"காலம் மாறும் கவலைகள் தீரும்?"[ சிறு கதை]

['காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 74 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதின்மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க்கொண்டு இருக்கிறது!]


அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்துவிட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு
, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்,

காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்துகொண்டு இருந்தான் அவன்.

 

அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையை கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பது ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக்கொண்டே இருந்தாள் .   

 

எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் மூன்றரை வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், உயிரிழந்துள்ளனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்

 

அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [ Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக்கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!

 

தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப்பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுதுகொண்டுதான் இருக்கிறாள்!!

 

அவள் இப்போது  போராட்டத்துக்கு தலைமை தாங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்காக  எதையும் செய்யத்  துணிந்துவிட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் , என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்போது  அவளின் ஒரே குறிக்கோள் !  

 

இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவதென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்போது  அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment