உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்
இலங்கை வரலாற்றை ஓலையில் எழுதப்பட கையெழுத்துப் பிரதிகள் [Ola manuscripts], நீண்ட
காலத்துக்கு நின்றுபிடிக்காது. அத்துடன் புத்த பிக்குகள், பொது மக்கள் வழங்கும்
அன்னதானத்தில் வாழ்வதால், அவர்கள் சமைப்பது இல்லை. ஆகவே அவர்களின் மடம் அல்லது
தங்கும் இடம் சமையல் அற்ற, வெப்பம் புகைகள் அற்ற இடமாகும். இதனால் அவர்களே அதை பாது
காத்தனர். என்றாலும் இவையும் ஒரு காலத்தின் பின் கெடலாம். ஆகவே திருப்பி திருப்பி
புதுப்பிக்க வேண்டும் [Ola manuscripts need to be copied before they become friable and
crumbling]. இந்த பொறுப்பும் அவர்களை சார்ந்ததாக மாறியது அல்லது அவர்களே
எடுத்துக் கொண்டார்கள். இந்த நேரங்களில் தான் அவை மூலப்பிரதியில் இருந்து சிலவற்றை
அழிக்கவும், தமக்கு
விரும்பியதை செருகவும் மற்றும் சிதைக்கவும் அவர்களால் முடிந்து இருக்கும் என்று
நம்புகிறேன். இதனால் தான் தமிழர் விரோத உணர்வு மெல்ல மெல்ல கட்டப்பட்டது எனலாம்.
இதை தீபவம்சம், மகாவம்சம் , சூளவம்சம்,
இராசாவலி ஊடாக அறியலாம்.
தமிழர் விரோத உணர்வு அற்ற தீபவம்சம், பிற்பாடு வந்த நூல்களில் கூடிக்கொண்டு போவதை
எவரும் இலகுவாக அறியலாம்.
நான் இந்த நீண்ட கட்டுரையை முடிக்க முன்பு, பௌத்தத்தைப் பற்றி, புத்தரைப் பற்றி சில
வார்த்தைகள் சொல்லலாம் என்று எண்ணுகிறேன். உண்மையான புத்த போதனையில் சாதி இல்லை; கடவுள் இல்லை. புத்தம்
என்பதன் பொருளே அறிவு (புத்தி) என்பதுதான். புத்தர் அன்பினை வலியுறுத்தியவர். சாதிகளுக்கு
எதிரானவர். அன்புதான் உலக ஜோதி, அன்பு தான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி
என்று மக்களுக்குப் போதித்து வந்தவர் சித்தார்த்தன் எனும் பெயர் கொண்ட இந்த புத்த
பெருமான் என்பது குறிப்பிடத் தக்கது.
புத்தரை பற்றி கூறுவது என்றால், அவருக்கு முதலில் அரண்மனை வாழ்க்கை
பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். இவ்வுலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப்
பற்றி ஆராயத் தொடங்கினார். ஒரு நாள் இவர் வெளியே சென்றுக் கொண்டிருந்த போது கண்ட
காட்சிகள் இவர் மனதை வெகுவாக புண்படுத்தின. வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும்
கண்டார். இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர்
நேரில் கண்டதில்லை. ஆகையால் இத்தகைய காட்சிகள் இவரது சிந்தனைகளை வெகுவாகத்
தாக்கியது. இதன் விளைவே அவரின் துறவறம் ஆகும்.
அதன் பின் ஞானோதயம் பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத்
என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத்
தொடங்கினார். 45 ஆண்டுகள்
அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின்
மக்களுக்கும், மன்னருக்கும்
தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை
நடத்தி வெற்றிகண்டார். அப்படியே, கபிலவஸ்துவில் ராகுல், மகா பிரஜாபதி ஆகியோரை தன்
சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை
பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை
தழுவிட வழிகோலினார். இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய
சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 486-ல் உயிர் நீத்தார்.
கி.மு. 3-ம் நூற்றாண்டு வட
இந்தியா, கிழக்கிந்தியா, இலங்கை ஆகிய இடங்களில்
புத்த மதம் பரவி இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு
நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது.
