பழகத் தெரிய வேணும் – 58


பரோபகாரம் போதுமா?

தலைவர்கள் தாம் சாதித்ததாக எண்ணுவதைத் தேர்தல் சமயத்தில் பட்டியலிடுவார்கள்.

 

அரசியலில் மட்டுமல்ல, எந்த ஒரு சிறு குழுவின் தலைவர்களாக இருப்பவர்களும்கூட.

 

வெற்றி என்பது ஒருவரது சாதனைகளின் மட்டுமல்ல. மற்றவர்களுக்காக எதுவும் செய்யாது, தமக்குத்தாமே நன்மை செய்துகொண்டிருப்பவர்களால் பிறருக்கு என்ன லாபம்?

 

ஒரு சிலர், `குறுகிய காலத்தில் நான் இத்தனை பட்டங்கள் பெற்றேன், சொத்து சேர்த்தேன்,’ என்று பெருமை பேசிக்கொள்வார்கள்.

 

அறிவும் பணமும் மட்டும் நிறைவைக் கொடுத்துவிடாது. (ஆனால், அது காலம்கடந்துதான் புரியும்).

 

தகுந்த தருணத்தில், அல்லல்படும் ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டுவதால் கிடைக்கும் திருப்தி அதைவிடப் பெரிது. பிறர் பிரமித்து, பாராட்டாவிட்டால் என்ன!

 

தம்மைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களை எப்படியாவது தாம் இருக்கும் தாழ்ந்தநிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்றெண்ணி, அதன்படி செயல்படுபவர்கள் கீழேயேதானே இருக்க நேரிடும். இது எத்தனை பேருக்குப் புரிகிறது?

 

மாறாக, பிறரை உயர்த்த நம்மால் ஆன உதவியைச் செய்தால், நமக்கும் ஏதாவது நல்லது நடக்கும். ஆனால், விளைவைக் கருத்தில்கொண்டு செயல்படுவது நலனைத் தருவதில்லை.

 

::கதை::

தான் மற்ற உறவினர்களைவிடச் செல்வச்செழிப்புடன் இருக்கிறோமே, அதைக் கண்டு அவர்கள் பொறாமை கொண்டால், அந்த ஆற்றாமை ஏதாவது தீய விளைவில் கொண்டுவிடப்போகிறதே என்று பயந்தாள் மைதிலி.

 

உறவினர்களைப் பார்க்கும்போதெல்லாம், கைநிறைய பரிசுப்பொருட்கள் வாங்கி வருவாள். அடிக்கடி எல்லாருக்கும் கடிதம் எழுதி, அவர்கள் நலனை விசாரிப்பாள். தான் மிகவும் நல்ல இருதயம் படைத்தவள் என்று நம்பி, அவர்கள் வாழ்த்த வேண்டுமாம்!

 

மைதிலியின் குழந்தைகள் பெரியவர்களானதும், ஒவ்வொருவருக்குமே ஏதோ ஒரு இடர். விபத்தில் ஒரே மகளுக்குக் கால் ஊனமாகியது.

 

`நாங்கள் பிறருக்கு அவ்வளவு செய்தோமே! எங்களுக்கு ஏன் இப்படி ஒரு துயரம்?’ என்று கதறினாள் மைதிலி.

 

பிறர் நமக்கு என்ன பிரதியுபகாரம் செய்யப்போகிறார்கள் என்று எதிர்பார்த்துச் செய்வது பலன் தராது.

 

திருமணங்களின்போது, தங்களுக்கு யார் எத்தனை மொய் எழுதியிருக்கிறார்கள் என்று கணக்கு எழுதி வைத்துக்கொண்டு, அதே தொகையை அவர்கள் வீட்டு வைபவங்களுக்குத் திருப்பி அளிப்பதும், குறைவாகக் கிடைத்தால் சண்டைபோடுவதும் எதில் சேர்த்தி?

 

குழுச் சண்டைகள்

பிறருடன் ஒரு காரியத்தில் ஈடுபடுகையில், பொறாமை அல்லது கோபத்தால் விளையும் சிறிய சச்சரவுகள் எழும். அப்போதுதான் புரிந்துணர்வு அவசியமாகிவிடுகிறது. பிறரது மனநிலையில் நம்மை வைத்துக்கொண்டு பார்த்தால், பிறர் செய்வது நம்மை அதிகமாகப் பாதிக்காது.

 

இதனால்தான் ஒத்த மனதினருடன் ஒரு குழுவில் இணையவேண்டும் என்பது. `நமக்கு ஆதரவு அளிக்க பலர் இருக்கிறார்களே!’ என்று புரிந்துபோக, ஒவ்வொருவரும் தனிப்பலம் அடைகிறார்கள்.

 

அந்நிலையில் ஒருவருக்கொருவர் உதவியும், ஊக்கமும் அளித்துக்கொள்வதால் அதில் இருப்பவர்கள் அனைவருமே வெற்றி அடைகிறார்கள்.

 

மொத்த முழுவிற்கும் அவர்களால் நன்மை. ஏனெனில், `அடுத்து என்ன செய்யலாம்?’ என்று கலந்தாலோசிக்கிறார்கள்.

 

விரைந்து செல்லத் தனியாகப் போகவேண்டும். ஆனால், நீ தொலைதூரம் செல்ல வேண்டுமானால், பிறருடன் சேர்ந்து போ!’ என்று அறிவுரை கூறுகிறார் திரு.அனுபவசாலி.

 

கஷ்டங்கள் விலக..

நம்மைப்பற்றியே வேண்டாத யோசனை செய்துகொண்டிருந்தாற்போல் நிலைமை மாறிவிடப்போவதில்லை

 

சிலர் தாம் படும் சிறு, சிறு கஷ்டங்களைப்பற்றி உபகாரியானவரிடம் ஓயாது பேசி, அவற்றின் பாதிப்பைக் குறைக்க நினைக்கிறார்கள். இவர்களுக்குப் பிறரைப்பற்றிய சிந்தனையே கிடையாது.

 

`உதவி செய்கிறோம்!’ என்ற நல்லெண்ணத்துடன் அந்த அவலங்களைச் செவிகொடுத்து கேட்க நேரிடுபவர்கள் நிலை பரிதாபம். அவர்களே அல்லல்படுவதுபோல் வருத்தம் எழும்.

 

இவ்வாறு ஓயாமல் மூக்கால் அழுபவர்களை விலக்குவதே புத்திசாலித்தனம். ஏனெனில், நம் பரிதாப உணர்ச்சியால் ஆக்ககரமாக எதுவும் நடக்கப்போவதில்லை.

 

அப்படி நேரத்தை வீணாக்குவதைவிட தகுதியுள்ள பிறருக்கு உதவி செய்தால் நம் கஷ்டங்கள் விலகுகிறதோ, இல்லையோ, நம் நிம்மதியாவது குலையாமல் இருக்கும்.

 

`இவள் தேவலை! தன் காரியத்தைத் தானே பாத்துக்கொண்டுவிடறா!’ இப்படி ஏளனமாக எழும் ஒரு குரலைக் கேட்கும்போது குற்ற உணர்ச்சி எழுந்தால் அது தவறு.

 

பிறருக்கு உதவிபுரியுமுன் முக்கியமாகச் செய்ய வேண்டுவது: நம் நலனைக் கவனித்துக்கொள்வது.

 

::கதை::

பிறருக்கு உதவி செய்வதே ஒரு நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்பதுபோல் வளர்க்கப்பட்டிருந்தாள் சுமித்திரா.

 

தன்னைவிட வயதில் மூத்தவர்களின் கைவேலையைப் பிடுங்கிச் செய்வதில் பெருமகிழ்ச்சி கொண்டாள் அப்பேதை.

 

ஆனால், அதற்குமுன் அவள் தன்னையும் பொறுப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூற எவருக்கும் தோன்றவில்லை.

 

படிப்பில் சோடைபோனாள். பிறருக்குக் கேலியாக ஆயிற்று. யாரும் தன்னை மதிக்காதது வருத்தத்தை உண்டாக்கியது. சுதந்திரமாக நடக்கவும் அவளுக்குத் தெரியவில்லை.

 

எங்கு, யாரால் தவறு நிகழ்ந்தது என்று காலம் கடந்து புரியும்போது இப்படிப்பட்டவர்களுக்கு அளவிலா வருத்தம் ஏற்படும். அல்லது, பிறர்மீது பழிசுமத்தத் தோன்றும்.

 

பொருளாதாரச் சுதந்திரம்

முதுமை அடைந்தபின்னரோ, உடல்நிலை கெட்டபின்னரோ பலரும், `கடமை’ என்றெண்ணி, தம் சொத்து அனைத்தையும் பெற்ற பிள்ளைகளுக்கு அளித்துவிடுவார்கள்.

 

உயிர் இருக்கும்வரை நம்மைக் காத்துக்கொள்ள பொருளாதாரச் சுதந்திரம் வேண்டாமா?

 

முன்யோசனை இல்லாது எல்லாவற்றையும் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஒவ்வொன்றுக்கும் அவர்கள் கையை எதிர்பார்ப்பது அடிமைத்தனம்.

தமக்கே உதவி செய்துகொள்வது கேவலம், அல்லது சுயநலம் என்று எண்ணாது, முன்யோசனையுடன் நடந்தால் தன்னம்பிக்கை என்றும் குன்றாது.

::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

No comments:

Post a Comment