாதான்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்!” என்று.

 

நல்லவேளை, நான் அப்படி எழுத ஆரம்பிக்கும்போது எந்தவிதமான யோசனையும் எழவில்லை. யோசித்துக் குழம்பியிருந்தால், நிம்மதியும் பறிபோயிருக்கும்.

 

எழுதியபின், பெண்களின் பாராட்டு கிடைத்தது. ஆண்கள்தான் சிறிது கோபப்பட்டார்கள். ஆனால், தங்களுக்குள், `அவள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது,’ என்று அரைமனதாக ஒத்துக்கொண்டதாகக் கேள்வி!

 

ஒரு மூத்த பத்திரிகையாளர், “நீங்க எழுதும்போதெல்லாம், `என்ன, இப்படி எழுதறாங்களே!’ன்னு இருக்கும். இப்போ, என் மகளுக்குக் கல்யாணமாகி, அவ புருஷன் அவளை எல்லாவிதத்திலும் கட்டுப்படுத்தறதைப் பாக்கறப்போதான் உண்மை புரியுது,” என்று என்னிடம் தெரிவித்தார், வருத்தத்துடன்.

 

தன்னுடைய உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளாது, பெண்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கலாம், அல்லது இருக்கவே கூடாது என்று எண்ணமிடும் ரகத்தைச் சேர்ந்தவர் அவர்.

 

ஆக்ககரமாக ஏதாவது செய்பவர்கள் சிந்தனையிலேயே ஆழ்ந்துவிடுவதில்லை. யோசிப்பார்கள், ஆனால், ஓர் அளவோடு.

 

என்னைப் பார்த்துச் சிலர் அதிசயப்பட்டுக் கேட்டு இருக்கிறார்கள், “நீ சிரித்துக்கொண்டே இருக்கிறாயே! உன் வாழ்வில் எந்தக் கஷ்டத்தையும் அனுபவித்து இருக்கமாட்டாய். இல்லையா?” என்று.

 

எனக்கு லேசான சிரிப்புதான் வரும்.

 

மனிதனாக அவதரிக்கும் கடவுளுக்குக்கூட கஷ்டம் உண்டே! நான் மட்டும் என்ன, விதிவிலக்கா?

::-நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1

No comments:

Post a Comment