மகாவம்சத்தில் புதைந்துள்ள…. (பகுதி 34)

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

 


யாழ்ப்பாண அரசைப்பற்றிய அரிய தகவல் ஒன்றை 8ஆம் நூற்றாண்டு அரபுப் பயணி அல் மசுடி/ மாசுடி [கி பி 896–956] என்பவர் தன் பயணக் குறிப்பில் எமக்கு தருகிறார். இவர் யாழ்ப்பாண துறைமுகத்தை கி பி 912 இல் அடைந்து, அங்கு தாம் கண்டதை விபரிக்கிறார்.[Al-Masudi, the great Mohammedan traveler, reached the Port of Jaffna in 912 A D] அவர் அங்கு ஒரு சைவ [இந்து] அரசனின் இறுதி சடங்கு ஒன்று பார்த்ததாகவும், அங்கு அரசனின் இறந்த உடல் உயரம் குறைந்த ஒரு தேர் மீது வைக்கப்பட்டு, அது வீதியால் இழுக்கப் பட்டது. அப்பொழுது ஒரு பெண் தரையை பெருக்கி, இறந்த ராஜாவின் தலை முடிக்கு தூசி வீசி எறிந்தாள், அத்துடன் அங்கு கூடி இருந்தவர்கள் வாழ்க்கையின் பயனற்ற தன்மையை உணர்ச்சி பொங்கக் கூக்குரலிட்டதுடன், கடவுளை வணங்கி புகழ்ந்து பாடினார்கள் என்றும், உடல் இறுதி சடங்கில் சிதையில் வைக்கும் முன்பு, உடல் முழுவதும் சந்தனம் பூசி, அரசனின் உடல் நாலு பகுதிகளாக வாளால் வெட்டப்பட்டது என்றும் பதிவு செய்து உள்ளார். [Masudi states that the King was placed on a low chariot and while it was being drawn, a woman swept the ground and threw dust on the hair of the dead king, exclaiming the futility of life and extolling the worship of God. Before the body was put on the funeral pyre, it was smeared with sandalwood and cut into four pieces with a sword].

 

இறந்தவர்களுக்காக வருந்தி பாடும் பாடலே ஒப்பாரி ஆகும். மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும்  ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகிறது எனலாம். இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறியவும் இது உதவுகிறது. இந்த ஒப்பாரிப்பாடலை, “கையறு நிலை “ என்று சங்க இலக்கியங்கள் கூறுவதையும் காணலாம். உதாரணமாக,

 


வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின்

  கற்றோர் உரைப்பது கையறு நிலையே “

 

என சிற்றிலக்கியமான [சிறு பிரபந்தம்], பன்னிரு பாட்டியல் கூறுகிறது. அப்படி யாழ்ப்பாண அரசன் ஒருவன் விண்ணகம் அடைந்த நிகழ்வையே இங்கு அல் மசுடி விவரிப்பதை காண்கிறோம். 

 

போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர், செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லை (தருப்பையைப்) பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்கு செல்க” என வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் என புறநானுறு 93, மிக விரிவாக தமிழரின், குறிப்பாக தமிழ் மன்னர்களின் அன்றைய பண்பாட்டை எடுத்து கூறுகிறது.

 

"அவர் தீது மருங்கு அறுமார்,

அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர்

திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி,

மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த

நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க” என 

வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ,"

[புறநானுறு 93]

 

இதைத் தான் அல் மசுடி கண்டார் என்பதை நாம் இலகுவாக ஊகிக்கலாம், மற்றது அவர் தலைமுடிக்கு தூசி வீசி எறிந்தனர் என்பது கட்டாயம் திருநீறை குறித்து இருக்கலாம்?அப்படியே, கூக்குரலிட்டனர் என்பது ஒப்பாரிப்பாட்டாக இருக்கலாம் ? அது இன்னும் தொடரும் தமிழர் பண்பாடாகும். எனவே இது கட்டாயம் ஒரு தமிழ் சைவ அரசன் என்பது மிகவும் தெளிவாகிறது. அத்துடன் எட்டாம் நூற்றாண்டிலும் யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆட்சி நடந்தது என்பது வரலாற்று சான்றாக இங்கு சாட்சிகளுடன் பதியப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 35 வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள…. (பகுதி 35):

ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

No comments:

Post a Comment