பீட்ரூட், பூண்டு மற்றும் தர்பூசணி சாப்பிடுவது உண்மையில் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்குமா என்று பிரிட்டிஷ் மருத்துவர் கிரிஸ் வான் டுலேகன் பரிசோதித்தார். உண்மை என்ன?
உயர் ரத்த அழுத்தம் இதய நோயாளிகளுக்கு ஒரு பெரிய ஆபத்து. பிரிட்டனில் இந்த
நோயே அதிக இறப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்த மூன்று உணவுப்பொருட்கள் பற்றிய கூற்றுகள் உண்மையாக இருந்தால் இவை மிகப்
பெரிய 'உயிர் காப்பு' பொருட்களாக
இருக்கும்.
லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் மருத்துவர் ஆண்டி வெப் இந்த உணவுகள் பற்றிய
கூற்றுகளின் உண்மைத்தன்மையை சோதிக்க பெரிய அளவிலான பரிசோதனையை நடத்த உதவினார்.
இந்த பரிசோதனை எப்படி செய்யப்பட்டது?
இந்த பரிசோதனையில், ரத்த அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்ட 28 தன்னார்வலர்கள்
தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் அதிகபட்ச ரத்த அழுத்தம் 130 க்கும் மேல்
இருந்தது. சாதாரணமாக மனிதனுக்கு இது 120 ஆக இருக்க வேண்டும். இந்த தன்னார்வலர்கள்
அனைவரும் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
முதல் வாரத்தில், 'குரூப் 1' தன்னார்வலர்களுக்கு தினமும் இரண்டு பல் பூண்டு
சாப்பிட வழங்கப்பட்டது. 'குரூப் 2'க்கு தினமும் இரண்டு பெரிய தர்பூசணி துண்டுகள்
கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில், 'குரூப் 3' இன் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தினமும் இரண்டு
பீட்ரூட் சாப்பிட வழங்கப்பட்டது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில், ஒவ்வொரு குழுவிற்கும் சாப்பிட அளிக்கும்
பொருட்கள் மாற்றப்பட்டன. மூன்று வாரங்களில், ஒவ்வொரு குழுவிலும் உள்ள எல்லா
தன்னார்வலர்களும் மூன்று பொருட்களையும் சாப்பிட்டனர்.
பூண்டு, பீட்ரூட்
மற்றும் தர்பூசணியின் சிறப்பு என்ன?
மீடியாக்களில் வரும் சூப்பர்ஃபுட்ஸ் என்ற வார்த்தைக்கு நாம் அதிக
முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால் நாம் உண்ணும், குடிக்கும் பல
பொருட்களும் நம் உடலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மைதான்.
அதனால்தான் இந்த மூன்று பொருட்களும் சோதித்து பார்க்கப்பட்டது, இவற்றை
சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கோட்பாட்டளவில் இந்த மூன்று உணவுகளும் நமது ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.
இவற்றை உட்கொள்வதால் நமது ரத்த நாளங்கள் விரிவடைகின்றன, இதன் காரணமாக
ரத்தம் எளிதாகப் பாய்கிறது. இதுதான் இவை வேலை செய்யும் விதம். ஆனால் இந்த மூன்று
பொருட்களின் விளைவு ஒரே மாதிரியாக இல்லை.
சோதனை முடிவுகள் என்ன?
ஒவ்வொரு தன்னார்வலரின் ரத்த அழுத்தமும் ஒரு நாளைக்கு இரண்டு முறை, காலை மற்றும்
மாலை அளவிடப்பட்டது. ஒவ்வொரு முறையும் மூன்று புள்ளிவிவரங்கள் எடுக்கப்பட்டு
அவற்றின் சராசரி கணக்கிடப்பட்டது. இதன் பிறகே இந்த மூன்று உணவுகளின் விளைவை அறிய
முடிந்தது. எந்த உணவுப் பொருள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்தத்
தரவுகள் வெளிப்படுத்தின.
இந்த பரிசோதனையின் போது, குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இயல்பான
வாழ்க்கையை வாழ்ந்தபோது, அவர்களின் சராசரி ரத்த அழுத்தம் 133.6 ஆக இருந்தது.
பீட்ரூட் உண்ணும் குழுவின் சராசரி இரத்த அழுத்தம் 128.7 ஆகவும், பூண்டு
உண்பவர்களின் இரத்த அழுத்தம் 129.3 ஆகவும் இருந்தது.
இந்த சிறிய குழுவுடன் செய்யப்பட்ட பரிசோதனையின் தரவு, டாக்டர் வெப்
மற்றும் பிறரின் பெரிய ஆய்வின் முடிவுகளுடன் ஒத்துப்போனது.
ரத்த அழுத்தத்தில் இந்த வீழ்ச்சி ஒரே மாதிரியாக இருந்தால், பக்கவாதம்
மற்றும் மாரடைப்பு அபாயத்தை 10 சதவிகிதம் குறைக்கலாம் என்று உயர் ரத்த
அழுத்தம் மற்றும் இதய நோய் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் பற்றிய இந்த ஆய்வுகள்
தெரிவித்தது.
தர்பூசணி அவ்வளவு பெரிய விளைவைக் காட்டவில்லை. இதன் காரணமாக, இரத்த
அழுத்தத்தின் அதிகபட்ச வரம்பு 129.8 மிமீ வரை மட்டுமே எட்டப்பட்டது. தர்பூசணியில்
அதிக தண்ணீர் இருப்பதால் செயலில் உள்ள கூறுகளின் குறைவு காரணமாக இது இருக்கலாம்.
சோதனையிலிருந்து நாம் என்ன தெரிந்துகொண்டோம்?
