பழகத் தெரிய வேணும் – 52

இந்த மனிதர்களின் மனம்!

வீண் வேலை! இவ்வளவு சிறிய மல்லிகைக் கிளையை உடைத்துவந்து நடுகிறாயே! எங்காவது செடி முளைக்குமா?” அவநம்பிக்கை தெரிவித்தாள் தாய்.

 

ஏன் செய்கிறோம் என்றே புரியாது எதையாவது ஆரம்பித்துவிட்டு, சக்தி, நேரம் இரண்டையும் வீண்டிக்கும் பலரைக் கண்டிருப்பவள் அவள்.

 

சீத்தலைச் சாத்தனாரைப்போல், செய்த தவற்றுக்காகத் தன்னையே தண்டித்துக் கொண்டுவிடுவாளோ மகள் என்ற அனுசரணையே அத்தாயை அவநம்பிக்கை தெரிவிக்க வைத்திருக்கும்.

முளைக்கும்,” என்றாள் கீதா, உறுதியாக.

அவள் நினைத்தபடியே ஆயிற்று.

ஒருக்கால் அந்தச் சிறிய கிளை பெரிய செடியாக வளர்ந்திருக்காவிட்டாலும், கீதா மனம் தளர்ந்திருக்கமாட்டாள். அடுத்தமுறை, வேறு விதமாகச் செய்துபார்ப்பாள்.


நல்லதுதான் நடக்கும், வெற்றி கிட்டும் என்ற குணம் முன்னுக்கு வருபவர்களுக்கே உரித்தானது.

 

நானா! தவறு செய்தேனா!

தான் செய்தது தவறுதான் என்று புரிந்தும், `அது சரிதான்!’ என்று வாதாடுபவர்களுக்கு, `பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லையே!’ என்ற ஏக்கம் இருக்கும்.

 

செய்வது சிறிய காரியமாக இருந்தாலும் அதைச் செவ்வனே செய்து முடித்தால் போதாதா?

 

`அதிகம் படிக்க முடியவில்லை, பணக்காரனாக ஆக முடியவில்லை’ என்று தம் விதியை எண்ணி நொந்து, தாம் பின்தங்கிவிட்டதற்குச் சந்தர்ப்ப சூழ்நிலையைக் குற்றம் சாட்டுபவர்கள் அநேகர்.

 

ஒருவருக்கு திறமை, ஊக்கம் இரண்டும் இருக்கலாம். இருப்பினும், எடுத்துக்கொண்ட காரியத்தைப்பற்றிய மனப்பான்மையே அது எவ்வளவு சிறப்பாக அமையும் என்பதை நிர்ணயிக்கிறது.

 

`எனக்குத் திறமையும், உழைப்பும், எல்லாவற்றிற்கும் மேலாக, `நான் முன்னுக்கு வருவேன்’ என்கிற திடமான நம்பிக்கையும் இருக்கிறதே!’ என்று சிந்தித்தால், எவரும் முன்னுக்கு வரலாம்.

 

இருவருக்கு ஒரேமாதிரியான அனுபவம் ஏற்பட்டிருக்கும். ஆனால், அவர்கள் அதை எதிர்கொள்வது வெவ்வேறாக அமையக்கூடும். அதனால் அவர்கள் வாழ்க்கையின் திசையே மாறுபட்டுவிடும்.

 

::கதை::

சகோதரிகள் பாமா, ருக்மணி இருவருமே உறவினர் ஒருவரால் பாலியல் வதைக்கு ஆளானார்கள். வெவ்வேறு தருணங்களில்.

 

அந்தச் சம்பவம் தீராத வடுவை ஏற்படுத்திவிட்டது சிறியவள் ருக்மணிக்குள். எந்த ஆணையுமே நம்பக்கூடாது, எல்லாருமே காமுகர்கள் என்று தீர்மானித்தாள். எத்தனை வயதாகியும், அவளது முடிவு மாறவேயில்லை.

 

திருமணமான பின்னரும், கணவர் பிற பெண்களுடன் பேசிப் பழகினால், அச்சம் ஏற்பட்டது. அவரும் ஆண்தானே! மயங்கிவிடுவாரே!

