உண்மைகளும்
வரலாற்று சான்றுகளும்
வசப மன்னரின் காலத்தில், நாகதீபத்தை [யாழ்ப்பாணம்] ஆட்சிசெய்த 'இசுகிரி' யைப் பற்றி லயனல் சரத் கூறுகையில் [வல்லிபுர தங்க ஓலைச்
சுவடி], அவரை
சிங்களவர் என்று கூறமுடியாது என்றும், ஏன் என்றால், இசு என்ற பதம் பிராமணரை குறிக்கும் என்றும், கிரி என்னும் சமணர் [நிர்வாணத் துறவி], வலகம்பா மன்னர் தமிழர்களுடன் போரிட்டு தோல்வி யடைந்து
ஓட்டம் பிடித்த வேளை 'கரிய நிற சிங்களவன்' என்று கூறி நிந்தனை செய்தவர் என்றும், எனவே 'இசுகிரி' சிலவேளை தமிழ் பௌத்த ஆட்சியாளராக இருக்கலாம் என்கிறார்.
அதற்கு இன்னும் ஒரு எடுத்து காட்டாக, ஆறாவது பராக்கிரமபாகு மன்னருக்காக 'சபுமல்' என்னும் தமிழ் இளவரசர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி ஆட்சி
புரிந்தமையை கூறுகிறார். தற்காலத்தில்
ஆங்கில மொழியை கலந்து உரையாடுவதை பெருமைக்குரியதாக கருதுவது போல, அன்றைய காலத்தில் தமிழ் மொழியை கலந்து பேசுவதன் மூலம் தமது
உயர் நிலையை வெளிப்படுத்தினர் என்கிறார். இதற்கு சான்றாக, ஐந்நூற்று ஐம்பது ஜாதகம், உம்மங்க ஜாதகம் ஆகிய நூல்களில் சிங்கள அமைப்பில் அமைந்த
தமிழ் வசனங்கள் காணப்படுகின்றன என்றும், தமிழ் பகைமைகளை காட்டுகின்ற 'இராஜவலி' யில் கூட
முற்றுமுழுதாக தமிழ் சிங்கள கலப்பு மொழி பாவிக்கப்பட்டுள்ளதை உதாரணம்
காட்டலாம் என்கிறார். இன்னும் ஒரு உதாரணமாக, 'சுபா சித' என்னும் காவியத்தை எழுதிய அகலியவன்ன முகவெடிதுமா அவர்கள், தனது நூலில், 'பிரபல்யம் பெற்ற பழைய முனிவர்களின் வாயால் மனதை கவரும்
தமிழ், வடமொழி பாளி
ஆகிய மொழிகளைக் கற்காத அறிவு குறைந்த மக்களுக்கு புகழ் பெற்ற நீதி சாஸ்திரம் உள்ள
சொற்களின் பொருளினை புரியும் வண்ணம், சிங்கள மொழியில் சுருக்கமாக செய்யுள் வடிவத்தில் [ஐந்தாவது
செய்யுளில்] கூறியது இதனாலேயாகும்' என்கிறார் என்று சுட்டி காட்டுகிறார்.
பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது அண்மைய நூலான
“இலங்கைத் தமிழர்வரலாறு - கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250
– கி.பி 300”
என்ற நூலின் தமது
பதிப்புரையில் (பக்கம் XIV) பின்வருமாறு கூறுகிறார், “இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு
முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியான ஒரு
நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர், வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கி
விட்டனர் என்றும் சொல்லக் கூடியகாலம் வந்துள்ளது என்று கூறுகிறார். மற்றும் நாகர், தமிழ் மொழி பேசியவர்கள் என்பதாலும், எந்த வித ஐயப்பாடும் இன்றி, இலங்கையில் தமிழர் குறைந்தது கி மு 500 ஆம் ஆண்டில் இருந்து வாழ்ந்து வந்து இருக்க வேண்டு
மென்றாலும், அதன் பின் பண்டைய கேரளா, தமிழ் நாடு போன்றவற்றில் இருந்து வந்த குடியேற்றங்களால்
மேலும் பல்கிப் பெருகியது எனலாம். மற்றது பண்டைய கேரளா தமிழ் மொழி பேசும் சேர நாடு
என்பதும் குறிப்பிடத் தக்கது.
இலங்கையை ஆண்ட அரசர்கள் தங்களுக்குள்
முரண்பட்டு அரியணைக்குப் போரிட்ட போது அதற்கு வேண்டிய படைகளை தமிழ்நாட்டில்
இருந்தே திரட்டி வந்தனர். அவர்கள் தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போகவில்லை. இன்று
சிங்களவர்கள் மத்தியில் காணப்படும் கரவா, சலாகமுவ, துராவ போன்ற “சாதிகள்” 16 ஆம் நூற்றாண்டில் கறுவா பட்டை உரிக்கவும் மரமேறவும்
தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கூலித்தொழிலாளர்களே! அதே போல, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில் தங்கள்
பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதப் பரவர்
அல்லது பரதவர் 20 ஆம் நூற்றாண்டில் இனமாற்றம் செய்யப்பட்டனர்..தமிழர்கள் நாளடைவில்
ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். இலங்கையில் சிங்கள – பௌத்தர்கள்
பெரும்பான்மையாக இருப்பதற்கு இந்த ஒருமைப்படுத்துதலும் ஒரு காரணம் ஆகும். மேலும்
தமிழரின் அன்றைய மனப்பான்மையை, மணிமேகலையின் சில முக்கிய வரிகள் எமக்கு இன்றும் எடுத்து
காட்டுகிறது.
“ஒட்டிய சமயத் துறுபொருள்
வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்
பற்ற மாக்கள் தம்முட னாயினும்
செற்றமும் கலாமுஞ் செய்யா தகலுமின்”
(மணிமேகலை,1. விழாவறை காதை - 60-63)
யாமே வெல்வேம் எனச் சூள் மொழிந்து
பல்வேறு சமயங்களை சாரந்தவர்கள் சொற் போரில் வென்று நிலை நாட்ட ஆங்காங்குள்ள பட்டிமண்டபங்களிலே ஏறும்
மரபறிந்து ஏறக் கடவீர் எனவும்; விவாதம் செய்யும்பொழுது மற்றவருடைய சமயக்கருத்தை ஏற்க
முடியவில்லை யென்றால் பகைமையும் பூசலும் கொள்ளாமல் விலகிச் செல்லுங்கள் எனவும்
கூறுகிறது. அதாவது எம் மதமும் சம்மதம் என்ற பெருந் தன்மையுடன் தமிழர்கள் மாற்றான்
தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற தோரணையில், அறிவு பூர்வமாக பட்டி மன்றத்தில் விவாதித்து அதன்
பெறுபேறுகளை கொண்டு ஏற்றுக்கொண்டதுடன், எல்லோரையும், எல்லா மத பிரிவினரையும் சமஉரிமை கொடுத்து அணைத்து
வாழ்ந்தனர் என்பதை மணிமேகலையில் காண்கிறோம்.
:-கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்
பகுதி: 31 தொடரும்
👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக
Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள…… (பகுதி 31):
Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:
0 comments:
Post a Comment