இலங்கையில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது. அதுமட்டும் அல்ல, இது ஒரு மாற்ற முடியாத நோயாகவே கருதும் நிலையும்
ஏற்படுகிறது. இந்த நோயினால் ஏற்படும் வேதனைகளும் அல்லது துன்பங்களும் ஏராளம்.
யாழ்ப்பாணத்து மருத்துவ நூல்களான பரராசசேகரம் ஐந்தாம் பாகம், செகராசசேகர வைத்தியம், செகராசசேகர வைத்தியத்
திறவுகோல், அமிர்த சாகர
பதார்த்த சூடாமணி என்பனவற்றில் ஆவாரை சேர்ந்த மருந்துகளை நீரிழிவு நோயிற்கு
பரிந்துரைக்கிறது.
ஆவாரை [Senna auriculata] அல்லது ஆவிரை என்பது ஒரு சங்க கால மலராகும். "பொன்நேர்
ஆவிரைப் புதுமலர் மிடைந்த பன்னூல் மாலைப் .. " என குறுந்தொகை 173 ஆவாரை பற்றி பாடுகிறது. அதாவது 'பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருக்கமாகக்
கட்டிய, பல
நூல்களாலான மாலைகளை அணிந்த .. ' என்கிறது. மேலும் ”ஆவாரை
பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ ?” என்பது ஒரு சித்த மருத்துவப் பழமொழியும் ஆகும். இவை ஆவாரையின் சிறப்பை சொல்லாமல் சொல்லுகிறது. இது
இக்காலத்தில் ஆவாரம்பூ என வழங்கப்படுகிறது. மேலும் இன்சுலின் குறைபாட்டால்
ஏற்படும் நீரிழிவு நோயில் இன்சுலினைக் கூட்டும் தன்மை ஆவாரை இலைக்கு இருப்பதாகவும்
[insulinogenic : of, relating to, or stimulating the production of
insulin] இன்சுலினைச் சுரக்கும்
சதையில் உள்ள அழிந்த அந்த குறிப்பிட்ட
உயிரணுவை அல்லது செல்லை [beta cells in the pancreas] புதுப்பிக்க வைக்கும் ஆற்றல் அல்லது தன்மை [regenerative
action] ஆவரசம் பூவிற்கு
இருப்பதாகவும் ஆய்வுகள் காட்டுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
முருகேச முதலியார் -
குணபாடம் என்ற நூலில் அல்லது அகத்திய முனியின் பதார்த்த குண சிந்தாமணி
என்கிற நூலில் ஆவரைப் பிசின் குணம் பற்றி கூறுகையில்
"பெருநீர்
மறிக்கும் பிரமேகம் போக்கும்
வருநீர்ச்
சுருக்குதனை மாற்றுந் – தருநீர்வை
புனுமேணிக்
கமலப் பொன்னே பீடகரெலாம்
பேணு
மேகாரிப்பி சின்"
என்கிறது. அதாவது அழகு பொருந்திய கமலமின்னனைய காரிகையே!
ஆவரைச்செடியின் பிசினானது வெகு மூத்திரத்தையும் [அதி மூத்திரம் அல்லது நீரிழிவு
அல்லது சிறுநீர்த் தொல்லை] பிரமேகரோகத்தையும் வாதகரிச்சுரத்தையும் போக்கும்
என்கிறது. இங்கு மேககாரி என்பது ஆவாரையின்
இன்னும் ஒரு பெயராகும்.
பரராஜசேகரம் என்பது
யாழ்ப்பாண பரராசசேகரன் மன்னனால் 12 மருத்துவர்களின் உதவியுடன்
இயற்றப்பட்ட மருத்துவ நூலாகும். ஆனால் உண்மையில் பரராசசேகரன் என்பது, யாழ்ப்பாண இராசதானியை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் குடியைச்
சேர்ந்த மன்னர்கள், தங்களுக்கு
மாறிமாறி வைத்துக்கொண்ட அரியணைப் பெயர்களுள் இரண்டில் ஒன்றாகும். இன்னொரு பெயர்
செகராசசேகரன் என்பதாகும். இவர்கள் 1246 முதல் 1615 வரை குலசேகரன் மன்னன் தொடக்கம் எதிர்மன்னசிங்கம் மன்னன்
வரை பத்து மன்னர்கள் ஆவார்கள். எனவே எப் பரராசசேகரன் காலத்தில் என்பதை நிச்சயமாக
கூற இன்றுவரை ஆதாரமெதுவுமில்லை. எனவே, இது ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்து நூல் என்று மட்டுமே
நாம் கருதலாம். இடையில் ஒரு தடவை
சப்புமால் குமாரயா அல்லது செண்பகப் பெருமாள், "ஆறாம் புவனேகபாகு" என்ற பெயரில் கோட்டை அரசை ஆண்ட
ஒருவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்கிறது வரலாறு.
