பழகத் தெரிய வேணும் – 62

 


தற்கொலை வேண்டாமே!

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, அதிலும் வெற்றி பெறாதவர்கள் கூறுவது: “நாங்கள் முயன்றது கோழைத்தனத்தால் அல்ல!”

 

பின் ஏன் அப்படி ஒரு காரியத்தில் இறங்குகிறார்கள்?

 

தற்காலிகமான ஒரு பிரச்னையைத் தாள முடியாது, நிரந்தரமான தீர்வை நாடுகிறார்கள்.

 

::கதை::

கிட்டு என்ற இளைஞன் ஒரு நோயால் அவதிப்பட்டு, அதன் உக்கிரம் தாங்க முடியாது, தன் உயிரைத் தானே போக்கிக்கொண்டான்.

 

தற்கொலை முயற்சிக்கு இறங்குமுன், “இப்படிக் கஷ்டப்படறதுக்கு ஒரு வழியா செத்துடலாம்னு இருக்கு!” என்று மரணத்தைப் பற்றியே பேசினான்.

 

அவனுடைய செய்கையின் விளைவு, பிறரை எப்படிப் பாதிக்கும் என்று அவன் யோசிக்கவில்லை.

 

மனைவி, ஒரே வயதான குழந்தை, தாய் – எல்லாரையும் தவிக்கவிட்டு, தன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்த ஒருவனின் சுயநலமான காரியம் அது.

 

அதுவே அபாயச் சங்கு.

 

ஆனால், பிறர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. `ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறான்!’ என்று அலட்சியப்படுத்தினார்கள்.

 

::கதை::

பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டபின், அவர்களது ஐந்து வயது மகன், பாட்டியுடன் வளர்ந்தான்.

 

அவள் அன்புடன் ஊட்டி வளர்த்ததில் உடல் பருமனாகிக்கொண்டே போயிற்று. பெற்றோரின் உண்மை நிலை புரியாத சோகம் வேறு.

 

இடைநிலைப் பள்ளியில் படிக்கையில், `குண்டு!’ என்ற கேலிக்கு ஆளானான். உணர்வு ரீதியில் பலவீனமான அவனைக் கொடுமைப்படுத்தியவர்களுடன் சேர விரும்பாது, பதினான்கு வயதிலேயே தனித்துப் போனான்.

 

பாட்டியின் மறைவுக்குப் பின், `யாருமே எனக்கு ஆதரவாக இல்லை!’ என்ற தன்னிரக்கம் எழுந்தது.

 

பேச்சுத் துணைக்கும் எவருமில்லை, வாழ்வில் மகிழ்ச்சியும் இல்லை. இனி எதற்கு உயிர்வாழ வேண்டும் என்று தோன்றிப் போக, தற்கொலை செய்துகொள்ள என்னென்ன முறைகள் இருக்கின்றன என்று ஆராய ஆரம்பித்தான்.

 

வாழ்க்கை வெறுத்துவிட்டது. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்,” என்று பேச்சுவாக்கில் தாயிடம் கூறினான்.

 

செய்துகொள்,” என்றுவிட்டாள் அவனைப் பெற்றவள். தற்கொலையைப் பற்றிய சிந்தனை அவளுக்கும் இருந்தது.

 

அவனுக்கிருந்த ஒரே துணை தொலைக்காட்சிதான். தாய்மொழி அல்லாத ஒரு வேற்று மொழியில் அமைந்த படங்களைப் பார்த்தபோது, தானும் அந்த நாட்டுக்குப் போய்ப் படிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வயது ஏற ஏற, அது வெறியாகவே மாறியது. ஆனால், எப்படித் தன் கனவை நனவாக்குவது என்று புரியாது குழப்பம் ஏற்பட்டது.

 

மொழியைக் கற்கத் தேவையான பெரிய தொகை எங்கிருந்து கிடைக்கும்?

