துணிச்சலுடன் முயற்சி செய்
அது எப்படி, சில பேரால் மட்டும் வாழ்க்கையில் மேலே மேலே போய்க்கொண்டே
இருக்க முடிகிறது?
ஊக்கம் அவர்களுக்கு உள்ளிருந்தே
எழுகிறது.
ஒரு காரியமானது செய்கிறவருக்குப்
பிடித்ததாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் திருப்தி ஏற்படும். பிறர் அதைப் பற்றி
என்ன நினைக்கிறார்கள் என்பது அவருக்கு முக்கியமில்லை.
அந்தக் காரியத்தால் பணம் கிடைக்காது
போகலாம். அதனால் பாதிப்பு அடையாது, புதினங்கள் படிப்பது, பொழுதுபோக்கிற்காகத் தையல் வேலையில் ஈடுபடுவது, சித்திரம் வரைவது, எழுத்துத் துறை, சமைப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறவர்களுக்கு அவை பிடித்த
காரியமாக இருக்கும். அதனால், பிறரது உதவியை எதிர்பார்க்காது, தாமே செய்கிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள்.
வேறு சிலர் விளையாட்டுகளில் நேரத்தைச்
செலவழிப்பார்கள். ஏனெனில் அது அவர்களுக்கு மகிழ்ச்சி தருவது. சவாலாக அமைவது.
குழந்தைகள் மற்றவர்களுடன்
விளையாடும்போது, மகிழ்ச்சி ஒன்றுதான் அவர்களுக்குக் குறி. பெரும்பாலான பெரியவர்களைப்போல், `இவனுடன் தொடர்பு கொண்டால் என்ன லாபம்?’ என்று கணக்குப் பார்க்கமாட்டார்கள்.
ஒரு காரியத்தை ஏன் செய்கிறோம் என்று தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கான
திறமை தனக்கு இருக்கிறதா என்று ஆராய்ந்துவிட்டு, முழுமனத்துடன்
ஈடுபடுகிறவர்களுக்கு வெற்றி கிடைப்பது உறுதி.
திறமை ஒருபுறமிருக்க, அவர்கள் துணிச்சல் மிக்கவர்கள்.
துணிச்சல் எதற்கு?
சட்டத்திற்குப் புறம்பாகவா நடக்கப்
போகிறார்கள்?
நாம் ஒரு காரியத்தில் இறங்கப்
போகிறோம் என்று தெரிந்தால், அதற்குப் பலவிதமான எதிர்ப்புகள் கிளம்பும்.
பிரபலமான அமெரிக்க எழுத்தாளர் ஒருவரை
மூதாட்டி ஒருத்தி கேட்டாளாம், “உருப்படியான வேலையை நீ என்று தேடிக்கொள்ளப் போகிறாய்?”
தன் எழுத்தால் கோடி கோடியாகச்
சம்பாதித்தவரைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி!
அவருக்கு ஆர்வம் இருந்தது. தன்
திறமையில் நம்பிக்கை இருந்தது. வெற்றிக்கொடி நாட்டிய பின்னரும் இப்படி ஒரு கேள்வி
எழுந்திருந்தால், ஆரம்ப காலத்தில் இன்னும் எவ்வளவு கேலியை, எதிர்ப்பைக் கண்டிருப்பார்!
ஒருவருக்கு ஊக்கம் தனக்குள்ளிருந்து
வந்தால், யார் என்ன
சொன்னாலும் எடுத்த முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டார்.
எதிர்ப்போ, தோல்வியோ, தனது பலத்தைப் பரீட்சை செய்யத்தான் ஏற்படுகிறது என்று
புரியும்போது, தன் பலம் என்னவென்று புரிந்துவிடும். அச்சம் விலகிவிடும்.
ஆனால், பலரும், தம்
விருப்பு வெறுப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, பிறரது
பாராட்டுக்காக, அல்லது ஆமோதிப்புக்காகவே எதையும்
செய்கிறார்கள். எதிர்ப்புகள் வந்தால், பயந்து பின்வாங்குகிறார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்குப் பெரும்
வெற்றி கிடைப்பதில்லை.
முயற்சியில் வெற்றி
கனவிலேயே நிலைத்துவிடாது, அக்கனவை நனவாக்குவது எப்படி என்று ஆராய்வது முதல் படி.
“நான் எல்லாப்
பாடங்களிலும் முதல் மாணவனாக இருக்கப் போகிறேன்!” என்று விரும்பினால் மட்டும்
போதுமா?
“புத்தகங்களைத் தொடவே
பிடிக்காது. என் வீட்டில், `படி, படி’ என்று
உயிரை வாங்குகிறார்கள்!” என்பவர்களுக்குப் படிப்பது கசப்பான வேலை. அதனாலேயே, அது கடினமானதாகத் தோன்றும்.
மாறாக, காலையில் எழுந்து படிக்க வேண்டும், தெரியாதவற்றைப் புரிந்துகொள்வதற்குத் தகுந்தவர்களை
நாடவேண்டும், பொழுதுபோக்குகளிலும் நண்பர்களுடனும் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதைத் தவிர்க்க
வேண்டும் என்று பல கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
`இவ்வளவு கடினமாக
இருக்கிறதே! எப்படித்தான் செய்யப் போகிறேனோ!’ என்ற மலைப்பு எழும்போது அதை
ஒதுக்கிவிட்டுச் செய்தால், நாமே பிரமிக்கும் அளவுக்குப் பலன் கிடைக்கும்.
உரிய காலத்தில் நாமே நம்மை
ஒழுக்கப்படுத்திக்கொள்ளாவிட்டால், `அப்படிச் செய்திருக்கலாமே!’ என்ற வருத்தம்தான் மிஞ்சும்.
கண்ட கனவு மெய்யாகாதபோது, `நேரம் கிடைக்கவில்லை. யாருமே ஊக்குவிக்கவில்லை,’ என்பதெல்லாம் நொண்டிச்சாக்கு.
“ஒரு மரத்தை நடுவதற்குச்
சிறந்த வேளை, இருபது வருடங்களுக்கு முன்னால். அடுத்தது, இப்போது!” (சீனப் பழமொழி)
எப்போதோ செய்யாமல் விட்டதைப் பற்றியே நினைத்துக்
குமுறிக்கொண்டிராது, இப்போது செய்யலாமே!
வெற்றி-தோல்வி
தோல்வி என்பது வெற்றியின்
எதிர்ப்பதமில்லை. இரண்டும் நெருங்கிய தொடர்புடையவை.
எந்த வெற்றி அடைவதற்கு முன்பும்
தோல்வி தவிர்க்க முடியாதது. (ஆரம்பத்திலேயே வெற்றி கிடைத்துவிட்டால், கர்வம் தலைக்கேறி, மேலும் பல வெற்றிகளை அடைவது கடினம்).
எடுத்த காரியத்தில் உடனடியாக வெற்றி
கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது மடமை. விடாமுயற்சி உள்ளவர்களை வீழ்த்துவது
கடினம்.
`நீ செய்து கிழித்தாய்!’
`நினைத்ததை உடனே செய்து
முடிக்கவேண்டும் உனக்கு!’
`ஆசைக்கும் எல்லை
இருக்கவேண்டும்!’
`சரியான போர்! எப்போதும்
என்ன செய்யப்போகிறேன் என்றே பேசிக்கொண்டிருப்பாய்!’
இப்படியெல்லாம் நாம் எடுத்த திசையை
மறித்துப் பேசுகிறவர்களிடமிருந்து விலகுவதுதான் புத்திசாலித்தனம்.
நெருங்கிய உறவினர்களே அப்படி
இருந்தால், அவர்களது கூற்றை அலட்சியம் செய்தால் பிழைத்தோம்.
வளர்ப்புமுறை
“கொதிக்கும் நீரில்
உருளைக்கிழங்கு வெந்து, மென்மையாகிவிடுகிறது. ஆனால், முட்டை கெட்டியாகிவிடுகிறது”. (யாரோ)
ஒரு குடும்பத்தில் எல்லாக்
குழந்தைகளும் வெற்றியாளர்களாகத் திகழ்வதில்லை.
“எல்லாரையும் ஒரே
மாதிரிதான் வளர்த்தோம்!” என்று புலம்பும் பெற்றோர் ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை.
ஒரே விதமான வளர்ப்புமுறை, வெவ்வேறு மாறுதல்களை ஏற்படுத்தக்கூடியது.
இயற்கையில், முதல் குழந்தை நுண்ணிய உணர்வுகளைக் கொண்டிருக்கும்.
பொறுப்பும் பொறுமையும் அதிகமாக இருக்கும்.
அத்தன்மை புரிந்து, பெற்றோர் ஓயாது விரட்டாமல் இருந்தால் அவன் சிறந்த
தலைவனாகும் வாய்ப்பு உண்டு.
மூத்தவனோ, காலத்துக்கு ஒவ்வாத விதமாக நடக்கச் சொன்னாலும், பெற்றோருக்குப் பணிந்து நடப்பான்.
அவனுக்குப் பிடிக்காத துறையில்
படிக்கச் சொன்னால், அப்படியே நடந்து, உற்சாகமின்றி காலம் தள்ளுவான். அதனாலேயே வெற்றி பெற முடியாது போய்விடும்.
இரண்டாவது குழந்தையோ நேர் எதிர்.
அவ்வளவாகப் பொறுமை இராது. `ஏன் இப்படி?’ என்று எதிர்த்துக் கேட்கும் குணம் இருக்கும்.
ஒரு நல்ல வேலையில் அமர்ந்திருந்தாலும், அதிலிருந்து விலகி, தனக்குப் பிடித்த, சம்பந்தமே இல்லாத வேறொரு துறையில் நுழையும் துணிச்சல்
உண்டு. அதில் தோல்வி ஏற்பட்டாலும் சமாளித்துக்கொண்டு, மீண்டும் முயல்வான். அவனுக்கு வயது ஒரு தடையே இல்லை.
சவால்கள் நிறைந்த முயற்சியில்
ஈடுபடுவான்.
இளையவனுடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, மனமுடைந்து, புதிதாக எதையும் செய்யும் துணிவை இழந்துவிடுவான் மூத்தவன்.
எல்லாக் காரியமும் தன்னைச் சோதிப்பதுபோல் உணர்வான்.
தன்னைத்தானே நம்பாதவன்மேல் பிறருக்கு எப்படி நம்பிக்கை
ஏற்படும்?
`இதைச் செய்யமுடியுமா!’
என்ற மலைப்பு ஏற்படுவது நல்லது. இல்லாவிட்டால், எடுத்த காரியம் மிக எளிதானது என்று அர்த்தம். அதை
முடித்தபின், பெருமகிழ்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை.
விதை நட்டவுடனேயே மரமாகிவிடுகிறதா? அதைப்போல்தான், எந்தத்
துறையிலும் குறுகிய நேரத்தில் பலன் கிடைக்காது. சிறு, சிறு
வெற்றிகள் கிடைக்க, மகிழ்ச்சி பெருகும். ஊக்கம்
வரும். அதன்பின்தான் பெரும் வெற்றி கிடைக்கும்.
::நிர்மலா ராகவன்-எழுத்தாளர்-/-சமூக ஆர்வலர். மலேசியா.
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக... Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1
0 comments:
Post a Comment