இந்நூல் பெரும்பான்மை விருத்தப்பாவாலும், சிறுபான்மை ஆசிரியப்பா, கலிவெண்பா ஆகியவற்றாலும் செய்யப்ட்டுள்ளது. என்றாலும் சில
பகுதிகள் இன்றுவரை கிடைக்கவில்லை. என்றாலும்
8000 செய்யுள்
கொண்ட ஒரு வைத்திய நூலாக இன்று ஏழு பாகமாக அச்சிடப்பட்டுள்ளது. உண்மையில் அங்கு 12000 செய்யுள் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. தன்வந்திரி
என்பார் வடமொழியிற் செய்த ஆயுள்வேத நூலைத் தழுவியே இது எழுதப் பட்டது என்பதனை இதன்
கடவுள் வணக்கச் செய்யுள் ஒன்றின் மூலம் அறியமுடிகிறது. "தரணியோர்
மிகப்புகழ்ந்ததன் வந்த்ரி செய்த தகவுடைய சீர்த்திபெறு மாயுள் வேதப் பேரணியும்
வாகடத்தைப் பெரிது பேணிப் பெட்புடைய தமிழ்ப்பாவாற் பேசும் வண்ணம்" என்ற
செய்யுள் அதை உறுதிப் படுத்துகிறது. மேலும் இங்கு ஒரு செய்யுளில் தான்
சலக்கழிச்சல் என நீரிழிவு நோயை கூறுகிறது.
சித்த மருத்துவத்தில் [SIDDHA MEDICINE] இன்னும் ஒரு பாடலில் எருமை மோரும் சகலக்கழிச்சலுக்கு
பரிந்துரைக்கிறது.
“தாகம்
கிரகணி சலக்கழிச்சல் காமாலை
கம்
குடையு மற்றுப்போ மோகமில்லா
தேவாமிரதமு
மாஞ்சீர் மானிடர் தமக்கு
மோவா
மருந்து எருமை மோர்.”
அதாவது எருமை மோரை மருந்தாக உண்டால் - தாகம், கிராணி [கிராணி என்பது ஓயாத மலக்கழிச்சல் அல்லது ஒருவகைக்
கழிச்சல்நோய் ], சகலக்கழிச்சல்
[எல்லாவிதமான அல்லது சகல வயிற்றுப்போக்கு], காமாலை [Jaundice], வ்யிற்றுக்குடைச்சல் [Abdominal diarrhea] தீரும் என்கிறது. என்றாலும் இவை எல்லாம் ஆய்விற்குரிய
விடயங்கள் ஆகும். எது என்னவென்றாலும்
இந்நோய் பற்றி ஆங்கில வைத்தியம் ஒருவகையான அடிப்படைக் கருத்தினையும், எமது முன்னோர்களின் வைத்தியமான சித்தம் [சித்த மருத்துவம்
என்பது தென்னிந்திய தமிழ் மருத்துவ முறையாகும். பண்டைச் சித்தர்கள், இதனை உருவாக்கித் தந்துள்ளார்கள்], ஆயுள்வேதம் [Ayurveda, சமக்கிருதம்: आयुर्वेद என்பது, இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது
இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப்
பயன்பாட்டில் உள்ளது. ஆயுள்வேதம் என்னும் சொல் ஆயுர்வேத என்னும் சமசுக்கிருதச்
சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்], யூனானி [கிரேக்க-அராபிய வைத்திய முறை] போன்ற வைத்திய முறைகள் வேறு ஒரு வகையான
அடிப்படைக் கருத்தினையும், கொண்டுள்ளதை
நாம் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.
உதாரணமாக, இந்நோய் ஒருவருக்கு ஏற்பட்டால் அதனை அறவே இல்லாமல் செய்துவிட முடியாது.
கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது அலபோதி வைத்தியம் [ஆங்கில
வைத்தியம்]. ஆனால், சித்த ஆயுள்
வேதமோ கவனமாக இருந்தால் அறவே இல்லாமல் செய்துவிடலாம் என்று கூறுகின்றது? மேலும் அறுசுவையுண்டியென்பது தற்செயலாக ஏற்பட்ட ஒன்றல்ல.
இது திட்டமிடப்பட்ட ஒரு உணவு முறையே எனவும், ஒவ்வொரு சுவையும் எமது உடலிலேயுள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும்
தேவையான காரணியாகும் எனவும் இதனை வேறு ஒரு வகையாகக் கூறுவதாயின் ஒரு மோட்டார்
வண்டி (கார்) சரியாக இயங்குவதற்கு பெட்றோல், இன்ஜின் ஒயில், பிரேக் ஒயில், கியர் ஒயில் போன்ற பல ஒயில்கள் தேவைப்படுவது போல எமது
உடலின் உறுப்புக்கள் சரியாக இயங்குவதற்கு அறுசுவைகளும் தேவைப்படுகின்றன எனவும், “கணயம் என்ற
எமது உள்ளுறுப்பு” “இன்சுலின்” என்ற நீரினைச் சுரந்து எமது உணவினைச் சக்தியாக
மாற்றமடையச் செய்ய உதவுகின்றது. இந்தக் கணையம் (Pancreas) இயங்க
அறுசுவைகளுள் ஒன்றான கசப்புத் தேவை எனவும், இந்தக் கசப்பு பாகற்காய், திராய் [கசப்பான கீரை வகை] போன்றவற்றை உணவோடு சேர்த்துக்
கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சித்த மருத்துவ குறிப்பு ஒன்று
கூறுகிறது. 'கோபக்கார மாப்பிள்ளைக்கு
பாகற்காய் பத்தியமாம்’ என்ற பழமொழியை கவனிக்க!
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி: 04 தொடரும்..
No comments:
Post a Comment