திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../17/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

திரிகடுகம் தொடர்கிறது.....

பாடல் - 81

தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும்,

நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும்,

வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும், - இம் மூவர்

ஆசைக் கடலுள் ஆழ்வார்.

 

விளக்கம்:

பலருக்குப் பொதுவாய் நின்று நீரைத் தரும் கிணற்றினைப் போன்று தனது உடலைக் கொடுத்து வாழும் வேசியரும், சூதாடும் இடத்தைத் தேடி அலையும் நீதியில்லாத சூதாடியும், மிக்க வட்டிக்கு கொடுத்துப் பொருள் தேடுபவனும் பேராசை பிடித்தவர்கள் ஆவார்.

 

பாடல் - 82

சான்றாருள் சான்றான் எனப்படுதல், எஞ் ஞான்றும்

தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல், பாய்ந்து எழுந்து

கொள்ளாருள் கொள்ளாத கூறாமை, - இம் மூன்றும்

நல் ஆள் வழங்கும் நெறி.

 

விளக்கம்:

நற்குணங்கள் நிறைந்தவர்களால், நல்லோன் எனப்படுதலும், செல்வம் இருந்தபோதும், இல்லாதபோதும் நட்புடன் கருதப்படுதலும், தமது நற்சொல்லை ஏற்றுக் கொள்ளாதவரிடத்து சொல்லாதிருத்தலும் நல்லவர் குணங்களாகும்.

 

பாடல் - 83

உப்பின் பெருங் குப்பை, நீர் படின், இல்லாகும்;

நட்பின் கொழு முளை, பொய் வழங்கின், இல்லாகும்;

செப்பம் உடையார் மழை அனையர்; - இம் மூன்றும்

செப்ப நெறி தூராவாறு.

 

விளக்கம்:

உப்பின் குவியல் மீது நீர் படிந்தால் உப்பு கரைந்து போகும். நட்பில் பொய் வந்தால் கெட்டுப் போகும். நடுநிலைமையுடையர் மழை போல் எல்லோருக்கும் உதவி செய்வர். இம்மூன்றும் நல்ல நெறிகளைக் கெடுக்கா முறைகள் ஆகும்.

 

பாடல் - 84

வாய் நன்கு அமையாக் குளனும், வயிறு ஆரத்

தாய் முலை உண்ணாக் குழவியும், சேய் மரபின்

கல்வி மாண்பு இல்லாத மாந்தரும், - இம் மூவர்

நல் குரவு சேரப்பட்டார்.

 

விளக்கம்:

வழி அமையா குளமும், வயிறு நிரம்ப தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அறிவில்லாத மாந்தரும், ஆகிய இம்மூவரும் வறுமைக்கு ஆளாவார்கள்.

 

பாடல் - 85

எள்ளப்படும் மரபிற்று ஆகலும், உள் பொருளைக்

கேட்டு மறவாத கூர்மையும், முட்டு இன்றி

உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும், - இம் மூன்றும்

ஒள்ளிய ஒற்றாள் குணம்

 

விளக்கம்:

தன் செயல்கள் பகைவருக்குத் தெரியாமலும், நடந்த காரியத்தைக் கேட்டு மறவாதிருத்தலும், அதனைத் தடையின்றி தெளிவாகச் சொல்லும் திறமையும் கொண்டவர்களே சிறந்த வேவுகாரனது குணமாகும்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

...............................................................

 

No comments:

Post a Comment