 

ருக்மணியைப்போன்றுதான் பலரும் நடக்கிறார்கள். வாழ்வில் நடப்பது பத்து சதவிகிதமாக இருந்தால், அதை நினைத்து அஞ்சி, வருந்தி, இன்னும் பல எதிர்மறைக் குணங்களுக்கு ஆளாகித் தவிப்பது மீதி.

 

பாமாவோ, `அது ஒரு கெட்ட நிகழ்வு’ என்று ஒதுக்கினாள். மறக்க முடியாததாக இருந்தாலும், பிறரிடம் எப்படி ஜாக்கிரதையாகப் பழகவேண்டும் என்று அதிலிருந்து பாடம் கற்றாள். உத்தியோகம் வகிக்கையில், ஆண்களுடன் பழகவேண்டிய சந்தர்ப்பங்கள் அமைந்தபோது, அவர்கள் குணாதிசயங்கள் பிடிபட்டன. எல்லாருமே தீயவர்கள் அல்லர் என்று தெளிந்தாள்.

 

`ஆண்களுடன் இவ்வளவு சகஜமாகப் பேசுகிறாயே!’ என்று தங்கை முகம் சுளித்தாள்.

 

பாமா தன் பங்கு நியாயத்தை எடுத்துச்சொல்ல முயலவில்லை.

 

குழந்தைகள் போலிருப்பது

பிறர் நம்மிடம் குறை கண்டுபிடித்தால், உடனே அவரிடம் என்ன தவறு என்று கூறித் தாக்குவது சிறுபிள்ளைத்தனம்.

 

இருப்பினும், குழந்தைகளிடமிருந்து நாம் கற்கவேண்டியது நிறையவே இருக்கிறது. நாம் வளர, வளர, சிறுவயதிலிருந்த பல நற்குணங்களை விட்டுவிட்டோம்.

 

முக்கியமாக, சிறு குழந்தைகள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுக் கொள்வதில்லை. விலை உயர்ந்ததாக இருக்கிறதோ, இல்லையோ, எந்தப் பொருளையும் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள்.

 

கத்தரிக்காய் காம்பில் நூல் கட்டி, `வண்டி!’ என்று இழுத்துக்கொண்டு போவதும், பூசணி விதையை ஒருவர்மேல் ஒருவர் பிதுக்குவதும் குதூகலமான விளையாட்டுகள் அவர்களுக்கு!

 

எதுவும் இல்லாதபோது பொறுமை, எல்லாம் இருக்கையிலும் நிதானமாக நடப்பது – இவைகளால்தான் ஒருவர் உருவாகிறார்,” என்கிறார் BERNARD SHAW.

 

எந்தப் புதிய விஷயத்திலும் ஆர்வம் காட்டுவது குழந்தைகளின் குணம்.

 

அதேபோல், எத்தனை வயதானாலும், நம்மைச்சுற்றி நடப்பதில் ஆர்வம் காட்டுவது உற்சாகத்தை நிலைக்க வைத்திருக்கும் வழி.

 

`குழந்தைபோல் இருக்கிறாள்!’ என்று சிலர் பழிக்கப்படுவார்கள். வயதுக்குரிய திறமையும், ஆற்றலும் இருந்தால், எதிலும் காட்டும் ஆர்வத்தையும் குறையாமல் பார்த்துக்கொண்டால் என்ன தவறு? அப்போதுதானே மகிழ்ச்சி குன்றாமல் இருக்கலாம்? நம்மைச் சுற்றி எப்போதும் சிரிப்பு நிலைத்திருக்கும். இல்லாவிட்டால், ஒவ்வொரு நாளும் செய்த காரியத்தையே செய்ய நேரிடும்போது வாழ்வில் சலிப்புதான் ஏற்படும்.

 

விளையாட்டு வீரர்களை எடுத்துக்கொள்ளுங்கள். `சவால்!’ என்று, சிறுகச் சிறுகத் தம் திறனை உயர்த்திக்கொண்டே போவார்கள். தற்காப்புக் கலைகளில், வெள்ளை இடுப்புப்பட்டியில் ஆரம்பித்து, மஞ்சள், சிவப்பு என்று படிப்படியாக உயர வழிசெய்திருக்கிறார்கள். கற்றதையே மீண்டும் மீண்டும் கற்றால், யாருக்குத்தான் அலுப்பு ஏற்படாது!

 

சொல்லிக்கொடு, திட்டாதே!

இப்போதெல்லாம், பேனாவால் எழுதுமுன் அதில் மை இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வேன்.

 

சிறுவயதில், இப்படித் திட்டமிடத் தோன்றாததால் ஓர் ஆசிரியையிடம் நிறையத் திட்டு வாங்கினேன்.

 

இலக்கை நோக்கிப் பயணிக்கையில், அதை எப்படி அணுகுவது என்ற திட்டம் வகுக்க வேண்டும் என்பது அப்போது புரியவில்லை.

 

அவரைச் சொல்லியும் குற்றமில்லை. எனக்குப் பத்து வயதாக இருந்தபோது, பேனா இருந்தால், அதில் மை இருக்காது. இல்லையேல், கீழே போட்டதில் அதன் கூர்முனை உடைந்திருக்கும்.

 

`ஒழுங்கீனம் பிடிச்ச பிள்ளை!’ என்று வாய்க்கு வாய் திட்டாது, என்ன செய்திருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம். நொந்த மனதுடன், `ஏன் இப்படி?’ என்று யோசித்து, நானே கற்கும்படி ஆயிற்று.

 

இளம்வயதினரை ஓயாது திட்டினால்தான் முன்னேறச் செய்ய முடியும் என்று (தவறாக) நம்பிய காலம் அது.

 

அதற்கடுத்த வருடம், பள்ளி திறந்து ஒரு வாரத்துக்குள், `இந்தப் பிள்ளை இப்போ ரொம்ப சமர்த்தாகிட்டா!’ என்று என் ஒருத்தியைமட்டும் பாராட்டினார் அந்த ஆசிரியை.

 

அன்று கற்ற பாடத்தால், இன்றுவரை, கறிகாயை நறுக்குமுன் கத்தியைத் தீட்டிக்கொள்வதும் பழக்கமாகிவிட்டது.

 

என்னதான் நினைப்பார், நினைக்கட்டுமே!

ஒரு கோயில் சன்னிதானத்தில் ஒருவர் பாடிக்கொண்டிருந்தார் — இசைக்கும் அப்பாடகருக்கும் வெகு தூரம் என்ற அயர்ச்சி எழுப்பும் அளவுக்கு.

 

பக்தியுடன் பாடினால் அவருக்கு நிம்மதி, மகிழ்ச்சி. `பிறர் என்ன நினைப்பார்கள்!’ என்ற கேள்விக்கே அங்கு இடமில்லை. பிறருக்காகத் தன் உற்சாகத்தை விட்டுக்கொடுக்க அவர் தயாரில்லை. அவருடையது சரியான அணுகுமுறை.

 

மூளை செய்யும் வேலை

நம்மையும் அறியாது, சுற்றி இருப்பவர்களைப்போல் நடக்க முனைகிறோம். இது நம் மூளையிலுள்ள நியூரான் செய்யும் வேலை.

 

இது புரிந்து, ஆக்ககரமாகச் சிந்திப்பவர்களை நண்பர்களாக ஏற்கவேண்டும். ஆனால், இப்படிப்பட்டவர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. ஏனெனில், பலரும் எப்போதும், எதைப்பற்றியாவது, குற்றமாகப் பேசுவதால், நாமும் அவர்களைப்போல் ஆகிவிடுகிறோம்.

 

இது புரிந்து, அவர்களுடன் சேர விரும்பாது, தனியாக இருந்தால், `பழகத் தெரியவில்லை.  அசடு! முட்டாள்!’ என்று பிறர் தூற்றக்கூடும்.

 

தம்மைப்போல் இல்லாதவர்களையெல்லாம் பழிப்பது பலகீனமானவர்களின் வழக்கம் என்று விடவேண்டியதுதான்.

 

முட்டாள்கள் நிறைந்த இடத்தில் மௌனமே சிறந்தது”.

:-நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment