தமிழரின் ஆதி மதம் என கூறப்படும் சைவ மதத்தை எடுத்துக் கொண்டால், அது இந்து
மதத்திற்குள் உள் வாங்கப் பட்டிருப்பதாலும், அங்கு இன்று பல
வகையான விரதங்களை காணக்கூடியதாக உள்ளன. சிவ விரதம் பிடித்தலை திருமந்திரம் 557 இல்
சுட்டிக்காட்டி,
"தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே."
தவம், செபம், சந்தோஷம், தெய்வ நம்பிக்கை, அடுத்தவர்க்குக்
கொடுத்து உதவுவது, சிவ விரதம், சித்தாந்த அறிவு, யாகம், சிவபூஜை, தூய்மையான
தெளிந்த ஞானம் ஆகிய பத்தும் உயர்வு தரும். இவற்றைக் கடைப்பிடித்து வாழ்பவனே
உண்மையான ஆன்மிகவாதி என்று கூறுகிறார் திருமூலர்.
விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக
அனுஷ்டிக்க வேண்டும் என்று ஒரு நீண்ட பட்டியலையும் இந்து மதம் தருகிறது. உதாரணமாக, சிவபெருமானைக்
குறித்து அனுஷ்டிக்கப்படும் கார்த்திகை
மாத திங்கள் கிழமைகளில் கடைப் பிடிக்கப்படும் சோமவார விரதம், தேய்பிறை, வளர்பிறை
திரயோதசி திதிகளில் [அமாவாசை நாளையும், பூரணை நாளையும்
அடுத்து வரும் பதின் மூன்றாவது திதிகளில்] சிவபெருமான், நந்திதேவரின்
அருள் வேண்டி கடைபிடிக்கப்படும் பிரதோஷ விரதம், மற்றும் மறைந்த
முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை அடைய சித்ரா பவுர்ணமி விரதம், முன்னோர்களுக்கு முக்தி
கிடைக்கவும், குடும்பமும் அபிவிருத்தி
அடையவும் தை அமாவாசை விரதம், அப்படியே
கந்தசஷ்டி விரதம், தைப்பூச விரதம், நவராத்திரி
விரதம் என நீள்கின்றன.
பிறந்த சாதக அமைப்பில் அல்லது கட்டத்தில், 2, 4, 7, 8, 12 ஆகிய
இடங்களில் சூரியன், செய்வாய், சனி, ராகு மாற்று கேது
போன்ற கோள்கள் இருந்தால் அவை தோஷத்தை அல்லது பாவத்தை ஏற்படுத்தும் என் நம்பப்
படுகிறது. எனினும் இதற்கும் தோஷ விலக்குகளும் உண்டு. உதாரணமாக, ஒரு திருமண
பொருத்தத்தை கருத்தில் எடுத்தால், ஆணின் தோஷம்
பெண்ணை விட கூடுதலாக அல்லது சமனாக இருந்தால் திருமணம் செய்யலாம். இங்கு மீண்டும்
ஆணாதிக்கத்தை பார்க்கிறோம் ?
இருவரின் சாதகமும் தோஷம் இல்லை என்றால் அது உண்மையில் சரியான முறையாகும்.
மற்றும் சம தோஷம் சாதகம் தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாக சொல்லப்படுகிறது. உதாரணமாக
செய்வாய் தோஷம் உள்ள சாதகம் இன்னும் ஒரு
செய்வாய் தோஷ சாதகத்துடன் தான் பொருத்தம் செய்யவேண்டும். இது முதலாவது விதி. மற்றது ஒருவருக்கு புத்திர
தோஷம் உள்ளது என்றால், இன்னுமொரு
புத்திர தோஷம் உள்ள சாதகத்துடன் கட்டாயம் பொருத்தம் பார்க்க கூடாது. ஏன் என்றால், அது மகா புத்திர
தோஷத்தை ஏற்படுத்தும் . இது இரண்டாவது விதியாகும்.
புத்திர தோஷம் என்பது, குழந்தை
பிறப்பதற்கு தடை அல்லது திடீர்
கருக்கலைப்பு அல்லது மலட்டுத் தன்மை போன்றவற்றை ஏற்படுத்துவது ஆகும். எனவே
இப்படியான தோஷத்தை கொண்ட ஒருவரது சாதகத்துக்கு, அவரை திருமணம்
செய்ய இருக்கும் மற்றவரது சாதகம், அதை
சரிபடுத்துவதற்கு, வலுத்த புத்திர யோகம்
கொண்டதாக கட்டாயம் இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப் படுகிறது. அப்ப தான் ஒரு சில
பரிகார தோஷ நிவர்த்தி கொண்டு, தோஷத்தை விலத்தி, புத்திர
பாக்கியத்தை ஏற்படுத்தலாம் என கருதப் படுகிறது.
இந்து தொன்மவியலில் [Hindu mythology] கூறப்படும் நவக்கிரகங்களில்
செவ்வாய் கிரகத்தின் அதிபதியான அங்காரகன் மூலம் ஏற்படும் செவ்வாய் தோஷம். ராகு, கேது மூலம்
உண்டாகும் சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம்.
எட்டாம் இடத்து கிரகங்களால் உண்டாகும் மாங்கல்ய தோஷம். களத்திர காரகன் சுக்கிரனால்
ஏற்படும் களத்திர தோஷம். தனித்த குருவினால் உண்டாகும் இல்லற தோஷம். ஏழாம் இடத்து
கிரகங்களால் ஏற்படும் பாபகத்ரி நீச்ச தோஷம். சூரிய தோஷம். விஷக் கன்யா தோஷம்.