 

இயலாமையால் எழுந்த வருத்தத்தில், மீண்டும் தற்கொலையைப் பற்றிய எண்ணம் எழுந்தது.

 

அவன் ஏதோ சோகத்தில் ஆழ்ந்து, சரியாகச் சாப்பிடாது, எதிலும் பற்றில்லாமல் இருப்பதைக் கண்ட பள்ளி ஆசிரியை அங்கிருந்த கவுன்சிலரிடம் அனுப்பினாள்.

 

அவளிடமும் தனது தற்கொலை எண்ணத்தைப் பற்றிக் கூற, `உடனடியாக நீங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், உங்கள் மகன் நிச்சயம் தற்கொலை செய்துகொள்வான்!’ என்று அவனுடைய பெற்றோரை வரவழைத்துக் கூறினாள்.

 

முதலில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருந்துகள் சாப்பிட்டான். சிறுவர்களுக்கான உளவியல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

 

உனக்கு ஜப்பான் நாட்டுக்குத்தானே போகவேண்டும்? முதலில் இங்கிருக்கும் அந்நாட்டு உணவகம் ஒன்றில் வேலை தேடிக்கொள். மொழியைக் கற்றுக்கொள்வது முதல் படி,” என்று ஊக்கினாள் சிகிச்சையாளர்.

 

சில வருடங்களிலேயே அம்மொழியில் அவனுக்கிருந்த தேர்ச்சியைக் கண்டு மகிழ்ந்து, அங்கு போய்ப் படிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார் ஒருவர். உபகாரச் சம்பளமும் கிடைத்தது.

 

தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், பிறரது உதவியை நாட வேண்டும். அவர்களது வழிகாட்டலில் வாழ்வில் மீண்டும் பிடிப்பு ஏற்படும். முதலில் உங்கள் உணர்ச்சிகளையும், பிறகு மற்றவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்!

 

யாரிடம்தான் குறைகளில்லை? நமக்கும் ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியாதா, என்ன! நம்மால் என்னவெல்லாம் முடியாது என்று எண்ணி எண்ணிக் குமைவதைவிட, நாம் இருக்கிறபடியே ஏற்பதுதான் புத்திசாலித்தனம்,” என்று பலவாறாகப் பிறருக்கு அறிவுரை வழங்குகிறான் இப்போது.

 

இருக்கும் நிலை பிடிக்காவிட்டால், மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். அதை எப்படி மாற்றிக்கொள்வது என்று புரியாதபோதுதான் தற்கொலை எண்ணமே வருகிறது.

 

::கதை::

பதினைந்து வயதுக்குள், `மென்ஸா (MENSA) என்ற அகில உலகச் சங்கத்தில் இணைய முடிந்தது சுனந்தாவால். `மகா புத்திசாலி’ என்று வீட்டிலும் பள்ளியிலும் கொண்டாடப்பட்டாள்.

 

எந்தக் காரியத்தைக் கொடுத்தாலும், கண்ணும் கருத்துமாகச் செய்வாள் என்பதால் ஆசிரியைகள் அனைவருக்கும் செல்லப்பெண். ஒவ்வொருவரும் தாம் செய்யவேண்டியவற்றுக்கு, சுனந்தாவின் உதவியை நாடினார்கள். அவளுடைய செல்வாக்கு கூடியது. அதற்காக அவள் கர்வப்படவில்லை. எல்லாரிடமும் அன்பு செலுத்தினாள்.

 

ஈராண்டுகள் கழித்து, அரசாங்கப் பரீட்சை வந்தது.

 

உனக்கென்னம்மா! படிக்காமலேயே தேர்ச்சி பெற்றுவிடுவாய்!” என்று உடன் படித்த மாணவிகள் வயிற்றெரிச்சல் பட்டார்கள்.

 

முடிவு வந்தபோது, எல்லாரும் எதிர்பார்த்தபடி உயர்ந்ததாக இருக்கவில்லை.

 

எல்லாருடைய வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டாயே! இப்போது பார்!” என்று கண்டபடி திட்டினார் தந்தை.

