மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கவும் உடலை கட்டுப்படுத்தவும் உண்மையில் உதவும் விரதம் அல்லது நோன்பு அல்லது உபவாசம் என்ற சடங்கை, பொதுவாக எல்லா சமயங்களும் இறைவனை வேண்டி, தாம் நினைத்த காரியங்கள் சரிவர செய்யும் ஒரு சடங்காக மக்களுக்கு அறிமுகப் படுத்துகிறது. விரதம் என்பது உண்ணாமல் இருத்தல் அல்லது உணவை குறைத்தல் என்று பொருள் கொள்ளலாம். இங்கு புலன்களின் அடக்கம் மிக முக்கியமாகிறது. அல்லாவிட்டால் விரதம் முழுமையாக நிறைவேறாமல் போய் விடலாம். இங்கு புலனடக்கம் என்று கூறும் பொழுது மன அடக்கம் மிக முக்கியமாகிறது. அந்த மன அடக்கம் தனிய உணவின் மேல் எழும் ஆசையை, தூண்டலை அடக்குவது அல்ல, மனதை ஒரு நிலை படுத்தி பக்குவப் படுத்துவதையும் கூறலாம். இதனால் தான் இது அந்த காலத்தில் மதத்துடன் இணைத்து இருக்கலாம்? மதம் என்பது அன்று திக்கு திசை இல்லாமல், ஆடு மாடு போல நாகரிகம் அடையாமல் திரிந்த மனிதர்களை ஒரு வழி படுத்தி, ஒரு ஒழுங்கை நிலை நாட்ட ஏற்படுத்திய ஒன்றாகும்.
என்றாலும் காலப்போக்கில் அது தன் முதன்மை நோக்கை இழந்து பல மதங்களாக
பரிணமித்து, ஒவ்வொரு மதமும்
தன் இருப்பை வைத்துக்கொள்ள போட்டிகளிலும், வியாபாரங்களிலும் ஈடுபட்டன. ஆகவே இன்று
விரதங்களின் விளக்கம் மதத்துக்கு மதம் வேறுபடுகின்றன எனலாம். மேலும் மனிதனின்
பலவீனத்தை தனக்கு சாதகமாக மாற்ற விரதத்தை ஒரு ஆயுதமாகவும் மத குருமார்கள் பாவிக்க
தொடங்கினார்கள். உதாரணமாக தோஷம் மற்றும்
பரிகாரம் என்ற ஒன்றை ஏற்படுத்தி, ஒவ்வொரு தோஷத்துக்கும் அல்லது குற்றத்துக்கும்
விரதத்துடன் சேர்ந்த ஒவ்வொரு பரிகாரத்தையும் எடுத்துக் கூறி தம் இருப்பையும்
வியாபாரத்தையும் அதன் மூலம் வலுப்படுத்தி
கொண்டார்கள் என்று கூறலாம்.
ஆறுமுகநாவலர் விரதம் என்பது,
"மனம்
பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு,
உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம்
என்னும் மூன்றினாலும்
கடவுளை மெய்யன்போடு விதிப்படி வழிபடுதல் விரதமாகும்"
என்கிறர். இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில் நீதிவெண்பாவில்
"ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை
உண்பான் போகி
மூவேளை
உண்பான் ரோகி
நான்குவேளை
உண்பான் பாவி"
என்று கூறி இருப்பதும் கவனிக்கத்தக்கது. விரதம் இருப்பது மத நம்பிக்கை என
கருத்துக்கள் இருந்தாலும், விரதத்திற்கு பின்னால் இருப்பது உண்மையில் மிகப்பெரிய
விஞ்ஞானம் என்பதை இந்த பாடல் மூலம் அறியமுடிகிறது. அத்துடன் 'அன்னத்தை அடக்கியவன் ஐந்தை (கண், காது, மூக்கு, வாய், உடல்) யும்
அடக்குவான்' என்பார்கள்
பொதுவாக. நமது வயிறு ஒரு குறிப்பிட்ட
இடைவெளிக்கு ஒருக்கா, ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். இதனை
யொட்டித்தான் எல்லா மதங்களுமே விரத்தை கடைபிடிக்கின்றன எனலாம். விரதமிருப்பதால்
வயிறு சுத்தமாகிறது. ஜீரண உறுப்புகள் சீராகிறது. இது ஒரு ஆரோக்கியமான வழி முறை
ஆகும். உதாரணமாக, இயேசு கிறிஸ்து
சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து, உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் திருநாளாகக்
கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் விரதம்
மேற்கொள்வர். அதேபோல, ரம்ஜான் மாதத்தில் 30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு
கடமையாக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில் அமாவாசை, பெளர்ணமி எனவும்
மற்றும் பல வகையான விரதங்கள் ஒவ்வொரு மாதமும் காணப்படுகின்றன.
விரதத்தை இரண்டு முக்கிய வகையாகவும் பிரிகிறார்கள். ஒன்று எதிர் பார்ப்புடன்
கடைபிடிப்பது. மற்றது எதிர் பார்ப்பு இன்றி கடைப்பிடிப்பது. உதாரணமாக தோஷ
பரிகாரமாக செய்வது முதல் வகையாகும். குறிப்பிட்ட தோஷத்திற்கான பரிகாரத்துடன் கூடிய
விரதங்களை தவிர, வாரத்தின் ஏழு
நாட்களுக்கும் கூட விரதம் உண்டு. உதாரணமாக, திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின்
முழுமையான அன்பையும், செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு
நீக்கவும், புதன் கிழமை
விரதம் இருப்பதன் மூலம் நோய் தீரவும், வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர
பாக்கியம் பெறவும்,
வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப்
பெறவும், சனிக்கிழமை
விரதம் இருப்பதன் மூலம் செல்வம் பெருகவும், ஞாயிற்றுக்கிழமை
விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறவும் அல்லது நோய்
வராமல் தடுக்கவும் முடியும் என்கிறது இந்து மதம். மேலும் ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும்
வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும்
என்றும் கூறுகிறது.
இந்த விரதங்களில் ஒன்றை கவனித்தீர்களா ?, மனைவியின் நீண்ட ஆயுளை வேண்டியோ அல்லது
மனைவியின் முழு அன்பை வேண்டியோ ஒரு விரதமும் இல்லை. இது என்னத்தை காட்டுகிறது ?
விரதங்கள் எல்லாவற்றிற்கும் விதி முறைகளும் உண்டு. உதாரணமாக, விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும். அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று என்கிறது. மேலும் ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகளும் உண்டு. மாதவிலக்கான பெண்கள், குழந்தை அண்மையில் பெற்ற பெண்கள், அண்மையில் குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பத்தினர் போன்றோர் விரதம் கடைபிடிக்க முடியாது என்கிறது. அது மட்டும் அல்ல, விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக் கூடாது என்று ஒழுங்குகளையும் வரையறுக்கிறது.
விரதங்களை மேற்கொள்வதால், மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு தெய்வ நம்பிக்கையை அது மேலும் அதிகமாக்கிறது.
அதேநேரம் அது ஓழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும்
ஏற்படுத்துகின்றன. உடல் ஆரோக்கியமும் பெறுகிறது. ஆயுள் அதிகமாகிறது
பிரச்சினைகள் குறைகின்றன. தனிமனிதன் நன்மை பெறுவதனால் அவன் குடும்பம் நன்மை
பெறுகிறது. இரக்க சிந்தனை, தருமம் செய்யும் குணம் ஆகியவை வளருகின்றன. விஞ்ஞான
முறைப்படியோ அல்லது எந்த முறைப்படியோ
ஆராய்ந்தாலும் விரதங்கள் நமக்கு ஒரு போதும் விரோதமான நிலைமைகளைத் தரவில்லை என்பது
மட்டும் உறுதி.
[தோஷமும் விரதமும்
பிராமண இந்து சமயம் பெரும்பாலும் புகுத்தியதால், இங்கு பல
சோதிடர்கள் கையாளும் சமஸ்கிரத சொற்கள், அப்படியே இந்த கட்டுரையில் உள்வாங்கப்
பட்டுள்ளன]
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 02 தொடரும்
0 comments:
Post a Comment