சந்திரன், சனி மூலம் உண்டாகும்
புனர்பூ தோஷம். மேலும் 6, 8, 12 க்
கிடையே கிரகங்களின் மூலம் ஏற்படும்
தோஷங்கள் என பல வகையான கிரக தோஷங்கள் இருப்பதாக நம்புகிறார்கள். தோஷங்களில் மிகப் பிரபலமாக உள்ளது ராகு, கேது எனப்படும்
சர்ப்ப தோஷமும், செவ்வாய் தோஷமும் மட்டும்
தான். இந்த செவ்வாய் தோஷம். சமூகத்தில் ஒரு வித அச்சத்துடன் பார்க்கப்படுகிறது.
மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய் உடலில் ரத்த ஓட்டத்திற்கு காரணகர்த்தா.
உடலில் வெப்பத்தை தரக் கூடியவர், உஷ்ண தேகவாகு
[உடல்] உள்ளவர்கள். செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்திருப்பார்கள். ஒரு ஆண் மகனின்
ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் தான் தன்னம்பிக்கை, திட தைரிய
வீரியம், ஊக்கம். ஆண்மை போன்ற லட்சணங்கள் இருக்கும். பெண்களின்
ஜாதகத்தில் செவ்வாய் முக்கிய பங்கு வகிக்கிறார். பெண்கள் பூப்படைவது செவ்வாயின்
அருளினால் தான். மாதவிடாய் சரியான சுழற்சி முறையில் வருவதற்கு செவ்வாயும், சந்திரனும்
காரணமாக இருக்கிறார்கள். ஆசை, காமம், சம்போகம்
[புணர்ச்சி, உடலுறவு], உறவில் இன்பம், உள்ளக் கிளர்ச்சி, பாலுணர்வு
ஆகியவற்றை தூண்டக் கூடியவர் செவ்வாய். செவ்வாயின் இந்த ஆதிக்கத்தை கணக்கில்
எடுத்துக் கொண்டு தான் தோஷம் என்ற பெயரில் ஆண், பெண் ஜாதகங்களை
பொருத்தம் பார்த்து சூட்சுமமாக சேர்த்தார்கள். இல்லறம் என்ற திருமண பந்தத்தில் ஆண், பெண் உடல் உறவு
சேர்க்கையே முக்கிய அம்சமாகும். இதன் வழியாகத்தான் வம்சம் விருத்தியாகிறது இதற்கான
வீரியத்தையும், ஆற்றலையும் தரக்கூடியவர்
செவ்வாய் அதன் காரணமாக உள்ளமும், உடலும் சாந்தி
அடைகின்றது. ஆகையால் தான் ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய்க்கு மிகுந்த
முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இத்தகைய வீரியம் மிக்க செவ்வாய்
ஜாதகங்களில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய
இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று சொல்கிறோம். இதற்கேற்ப ஆண், பெண் இரு
ஜாதகங்களிலும் 2, 4, 7, 8,12 ஆகிய
இடங்களில் இருக்கும் ஜாதகங்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் தோஷம் சமன் அடைகிறது.
தோஷம் என்பது ஒரு சமஸ்கிருத சொல். இது
குற்றம் அல்லது பாவம் அல்லது குறை என பொருள்படும். உலக வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய
வாழ்க்கையும் ஒவ்வொருவிதமாக அமைகின்றது. ஒரு சிலருக்கு வெற்றித் திருமகள்
தேடிவந்து மாலை அணிவிக்கிறாள். ஒரு சிலருக்கு என்ன உழைத்தாலும், அதற்கு உரிய
பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாகும்
என்கிறார்கள்.
ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் வகைகள் : 1.செவ்வாய் தோஷம். 2.பித்ரு தோஷம்.
3.புத்திர தோஷம். 4.மாங்கல்ய தோஷம். 5.சர்ப்ப தோஷம். 6.களத்திர தோஷம். 7.பிரம்மஹத்தி
தோஷம். 8.நாக தோஷம்.9.இராகு-கேது தோஷம்.
10 நவக்கிரக தோஷம், 11 சகட தோஷம்
ஆகும்.
தோஷங்களுக்கு பரிகாரம் கூறப்பட்டாலும், பலர் அதன்படி
வழிபாடு, பரிகாரம் செய்தாலும், அவரின்
துன்பங்கள் நீங்காமல், அதற்கான பலன்கள்
கிடைக்காமல் போவதை பலநேரம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கும் சோதிடர்கள்
பதில் தயாராக வைத்திருக்கிறார்கள். அதாவது நாம் பரிகாரம் செய்வதற்கு முன் எந்த
கர்மவினை [வினைப்பயன்] நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டு நாம் அதற்கேற்றாற்
போல பரிகாரங்கள் செய்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும் என்பது ஜோதிடர்களின்
அறிவுரையாக இருக்கிறது. உதாரணமாக, குறைந்தபட்சம்
ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் செய்வதும், அதன் மூலம்
அவர்களின் வாழ்த்து கிடைத்து, அதனால் அடுத்த
தலைமுறையினருக்காவது அந்த பாவம் தொடராமல் இருக்க ஓரளவு வழிசமைக்கலாம்
என்கின்றனர். இங்கு தான் அவர்களின் கெட்டித்தனம்
வெளிப்படுகிறது. உங்களிடம் ஏமாளித்தனம், அதாவது எதையும்
எளிதில் நம்புகிற குணம் இருக்கும் வரை, அவர்களின்
பயணமும் வியாபாரமும் என்றும் தொடரும் !
[தோஷமும் விரதமும் பிராமண இந்து சமயம் பெரும்பாலும் புகுத்தியதால், இங்கு பல சோதிடர்கள் கையாளும் சமஸ்கிரத சொற்கள், அப்படியே இந்த கட்டுரையில் உள்வாங்கப் பட்டுள்ளன]
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
முற்றிற்று
No comments:
Post a Comment