பீட்ரூட் மற்றும் பூண்டை தொடர்ந்து சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை குறைக்க
உதவும் என்று எங்களின் இந்த சிறிய ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் இந்த இரண்டு
பொருட்களால் மட்டுமே இது நடக்கும் என்று சொல்லமுடியாது.
பீட்ரூட்டில் முக்கியமாக காணப்படும் நைட்ரேட், ஓமம், முட்டைக்கோஸ், வெங்காய தாமரை, கார முட்டைகோசு
கீரை, பசலைக்கீரை, ப்ரோக்கோலி போன்ற
எல்லா பச்சை காய்கறிகளிலும் காணப்படுகிறது.
மறுபுறம், பூண்டில்
முக்கியமாக எல்லிசின் உள்ளது. இது வெங்காயம் மற்றும் அதை ஒத்த பிற இனங்களில்
ஏராளமாக காணப்படுகிறது.
நமது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் பல விஷயங்கள் உள்ளன என்பதை இந்தச்
சோதனையில் இருந்து தெரிந்துகொண்டோம். ஆனால் அவற்றின் விளைவுகள் எவ்வளவு பயனுள்ளதாக
இருக்கும் என்பது நாம் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தது.
காய்கறிகள் மற்றும் கீரைகளில் உள்ள நைட்ரேட்டுகளை எவ்வாறு
பாதுகாப்பது?
• சாலடுகள் மற்றும்
காய்கறிகளை பச்சையாக சாப்பிடுங்கள். காய்கறிகளில் காணப்படும் நைட்ரேட் அவை
சமைக்கப்படாத போது மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். அவற்றை சமைக்கும் போது அல்லது
வதக்கும்போது நைட்ரேட்டின் அளவு குறைகிறது.
• நைட்ரேட்
தண்ணீரில் கரைகிறது. எனவே இந்த காய்கறிகள் மற்றும் கீரைகளை வேகவைக்கும்போது, அவற்றில் உள்ள
நைட்ரேட்டுகளின் சிறிதளவு தண்ணீரில் கரைந்துவிடும். ஊறுகாய் செய்யும்போதும்
நைட்ரேட் வீணாகிறது.
• பீட்ரூட்டை
வேகவைத்தால், அப்படியே
வேகவைக்கவும். நீங்கள் கொதிக்க வைப்பதற்கு முன் அதன் மேல்பகுதி அல்லது கீழ்
பகுதியை வெட்டக்கூடாது.
• பீட்ரூட் சாறு
குடிக்கவும். அதன் சாற்றில் பெரும்பாலான நைட்ரேட் பாதுகாக்கப்படுகிறது.
• சூப்
தயாரிக்கவும். நீரில் கரைந்த பிறகும் நைட்ரேட் சூப்பிலேயே இருக்கும். எனவே சூப்
சாப்பிடுவது நல்லது.
• காய்கறிகள்
அல்லது கீரைகளை கொதிக்க வைப்பதைக்காட்டிலும் ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது
நல்லது. நீங்கள் கொதிக்கவைக்க விரும்பினால், குறைந்த தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் மிச்சமிருக்கும் தண்ணீரை சூப் செய்யவோ அல்லது வேறு வகையிலோ பயன்படுத்தினால்
நன்றாக இருக்கும்.
பூண்டை எவ்வாறு பயன்படுத்துவது?
• பூண்டை நன்றாக
அரைக்கவும் அல்லது முடிந்தவரை மெல்லிய துண்டுகளாக வெட்டவும். எவ்வளவு அதிகமாக
அரைக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக
அதிலிருந்து எல்லிசின் வெளிவரும்.
• அரைத்த அல்லது
வெட்டிய பிறகு, பூண்டை விரைவில்
பயன்படுத்தவும். இதை சூப்கள் அல்லது சாப்பிட தயாராக இருக்கும் காய்கறிகளின்
மேல்தூவி பயன்படுத்தலாம். டோஸ்ட் மற்றும் காளான் போன்றவற்றிலும் இதைப்
பயன்படுத்தலாம்.
• பூண்டை
அரைத்தவுடன் அல்லது நறுக்கியவுடன், அதில் உள்ள எல்லிசின் வேகமாக
சிதையத்தொடங்குகிறது.
• மைக்ரோவேவில்
பூண்டை வைக்க வேண்டாம். எல்லிசின் வெப்பத்தில் மிக விரைவாக சிதைகிறது. ஆனால்
மைக்ரோவேவில் அது முற்றிலும் அழிக்கப்படுகிறது.
• எச்சரிக்கை:
பூண்டை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதிகமாக பூண்டு
சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான கோளாறு ஏற்படக்கூடும்.
வாழ்க்கை முறையை மாற்றுவது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்
பலர் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு சில வாரங்களில் உயர் ரத்த
அழுத்தத்தைக் குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். ரத்த அழுத்த நோயாளிகள் இவ்வாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள்:
• உடல் ரீதியாக
சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
• ஆரோக்கியமான உணவை
உட்கொள்ளவேண்டும். குறைந்த கொழுப்புள்ள உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். உணவில்
சமச்சீர் தன்மை இருக்கவேண்டும்.போதுமான கீரைகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட
வேண்டும்.
• முடிந்தவரை மது
மற்றும் புகைப்பிடிப்பதில் இருந்து விலகி இருக்கவேண்டும்.
• எடையை
கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.
• ஒரு நாளில் 6 கிராமுக்கு மேல்
உப்பு சாப்பிடக்கூடாது.
• காபி, தேநீர் மற்றும்
குளிர் பானங்களை குறைந்த அளவே குடிக்கவேண்டும். ஒரு நாளில் நான்கு கப் காபிக்கு
மேல் குடிப்பதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது.
நன்றி:பி. பி. சி. தமிழ்
No comments:
Post a Comment