(சர்க்கரை
நோய் / டயாபடீஸ்)
“ டயாபடீஸ்” என்பதற்கு
தமிழில், சித்த
மருத்துவத்தில், ஆயுர்வேதத்தில்
பல பெயர்கள் காணப்படுகின்றன, தமிழில் இதை நீரிழிவு [நீீர்+அழிவு (diabetes)] என அழைத்தாலும்
சித்த மருத்துவத்தில் சலக்கழிச்சல் [பரராஜசேகரத்திலும்] என்றும், ஆயுர்வேதத்தில் மதுமேகம்
[வாதஜபிரமேகத்திலும்] என்றும் அழைக்கப் படுவதுடன், சித்த மருத்துவத்தின்
ஆரம்பகாலத்திலேயே இதைப் பற்றி பாடல்களாக கூறப்பட்டுள்ளன. இந்த பாடல்களில் இது
மேலும் மேகநீர், இனிப்பு நீர், நீரினைப் பெருக்கல்
நோய்கள், சலரோகம், மிகுநீர், வெகுமூத்திரம், பிரமேகம், தித்திப்புநீர், நீர்ப்பாடு என கூறப்படுள்ளதும்
குறிப்பிடத் தக்கது. தேரையர் சித்தரின் ஒரு பாடலில் "நீரிழிவின் குணத்தை
நீயறிய விரித்து சொல்வோம், நீரினை பெருக்கல் ஒன்று, நீரினை மறுக்கள் ஒன்று, நீரிழிவுடனே கொல்லும்
நீர்ச் சொட்டு வினைகள் ஒன்று" என கூறி இருப்பதை கவனிக்க
உதாரணமாக, சித்த
மருத்துவத்தில் நோயின் பத்து அவதிகளாக அல்லது வேதனைகளாக, மெலிய வைப்பதில் இருந்து
முதுகில் ஏற்படும் ‘நச்சுப்பரு’ (carbuncle / கார்பங்கிள்) கட்டிகள்வரை அடையாளமும்
காட்டியுள்ளனர். கடைசியாக குணப்படுத்தப்படாத மேகநோயின் முடிவில், மெல்ல உடலை இளைத்துக்
கொல்லும் என்றும் அது கூறுகிறது. ஏன் இந்த நோய் வருகிறது என்பதற்கு பல பாடல்களை
அங்கு காண முடிகிறது. உதாரணமாக, ‘
"கோதையர்
கலவி போதை:
கொழுத்த மீனிறைச்சி போதை,
பாதுவாய் நெய்யும் பாலும்
பரிவுடன் உண் பீராகில் ... "
அதாவது, பெண்போகம், பெரிய மீன், இறைச்சி, மற்றும் நெய், பால் அதிகம் உண்ணுதல்
போன்றவை எனக் காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறது.
"மாதர்
மயக்க மிகுதியினான்
மதியி லச்ச மிகுதலினால்
போதை தருங்கள் ளருந்துதலாற்
புலான் மீனிறைச்சி நெய்ப்பாலால்
சீத வுணவாற் பதனழிந்த
தீனை
விரும்பித் தின்பதால் ... "
என்று இன்னும் ஒரு பாடல் கலவி, பயம், கள் அருந்துதல், புலால், மீன், நெய். இறைச்சி, பால், சீத உணவு [எல்லா
பொருட்களும் உஷ்ணம் (சூடு) அல்லது சீதம் (குளிர்ச்சி) என்ற இரண்டில் ஏதாவது ஒரு
வீரியம் உடையதாக இருக்கும்], பதனழிந்த [அழுகிய] உணவு உண்ணல், உறக்கமின்மை, போகம் [புலன்களால்
அடையும் இன்பம்: Enjoyment
of eight kinds. See அஷ்டபோகம்], தேக வருத்தம், வெயிலில் மிகு நடை, போன்றவற்றால் மேகநோய்
வருமென கூறுகிறது.
"மேகமெனு
நீரிழிவு வரும் விதத்தை
விளம்புகிறேன் முன்செய்த கன்மந்தன்னாற்
றாகமுடன் மதுரபதார்த்தங்கள் நன்றாய்த்
தான் புசிக்கையாலு சித்தனத்தின் மங்கை
போக மதிகையாலு முட்டணந்தான்
போதமிஞ்சுகையினாலுந்தயிர் , மோர்
, நெய்
, பால்
,
வேகமாய்ப் புசிக்கையாலுங் கொழுத்திறைச்சி
யென்று முண்கையாலுவர் நீருண்கையாலே"
என்று இந்த பாடலும் நீரிழிவு உண்டாகும் காரணத்தை விளக்குகிறது. அதாவது, முன் செய்த கன்மம் அதாவது, முன்வினைப்பயன் இதனைப்
பரம்பரையென்றும் நாம் கருதலாம், அதிக தாகத்துடன் இனிப்பான பானங்கள் அருந்துதல்.
இனிப்பான பதார்த்தங்கள் புசித்தல். போகம் மிதமிஞ்சுதல், தயிர், மோர், நெய், பால் என்பவற்றை வேகமாய்ப்
புசித்தல். இறைச்சி உண்பதாலும், உவர்நீர் உண்ணல், வழுதிலங்காய்
(கத்தரிக்காய் / 'அரிசி
சமைச்சிருக்கு ஆட்டிறைச்சி ஆக்கிருக்கு வடிவாய்ப் பொரிச்சிருக்கு வழுதிலங்காய்
சுண்டிருக்கு' - மட்டக்களப்பு
நாட்டுப்பாடல்) அதிகமாய்ப் புசித்தல். காலந்தவறி உணவு உண்ணல். நடை அலைச்சல், போதைப் பொருள் உண்ணல், அதிகமாய்க் கண்விழித்தல், இருகையால் நீருண்ணல், அதிகமான சூடு உடலில்
ஏற்பட்டாலும் நீரிழிவு வந்து தொல்லை தரும்
என்கிறது.
மேலே கூறிய சித்த மருத்துவ காரணங்கள் எல்லாம் சரியென இன்று நாம் ஒத்துக்கொள்ள
முடியாவிட்டாலும்,
பல காரணங்கள் ஒத்துப்போகக் கூடியவையாகவும் இருக்கின்றன.
உண்மையில் நீரிழிவு என்பது கணையம் (பாங்க்
ரியாஸ் / Pancreas
: சதையி அல்லது சதையம் என்பது மாந்தரின் உடலில் வயிற்றுப்
பகுதியில் இரைப்பைக்குச் சற்று கீழே இருக்கும் ஓர் உறுப்பு ஆகும். தென்னிலங்கையில்
இது பல்குத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது காரட், முள்ளங்கி போல்
உருவத்துடன், சுமார் 20-25 செ. மீ நீளம் உடைய ஓர்
உறுப்பு ஆகும்) என்ற உறுப்பு அதன் சுரப்பு நீரான இன்சுலினைச் சுரக்காதலால்,
இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதால்,
அளவுக்கதிகமான குளுக்கோஸ் சிறுநீரில் கலந்து வெளியாகிறது.
இதுவே “ டயாபடீஸ்” என்னும் நீரிழிவு நோயாகும் என இன்று கூறப்படுகிறது. இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்தால்
உடலின் உள்ளுறுப் புக்களான இருதயம் இரத்தக்குழாய்கள், நரம்பு,
சிறுநீரகங்கள், கல்லீரல் போன்ற உறுப்புக்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும்.
கடைசியில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடியது ஆகும்.
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி: 02 தொடரும்
No comments:
Post a Comment