எம்மை நெருங்கி வரும் புதுமைகள்
அறிவியல்=விஞ்ஞானம்
😮பேச்சிழந்தவரை
பேச வைக்கும் நுட்பம்...
📰அதிவேகமாக சேதி
சொல்லும் செயற்கைக்கோள்...
💃அசைத்துக்
காட்டும் ஒலி!...
🐘அதிக வலிமை மிக்க
அலோகம்!...
பிரதியாக்கம்:செ.மனுவேந்தன்
மகாவம்சத்தில் புதைந்துள்ள…..(பகுதி 27)
உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்
இன்று தமிழர்கள்
பெரும்பாலும் வாழும் பகுதிகளான இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்பொருள்
ஆய்வுகளில் காணப்படும் புத்த மத வழிபாட்டு தடயங்கள் அல்லது சான்றுகள், அங்கு
சிங்களவர்கள் வாழ்ந்ததாக இலங்கை வாழ் பெரும்பான்மையான சிங்களவர்கள் இன்று
நம்புகிறார்கள். அவர்கள் எனோ கி பி மூன்றாம்
நூற்றாண்டில் இருந்து கி பி ஏழாம் நூற்றாண்டு வரையும் தமிழர் மத்தியில் பௌத்தம்
மேலோங்கி இருந்தது என்ற வரலாற்று உண்மையை கவனத்தில் கொள்வதில்லை. இரண்டாவது
நூற்றாண்டில் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கஜபாகு என்கிற மன்னனால்
கண்ணகி வழிபாடு சிங்கள மக்களிடையே அறிமுகம் செய்யப்பட்டது என சிங்கள வரலாற்று
நூல்களில் ஒன்றான இராஜாவளி என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தினி தெய்யோ என
இது சிங்கள மக்கள் மத்தியில் வணங்கப்பட்டு வருகிறது, இந்த
சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியான மணிமேகலை முழுக்க முழுக்க ஒரு தமிழ் புத்த மத நூலாகும். தமிழர்கள்
அந்த காலப் பகுதியில் புத்த மதத்தை தழுவி இருந்ததிற்கு இது ஒரு வரலாற்று
சான்றாகும். எனினும் புத்த மதம் சிங்களவர்களுக்கே உரிமையானது என்ற தப்பபிப்பிராயத்தை மகாவம்சம் அவர்களுக்கு ஊட்டியுள்ளதே இந்த
மனப்போக்கிற்கு அடிப்படை காரணமாகும்.
கி.பி. 3ம் நூற்றாண்டளவில், மகாயான பௌத்தம்
என்ற புத்த மத பிரிவு, தென்னிந்தியாவில் உருவாகி, தமிழகத்திற்குள்
அறிமுகமாகி யதாக அறிகிறோம். புவியியல் சூழ்நிலை காரணமாக தென்னிந்தியாவின் அரசியல்
சமூக மாற்றங்கள் இலங்கையையும் பாதித்தன. எனவே இலங்கையிலிருந்த தமிழர்கள்
மத்தியிலும் மகாயான பௌத்தம் பரவத் தொடங்கியது. மணிமேகலை, குண்டலகேசி போன்ற
தமிழ்ப் பெரும் காப்பியங்கள் பௌத்த தத்துவத்தை வலியுறுத்துபவையாக உருவெடுத்தன.
ஆனால் இதன் பழமைவாதிகளான பௌத்தர்கள், தம்மை தேரவாத பௌத்தர்கள் என வரையறுத்துக்
கொண்டனர். இந்தச் சமூகப் பகைப்பலத்தின் பின்னணியில், இதே
காலப்பகுதியில் இலங்கை அரசன் தாதுசேனனின் மாமாவான மகாநாம தேரரால் மகாவம்சம்
எழுதப்பட்டது. இப்படி இரண்டாக உருவான தேரவாத, மகாயான பௌத்த பிரிவுகள் என்பன சிங்கள மொழியின்
உருவாக்கத்திற்கும் காரணமாக அன்று அமைந்திருந்ததுடன், தமிழ் மொழி
என்பது மகாயான பௌத்தத்தின் ஊடகமாகக் கருதப்படவும்
வழிவகுத்தது எனலாம். இந்த நிலையில், இலங்கையில் இந்து மதத்தால் உள்வாங்கப்பட்ட
பௌத்தத்திற்கும், பழமைவாத பௌத்த
மதத்திற்கும் எதிரான போராட்டமாகவே மகாவம்சம் அமைந்தது எனலாம். 6ம் நூற்றாண்டில் உருவான புராண இதிகாசங்களின் பாணியிலான மகாவம்சம், சில
நூறாண்டுகளுக்கு முற்பட்ட அதிகாரப் போராட்டங்களை, இதிகாசங்களையும்
புராணங்களையும் போலவே மக்கள் மயப்படுத்த முற்பட்டது. இதன் ஒரு வடிவமே எல்லாளச் சோழனுக்கும்
துட்டகாமினிக்கும் இடையில் நடந்த போராட்டம் தொடர்பான மகாவம்சத்தின் விவரணையாகும்.
அது மட்டும் அல்ல,
இன்று வடக்கு கிழக்கில் தொல் பொருள் ஆய்வில் கிடைக்கும்
புத்த மத சான்றுகளும் இவையின் விளைவே, அதாவது தமிழ் மகாயான பௌத்தத்தின் சிதைவுகள், இதற்கும் சிங்களவருக்கு
எந்தவித தொடர்பும் இல்லை.
மகாவம்சத்தில்
பாடம் 22 முதல் 32 வரை துட்டகாமினி
பற்றி சொல்லப்படுகிறது. 271 பக்கங்கள் கொண்ட மகாவம்சத்தில்,81 பக்கம் இவனுக்கு
ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 30% ஆகும். ஆனால், மகாவம்சம்
சொல்லும் எண்ணூற்று முப்பத்தைந்து ஆண்டு ஆட்சி காலத்தில் இவனின் ஆட்சி இருபத்தி
நான்கு ஆண்டுகள் அல்லது 3% க்கு குறைவான காலமே! இந்த தவறான கையாளுதல், எமக்கு
மகாவம்சத்தின் நம்பிக்கைக்கு ஒவ்வாத தன்மையையும், அதை எழுதிய
நூலாசிரியரின் மனப்போக்கையும் வெளிப்படையாக காட்டுகிறது.
சமண சமயம் தமிழ்
நாட்டுக்கு கி மு 300 ஆண்டுகளில்
வந்திருக்கலாம்? அதை தொடர்ந்து
புத்த சமயமும் அங்கு வந்து, கணிசமான காலம் அங்கு நிலைத்து நின்றது. இந்த
கால பகுதியில், உதாரணமாக கி பி 300 இல் இருந்து 600 வரை காலத்தை
இருண்ட காலம் என கூறப்படுகிறது. ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டில் இல் இருந்து ஏழாம்
நூற்றாண்டு வரை, மீண்டும் அங்கு
இந்த பிராமண சமயங்களை கடுமையாக எதிர்த்து, சைவமதம் மேல் ஒங்க தொடங்கியது. இந்த அலை, பல புத்த
பிக்குகளை திரளாக இலங்கைக்கு அனுப்பி இருக்கலாம்? மேலும் இலங்கை வாழ் தமிழர்களும் மீண்டு சைவ
சமயத்துக்கு முழுமையாக திரும்பினார்கள். அதனால் தான், தீபவம்சத்தில்
தமிழருக்கு எதிராக காணாத இனத்துவேசம் மாகாவம்சத்தில் காணப்படுவதற்கு ஒரு
காரணமாகவும் இருக்கலாம்? மற்றது தேரவாத பௌத்தம் [இலங்கை சிங்களவர்கள் இச்சமயத்தைச்
சேர்ந்தவராவர்கள்] மற்றும் மகாயான பௌத்தம் [மகாயான பௌத்தம், கி.பி. முதலாம்
நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தியா, இலங்கை தமிழர்கள், மீண்டும் சைவ மதத்திற்கு கி பி ஆறாம் நூற்றாண்டிற்கு பின் மாறமுன், குறிப்பிட்ட காலம் வரை மகாயான பௌத்தத்தில் இருந்தார்கள்] இவைகளுக்கு இடையில்
உள்ள வேறுபாடும் பகையும் ஆகும்.
சமஸ்கிருத
பெயர்ச் சொல் " सैंहल " [saiMhala] என்பதன்
அர்த்தம் கறுவா அல்லது இலங்கைக்கு உரியது அல்லது அங்கு உற்பத்தி செய்யப்
படுவது அல்லது சிங்களவர் [cinnamon / Laurus Cassia - Bot or belonging to or produced in
Ceylon or Sinhalese ] ஆகும். இதன் உச்சரிப்பு "சின்ஹல" ஆகும். இலங்கை கறுவா விளையும் நாடாகையால், கறுவாவின்
சமஸ்கிருதப் பெயரான "சின்ஹல" என்பதே சிங்களமாக மருவியிருக்கலாம் எனவும்
வாதாடலாம் என நம்புகிறேன். ஏனென்றால் சிங்கத்தின் வம்சாவளியினரே சிங்களவர் என்பது
நம்பமுடியாத இயற்கைக்கு மாறான தகவலாக இருப்பதால்?
::கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்
பகுதி: 28
தொடரும்
👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக
Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள…..(பகுதி28):
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:
சிறுநீரக கல் என்பது என்ன? அது வராமல் தடுப்பது எப்படி?
முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின்
கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை
இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இது உடலில் கொடூரமான வலியை ஏற்படுத்த
வல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
சிறுநீரகக் கல் என்பது என்ன?
சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கல்சியம் போன்ற
தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்களுக்கு சிறுநீரகக்கற்கள் என்று பெயர்.
சிறுநீரகக் கல் ஏன் உருவாகிறது?
சிறுநீரில் அதிகமான யூரிக் அமிலம் இருந்தாலோ அல்லது கல் உருவாவதைத் தடுக்கும்
காரணிகளான சிட்ரேட் ஆகியவை குறைவாக இருப்பதாலும் உருவாகின்றன. மொத்தத்தில் யூரிக்
அமிலத்தின் அளவுக்கும் தடுக்கும் அமிலங்களின் அளவுக்கும் இடையிலான விகிதம் இதில்
முக்கியமான அம்சமாக இருக்கிறது.
சிலருக்கு சிறுநீரில் அதிகமான கல்சியம் இருப்பது, மரபு வழியாகவும்
ஏற்படும். அதுபோக உணவுப் பழக்கம், தண்ணீர் குறைவாகக் குடிப்பது ஆகியவற்றாலும்
இந்த பாதிப்பு ஏற்படலாம்.
சிறு நீரகக் கல்லின் வகைகள் என்ன?
பெரும்பாலான கற்கள் கால்சியம் வகையைச் சேர்ந்தவையாக இருக்கலாம். கற்கள் எந்தத்
தாது உப்பை அடிப்படையாக கொண்டவை என்பதை பொறுத்து அவை வகைப்படுத்தப்படுகின்றன.
>யூரிக் அமிலக் கற்கள்
>சல்பேட் கற்கள்
>மும்மைக் கற்கள்
>சிஸ்டீன் கற்கள்
சிறுநீரகக் கல் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?
பெரும்பாலான சமயங்களில் எந்த அறிகுறியும் இருக்காது. ஸ்கேன் எடுக்கும்போதுதான்
தெரியவரும். சிலருக்கு சிறுநீர் வெளியாகும்போது அதில் கல்லும் வெளியேறும். அப்போது
வலி ஏற்படும். அந்த வலி பின் வயிற்றிலிருந்து பரவி வரும். சிலருக்கு சிறுநீரில்
ரத்தமும் வெளியேறலாம். இதுபோன்ற அறிகுறிகள் மூலம் நாம் சிறுநீரகக் கற்கள் பாதிப்பை
உணர முடியும்.
