பழகத் தெரிய வேணும் – 54



குடும்பம் எனும் பல்கலைக்கழகம்

தற்போது, குடும்பங்களில் வன்முறை, விவாகரத்து எல்லாம் பெருகிவிட்டதாம்.

 

அனுதினமும் பார்ப்பவர்களையே திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்க நேரிடும்போது நமக்கு அவர்களுடைய மதிப்பு புரிவதில்லை.

 

வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதும், இப்பூவுலகத்திலிருந்து மறையும்போதும் நம்முடன் இருப்பவர்கள் குடும்பத்தினர்தான். (இடையில் வரும் நண்பர்கள் நிலைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது).

 

இதனாலேயே, குடும்பத்தில் நடக்கும்போது முக்கியமாகப் படாத சில விஷயங்கள் பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் நல்ல நினைவாக நிலைத்திருக்கும். உற்றார் நம்மைத் திட்டியது நல்வழிப்படுத்துவதற்குத்தான் என்று மனம் தெளிவடையும்.

 

::கதை::

இந்தப் பெண் ஓயாமல் படிக்கிறதே! கண் கெட்டுவிடுமே!” என்று என் பாட்டி தினமும் வீட்டில் நட்டிருந்த மரத்திலிருந்து முருங்கைக்கீரையைப் பறித்து, நெய்யில் வதக்குவார்கள் – என் ஒருத்திக்கு மட்டும். மற்ற சமயங்களில் எல்லாம் ஓயாமல் திட்டுவார்கள்! என்னை முன்னுக்குக் கொண்டுவருவதாக எண்ணியதன் விளைவு!

 

அப்போது, திட்டுதான் மனத்தில் பதிந்தது. (எவ்வளவு திட்டினாலும், நான் வாயே திறக்கமாட்டேன். அதுவே பாட்டிக்குப் பலமாகிப் போனதோ?)

 

பல வருடங்கள் கழித்துத்தான் அந்த அன்பு, கரிசனம் புரிந்தது.

 

அன்பான குடும்பத்தினருக்கு நம் ஆற்றல், பலவீனங்கள் இரண்டும் புரிய, கேலி செய்யாது, இருக்கிறபடியே நம்மை ஏற்பார்கள். அபூர்வமாக, இத்தகைய நண்பர்கள் அமைவதும் உண்டு.

 

தூண்டுகோல்

குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்கும் பெற்றோர் அவர்கள் முன்னேறத் தூண்டுகோலாக அமைகிறார்கள்.

 

கீழே விழும்போதோ, அல்லது ஏதாவது ஆபத்து வரும்போதோ, `அம்மா!’ என்றுதானே கத்துகிறோம்?

 

அம்மா எவ்வளவுதான் திட்டினாலும், பள்ளிக்கூடத்தில் தன்னைத் தோழிகள் வாட்டுகிறார்கள் என்று சொல்லியபடி ஒரு சிறுமி வீடு திரும்பும்போது ஆறுதலாக நான்கு வார்த்தை கூறுவாள்.

 

இப்போதெல்லாம்,` நான் என் குழந்தைகளுக்கு quality time அளிக்கிறேன்,’ என்று பெருமையாகப் பேசுகிறார்கள் பெண்கள். ஆனால், குழந்தைகளுக்குத் தேவையானபோது அருகில் இருக்கமாட்டார்கள்.

 

மனம் கசந்து, நண்பர்களை நாடுவார்கள் பிள்ளைகள்.

 

::கதை::

நான் நேபாளத்திற்குச் சென்றிருந்தபோது, துருக்கி நாட்டிலிருந்து வந்திருந்த எக்ரின் என்ற பெயர்கொண்ட பெண்மணியைச் சந்தித்தேன்.

 

தன் தாயுடனும், இரு சிறு, ஆண்குழந்தைகளுடனும் வசித்து வருவதாகச் சொல்லியிருந்தாள்.

