உண்மைகளும், வரலாற்று சான்றுகளும்
சிங்கள இனம், அவ்வப்போது தென்
இந்தியாவில் இருந்து படை வீரர்களாகவோ அல்லது வேறு காரணங்களாலோ இலங்கையில் குடியேறிய
தென் இந்தியா திராவிடர்களை உள்வாங்கி பல்கிப் பெருகின என்பதற்கு, அண்மைய உதாரணமாக, சென்ற
நூற்றாண்டில் புத்தளம் நீர் கொழும்பு பகுதிகளில் வாழ்ந்த தமிழ் கத்தோலிக்க பரதவ
மக்கள். சிலாப மறைமாவட்டத்தின் ஆயர் ஆக இருந்த எட்மன்ட் பீரிஸ் (1897 -1989 ) பள்ளிகளில் படிப்பிக்கிற
கற்கை மொழியை தமிழில் இருந்து சிங்களத்துக்கு மாற்றினதால், அதன் விளைவாக
அவர்கள் தமிழை மறந்து சிங்களவர்கள் ஆனார்கள் என்பது வரலாற்று உண்மை ஆகும்.
எது எப்படியாகினும், மகாவம்சம் ஒரு வரலாற்று நூலாக் கொள்ளப்படா விட்டாலும்
வரலாற்றின் வெற்றிடங்களை நிரப்புகிற நூலாகக் கொள்ளலாம். அதாவது மகாவம்சம் என்ற நூல் உண்மைத் தரவுகள் பலவற்றை
உள்ளடக்கிய ஒரு புனைவு நூல் என்று நாம் சுருக்கமாக கூறலாம்.
மகாவம்சம் மத சார்புள்ள வரலாறு என்பதால், பக்தி காரணமாக நம்ப முடியாத பல நிகழ்ச்சிகள்
இடம் பெறுவது இயல்பேயாகும். அறிவுக்குப் பொருந்தாததை விலக்கி, பொருந்துவதும்
பயன்படுவதுமான தரவுகளை ஏற்றுக்கொள்ளும் மரபின் வழி பார்த்தால், வரலாற்றுச்
செய்திகளை அறிய மகாவம்சம் பெரிதும் துணை புரியும் என்பதில் எனக்கு ஐயப்பாடு இல்லை.
ஆனால் இன்று மகாவம்சத்தில் விதைக்கப்பட்ட. களைகளை அல்லது நஞ்சுகளை தூக்கிப்
பிடித்துக் கொண்டு,
பௌத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக
இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் சிங்கள அரசியல்
மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக
இருக்கிறார்கள் என்றும் நினைக்கும் இலங்கை பௌத்தர்களே அதிகம்.
மகாவம்ச ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னரே பௌத்த சிங்கள தேசிய உணர்வு
மெல்ல மெல்ல ஒங்கத் தொடங்கியது. அதற்கு முன் இலங்கை பாகுபாடு பெரிதாக தென்படும்
ஒரு நாடாக இருக்கவில்லை.
மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பௌத்த மதத்தின்
அடிநாதமான கோட்பாடாகும். புத்தர் உயிர்கள் மூவகைப்பட்டதென்றும் அதாவது மனிதர், விலங்குகள், தாவரங்கள்.
இவற்றில் எதற்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்றும் போதிக்கிறார். ஆனால் இன்று
அதற்கு மாறாக நடைபெறுவதை காண்கிறோம். அதிலும் பல சந்தர்ப்பங்களில் புத்த
பிக்குமார்களே வழி நடத்துவதையும் காண்கிறோம். இதற்கு முக்கிய காரணம் மகாவம்சத்தில்
காணப்படும் களைகளை அகற்றாமல், அதையே திருப்ப திருப்ப விதைப்பது ஆகும்.
1956-ல் “விஜயனின்
வருகை” என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி
ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம்
கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது. இதைப் பார்த்த பல சிங்கள
தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு
தெரிவித்தனர். ஏனென்றால், விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டு
வரும் பொழுது, இலங்கையில்
ஏற்கனவே குவேனி என்ற பெண், ஒரு மரத்தடியில், நாகரீகத்தின் அடையாளமாக, நூல்
நூற்றுக்கொண்டு இருப்பது, தமக்கு அவமானம் என்று கருதினர். இதன் காரணமாக, இந்த தபால் தலையை
இலங்கை அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது என்பது ஒரு அண்மைய வரலாற்று நிகழ்வாகும்.
தீபவம்சத்தில்,
கடைசி ஆறு பாடம், 17 இல் இருந்து 22 வரை தான்
முழுதாக இலங்கையை பற்றி கூறுகிறது. இது ஆக 27 பக்கமே! எனவே மூன்றில் ஒரு பங்கிற்கும்
குறைவாகத் தான் மனித வரலாற்றை, இலங்கையில் நடைபெற்றதாக கூறுகிறது.
அசோகா புத்த மதம் பரப்ப சென்ற இடங்களை அசோகா கல்வெட்டு 13 கூறுகிறது. அதில் தெற்கில் சோழ, பாண்டிய மற்றும் தாமிரபரணி வரையும் என்றே கூறுகிறது. இங்கு தாமிரபரணி ஆற்றுடன் சேர்ந்த பிரதேசத்தையே குறிக்கிறது எனலாம். இலங்கையை அல்ல. [“likewise in the south among the Cholas, the Pandyas, and as far as Tamaraparni”]. தாமிரபரணி ஆறு, பாண்டிய நாட்டில், இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் உண்டாகி, மன்னார் கடல் மட்டும் போகிறது. அசோகன் எந்த சந்தர்ப்பத்திலும் லங்கா என்று குறிப்பிடவில்லை, ஆனால் மேலே கூறிய தமிழர் பிரதேசங்களை கூறி உள்ளார். தாமிரபரணி கரைக்கு அடுத்த பக்கத்தில் இருக்கும் நாட்டை குறிக்காது. இதை வரலாற்று அறிஞர் V. A. ஸ்மித் ஆமோதிக்கிறார். [V. A. Smith, was clearly of the view that Lanka is not meant by the name Tamaraparni.]
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி: 41 தொடரும்…வாசிக்க அழுத்துக
Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள…..( பகுதி 41):
👉ஆரம்பத்தில் வாசிக்க அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:
No comments:
Post a Comment