இதயத்தை பாதிக்கும் இரவுப்பணிகள் - எப்படி சமாளிப்பது?

மாறி மாறி வரும் சுழற்சி முறை (shift pattern) கொண்ட வேலையில் நீங்கள் பணிபுரிந்ததுண்டா?



இரவுப்பணி நம்மை சோம்பலாகவும் விரக்தியாகவும் மாற்றக்கூடியது என்பது நமக்கு தெரியும். ஆனால், இது இதயத்துக்கும் கேடு விளைவிக்கும் என்பது பற்றி அரிதாகவே தெரியும்.

 

புதிதாக வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவுகள், இது தீங்கு என்பதை விளக்குவதோடு, மனித உடலின் வேளைக்கேற்ற இயக்கத்துக்கு காரணமான, உயிரியல் கடிகாரத்துக்கும் (body clock) இதயத்துக்கும் இடையிலான தொடர்பில் இந்த இரவுப்பணி எப்படி தாக்கம் ஏற்படுத்துகிறது என்றும் விளக்குகிறது.

 

மாறி மாறி வரும் பணிச்சூழல் காரணமாக, இதயத்துக்கும் மூளைக்குமான ஒத்திசைவு குலைந்து போகும். இதனால் இதயம் செயலிழக்கும் அபாயம் உண்டு.

 

ஒத்திசைவற்ற உயிரியல் கடிகாரம்

மனித இதயத்தின் ஒவ்வொரு இதய செல்லிலும் உள்ள உயிரியல் கடிகாரம் நாள்முழுக்க வேதிச்சமநிலையை மாற்றிக்கொண்டே இருப்பதை, கேம்பிரிட்ஜ்ஜை சேர்ந்த எம்.ஆர்.சி. மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் ஆய்வு செய்தது.

 

அதன்படி, உடல் இயக்கத்தில் இருக்கும்போது இதயம் கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. அதாவது இதயத்துடிப்பின் வேகம் அதிகரிக்கிறது.

 

"இதயம் எவ்வாறு துடிக்கிறது என்பது இரண்டு விஷயங்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று மூளையில் இருந்து வரும் சமிக்ஞைகள்.

 

மற்றொன்று ஒவ்வொரு இதய செல்லுக்குள்ளும் இருக்கும் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவு. இவைதான் இதயத் துடிப்பைத் தூண்டுகின்றன" என்கிறார் இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய டாக்டர் ஜான் ஓ'நீல்.

 

தொடர்ந்து பிபிசியிடம் பேசிய அவர், "ஆரோக்கியமானவர்களின் உடலில் இந்த ஏராளமான செல்லுலார் கடிகாரங்கள் ஒன்றோடொன்று ஒத்திசைந்து இருக்கும் "

 

ஆனால், எங்கள் புதிய ஆய்வின்படி, ஷிப்ட்டுகள் வாரியாக பணிநேரம் மாறும்போது மூளை விரைவாக ஏற்றுக்கொள்கிறது. ஆனால், உடலின் செல் கடிகாரங்கள் தாமதமாகி பின்தங்கி விடுகின்றன.

 

இதனால், இதயம் எதிர்பார்க்கும் ஒத்திசைவில் இல்லாமல், சில நாட்கள் மூளை சமிக்ஞைகள் தனியாக இயங்கிக்கொண்டிருக்கும். இதன் விளைவாகவே ஷிப்ட்டுகளில் பணிபுரிவோருக்கு அபாயம் இருப்பதாக நாங்கள் உணர்கிறோம் " என்றும் ஓ நீல் தெரிவித்தார்.