 

மலைப்பாங்கான நேபாள நாட்டில், எளிதில் செல்ல முடியாத இடங்களிலும் போலியோ மருந்து கிடைக்கும்படிச் செய்வதாகக் கூறினாள். “அடிக்கடி வருகிறேன்,” என்றும் தெரிவித்தாள் எக்ரின்.

 

நான் சற்றும் யோசியாது, “உன் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்கிறாயோ?” என்று கேட்டேன்.

 

என் மாணவ மாணவிகளில் பலர், பெற்றோரின் கண்காணிப்போ, அரவணைப்போ இல்லாததால் பதின்ம வயதில் தீய பழக்கங்களுக்கு ஆளானதைக் கண்டிருந்ததால் அப்படி ஒரு கேள்வி எழுந்தது.

 

அன்பான குடும்பத்தினால்தானே ஒருவர் நற்குணவானாகிறார்!

 

`தந்தை இல்லாத வீடு’ என்று அவள் சொல்லாமலே புரிந்திருந்தது. தாயும் அடிக்கடி, `சமூக சேவை செய்கிறேன்’ என்று வெளிநாடு போனால் குழந்தைகள் யாரை நாடுவார்கள்?

 

முகம் மாறாது, “ஆம். முடிந்த போதெல்லாம், அவர்களையும் என்னுடன் இங்கு அழைத்து வருவதுண்டு,” என்று பதிலளித்தாள் எக்ரின்.

 

சமூக சேவைக்கு முக்கியத்துவம் அளித்து, குடும்பத்தில் அக்கறை காட்டாமல் இருந்துவிடவில்லை அவள்.

 

தாயின் அன்பு கிடைத்ததால் குழந்தைகளும் ஒற்றுமையாக வளர்வார்கள்.

 

ஒற்றுமை இழந்த குடும்பங்கள்

பெரிய குடும்பங்களில் பெண்கள் தம் சகோதரர்களுக்கு எதிராகக் கூட்டணி அமைப்பார்கள். பெற்றோர் மகன்களுக்கு அதிகமான சுதந்திரம் அளிக்கிறார்களே என்ற ஆத்திரமாக இருக்கலாம். அல்லது, அவர்களது குணாதிசயங்கள் பிடிபடாமல் இருக்கலாம்.

 

வேறு சில குடும்பங்களில், `மகள் கல்யாணமாகி, புக்ககத்திற்குப் போய்விட்டால் அங்கு அவளை எப்படி நடத்துவார்களோ!’ என்ற கரிசனத்துடன், மிக அருமையாக நடத்துவார்கள். அவளுடைய சகோதரர்களுக்கு, `நாம் ஏதோ விதத்தில் மட்டம்!’ என்ற தாழ்வு மனப்பான்மை எழுப்பும்.

 

`எங்கள் பெற்றோருடன் ஒரே குடும்பத்தில்தான் வளர்ந்தோம். ஆனால், எங்களிடையே இருக்கும் வேறுபாட்டால் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை!’ என்று நினைப்பவர்கள் புரிந்துகொள்ளாதது — ஒரு மரத்தின் கிளைகள் ஒன்றுபோல் இல்லாவிடினும், வேர் ஒன்றுதான்.

 

::கதை::

பொறுப்பில்லாத, சுயநலமியான தந்தையால் அக்குடும்பமே கஷ்டப்பட்டது. தாய் வேலை செய்து பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய நிலை. அவர்களுக்காக நேரத்தையோ, அன்பையோ அவளால் அளிக்க முடியவில்லை.

 

குழந்தைகளிடம் ஒற்றுமை என்பது அறவே இல்லாமல் போயிற்று. சண்டை, பொறாமை என்று வளர்ந்தார்கள்.

 

அச்சூழ்நிலையில் வளர்ந்த ஐயாசாமி தனக்கு ஒரு குடும்பம் அமைந்தால், அது இப்படி இருக்கக்கூடாது என்று தீர்மானித்தான்.