ஒரு சமயம் புத்தரைப் பல சித்திகள் தெரிந்த சித்தர் ஒருவர் சந்தித்தார்.
புத்தரிடம் உயிருள்ள சிப்பி ஒன்றைக் கொடுத்த அந்த சித்தர், "இந்த சிப்பிக்குள் விலை
உயர்ந்த முத்து உள்ளது. சிப்பியை உடைத்து முத்தை எடுத்துக் கொள்ளுங்கள்"
என்றார். அதற்கு புத்தர்,"முத்து எவ்வளவு விலை உயர்ந்ததாகவும் இருக்கட்டுமே! ஓர் உயிரைக்
கொல்வது என்பது என்னால் முடியாது!
சிப்பியை நீயே எடுத்துச் செல்" என்று சொல்லி விட்டார்.
இன்னும் ஒருமுறை, பெரியவர் ஒருவருக்கு புத்தரின் மீது கடுங்கோபம். தன் மகன்
திருமணம் செய்து கொள்ளாமல் புத்தரின் சீடனாகி விட்டான் என்பதே அவரது கோபத்துக்கு
காரணம். ஒருநாள் அந்த பெரியவரின் ஊர் வழியாக புத்தர் சொற்பொழிவுக்கு செல்ல
வேண்டியிருந்தது. இதை அறிந்து அந்த பெரியவர் புத்தரை வழிமறித்து திட்டத்
தொடங்கினார். வாய்க்கு வந்தபடி அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்து திட்டினார்.
புத்தர் கொஞ்சமும் கோபப்படவில்லை. வெகுநேரம் வழிமறித்து திட்டிக் கொண்டே
இருந்ததால் போதனைக்கு செல்ல நேரமாகியது. உடனே திட்டிய பெரியவரின் கையைப் பிடித்து, “பெரியவரே எனக்கு சொற்பொழி
வாற்ற நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது என்னை போக விடுங்கள். இன்று மாலை
இதே வழியில்தான் சொற்பொழிவு முடிந்து திரும்பி வருவேன். திட்டுவதற்கு இன்னமும்
இருந்தால் அப்போது திட்டுங்கள்,” என்றார். இது தான் உண்மையான புத்தரின்
செயல்பாடும் அவரின் போதனைகளும் ஆகும். ஆகவே நாம் இந்த நோக்கில் மகாவம்சத்தை
படித்தால், அதில் உள்ள
உண்மையும் பொய்யும் தானே வெளிப்படும்.
அதுமட்டும் அல்ல, இலங்கை புத்தரை போற்றும் வெறும் வழிபாட்டாளர்களாக
மாறினார்கள் தவிர,
அவரின் எந்த முதன்மை கொள்கையையும் பின்பற்றுபவர்களாக
மாறவில்லை. [But
Srilanka now have become mere worshipers of buddha but not true followers. That
is the primary misleading conception is that Sri Lanka is a mere
worshiping-nation but not a thinking-nation.] இப்படியான சூழலில் இலங்கை
புத்த சமய மக்கள் தங்களது அறியாமை, சமய அடிப்படைவாதம் மற்றும் தேசியவாதத்தால் [with their ignorance, religious
fundamentalism, and nationalism] அவர்கள் உண்மையான புத்தர் போதனையை பிரதிபலிக்க
அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள் என்று நான் நம்பவில்லை. அதனால் தான் இன்று
தமிழர் வாழ்விடங்கள் எங்கும் புத்தர் சிலைகள், தொல்பொருள்
திணைக்களம் மற்றும் அரசநிறுவனங்கள், புத்தகுருமார்கள், அரசு படைகள் துணையுடன்
பல்பொருள் அங்காடிகள் போல் முளைக்கின்றன, இது புத்தரின் எடுத்துக்காட்டுக்கு முற்றிலும்
வேறுபட்டது [Buddha
led a life of self-emptying. It was His praxis of liberation.] .
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி: 42 தொடரும்...
👉 அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள..... (பகுதி 42):
👉ஆரம்பத்தில் வாசிக்க அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:
No comments:
Post a Comment