"சிவப்பு உருவம்" [சிறு கதை]

இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்துவிடும். இப்படியான ஒரு காலகட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.

 

நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப்பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.

 

தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்துவிட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .

 

ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700-1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப்போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக்கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.   

 

ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக்கொண்டு போகும் பொழுதுதான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக்கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதை கண்டோம். 

 

கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதை பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக்கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!

 

 நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.

 

இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்கமுடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!

 

எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டுவிட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்துவிட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லிவிட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!

 

:-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

No comments:

Post a Comment