 

புரிந்துணர்வு மிக்க மனைவியைத் தேடிப்பிடித்தான். ஆனால், கடந்த காலத்தின் கசப்பை மறக்க முடியாது, தன் நிம்மதியையும், அத்துடன் மனைவி, குழந்தைகளின் நிம்மதியையும் பறித்தான்.

 

தான் சிறுவயதில் பெறாத அன்பை எப்படித் திருப்பிக் கொடுப்பது என்று அவனுக்குப் புரியத்தானில்லை. ஓய்வு நேரங்களில்கூட குடும்பத்தைச் சரியாகக் கவனிக்கத் தோன்றவில்லை.

 

வாலிபமும் பணமும் இருந்த காலத்தில் ஐயாசாமிக்கு அமைந்த நண்பர்கள் வயது முதிர்ந்த காலத்தில் காணாமல் போனார்கள். அப்போது குடும்பத்தின் ஆதரவு வேண்டியிருந்தது.

 

தான் அவர்களைச் சரிவரக் கவனிக்காமல் போனோமே என்ற வருத்தம் மிகுந்தது. பணத்தைவிடக் குடும்பம்தான் முக்கியம் என்று உணர்ந்தான்.

 

பணம்தான் எல்லாமா?

`பணமே பிரதானம்’ என்று கழித்த காலம் போனதும்தான் அன்பு, நட்புடன் கூடிய பாதுகாப்பான உறவு போன்றவற்றின் அருமை புலனாகிறது.

 

அன்பான குடும்பத்தில் வளர்ந்திருந்தாலும், உத்தியோகத்தில் மிகச் சிறக்கவேண்டும், வெற்றிகள் பல அடையவேண்டும் என்ற வெறியுடன் காலத்தைக் கழித்தவர்களுக்கும் வயது முதிர்ந்த காலத்தில் வருத்தம் எழும் – குடும்பத்தைச் சரிவரக் கவனியாது போனோமே என்று.

 

பண்டிகைக் காலங்கள்

பண்டிகை என்றாலே குழந்தைகளுக்கு உற்சாகம்தான்.

 

மலேசியாவில், சீனப் புத்தாண்டின்போது நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் தம் குழந்தைகளுடன் வெளியூர்களில் வசிக்கும் பெற்றோரைப் பார்க்கப் போவது வழக்கம். வருடத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக இப்படிப் போவார்கள். மற்ற சமயங்களில் குழந்தைகளுக்குப் பரீட்சை, அல்லது வேறு ஏதாவது அசௌகரியம் நிகழ்ந்துவிடும்.

 

தொற்றுநோயைத் தடுக்கவென, இவ்வருடம் பத்து கிலோமீட்டருக்குள்தான் பயணிக்க வேண்டும் என்று பல மாநிலங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

இதில் மிக வருந்தியவர்கள் வயது முதிர்ந்த பெற்றோர். என்னதான் ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டாலும், நேரில் பார்த்து, தம் தனிமையின் ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள பேரக் குழந்தைகளை அரவணைப்பதுபோல் ஆகுமா?

 

எல்லாரும் எப்போதும் ஒன்றாக இருந்தால் போட்டி, மனத்தாங்கல் என்று ஏதாவது குழப்பங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், அவ்வப்போது மட்டுமே சந்திப்பவர்களுக்கு இடையே ஒற்றுமை விலகாதிருக்கும். தம்பதியரோ, பெரிய குடும்பத்தினரோ, எல்லாருக்கும் இந்த விதி பொருந்தும்.

 

எந்தக் குடும்பமும் பிரச்சினைகள் இல்லாது இருப்பதில்லை. ஆனால், அதில் ஒற்றுமை இருந்தாலே போதும். வெளியில் ஏற்படும் எந்தப் பிரச்சினையையும் சமாளித்துவிடலாமே!

:-நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

No comments:

Post a Comment