சிறுநீரகக் கல் வராமல் தடுப்பதற்கான வழிகள் என்னென்ன?
உணவை முறைப்படுத்துவதுதான் ஒரே வழி. பிரதானமாக உப்பு. நாள் ஒன்றுக்கு 5 கிராமுக்கு மேல்
உப்பு சேர்த்துக்கொள்ளக் கூடாது. நிறைய தண்ணீர் பருக வேண்டும். புரதச்சத்துக்காக
இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை விட பயிறுகள், பருப்பு உள்ளிட்ட சைவ உணவுகளை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
சாக்லேட், கீரை, நட்ஸ் (முந்திரி, பாதாம், பிஸ்தா)
போன்றவற்றை உண்பது இந்த சிறுநீரக கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஆனால், எந்த உணவாக
இருந்தாலும் அதிலிருக்கும் உப்பின் அளவுதான் பிரதானமான காரணி.
சிறுநீரகக் கல்லுக்கு அறுவைச் சிகிச்சை எப்போது தேவைப்படும்?
பொதுவாக 5 முதல் 6 மி.மீ விட்டமுள்ள
கற்கள் இருந்தால் அவை சிறுநீர் வழியாகவே வெளியேறி விடும். அந்த சமயங்களில் சில
அசௌகரியங்கள் ஏற்படலாம். அதற்கு மேல் அளவுள்ள கற்கள் என்றால் மேலதிக சிகிச்சைகள்
அவசியம்.
அறிகுறிகள் இருந்தால் முதலில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ய வேண்டும்.
சிறுநீரகத்தில் இருக்கும் பெரிய கற்களை இந்த சோதனையில் கண்டுபிடித்துவிட முடியும்.
ஆனால், சிறிய கற்களாகவோ
அல்லது சிறுநீர்ப்பையிலோ இருந்தால் சிடி ஸ்கேன் செய்ய வேண்டி வரும். இதன் மூலம்
கண்டுபிடிக்கப்பட்ட கல்லின் அளவு மற்றும் இடத்தை பொறுத்து லேசரோ அல்லது அறுவை
சிகிச்சையோ செய்ய வேண்டி வரும்.
இயற்கையாகவே இதை கரைக்க வாய்ப்புண்டா?
உணவுப்பழக்கமும் தொடர்ச்சியாக தண்ணீர் அருந்தும் பழக்கமுமே இந்த கற்களை
கரைக்கப் போதுமானது. முறையான உப்பு அளவும், தேவையான அளவு தண்ணீரும் இருந்தால் கற்களை
கரைப்பது எளிமையானது. எங்கள் நோயாளிகளில் பலருக்கும் மருந்துகளோடு சேர்த்து
உணவுப்பழக்க முறைமையை மாற்றவும் பரிந்துரைக்கிறோம். அவரவர் உடலின் தேவைக்கேற்ப
நீர் பருக வேண்டும்.
உறங்குவதற்கு முன், நிச்சயம் தண்ணீர் குடிக்க வேண்டும். அந்த சமயங்களில் தான்
உடலில் நீரிழப்பு அதிகம் ஏற்படும்.
நிறைய தண்ணீர் குடித்தால் பின்விளைவுகள் உண்டா?
ஒரு சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ஏராளமாக தண்ணீர் அருந்துவது
உண்டு. ஆனால், ஆண்டுக்கணக்கில்
இப்படி தண்ணீர் குடிப்பது தொடர்ந்தால், அது சிறுநீரகத்தின் செயல்பாடுகளை
நீர்த்துப்போகச் செய்யும். குறிப்பாக, இரத்தத்தில் இருந்து தேவையான நீரை பிரித்து
எடுக்கும் தன்மை சிறுநீரகத்தில் குறைய வாய்ப்புண்டு.
அதிக பாதிப்பு ஆண்களுக்கு மட்டுமா?
ஆம். அதிகம் வெளியே செல்வது உடல் உழைப்பால் வியர்வை மூலமாக நீரிழப்பு ஆகிய
பிரச்னைகள் இருப்பதால் ஆண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம். ஆனால், மாறிவரும்
வாழ்வியலில் அதிக நேரம் மலஜலம் கழிக்காமல் அமர்ந்தபடி வேலை செய்வோர், குறிப்பாக
ஷிஃப்ட் அடிப்படையில் வேலை செய்வோர் ஆகியோருக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட
வாய்ப்புண்டு.
மேலும், சூடான இடங்களில்
வேலை செய்வோர், நீர்
குடிப்பதற்கான வாய்ப்புகளற்ற வேலையிடங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோருக்கு இந்த
பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
சிறுநீரகக் கல் மீண்டும் மீண்டும் வர வாய்ப்புண்டா?
ஒருமுறை சிறுநீரகக்கற்கள் வந்துவிட்டால், அது மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உண்டு.
ஒருமுறை அறுவை சிகிச்சை செய்துவிட்டால், அதன்பிறகு வராது என்று நம்பக்கூடாது.
சொல்லப்போனால், தொடர்ச்சியாக
இதுபோல சிறுநீரக்கற்கள் பிரச்னை வந்துகொண்டே இருக்கும் நோயாளிகளுக்கு சிறுநீரகம்
செயலிழப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
ஏன் வந்தது என்பதைக் கண்டறிவதுதான் சிகிச்சையின் பிரதான நோக்கம். அதைச்
சரிசெய்யும் வரையில் மீண்டும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியாது.
ஒரு 16 வயது சிறுமி
ஒருவர் என்னிடம் சிகிச்சைக்கு வந்திருந்தார். அவரது நிலைமை மிகவும் தீவிரமானது.
ஏற்கனவே குறைந்த இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவரை மீண்டும் சிடி
ஸ்கேன் சோதனை செய்த பிறகு அவருக்கு சிறுநீரகக் கற்கள் இருந்ததை கவனித்தோம்.
இதுபோன்ற நோயாளிகளுக்கு வெறுமனே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமன்றி
கல்லீரல் மாற்று சிகிச்சையும் தேவைப்படும்.
சிறுநீரகக் கல் எந்த வயதினருக்கு வரும்?
முன்பெல்லாம் 40
வயதுக்கு மேற்பட்டோரின் பிரச்னையாக இருந்த இது, அண்மைக்காலமாக
இளம்வயதினருக்கு, பால் வேறுபாடு
இன்றி, அதிக
எண்ணிக்கையிலான கற்கள் உருவாகின்றன. இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட
தரவுகள் ஏதும் இல்லை என்றபோதும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்ற நடப்பு நிலைமை
கண்கூடாகவே தெரிகிறது என்கிறார் மருத்துவர் மதுஷங்கர்.
நன்றி:பிபிசி தமிழ்
பழகத் தெரிய வேணும் – 53
உன்னையே நீ மதிக்கணும்
ஒருவர் இறந்துவிட்டால் …(எப்படி அறிந்தார்களோ தெரியாது) ‘இறைவனடி சேர்ந்தார்’ என குறிப்பிடுவார்கள். ‘அன்னாரது இழப்புக்காக ஆழ்ந்த வருத்தத்தில்
ஆழ்ந்திருக்கும்..,’
என்று, அன்றாடம் பல பெயர்களை வெளியிட்டிருப்பார்கள்
தினசரியிலும் ,வலைத்
தளங்களிலும்.
அதில் என்றோ இறந்துபோனவர்களின் பெயர்களும் இருக்கும். (அவர்கள் எப்படி வருத்தத்தில் ஆழ்ந்திருப்பார்கள்?)என்றோ இறந்தவர்கள் மறு பிறவியும் எடுத்திருப்பார். ஆனால் அவர்களுக்கும் சம்பந்தமில்லாம RIP/ சாந்தி தெரிவிப்பவர்களை எண்ணி வியந்திருக்கிறேன்.
இம்மாதிரியான அறிக்கைகளை
பார்க்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் எழும். தம் பெயர்
தினசரியில்/ வலைத் தளங்களில் வெளியாகிவிட்டதே என்ற பெருமைக்காக
வெளியிடுபவர்களில் எத்தனைபேர்,
இறந்தவர் உயிருடன் இருந்தபோது அவருடைய மதிப்பை உணர்ந்து, அன்பாக
நடத்தினார்கள்?
:கதை:
கணவன் மறைந்ததும் தான் தனிமரமாகிவிட்டோமே
என்ற கவலையில், கதறி அழுதுகொண்டிருந்தாள் அந்த மூதாட்டி. அந்த மனிதர் மனைவியை நல்லபடியாக
வைத்துக் காப்பாற்றவில்லை என்பது வேறு விஷயம்.
தாய் அனுபவித்த துன்பங்கள்
தெரிந்திருந்தும், அவளது பெண்கள் இருவருக்கும் இரக்கம் கிடையாது.
“நீங்க என்னோட வந்து இருங்கோம்மா,” என்றாள் சின்னவள், உபசாரமாக. “சும்மா இருக்க வேண்டாம். ஒங்க பென்ஷன் பணத்தைக்
குடுத்துட்டு இருங்கோ!”
சில வருடங்கள் கழித்து, அந்த தாய் தனியாகவே வாழ்ந்து இறந்தபின், அப்பெண் கதறினாளே, பார்க்கவேண்டும்!
பெரும்பாலோருக்கு எதையும் இழந்தபின்தான் ஒரு நபர் அல்லது
பொருளின் அருமை புரிகிறது.
:கதை:
“என் சட்டை! நானே மச்சு
வெச்சுக்கறேன்,” என்று அடம்பிடிப்பான் என் மூன்று வயதான மகன்.
ஒரு கையால் சட்டையின் நுனியைப்
பிடித்து, இன்னொன்றால் அதை விரல்களில் சுற்றுவான். இன்னும் கசங்கிவிடும். அவனைப்
பொறுத்தவரை, அவன் திறமையுடன் செய்திருக்கிறான்.
அண்மையில், இதை நான் சொல்லிச் சிரித்தபோது, யாரோ கேட்டார்கள், “அப்புறம் நீ அதைச் சரியாக மடித்து வைத்துவிடுவியா?”
நான் அதிர்ந்து, “ஐயோ! அப்படிச் செய்வது, `நீ செய்தது தவறு!’ என்று அவனைக் குறைத்து மதிப்பிடுவதுபோல்
இருக்குமே!” என்றேன்.
சும்மாடுபோல் சுருண்டு, கசங்கியிருந்த சட்டையைப் பார்க்கும்போதெல்லாம், `அப்போதே அவனுடைய அருமை புரிந்திருந்ததே!’ என்ற திருப்தி
ஏற்பட்டது. அவன் இறந்தபின் குற்ற உணர்வு ஏற்படவில்லை.
சுயமதிப்பு ஏற்பட…
குழந்தைகளைச் சுதந்திரமாக எதுவும்
செய்யவிடாது, தம்மையே நாடிக்கொண்டிருந்தால் அந்த பிணைப்பையே அன்பு என்று நினைக்கிறார்கள்
பலர்.
எந்த
வயதானாலும் பிறரது உதவியை எதிர்பார்க்க நேர்ந்தால் ஒருவரால் எப்படித் தன்னையே
மதிக்கத் தோன்றும்? தன்னையே மதிப்பவன்தான் மற்றவர்களையும்
மதிக்கமுடியும். தன்னம்பிக்கை என்பது, `என்னால் முடியும்’ என்று தன் திறமைகளை உணர்ந்து ஒரு காரியத்தைச் செய்வது.
தன் வாழ்நாளில் பிறருக்கு உபயோகமாக எதையாவது செய்தவரைத்தான்
அவர் மறைந்தபின்னும் கொண்டாடுகிறோம்.
பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியத்தை
எடுத்துக்கொள்ளுங்கள். அண்மையில், அவருக்குப் பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டு இருக்கிறது.
பாட்டின் பொருளை மனதில் கொண்டு, அதற்கேற்ப குரலில் உருக்கத்தையும், மகிழ்ச்சியையும் கொணர்ந்ததில் எத்தனைபேரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்!
பிறரை மகிழ்விக்க தம்மையே வருத்திக்கொள்கிறவர்கள்
இத்தகையவர்கள், `எனக்கு எல்லாரையும் பிடிக்கும். என்னையும் எல்லாருக்கும்
பிடிக்கும். உனக்கு எத்தனை எதிரிகள், பார்!’ என்று தன்னம்பிக்கையோடு நடப்பவர்களைப் பழிப்பார்கள்.
`நான் இப்படி இருந்தால்தான்
பிறர் மதிக்கிறார்கள்!’ என்று ஒருவர் தன் குணத்தையும், போக்கையும் மாற்றிக்கொண்டே இருந்தால், மற்றவர்களை விடுங்கள், அப்படி நினைப்பவருக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்காது.
தாம் சொல்வதற்கு மதிப்புக் கொடுக்காது
அலட்சியம் செய்பவரை `கர்வி,’ `நட்புடன் பழகத் தெரியவில்லை’ என்று பலவாறாகப் பழிப்பார்கள். பிறர்
மதிக்காததால் ஒருவரின் மதிப்பு குறைந்துவிடுமா?
சில சமயம், நம் மதிப்பு, நம்மால் எவ்வளவு சாதிக்க முடியும் என்பது நமக்கே
தெரிவதில்லை. அதை உணர்த்த நல்ல உறவினரோ, நண்பரோ வேண்டும்.
:கதை:
புதிதாக காரோட்டும் உரிமம் பெற்றிருந்தாள்
அப்பெண். அதன்பின், எங்கு காரோட்டிப் போனாலும் அவள் பக்கத்தில் யாராவது உட்கார்ந்திருக்க
வேண்டும். தனியாகப் போனால் தவறு நேர்ந்துவிடும் என்ற பயம்.
ஒரு மாதம் இப்படிக் கழிந்தது.
அன்று அவசரமாக ஓரிடத்திற்குப் போக
வேண்டியிருந்தது. வீட்டில் ஒரு முதியவரைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.
“என்னுடன் வாருங்கள், தாத்தா,” என்று கெஞ்சினாள்.
அவர் மென்மையாக, “நீ நடக்கப் பழகியபோது, விழுந்திருக்கிறாயோ?” என்று கேட்டார்.
`இது என்ன முட்டாள்தனமான கேள்வி!’
என்று தோன்ற, பேத்தி சிரித்தாள். “யார்தான் விழாமல் நடை பழகியிருக்கிறார்கள்?” என்று எதிர்கேள்வி கேட்டாள்.
அவர் விடவில்லை. “விழுந்துவிடுவோமோ
என்று நடக்கப் பயந்து, எழுந்திருக்காமலேயே இருந்துவிட்டாயா?”
அவளுக்குப் புரிந்தது.
“நன்றாக ஓட்டிக் காட்டியதால்தானே
உரிமம் கிடைத்திருக்கிறது! சிலர் தொலைபேசியில் ஒரு கண்ணை வைத்தபடியே
ஓட்டுகிறார்கள். நீதான் பார்த்து ஓட்டவேண்டும்,” என்று அறிவுரை கூறினார்.
தெளிந்த மனத்துடன் அவள் போனாள்.
தனியாகவே.
பொருட்களை மதிப்பவர்கள்
நாம் நம்மேல், அல்லது பொருட்களின்மேல் அளவுகடந்த மதிப்பு வைக்கும்போது, நம் மதிப்பைக் குறைவாக எடைபோட்டு விடுகிறோம்.
:கதை:
ஒரு பார்ட்டி. வெளிநாட்டுக்காரர்கள்
பலர் வந்திருந்தார்கள்.