 

இது இதயத்துக்கு பல்வேறு ஆபத்துகளை உருவாக்கும். குறிப்பாக, பகல்-இரவு என்று மாறி மாறி வேலைசெய்யும் பொழுது, உணவுமுறை, செரிமானம், பாலினம், வயது போலவே இதய பிரச்சினைகளுக்கான காரணிகளில் ஒன்றாக இரவு நேரப் பணி என்ற காரணமும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆரோக்கியத்துக்கான அபாயங்கள்

இரவுப் பணியால் ஏராளமான அபாயங்கள் உள்ளன. இருந்தும் பயமுறுத்தும் அபாயம் என்றால், "திடீர் இதய மரணம்" என்பதுதான். இதில் இதயம் குழப்பமடைந்து இயங்குவதை சிறிது நேரம் நிறுத்தி விடுகிறது. முறையான மருத்துவ கவனம் இல்லாவிட்டால் இது மரணத்திலும் கொண்டுபோய் விடும்.

 

நல்லவேளையாக, இது அரிதினும் அரிதான ஒன்று. எனினும் ஷிஃப்ட் முறையில் வேலை பார்ப்பது இதயப்பிரச்சினைகளை மட்டுமல்ல, செரிமான பிரச்சினைகள், மனநிலை குழப்பங்கள் மற்றும் புற்றுநோய் உருவாகவும் காரணமாக விளங்குகிறது.

 

வாழ்நாள் முழுக்க சீர்குலைந்த இதய ஒத்திசைவை கொண்டு வாழ்வது (ஏ.கா. ஷிஃப்ட் முறையில் மாறி மாறி பணிபுரிவது ) என்பது நாள்தோறும் ஒரு பாக்கெட் சிகரெட் புகைப்பதற்கு சமம் என்று மருத்துவ வல்லுநர்கள் ஒப்பீடு செய்கின்றனர்.

 

இந்த அபாயம் சில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டும் உள்ளது. டென்மார்க்கில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஷிஃப்ட் முறையில் பணிபுரிந்து புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

 

ஆரோக்கியமாகவும் உறுதியுடனும் இருக்க, நம் உடலின் ஒவ்வொரு செல் கடிகாரமும் ஒன்றோடொன்று வலுவான ஒத்திசைவில் இருக்க வேண்டும். அப்படி இருப்பதற்கு, இரவில் முறையான தூக்கம் மற்றும் பகலில் உணவு மற்றும் வேலை உள்ளடங்கிய ஒரு தினசரி வழக்கம் இருக்க வேண்டும். ஆனால், கோடிக்கணக்கான பணியாளர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை.

 

இரவில் பணிபுரிவதால் ஏற்படும் தீங்குகளை சரிசெய்ய சில நடைமுறைகளை தூக்கவியல் வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

 

எப்படிச்  சமாளிப்பது?

முதன்மை கடிகாரம் மூளையில் இருப்பதால், உடலின் மற்ற செல் கடிகாரங்களை தாமதப்படுத்துவது மனிதர்களாக நமக்கு எளிமையானது என்கிறார் எடின்பரோ பல்கலைக்கழக தூக்கம் மற்றும் சுவாச மருந்துகள் பிரிவு ஆலோசகரும் மருத்துவருமான ரெனாடா ரிஹா.

 

ஒரு சுற்று பகல் ஷிப்ட்கள், பின்னர் தாமதமான ஷிப்ட்கள் இறுதியாக இரவு ஷிப்ட்களில் என்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

 

குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு இரவு ஷிப்ட்களை நீட்டிக்க வேண்டும். இது நம் உடலை சீராக்குவதற்கான நேரத்தை வழங்கும்.

 

"அனைத்து கடிகாரங்களும் மாறுவதற்கு ஒரு வாரம் ஆகும் . மெலடோனின் என்ற தூக்க ஹார்மோன் சுரப்புக்கு காரணமான முதன்மை கடிகாரம் முதலிலும், அதைத் தொடர்ந்து உடலின் மற்ற உறுப்புகளில் உள்ள கடிகாரங்களும் ஒத்திசைவுக்கு வரும்" என்று டாக்டர் ரிஹா கூறுகிறார்.

 

மேலும், இரவு ஷிப்ட்டின் போது 20 முதல் 30 நிமிடங்கள் வரை சிறிய தூக்கம் எடுக்கவும் அவர் பரிந்துரைக்கிறார்.

 

வயது வந்த ஒருவருக்கு, ஏழு முதல் எட்டு மணிநேர தூக்கம் தேவை, ஆனால் எல்லா தூக்கமும் சமமாக இருக்காது. அதேபோல பகலில் தூங்குவது பெரும்பாலும் தரம் குறைந்ததாக இருக்கும், இதனால் உடலுக்குத் தேவையான ஓய்வை இழக்க நேரிடும். எனவே, இரவு வேலை செய்பவர்கள் வீடு திரும்பியவுடன் தூங்கச் செல்ல வேண்டும் என்றும் டாக்டர் ரிஹா கூறுகிறார்.

 

எப்படித் தூங்க வேண்டும்?

அமைதியான, குளிர்ச்சியான மற்றும் இருண்ட அறையில் தூங்க முயற்சி செய்யுங்கள். சூரிய ஒளியைத் தடுக்க திரைச்சீலைகள் இல்லையென்றால், நீங்கள் கண் முகமூடியைப் பயன்படுத்தலாம்.

 

உங்கள் அறை சூடாக இருந்தால், குளிரூட்டப்பட்ட தலையணை அல்லது மின்விசிறியைப் பயன்படுத்துவதன் மூலம் அதை குளிர்விப்பதற்கான வழிகளைப் பற்றி சிந்தியுங்கள். வெப்பநிலையைக் குறைப்பது உறங்குவதற்கான நேரம் என்று உங்கள் உடலை ஏமாற்றுகிறது.

 

உடலை ஏமாற்றுவது எப்படி?

உடற்பயிற்சி மற்றும் ஒரு சீரான உணவுமுறை கூட உதவும், ஆனால் நேரம்தான் முக்கியமானது .

 

உணவு மற்றும் உடற்பயிற்சி முறையே இன்சுலின் ஹார்மோன் மற்றும் உடல் வெப்பநிலையில் நாள்முழுக்க ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை நேரடியாக பாதிக்கிறது.

 

நீங்கள் இரவுப் பணியைத் தொடங்குவதற்கு முன், நல்ல வெளிச்சத்தில் 'உணவை' உட்கொள்வதன் மூலமும், புதிய 'இரவு நேரத்தில்' உணவு மற்றும் வெளிச்சத்தைத் தவிர்ப்பதன் மூலமும், புதிய நேரத்தை ஏற்றுக்கொள்ளும்படி நம் உடலை ஏமாற்றலாம்.

 

நீங்கள் "உங்கள் உடலின் உயிரியல் கடிகாரத்தை முற்றிலுமாக மாற்றி மீண்டும் தொடங்க எந்த மாத்திரைகளும் கிடையாது. நீங்கள் பகல் ஷிப்டில் இருந்து இரவு ஷிப்டுக்கு மாறினால், உங்கள் முழு தினசரி வழக்கத்தையும் மாற்ற வேண்டும். பின்னர் மாற்றப்பட்ட வழக்கத்துடன் இயைந்து பணிசெய்ய வேண்டும் " என்கிறார் டாக்டர் ஓ'நீல்.

 

இந்த செயல்முறை, உங்கள் உடலை விரைவாக பழக்கப்படுத்தவும் பல விரும்பத்தகாத பக்க விளைவுகளைத் தவிர்க்கவும் உதவும்."

அத்துடன் அமெரிக்க , ஐரோப்பிய நாடுகளில் சுழற்சி முறையில் இயங்கும் தொழிற்சாலையில்,  பகல் வேலை செய்வோருக்கு தொடர்ந்து பகல் வேலையாகவும், இரவு வேலை செய்வோருக்கு தொடர்ந்து இரவு வேலையும் கொடுப்பது காரணமில்லாமலில்லை.

:-சுவாமிநாதன் நடராஜன்-/-பிபிசி உலகச் சேவை

No comments:

Post a Comment