 

புகழ்ச்சியையும் பாராட்டையுமே அனுபவித்திருந்தவளுக்கு இகழ்ச்சியைப் பொறுக்க முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வந்தது.

 

ஒரு பிளேடை எடுத்துக்கொண்டு, கழிப்பறைக்குப் போனவளின் மனம் மாறியது. வெளியில் வந்து கதறினாள்.

 

இது உலகின் முடிவு இல்லை. இன்னும் சில வருடங்கள் போனால், இதற்கா அவ்வளவு வருத்தப்பட்டோம் என்று தோன்றிவிடும்,” என்று தாய் நம்பிக்கை அளித்தாள்.

 

மன உறுதி ஏற்பட, சுனந்தா சமாதானம் அடைந்தாள்.

 

ஒவ்வொரு நாளையும் சற்று நிம்மதியாக, மகிழ்ச்சியுடன் கழிக்கப் பழகிக்கொண்டாள். உயிர் வாழ்வதற்குத் துணிச்சல் வேண்டும் என்று புரிந்தது.

 

சில வருடங்களிலேயே பெரும் புகழ் பெற்று, பிறரது மதிப்புக்கும் ஆளானாள். இப்போது, தந்தை அவளைப் பற்றிப் பெருமையாக நண்பர்களிடம் பேசிக்கொண்டார்!

 

அவசரப்பட்டு, உயிரை மாய்த்துக்கொண்டிருந்தால் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக, பிறருக்கு உபயோகமாக அமைந்திருக்குமா?

 

::கதை::

சுப்புவுக்குப் பதினேழு வயதாக இருந்தபோது, தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவனுடைய தாயும், அவளுடைய குழந்தைகளும் நிராதரவாகப் போன துக்கம் பாட்டிக்கு.

 

எனக்கு இன்னொரு தோசை!” என்று விரும்பிக் கேட்ட சுப்புவைத் திட்டினாள் “அதான் அப்பாவை முழுங்கிட்டியே! தோசையை வேற முழுங்கணுமா?”

 

அதன்பின், பையன் காணாமல் போனான். சில தினங்கள் கழித்து, அவனுடைய சடலம் ரயில் தண்டவாளத்தில் கிடைத்தது.

 

பதின்ம வயதில், எந்த நிகழ்வுக்கும் அளவுக்கு மீறிய எதிர்வினை உண்டாகும். இது புரிந்து, பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும்.

 

கணவரை இழந்த சோகத்துடன், மகனையும் பறிகொடுத்த துக்கமும் சேர்ந்துகொண்டது, சுப்புவின் தாய்க்கு.

 

சில வருடங்களுக்கு முன், மலேசிய தினசரியில் தன் பரீட்சை முடிவைப் பார்த்துவிட்டு, தான் தேறவில்லையே என்ற வருத்தத்துடன், செடிகளுக்குத் தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து, தன்னைத் தானே மாய்த்துக்கொண்டாள் தோட்டக்காரர் ஒருவரின் மகள்.

 

இதில் சோகம் என்னவென்றால், அடுத்த நாளே, `பரீட்சை முடிவில் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது’ என்ற அறிக்கையுடன், அப்பெண் தேர்ச்சி பெற்றிருந்த செய்தி வெளிவந்தது.

 

ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் இந்த உலகிற்கு வந்திருக்கிறோம். அது என்னவென்று புரியுமுன் ஒருவர் தன்னைத்தானே மாய்த்துக்கொள்வது கொடுமை.

 

இளைஞன் (காதலியிடம்): நான் உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்.

 

காதலி புத்திசாலி. அவள் கூறியது: முட்டாள்! நீ செத்துவைத்து, என்னைக் குற்ற உணர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தி என்ன பயன்? எனக்காக வாழ்வேன் என்று சொல்!

::நிர்மலா ராகவன்- எழுத்தாளர்-/-சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment