"அச்சம்
தவிர்த்து துணிந்து நின்று
அழகு வார்த்தைகள் நாவில் தவழ
அன்பு ஒன்றால் உலகை ஆள
அறிவு பெற்று உயர்ந்து எழுகவே!"
"ஆராய்ந்து
உண்மை கண்டு விளங்கி
ஆக்கமான செயலில் ஈடு பட்டு
ஆலமரம் போல் நிழல் கொடுத்து
ஆனந்தமாக வாழ எமது ஆசிகள்!"
"இளமை
கல்வி மனதில் நிற்கும்
இனிதாய் உணர்ந்தால் அறிவு சிறக்கும்
இணக்கம் கொண்ட கொள்கை எடுத்து
இதயம் சேர வாழ வேண்டும்!"
"ஈன்ற
பெற்றோரை நன்கு மதித்து
ஈர கண்ணீர் சிந்த விடாதே
ஈவு இரக்கம் காட்ட வேண்டும்
ஈன புத்தி என்றும் வேண்டாம்!"
"உலகம்
போற்றும் வாழ்வு எட்ட
உள்ளம் வைத்து ஆற்ற வேண்டும்
உரிமை உள்ள ஒரு மனிதனாக
உயர்ந்து நின்று வாழ வேண்டும்!"
"ஊக்கம்
வேண்டும் பற்று வேண்டும்
ஊரார் எண்ணம் அறிய வேண்டும்
ஊமையாக காலத்தை நீ கழிக்காமல்
ஊன்று கோலாய் உண்மையை நிறுத்து!"
"குட்ட
குட்ட குனியக் கூடாது
குடை பிடித்து வாழக் கூடாது
குறை இல்லாத வாழ்வு இல்லை!
குரோதம் வேண்டாம் அமைதி ஓங்கட்டும்!"
"பழிச்சொல்
இல்லா வாழ்வு பெற்று
பகலோன் போல உலகில் பிரகாசித்து
பகைவர்கள் அற்று கவலைகள் அற்று
பல்லாண்டு நீ வாழ வாழ்த்துகிறேன்!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment