"தைரியமானவள்" (சிறுகதை)

வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.

 

அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!     

ஒப்புமையில் கடலினையும்மீனையும்அம்பையும்மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும் , பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும் ,வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும் , விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'


காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.


அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய

சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர் . அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வப்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.


மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.


கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று


பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.


ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.


அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள் , குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.


மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது" . அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.


அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!

 

கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல, அவன் வீடு சென்றவள்

''ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள்'' என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.

''கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம்'' என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.


அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.  


சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன் , தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.


"தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"

நன்றி 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment