-"ஏமாற்றம்"- சிறு கதை



[நாம் எதிர் பார்த்தது போல ஒன்று நடைபெறவில்லை என்றால் எமக்கு ஒரு ஏமாற்ற உணர்வு தானாக தோன்றிவிடுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மனிதரிலும் எதோ ஒரு வேளையில் இப்படியான ஒரு உணர்வு ஏற்படுகிறது. என்றாலும் அதன் வலிமை தாக்கம் வேறுபடுகிறது. சில பெரிதாகப் பேசப்படுவதில்லை. அவை விரைவில் மறந்து விடப் படுகின்றன. ஆனால் சில, வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாமல் கவலையையும் கோபத்தையும் கொடுத்தவாறே இருக்கிறது. நான் இந்த இரண்டையும் கண்டவன்.

"தோற்றுக் கொண்டே இருந்தாலும் கவலைப்படாதே நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவாய் மனதில் உறுதியை மட்டும் வை கனவுகள் நனவாகும் காலம் வரும்!"]



நான் பல்கலைக்கழக பட்டப் படிப்பு முடித்து வேலை தேடிக்கொண்டு இருக்கும் காலம் அது. நான் பல வேலை நிறுவனங்களுக்கு மனுப்போட்டு நம்பிக்கையுடன் காத்து இருக்கிறேன். படிக்கும் காலத்தில் நான் ஓரளவு சராசரி மாணவன். எனது மறுமொழியும் பரவாயில்லாமல் இருந்தது. ஆகவே நான் விரைவில் வேலையில் சேர்ந்து, எம் குடும்ப நிலையை உயர்த்துவேன் என திடமாக நம்பினேன். 'நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு' என்று யாரோ பாடியது காதில் ஒலித்துக்கொண்டு இருந்தது. ஆனால் எந்த நேர்முகத் தேர்வுக்கும் இதுவரை வரவில்லை. அது என்னுள் எதோ ஒரு எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது. நானும் விடாமல் வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டே இருந்தேன். இறுதியாக ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. நானும் மிக நேர்த்தியாக உடையணிந்து, மகிழ்வாக நேரத்துடன் அங்கு சென்றேன். எனது முறை வர, மிக நிதானமாக புன்னகை தவழ அங்கு உள்ளே சென்றேன். நிறுவனத்தின் மேலாளர் எனக்கு வாழ்த்து கூறி கதிரையில் அமரும்படி பணிவாக வேண்டினார். நானும் பதிலுக்கு அவருக்கு வணக்கம் கூறி பணிவுடன் அமர்ந்தேன். அதன் பின் அவர் எனது படிப்பு சம்பந்தமான சான்றுகளை பார்த்துவிட்டு,  வேலையுடன் சம்பந்தப்பட்ட கேள்விகளையும் கேட்டார். எல்லாவற்றுக்கும் நான் உடன் உடன் பதில் கொடுத்தேன். என்றாலும் இறுதியில் அவர் தனது  தலையை ஆட்டியபடி, உனக்கு செய்முறை அறிவு பத்தாது, ஆகவே இந்த வேலைக்கு இம்முறை உன்னை பரிசீலிக்க முடியாது என்று ஆறுதலாக, அமைதியாக கூறி கைவிரித்து விட்டார்.  எனக்கு மிகவும் கோபமாகவும் கவலையாகவும் ஏமாற்றமாகவும் இருந்தாலும், அதை வெளியே காட்டாமல் , அந்த அறையில் இருந்து வெளியேறினேன்.

 

எப்படியாகினும், ஒரு மாதத்தின் பின் வந்த என் இரண்டாவது நேர்முகத் தேர்வில், அவர்கள் என்னை வேலைக்கு உடன் எடுத்ததுடன்,  முதல் ஆறு மாதம் பயிற்சி எந்திரவியலாளராக நியமித்து, எனக்கு தேவையான நடைமுறை அறிவு தந்து, என் துறையில் நான் உயரவும் வழிவகுத்தனர். அது மட்டும் அல்ல, மேலாதிக்கப் கடல் பொறியியல் பயிற்சிக்கு ஷிமோனோசேக்கி பல்கலைக்கழகம், ஜப்பானுக்கும்  ஒரு ஆண்டு அனுப்பினார்கள். அதனால் முதல் ஏற்பட்ட ஏமாற்றம் தானாக மறைந்தே போய்விட்டது.

 

"எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் உடன் பிறப்புகள்! ஒன்றை தொடர்ந்தே இன்னொன்று பயணிக்கும்!"

 

ஜப்பான்னால்  வந்தபின் எனக்கும் திருமணம் நடந்து, மூன்று பிள்ளைகளின் பெற்றோர்களாக மகிழ்வாக குடும்ப வாழ்வு நகர்ந்தது. நாமும் நாட்டின் சூழ்நிலையால், குடும்பத்துடன் லண்டன் போய், அங்கு நிரந்தரமாக வசிக்க ஆரம்பித்தோம். பிள்ளைகளும் நன்றாக படித்து, மூவரும் பல்கலைக்கழகம் சென்றுவிட்டார்கள். அந்த நேரத்தில் பெரும்பாலும் நாம் இருவருமே வீட்டில் இருந்தோம். மகன் வீட்டில் இருந்தே பல்கலைக்கழக படிப்பு தொடர்ந்தார். இரு மகளும் தூர இடத்தில் படிப்பதால், அங்கு விடுதியில் இருந்தனர்.

 

அப்படியான ஒரு நாளில் நானும் மனைவியும் கதைக்கும் பொழுது, அவர் பிள்ளைகள் ஓரளவு தமது உழைப்பில், வாழ்க்கையில் நிரந்தரம் ஆனதும், நாம் இருவரும் கொஞ்ச ஆண்டு, மீண்டும் யாழ்ப்பாணம் போய் இருக்கவேண்டும் என்று தன் ஆசையை கூறினார். அது எனக்கும் நல்லதாகவே பட்டது. நானும் ஆமோதித்து தலை ஆட்டினேன். அவரும் மிக மகிழ்வாக, இரவு சமையல் செய்ய எழுந்து போனார். அடுத்த நாள், வழமை போல் வேலைக்கு காரில் காலை போனார். அவர் பகுதி நேர வேலை. நாம் முழுநேர வேலை , நானும் அவரைத் தொடர்ந்து வேலைக்கு போனேன்.

 

அன்று மதியம் திடீரென ஒரு அவசர அழைப்பு , என் வேலைத்தளத்துக்கு வந்தது. அதில் உங்க மனைவி மயக்கமுற்று, அவசரமாக மருத்துவ அவசர ஊர்தியில் வைத்திய சாலைக்கு கொண்டு போகிறோம் என அவரின் வேலைத்தளத்தில் இருந்து வந்தது. நானும் மகனும் உடனடியாக அங்கு போனோம். அவர்கள் தேவையான பரிசோதனைகளை செய்து, இனி அதன் மறுமொழிகள் வர , தேவையான சிகிச்சை அளிப்போம் என்றார்கள். ஆனால் அந்த மறுமொழிகள் வரும் முன்பே, சில மணித்தியாலத்தில் அவரின் உயிர் பிரிந்துவிட்டது. அவர் கடைசி நேரத்தில் இரு மகளையும் கூட பார்க்கவில்லை.

 

"ஏமாற்றம் எனக்கு புதிதல்ல. நான் ஏமாறும் விதம்தான் புதியதாய் இருக்கிறது.  சில நேரம் நம்பிக்கையால் .. சில நேரம் அன்பால் .."

 

அவரும் நானும் போட்ட திட்டம், கனவுகள் எல்லாம் எம் கண்ணீரில் கரைந்து ஒடத் தொடங்கின. எத்தனையோ கனவுகளுடன் வாழ்ந்த அந்த உன்னத உள்ளத்தை, இறப்பு என்ற ஒன்று திடீரென வந்து அவளையும், எம்மையும் ஏமாற்றி விட்டது. அவர் இறந்த பின்பு தான், அவரின் பரிசோதனைகளின் மறுமொழி வந்தது. அது மூளையுறை அழற்சி (Meningitis) என்று தெரிய வந்தது. இத்தகு அழற்சி, தீ நுண்மங்களினாலோ, பாக்டீரியாக்களினாலோ, அல்லது பிற நுண்ணுயிரிகளினாலோ, அரிதாகச் சில மருந்துகளினாலோ உண்டாகலாம் என எமக்கு விளக்கம் தரப் பட்டது. 

 

மனைவியின் , தாயின் பிரிவு, எம்மையும் அவளையும் ஏமாற்றிய அந்த  நுண்ணுயிரிகள் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அது என்ன செய்யும்? இன்னும், 15 ஆண்டுகள் தாண்டியும் அந்த ஏமாற்றம் மறையவே இல்லை, அவளை நாம் எவருமே மறக்கவும் இல்லை. இப்ப பத்தாம் நினைவு ஆண்டில் பிறந்த பேத்தியின் பெயர், அவளின் பெயரே ! அவள் கனவுகள் இனி என்றுமே நிறைவேறப் போவதில்லை. ஆனால், அந்த அழகு பெயர் "ஜெயா", எம் உள்ளங்களில் என்றுமே எம்மை ஏமாற்றாமல் குடியிருக்கும்!!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

No comments:

Post a Comment