உண்மைகளும், வரலாற்று சான்றுகளும்
இலங்கையின் பழங்குடியினர் எனக்கருதப்படும் வேடர் [வெத்தா எனும் வேடுவ
இனத்தவர்] சமூகத்தினர் இலங்கையின் பல பாகங்களில் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் ஆரியரின் வருகைக்கு முன்னரே இலங்கையின் ஆதிக்காலம் முதல் வசிப்பவர்கள்
என்றும், தென்னிந்திய
பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மை கொண்டவர்கள் என்றும் வரலாற்று சான்றுகள் உள்ளன.
இலங்கையின் வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள மற்றும் தமிழ்
இனத்தவருடன் கலந்து தன் அன்றாட வாழ்வியலை கடத்தி வருகின்றனர். மற்றும் நாட்டின்
பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு
இனங்களில் இவர்கள் இயக்கர் பழங்குடியினரின் மரபின் வழி வந்தவர்கள் என வரலாற்று
ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இவர்களை சிங்கள மொழியில் 'வெத்தா' என்று அழைக்கின்றனர்.
ஆனால் இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" Wanniyala-Aetto என்று
குறிப்பிட்டு கொள்கின்றனர். தங்கள் தெய்வங்களுக்கு காட்டில் கிடைக்கும் காய்கள், கனிகள், தூப வகைகள், தீபங்கள், பூக்கள் என்பவற்றை
பயன்படுத்தி வருகின்றனர். தமது பாரம்பரிய ஆயுதங்களான ஈட்டி, வில், அம்பு முதலியவற்றுக்கு
வழிபாடுகளின் போது மரியாதையை செலுத்தி வருகின்றனர். இவர்களின் சடங்குகளின் போது
மூதாதையர்களுக்கு முதல் மரியாதை செய்யப்பட்ட பின்னைரே தெய்வங்களை அழைத்து
வழிபடுகின்றனர். இவர்களின் நம்பிக்கையில் காகம் கரைதல், கிளி தலை கீழாக தொங்குதல், பறவைகள் ஒலியெழுப்புதல், தும்மல், நாய்கள் பதறி போய்
குரைத்தல், மனைவியின் பொட்டு
அழித்தல் போன்ற சம்பவங்கள் நிகழும் போது தாம் நினைத்தவைகள் நடைபெறாது என இவர்களால்
நம்பப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.
மகாவம்சம் குறிப்பிடுகின்ற விஜயனின் கதையும் மற்றும் விஜயனின் தம்பி சுமித்தவின் [Sumitta] இளையகுமாரன் பண்டு வாச தேவனின் [Panduwasa Dewa] கதையும் ஐதிகக் கதைகளாகவே தெரிகிறது. முதலாவதாக விஜயனின் தாய் தந்தையரின் பிறப்பும் மற்றும் பல நிகழ்வுகளும் எந்த காரணங்களையும் கொண்டு அறிவியல் ரீதியாக எவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இதைப்பற்றி முன்பே விரிவாக கூறிவிட்டோம். இரண்டாவதாக, பண்டுவாச தேவனைப் பற்றி பார்க்கும் பொழுது, பண்டு வாசதேவ இலங்கையின் முதலாவது அரச மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் முதலாவது அரச மரபைத் தோற்று வித்தவனும் முதல் அரசனுமான கலிங்க இளவரசன் விஜயனின் உடன் பிறந்தான் மகன் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. ஆனால் மகாவம்சத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட தீபவம்சம் இவனை பண்டுவாசன் [Paṇḍuvāsa] என்று