பழகத் தெரிய வேணும் – 56

கற்பனையும் தசைநார்களும்

`ஆனாலும், நீ ஒரே உணர்ச்சிக் குவியல்!’

சிலர் இப்படியொரு கண்டனத்திற்கு ஆளாவார்கள். உணர்ச்சியே இல்லாதிருக்க மனிதர்களென்ன மரக்கட்டைகளா?

 

நான்கு வயதுச் சிறுவன் தானே பேசிக்கொள்வது ஓயாது எழும் கற்பனைக்கு வடிகால். மற்றும் சில குழந்தைகள் சுவற்றிலோ, காலிலோ கிறுக்கித் தள்ளுவார்கள்.

 

சில குழந்தைகள் தானே பேசிக்கொள்வார்கள்.

 

இம்மாதிரியான குழந்தைகளைக் கேலியாகப் பார்ப்பவர்களுக்குத்தான் குழந்தைகளின் சுபாவம் புரியவில்லை. எழுதவோ, படிக்கவோ தெரியாத அவ்வயதில் தமக்குத் தோன்றியதைத் தெரிந்தவிதத்தில், பிடித்தவகையில்,  வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

 

ஏளனம் செய்யாது வளர்க்கப்பட்டால், பெரியவர்களானதும், `இவர்களது கற்பனைக்கு எல்லையே கிடையாதோ!’ என்ற பிரமிப்பு எழும். குழந்தைகளைப்போல் புதிய விஷயங்களைக் கற்கும் ஆர்வம் என்றென்றும் குறையாது நிலைத்திருக்கும்.

 

பேச்சைக் குறை

நம் ஒவ்வொருவருக்கும் கற்பனைத்திறன் இயற்கையாக அமைந்திருக்கும். ஆனால் அதில் திளைத்திருக்க தனிமையும், சந்தடியற்ற  அமைதியும் அவசியம்.

 

தனிமை வேண்டாத எண்ணங்களுக்கு இடம்கொடுக்கிறது என்று அஞ்சி, பிறருடன் ஓயாமல் பேசுகிறவர்கள் தம் கற்பனைத்திறனைப் பயன்படுத்துவது குறைவு. எதிரில் எவரும் இல்லாவிட்டால், தொலைபேசி. அதுவும் முடியாவிட்டால், இருக்கவே இருக்கிறது தொலைக்காட்சி.

 

ஒரு முறை, பரீட்சை முடிந்த உற்சாகத்தில் நான் பேசினேன், பேசினேன், பேசிக்கொண்டே இருந்தேன். வீட்டில் மற்றவர்களுக்குதான் தலைவலி. `என்ன இப்படிப் பேசறா!’ என்று சலித்துக்கொண்டார்கள்.

 

அவ கையிலே ஒரு புத்தகத்தைக் குடு,” என்று அம்மா ஒரு வழி சொன்னாள்.

 

அதன்பின் ஏன் பேசுகிறேன்! கற்பனையில் பல உலகத்திற்குப் போய், பலதரப்பட்ட மனிதர்களுடன் உலா வந்தேன்.

 

படிக்கும் பழக்கம்

சிலர் பொழுதைக் கழிக்க எப்போதாவது படிப்பார்கள். சிலருக்கு தூக்கத்தை வரவழைக்க இது ஒரு உத்தி. அவ்வளவுதான்.

 

இடைநிலைப் பள்ளியில் விஞ்ஞானம் போதித்த ஆசிரியை எங்களுக்கு ஏதாவது எழுத்துவேலை அளித்துவிட்டு, ஆங்கில நாவலில் ஆழ்ந்திருப்பது வழக்கம். அவ்வப்போது நாங்கள் ஆசிரியை பக்கம் பார்த்துவிட்டு, ஒருவருக்கொருவர் சமிக்ஞை செய்துகொள்வோம்.

 

எப்போதும் சிடுசிடுவென்றிருக்கும் முகத்தில் படிக்கும்போது மட்டும் இதழ்கள் புன்னகையால் விரிவது ஆச்சரியத்தை அளிக்காதா?

 

இவ்வாறு புத்தகத்திலுள்ள கதாபாத்திரங்களுடன் ஒன்றிவிடுபவர்களுக்குக் கற்பனைத்திறன் மிகுதியாக இருக்கும்.

 

கதாநாயகியின் காதல் நிறைவேறவில்லையா? அதற்கு வருத்தம். பிடித்த பாத்திரத்தை எழுத்தாளர் சித்திரவதை செய்து, கொன்றே விட்டாரா? அதற்கு அழுகை. `கற்பனைதானே!’ என்று அலட்சியமாக இருந்துவிடமாட்டார்கள்.

 

மற்றவரைப்பற்றிச் சொல்வானேன்! நானே அப்படித்தான்.

 

ஒரு முறை, நான் தனித்திருந்தபோது உரக்கச் சிரிக்கும் ஒலியைக் கேட்டு, என் தாய், “எதுக்கு இப்படித் தானே சிரிச்சுக்கறா? பைத்தியம் பிடிச்சுடுத்தா?” என்று உள்ளேயிருந்து கேட்டது காதில் விழுந்தது.

 

தொடர்ந்து, “எதையாவது படிச்சிருப்பா!” என்று என் தங்கையின் அலட்சியக்குரல்.

 

பைத்தியம்தான்!” என்றாள் அம்மா முடிவாக.

 

நான் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. பிறருக்காக என் இயற்கையை மாற்றிக்கொள்வானேன்!

 

எழுத்தாளரின் கற்பனை

கதை என்பது எழுத்தாளரின் உணர்ச்சிக் கொந்தளிப்பில் எழவேண்டும். அப்போதுதான் படிப்பவர்களையும் உணர்ச்சிவசப்படுத்த முடியும். கதையும் சிறப்பாக அமையும்.

 

சிலருக்கு உடற்குறை இருக்கலாம். ஆனாலும், இயற்கையாக அமைந்த கற்பனைத்திறனை வளர்த்துக்கொண்டார்கள்.

 

::கதை::

ஆக்டேவியா பட்லர் (Octavia Butler) என்ற பெண்மணிக்கு டிஸ்லெக்ஸியா (Dyslexia) என்ற குறைபாடு இருந்ததால், சரியாகப் படிக்க முடியாது. எழுத்துகள் நாட்டியமாடுவதைப்போல் காட்சியளிக்கும். இதனால் உச்சரிப்பும் பிழையாக இருக்கும்.

 

பள்ளியில் படிக்கும்போது, சக வயதினரின் கேலி பொறுக்காது கற்பனை உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தாள் ஆக்டேவியா.

 

பத்து வயதிலேயே கதைகள் எழுத ஆரம்பித்தவள், 2006-ல் இறப்பதற்குமுன் அறிவியல் புனைக்கதைகளை எழுதிக் குவித்துப் புகழ்பெற்றாள்.

 

படித்தால் கற்பனை வளருமா?

`நான் புத்தகங்களைப் படித்து, பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன்!’ என்று பெருமை ஏற்பட்டாலும், கற்பனை வேறு, அறிவு வேறு.

 

உபயோகமான புத்தகங்களைப் படித்தால் அறிவு வளரலாம். ஆனால், இன்னொருவருடைய கற்பனையில் எழுந்ததைத்தானே ஏற்கிறோம்?

 

இடைநிலைப்பள்ளிக்குள் நுழைந்த என் மாணவிகள், “புத்தகத்தில் படமே இல்லையே!” என்றார்கள், குறையுடன்!

 

ஏன் படிக்கப் படிக்கவில்லை?” என்று நான் கேட்டதற்குப் பதில் அது.

 

தொலைக்காட்சிமுன் உட்கார்ந்து, நேரத்தைக் கழித்தால், பிறரது கற்பனையில் ஊறியவற்றை நாம் ஏற்கிறோம். ஓசை, அமைதியின்மை ஆகியவற்றால் படிக்கும் பருவத்தில் கற்பனை வரட்சி ஏற்பட்டுவிடும். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் பார்க்கும் மாணவ மாணவியருக்கு புத்தகங்களில் படங்கள் போட்டிருந்தால்தான் படிப்பது புரியும். வகுப்பிலோ, கரும்பலகைதான் படம் காட்டும் திரை.

 

`எல்லாரும் இப்படித்தான் செய்கிறார்கள்,’ என்று அதிகம் யோசியாது தம் வயதையொத்த பிறரைத் தொடர்ந்து செல்கிறவர்கள் ஒரே இடத்தில்தான் வளைய வந்துகொண்டு இருப்பார்கள். நாளடைவில், `ஏன் இந்த அலுப்பு!’ என்ற குழப்பம் எழாது என்ன செய்யும்?

 

நிறைய யோசி

ஒன்றைச் செய்தாகவேண்டும் என்ற எண்ணத்துடன், அதைப்பற்றியே தனிமையில் யோசித்தால் அதைச் செயலாக்க முடியும்.

 

நல்லது, கெட்டது ஆகிய இரண்டில் எதை அடைய வேண்டுமானாலும் இந்த ஒரே வழிதான்.

 

கற்பனை என்றால், புதிய கருவிகளைக் கண்டுபிடிப்பது மட்டுமில்லை. புதியவகைப் பலகாரங்களை எப்படிச் செய்வது என்று கண்டுபிடிப்போர் மட்டுமென்ன! பிறருக்குத் தோன்றாதது அவர்களுக்குப் புலப்பட்டு இருக்கிறதே!

 

வாழ்க்கை ஒரே சீராக இருந்தால் சலிப்பைத் தரும். கற்பனையில் திளைக்கும்போது அலுப்பு தெரியாது.

 

ஆனால், யோசித்துக்கொண்டே இருந்தாற்போல் எதையும் அடைந்துவிட முடியாது. இலக்கை எப்படி அடைவது என்று திட்டம் வகுக்க வேண்டும். மூளை நம்மையும் அறியாமல் சரியான திசையில் நம்மைச் செலுத்தும்.

 

புதிது புதிதாக நிறைய சாதனங்களைக் கண்டுபிடிப்பவர்களின் ரகசியம் என்ன?

பிறருக்குப் புலப்படாததை இவர்கள் ஊகித்தே அறிகிறார்கள்.

 

கேலிக்கோ, பழிப்புக்கோ அஞ்சாது, தாம் ஆரம்பித்ததை முடிப்பார்கள். ஏனெனில், அச்சம் கற்பனையை அழித்துவிடும்.

 

பல தோல்விகள் கிடைத்தாலும் மனம் தளரமாட்டார்கள். சில வெற்றிகளே அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப் போதுமானது.

 

கற்பனை தசைநார்களுக்கு ஒப்பானது. பயன்படுத்திக்கொண்டே இருந்தால்தான் விரிவடையும்!” என்கிறார் திரு. அனுபவசாலி.

 

மனிதன் நாகரிகமாக ஆனதற்கு கற்பனைத்திறன் கொண்டவர்கள் முக்கிய காரணம். (இல்லாவிட்டால், இறைச்சியைக் குடிசையில் வைத்து, பின் அந்தக் குடிசையையே எரித்தால்தான் சுவையாக இருக்கும் என்று முன்னோர் செய்ததையே இன்றும் செய்துகொண்டிருப்பான். அடுப்பு என்று ஒன்று புழக்கத்திற்கு வந்திராது).

 

::கதை::

என் அத்தை ஒருவருக்குச் சிறுவயதிலிருந்தே, `பெண்குழந்தைகள் குனிந்து, இடுப்பை வளைத்து வேலை செய்யவேண்டும்!’ என்று போதிக்கப்பட்டது.

 

அதற்காக, அம்மியில் அரைக்கும்போது கூடவா!

 

பெரியவர்கள் சொற்படி நடந்ததன் விளைவு, தலை குனிந்தபடி இருக்கும் — அடக்கத்தால் அல்ல.

 

அத்தையின் முதுகு நிரந்தரமாக வளைந்துவிட்டது. வலிக்கும் இடுப்பைப் பிடித்தபடிதான் எப்போதும் நடக்க முடியும்.

 

நல்லவேளை, யாரோ ஒரு புண்ணியவான் மின்சாரத்தால் இயங்கும் கிரைண்டரைக் கண்டுபிடித்தார். பெண்களின் முதுகு பிழைத்தது. சமையல் செய்வதால் இடுப்பிலோ, தோளிலோ அதிக வலி கிடையாது. நேரமும் மிச்சம்.

 

மாற மறுப்பவர்கள்

வேலைப்பளுவைக் குறைக்க சாதனங்கள் வந்துவிட்டாலும், சிலர் பழைமையை விடாது பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

 

கடந்த ஆண்டு, வீட்டு வேலைசெய்யும் ஒரு மராத்திய மாதுவை புனேயில் பார்த்தேன். அவளுக்கு நாற்பது வயதுக்குமேல் இருக்கும். நின்ற நிலையில், இடுப்பை வளைத்து, தரையை மெழுகுவாள். பல வீடுகளிலும் இப்படித்தான் செய்வதாக அறிந்தேன்.

 

அப்போதுதான் அவளுக்கு வேலையைத் திறம்படச் செய்த திருப்தி கிடைக்கிறதாம்.

 

வயது முதிர்ந்த காலத்தில் எப்படி அவதிப்படப்போகிறாளோ என்ற பச்சாதாபம் எழுந்தது எனக்குள்.

 

ஒருவளை, `மாற்றம் என்றாலே கெடுதல்!’ என்ற அச்சமாக அவளுக்கு இருக்குமோ?

நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

No comments:

Post a Comment