திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../16/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

திரிகடுகம் தொடர்கிறது.....

 


பாடல் - 76

மாரி நாள் வந்த விருந்தும், மனம் பிறிதாக்

காரியத்தில் குன்றாக் கணிகையும், வீரியத்து

மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும், - இம் மூவர்

போற்றற்கு அரியார், புரிந்து.

 

விளக்கம்:

மழைக்காலத்தில் வந்த விருந்தினரும், பொருள் வருவாயில் நாட்டம் கொண்ட வேசையும், வெற்றியை விரும்புகின்ற வீரனும், போற்றுதற்கு உரியராவார்.

 

பாடல் - 77

கயவரைக் கையிகந்து வாழ்தல், நயவரை

நள் இருளும் கைவிடா நட்டு ஒழுகல், தெள்ளி

வடுவான வாராமல் காத்தல், - இம் மூன்றும்

குடி மாசு இலார்க்கே உள.

 

விளக்கம்:

கீழ்மக்களைச் சேராமல் வாழ்தலும், நீதியுடையவரை நட்பு செய்து கொள்ளுதலும், தனக்குப் பழி வரும் செயல்களைச் செய்யாதிருத்தலும், நல்லவர் செய்கைகள் ஆகும்.

 

பாடல் - 78

தூய்மை உடைமை துணிவு ஆம்; தொழில் அகற்று

வாய்மை உடைமை வனப்பு ஆகும்; தீமை

மனத்தினும் வாயினும் சொல்லாமை; - மூன்றும்

தவத்தின் தருக்கினார் கோள்.

 

விளக்கம்:

தூய்மையுடையவராய் இருத்தலும், உண்மையுடையவராயிருத்தலும், தீமையைத் தருவதனை நினையாமலும், சொல்லாமலும் இருத்தலும், தவத்தார் மேற்கொண்ட கொள்கைகளாகும்.

 

பாடல் - 79

பழி அஞ்சான் வாழும் பவுசும், அழிவினால்

கொண்ட அருந் தவம் விட்டானும், கொண்டிருந்து

இல் அஞ்சி வாழும் எருதும், - இவர் மூவர்

நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய்.

 

விளக்கம்:

பழிக்கு அஞ்சாமல் பசு போல் உயிர் வாழ்கின்றவனும், கேடு வந்த போது அரிய தவத்தினை விட்டவனும், தனக்கு உட்பட்டவளாக இருந்தாலும் மனைவிக்கு அஞ்சி எருது போல் வாழ்பவனும், எப்பொழுதும் துன்பப்படுவர்.

 

பாடல் - 80

முறை செய்யான் பெற்ற தலைமையும், நெஞ்சின்

நிறை இல்லான் கொண்ட தவமும், நிறை ஒழுக்கம்

தேற்றாதான் பெற்ற வனப்பும், - இவை மூன்றும்

தூற்றின்கண் தூவிய வித்து.

 

விளக்கம்:

முறையறிந்து செய்யாத தலைவனும், உறுதி இல்லாதவன் தவமும், ஒழுக்கமில்லாதவன் அழகும், ஆகிய இம்மூன்றும், புதரில் தூவிய வித்துக்களாகும்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

...............................................................

No comments:

Post a Comment