குறிப்பிடுவதைக் கொண்டு இவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தான் என்றும் வரலாற்றறிஞர்கள் வாதிடுகின்றனர். உதாரணமாக, பாளி அல்லது பிராகிருதம் மொழியில் பண்டு என்பது பாண்டியனை குறிக்கிறது, வாச என்பது வாசி யின் திரிப்பாகும், எனவே பாண்டியவாசி என்றாகிறது, அதாவது பாண்டியன் ஆகிறது [Deepavamsa calls King Pandu Vasudeva (504-474 BC) as Pandu Vasa (a Pali or Prakrit equivalent of Pandya Vasa meaning one from the Pandyan country i.e., a Pandya by his nationality]. விஜயனின் மனைவி ஒரு பாண்டிய இளவரசி என்பதால், மேலும் இலங்கையை ஆள ஆட்சியாளர் இல்லை என்பதால், பண்டுவாசனை பாண்டியன் இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றனர். இது மேலும் ஒரு வலுவான காரணத்தால் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. உதாரணமாக, விஜயன் தனது பட்டத்து ராணியை, தான் பிறந்த கலிங்கத்தில் இருந்து, எதோ பல காரணங்களால் தேடவில்லை, அவன் தென் இந்தியாவில் அமைந்த பாண்டிய நாட்டிலேயே தேடினான். ஆகவே இப்ப அரச வாரிசை எப்படி கலிங்கத்தில், தன் அரச குடும்பத்தில் தேடுவான்? கொஞ்சம் நடு நிலையாக சிந்தியுங்கள். எந்த காரணத்திற்க்காக தனது பட்டத்து மனைவியை கலிங்கத்தில் எடுக்க வில்லையோ, அதே காரணம் இப்பவும் அவனுக்கு இருக்கும். எனவே கட்டாயம் தன் மனைவியின் பாண்டிய அரச குடும்பத்தில் இருந்தே எடுத்திருப்பான், இதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதனால் தான் பண்டுவாசனின் வாரிசுகள் கூட அபயன் [Abhaya /பயமில்லாதவன்], பண்டு அபயன் [காபயன்] [Pandukabhaya], மூத்த சிவன், மகா சிவன் இப்படியான பெயர்களை காண்கின்றோம்.
இலங்கைக்கு முன்னைய காலத்தில் பாண்டிய அரச நாடு இலகுவான தொடர்புடைய நாடாக
இருந்தது. உதாரணமாக,
வைகை நதியினூடாக வந்தால் , அது மன்னாரை அடைகிறது.
மன்னாரில் இருந்து அருவி ஆறு (Malwattu Oya) மூலம் பயணித்தால் அனுராதபுரம் அடையலாம். எனவே
பாண்டிய நாட்டுடன் நல்ல நட்பு தொடர்பு இருந்ததிற்கு இதுவே காரணம். இதனால், பாண்டிய நாட்டின்
எதிரியான சோழ நாடு அனுராதபுர அரசர்களுக்கும் எதிரியாகவே இருந்தது எனலாம்.
அதுவே மஹாநாம தேரர் சோழருக்கு எதிரான
வெறுப்பு மனப்பான்மைக்கு [to be Chola phobic] ஒரு காரணமாகும் என்று
நம்புகிறேன்.
மற்றது மகாவம்சத்தில் காணப்படும்
தமிழருக்கு எதிரான இனத்துவேசத்திற்கு முக்கிய காரணியாக விளங்கியவர்,
கி.பி 5 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து
இலங்கைக்கு வந்த பௌத்த ஞானியான, காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த
புத்தகோசர் [the
great commentator Buddhaghosa] ஆவார். இளமையில் இவர் வடமொழி வேதங்களை நன்கு
கற்று பிறகு பௌத்த மதத்திற்கு மாறியதால், பாளி மொழியில் நன்கு புலமையும் பெற்றிருந்தார்.
இலங்கையை மகாநாமன் (கி.பி.409-431) ஆட்சி புரிந்த காலப் பகுதியில் அநுராதபுரம் மகா
விகாரையில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்த புத்தகோசர் “விசுத்தி மார்க்கம்” என்ற
பௌத்தமத நூலை பாளி மொழியில் இயற்றினார். மேலும் இலங்கையில் இருந்த பல பௌத்த
நூல்களை இவர் பாளி மொழியில் மொழிபெயர்த்தபின், அந்த மூலப்பிரதிகளை
எரித்துவிட்டார். காரணம் இவரின் அசல் மொழி கருத்து எண்ணம் ஆகும் [He burnt the originals after
translating into Pali, introducing the Mula Bhasha [मूल भाषा {mul bhaSha} = ORIGINAL LANGUAGE]
concept.]. இதுவே மஹாநாம வுக்கு கொடுத்த உத்வேகமாக இருக்கலாம்?
மகாபாரதத்தில் விதுர நீதி என்ற ஒரு பகுதி உள்ளது.அது " நீ எப்பவும் உண்மை
சொல்ல வேண்டும், ஆனால் சொல்லும்
உண்மை தீங்கு விளைவிக்கும் என்றால், அதை சொல்லாதே, பொய் உதவும் என்றால், பொய்யை உண்மை போல்
சொல்லிவிடு" என்கிறது. [There is a verse in Mahabharata.YOU SHOULD ALWAYS TELL THE
TRUTH.IF TELLING TRUTH WOULD HARM THE PEOPLE THEN DON’T TELL THAT.IF TELLING A
LIE WILL HELP PEOPLE THEN TELL THAT LIE AS A TRUTH.That is from Vidura niti of
Mahabharata]. இதைத்தான் மகாவம்சத்தின் ஆசிரியர் தம் இனத்திற்கு என்றும்
வரலாறு சாதகமாக இருக்க வேண்டும் என்பதால் மாற்றி சொல்லி இருப்பார் என்றும்
எண்ணுகிறேன். உதாரணமாக இன்று குருந்தூர் மலை விடயத்தை எடுத்துக்கொண்டால், அங்கு காணப்படும் பௌத்த எச்சங்கள், அன்று வாழ்ந்த தமிழ்
பௌத்தர்களினதாக இருந்தும், அதை சிங்களவர்கள் வாழ்ந்த
இடமாக வரலாற்றை மாற்ற முற்படுவதுடன், மற்றும் சிங்கள மக்கள் வசிக்காத ஒரு இடத்தில்
பௌத்தம் சார்ந்த ஒரு அழிபாடுகள் கண்டுபிடிக்கப்படுமானால் அவற்றை மீளக்கட்டி
வழிபாட்டுக்குரியதாக அமைப்பதை ஏற்பதாக தொல்லியல் சட்டம் கூறவில்லை என்பதையும்
மறந்து, நீதிமன்ற
உத்தரவையும் மீறி,
பௌத்த பிக்குகளும், அரசாங்கமும் பௌத்த விகாரை ஒன்று அங்கு
கட்டப்பட்டு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட இருப்பது தெளிவாக அவர்களின்
நோக்கத்தையும் மனநிலையையும் காட்டுகிறது. அதுமட்டும் அல்ல, அநுராதபுரத்தில் 20 க்கும் மேற்பட்ட இந்து
ஆலயங்களின் அழிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் சைவ ஆலயங்கள், திராவிட கலை மரபில்
கட்டப்பட்டவை. அந்த ஆலயங்களின் அழிபாடுகள் தேசிய மரபுரிமைச் சின்னங்களாகக்
கருத்திற்கொண்டு பார்க்கப்பட்டதே தவிர, அவை மீள அமைக்கப்பட்டு வழிபாட்டுக்குரிய ஆலயங்களாக
அமைக்கப்படவில்லை. அவற்றில் ஒரு காளிகோவிலைத் தவிர ஏனையவை எங்கிருந்தன என்பது கூட
அடையாளங்காண முடியாதளவுக்கு அதனுடைய நிலைமை காணப்படுகின்றது என்பது கவலைக்குரிய
விடயமே!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி: 37 வாசிக்க அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும்,…(பகுதி 37):
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 👉
Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:
0 comments:
Post a Comment