மலேசிய அதிகாரி ஒருவரின் (வெளிநாட்டு)
மனைவியான ஜாக்குலின், “என் காப்பைப் (bracelet) பார்த்தீர்களா? இன்றுதான் வாங்கினேன்!” என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் திரும்பத் திரும்பச்
சொல்லி, அதன் உயர்ந்த
விலையையும் சேர்த்துக் கூறினாள்.
யாரும்
கண்டுகொள்ளவில்லை.
`இவளுடைய மதிப்பு ஒரு
ஆபரணத்திலா இருக்கிறது!’ என்று அலட்சியம் செய்தார்கள். அவளுடன் அதிகம்
பேசவுமில்லை.
அடுத்த முறை, நான் அதேபோன்ற ஒரு விருந்துபசாரத்திற்குச் செல்ல
நேரிட்டபோது, என்னிடமிருந்த தங்க நகைகளைப் புறக்கணித்தேன். இருபத்தைந்து காசு கொடுத்து
வாங்கிய ஒரு பிளாஸ்டிக் வளையலைத் தேர்ந்தெடுத்தேன்.
“என்னம்மா!” என்று மகள்
அதிர்ந்தபோது, “நான் ஜாக்குலினைப்போல் நடிக்கப்போவதில்லை,” என்றேன்.
தலையை நிமிர்த்தி, பிறருடன்
எளிதாகப் பழக சுயமதிப்பு போதுமே!
பல விருந்தினர்கள் விருப்பத்துடன்
என்னுடன் உரையாடினார்கள். யாரும் என் எளிய வளையலைக் கவனித்ததாகத் தெரியவில்லை.
ஒருவர்
தன்னையே மதித்து நடந்தால், பிறர் அவரிடம் உண்மையுடன் பழகுவார்கள். நடிக்க
மாட்டார்கள்.
தம்மைப்பற்றிக் குறைவாக
மதிப்பிடுவர்கள்:
மனோபலம் குன்றியவர்களாக இருப்பார்கள்.
உடல் ஆரோக்கியத்தை பெரிதாகப்
பாராட்டுவது கிடையாது. அதனால், எளிதில் தீய பழக்கங்களுக்கு ஆளாகிவிடுவார்கள்.
காதலில் தோல்வி, நீண்டகாலம் ஒரு உறவில் நிலைக்க முடியவில்லை என்று, எடுத்த காரியங்களில் எல்லாவற்றிலும் தோல்வியைச் சந்திக்க
நேரிடலாம்.
பிறரை ஓயாமல் குறைகூறுவது
இவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு. அப்போதாவது தாம் உயர்ந்திருப்பதாக
நினைக்கலாமே!
இதையெல்லாம் எப்படித் தவிர்ப்பது?
பெற்றோரோ, ஆசிரியர்களோ சிறு வயதிலேயே ஒருவர்
தன் குறைகளையோ, பிறருடையதையோ பாராட்டாதிருக்கப் பழக்கவேண்டும்.
:கதை:
பதின்ம வயதுச் சிறுவர்களுக்கு நான்
போதித்தபோது, “உங்களில் ஒருவர் ஏதாவது கேள்விக்குப் பதில் தெரியாது என்றாலோ, தவறாகப் பதிலளித்தாலோ கேலி, சிரிப்பெல்லாம் கூடாது” என்று
கண்டித்தேன்.
சில மாதங்களுக்குப்பின், என் சக ஆசிரியை, “உங்கள் வகுப்பில் மட்டும் ஒரு மாணவனைப் புகழ்ந்தால், மற்றவர்கள் எல்லாரும் தாமே பாராட்டப்பட்டதுபோல்
பூரித்துப்போகிறார்களே!” என்று அதிசயப்பட்டாள்.
தவறு செய்வதால் ஒருவரின் மதிப்பு குன்றிவிடுவதில்லை என்று
அவர்கள் உணர்ந்தவர்கள். அதனால் அவர்களால் பிறரை ஏற்க முடிந்தது. அவர்களது
வெற்றியிலும் பங்குகொள்ள முடிந்தது.
::நிர்மலா
ராகவன்-/-எழுத்தாளர், சமூக
ஆர்வலர். மலேசியா.