விரைவாக தயாரிக்கப்படக்கூடிய mRNA தடுப்பூசிகள்
தொற்றுநோய் தொடங்கியவுடன், கோவிட் -19 க்கு எதிராக மக்களைப் பாதுகாக்கக்கூடிய தடுப்பூசியை
உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மருந்து
நிறுவனங்களில் சில mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவெடுத்தன.
இத்தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எந்த தடுப்பூசியும் இதற்கு முன்பு
மனிதர்களுக்கான பாதுகாப்பான பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டதில்லை.
ஆனால், இந்த துணிவான முயற்சி பலனளித்தது. Pfizer-BioNTech,
Moderna போன்ற நிறுவனங்கள் mRNA
தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி மிகத் துரிதமாக Covid-19 க்கான தடுப்பூசியை உருவாக்கியதோடு, இம்முறையைப் பயன்படுத்தி புதிய சிகிச்சைகளை மேற்கொள்வது
குறித்த ஆராய்ச்சிக்கான கதவுகளையும் திறந்து விட்டது.
mRNA எனப்படும் மரபணுக்
குறியீட்டின் ஒரு சிறிய பகுதியை எடுத்து கொழுப்புடன் இணைத்து இந்த செயல்முறை
உருவாக்கப்பட்டது. இந்த கலவை செல்களால் உறிஞ்சப்படக்கூடியது.
கோவிட்-19 வைரஸின் ஆபத்தில்லா ஒரு சிறிய பகுதியை உருவாக்க நமது
செல்களுக்கு இந்த வகை கொரோனா தடுப்பூசிகளில் உள்ள mRNA
அறிவுறுத்துகிறது.
இதன்மூலம் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு வைரஸை அடையாளம் காணக் கற்றுக்கொள்ள
முடியும். அதன் பின்னர் ஒருவேளை நாம் உண்மையான கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டால்
நமது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அதனைத் தாக்கத் தயாராக இருக்கும். ஆனால் வேறு பல
வழிகளில் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் கொண்டது இந்த mRNA.
எச்.ஐ.வி, காய்ச்சல் மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களுக்கான
தடுப்பூசிகளை உருவாக்குவதுடன், புற்றுநோய் செல்களைத் தாக்க உடலின் நோயெதிர்ப்பு
மண்டலத்தைப் பயிற்றுவிக்க இது பயன்படுத்தப்படலாம்.
இதுமட்டுமல்லாமல் சிஸ்டிக்
ஃபைப்ரோஸிஸ் உள்ளவர்களின் உயிரணுக்களில் இல்லாத புரதங்களை உருவாக்கவும், மல்டிபிள் ஸ்க்ளீரோசிஸ் உள்ளவர்களின் நரம்பு மண்டலம்
தாக்கப்படுவதைத் தடுக்க உடலின் பாதுகாப்பு அமைப்புக்கு கற்பிக்கவும் இது
பயன்படலாம்.
mRNA சிகிச்சைகள் பற்றிய ஆராய்ச்சி
பல தசாப்தங்களாக நடந்து வருகிறது. ஆனால், நடைமுறையில் முதன்முறையாக அவை வேலை செய்வதாகப்
பதிவுசெய்யப்பட்டுள்ளது கோவிட்-19 தடுப்பூசிகளில் தான். இந்த முடிவுகள் மில்லியன் கணக்கான
மக்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய புதிய ஆராய்ச்சிகளை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடும்.
கணிக்கப்பட்டதை விட காற்றில் எளிதாகப் பரவும் கோவிட்-19
கோவிட் -19 பரவல் தொடங்கி சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு,
"கோவிட் 19 காற்றில் பரவாது," என்று உலக சுகாதார அமைப்பு ஒரு ட்வீட் செய்தது. மேலும், மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் நிபுணர்கள் அப்போது
அறிவுறுத்தவில்லை.
உலக சுகாதார அமைப்பின் சுகாதார
அவசரநிலை திட்ட நிர்வாக இயக்குநர் டாக்டர் மைக்கேல் ரையான் கூறுகையில்,
"மக்கள் முகக்கவசங்களை
அணிவதால் குறிப்பிட்ட நன்மைகள் உள்ளன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை,"
என்றார்.
"நீங்களே
நோய்வாய்ப்பட்டிருந்தால் ஒழிய முகக்கவசங்களை பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்க
மாட்டோம்" என்று கோவிட் -19 தொழில்நுட்ப அமைப்பின் தலைவர் மரியா வான் கெர்கோவ்
கூறினார். ஆனால், தொற்று தொடங்கிய பிறகு இந்த கண்ணோட்டங்கள் மாறத்தொடங்கின. WHO இப்போது "மக்கள் முகக்கவசம் அணிவதை வாழ்வின் இயல்பான
பகுதியாக மாற்ற வேண்டும்" என்று கூறுகிறது.
ஏனென்றால், இருமல் மற்றும் தும்மலின் போது வெளிப்படும் உமிழ்நீர்
அல்லது சளியின் பெரிய துளிகளால் மட்டுமே கோவிட் ஏற்படுவதில்லை என்றும், இது ஏரோசோல்கள் மூலமாகப் பரவக்கூடும் என்றும் உலக சுகாதார
அமைப்பு சொல்கிறது.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் ஒன்றின்
தலையங்கத்தில், "ஒரு நெரிசலான இடத்தில் வாய், கண்கள், மூக்குகளில் நீர்த்துளிகள் பட்டு வைரஸ் பாதிப்புக்கு
உள்ளாவதை விட சுவாசித்தல் மூலம் உள்ளிழுக்கப்பட்டு பாதிப்புக்கு ஆளாகவே வாய்ப்பு
அதிகமுள்ளது," என்கிறது.
கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களால் 2 மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள மற்றவர்களுக்குத்
தொற்று ஏற்பட்டதற்கான உதாரணங்களை இந்த ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
"மார்ச் [2020]
மாதத்தில், பீன்ஸ் கேனை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன், அதனை எவ்வளவு நேரம் ப்ளீச்சில் ஊற வைக்க வேண்டும் என்று
கேட்க மக்கள் என்னை அழைத்தனர். எல்லோரும் ஒருவித அதீத விழிப்புணர்வோடும் அதிக
சித்தப்பிரமை பிடித்தவர்கள் போலவும் இருந்தனர்" என்கிறார் நோயெதிர்ப்புத்
துறையின் புகழ்பெற்ற பேராசிரியர் பவுலா கேனான்.
"மோசமான காற்றோட்டம் கொண்ட
இடம் மற்றும் முகக்கவசம் இல்லாமல் பேசும்போது உமிழப்படும் காற்று ஆகியவற்றின்
மூலமே இந்த வைரஸ் அதிகம் பரவுகிறது என்பதால் காற்றோட்டம் இல்லாத பார்கள் மற்றும்
உணவகங்கள் மிகவும் ஆபத்தானதாக இருப்ப நாம் கண்டறிந்துளோம்,"
கைகளைக் கழுவுதலைக் கடந்து முகக்கவசம்
அணிதல் மற்றும் சுற்றுப்புற காற்றோட்டம் ஆகியவையும் ஆரோக்கியமான சுகாதார பழக்கமாக
மாறியுள்ளன.
வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும்
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான
மக்கள் தொற்றுநோய்களின் போது அலுவலகம் மற்றும் பணியிடங்களிலிருந்து வீட்டிற்கு
அனுப்பப்பட்டனர். பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யக்
கூறின.
ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு
சாத்தியமாகியிருக்க வாய்ப்புகள் இல்லாத பல விஷயங்கள் கோவிட் நேரத்தில்
சாத்தியமாகின.வீடியோ அழைப்புகள் போன்ற விஷயங்களைப் பலராலும் எளிதாகச் செய்ய
முடியும் எனக் காட்டியிருக்கிறது இந்த கோவிட் காலம். லட்சக்கணக்கான மக்கள் நாம்
வேலையைச் செய்யும் விதத்தை இது மாற்றக்கூடும் என்று தெரிகிறது.
சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர் மே 2020
-ல் வெளியிட்ட அறிவிப்பு
ஒன்று உலகம் முழுவதும் பேசுபொருளானது. "வீட்டிலிருந்தே வேலை செய்யக்கூடிய
பதவியிலும் சூழலிலும் இருக்கும் ட்விட்டர் ஊழியர்கள் அனைவரும் இனி எப்போதுமே
வீட்டிலிருந்து வேலை செய்யலாம்," என்கிறது அந்த அறிவிப்பு.
ட்விட்டரை தொடர்ந்து ஃபேஸ்புக்
நிறுவனமும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது. எண்டர்பிரைஸ் டெக்னாலஜி ரிசர்ச் 1,200 நிறுவனங்களில் நடத்திய கருத்துக்கணிப்பில்,
2021 ஆம் ஆண்டில் நிரந்தரமாக
வீட்டிலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களின் சதவீதம் இரட்டிப்பாகும் என்று
கணிக்கப்பட்டது.
பாஸ்டன் கன்சல்டிங் சார்ப்பில் 190 நாடுகளில் 200,000 பேரிடம் நடத்தப்பட்ட ஓர் உலகளாவிய கணக்கெடுப்பில்,
89% மக்கள் சில நேரம்
வீட்டிலிருந்து பணியாற்றுவது சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகக்
கண்டறியப்பட்டது. கோவிட் தொற்றுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 31 சதவிகிதம் பேர் மட்டுமே.
உடல் உழைப்பால் மேற்கொள்ளக்கூடிய சில
வேலைகளைச் செய்யக்கூடியவர்களும் வீட்டிலிருந்து தங்களால் பணியாற்ற முடியும் என
நம்புகின்றனர். ஆனால், இதனால் பலருக்கும் ஊதியம் மற்றும் வேலை உத்தரவாதம்
குறைவாகவே இருக்கும். இது சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கலாம்.
சமநிலையற்று இருக்கும் இந்த உலகத்தை
ஒரு கோவிட் பெருந்தொற்று இன்னும் மோசமானதாக ஆக்கக்கூடும். பிரிட்டனில், UK
Biobank நடத்திய ஆய்வின்படி, நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வசிப்போரில் 11.4% பேர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சற்று முன்னேறிய
பகுதிகளில் வசிப்போரில் 7.8% பேர் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தைச்
சேர்ந்த மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர்.
2020 தரவுகளின்படி, நியூயார்க்கில் பதிவான மொத்த கோவிட் மரணங்களில் ஹிஸ்பானிக்
(லத்தீன் அமெரிக்கர்) மக்கள் மற்றும் கறுப்பின மக்கள் முறையே 34% மற்றும் 28% இறப்புகளைக் கொண்டிருந்தனர். ஆனால், அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இவர்களது பங்கு
முறையே 29% மற்றும் 22% மட்டுமே ஆகும். பல நாடுகளில், கோவிட் பாதிப்புகள் பற்றிய துல்லியமான தரவுகள் பதிவு
செய்யப்படவில்லை. அதேபோல, தடுப்பூசி விகிதங்களில் உலகம் முழுவதும் மிகப்பெரிய
ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன.
உயர் வருமானம் மற்றும் நடுத்தர
வருமானம் உள்ள நாடுகளில், சுமார் 70% மக்கள் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் என்று
தரவுகள் தெரிவிக்கின்றன. குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் இது வெறும் 4% ஆகக் குறைகிறது. குறைவான நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில்
தடுப்பூசி செலுத்தியவர்கள் விகிதம் 32% மட்டுமே. வளர்ந்த நாடுகளில் ஒமிக்ரான் வகை கொரோனாவை
கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் பூஸ்டர் டோஸ்களை வழங்கிவரும் நிலையில், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் தடுப்பூசிகள் போதிய
வேகத்தில் மக்களைச் சென்று சேராதது மிகப்பெரிய ஆபத்தாக மாறக்கூடும்.
விடையற்ற வினாவாய் கோவிட்டின் முடிவு
தொற்றுநோயின் தொடக்கத்தில் 'ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி' ஒரு முக்கிய வார்த்தையாக மாறியது. தொற்றுக்கு ஆளாவது மூலமோ
அல்லது தடுப்பூசி மூலமோ பெருவாரியான மக்கள் எதிர்ப்புசக்தியை பெற்றுவிட்டால்
வைரஸின் அச்சுறுத்தல் குறையும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அதை அடைவது கடினமானதாகவே இருக்கிறது. ஏனென்றால், வைரசுக்கு எதிரான நமது நோயெதிர்ப்பு அமைப்பின் செயல்பாடு
காலப்போக்கில் குறையத் தொடக்கி விடுகிறது. அதனால்தான் தடுப்பூசி பூஸ்டர்
திட்டங்களைப் பல நாடுகளும் கையில் எடுத்துள்ளன. தொற்று அல்லது தடுப்பூசிக்குப்
பிறகு நோய் எதிர்ப்பு சக்தி சுமார் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை மட்டுமே
நீடிக்கும் என்கிறார் தென்னாப்பிரிக்காவின் விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தின்
தடுப்பூசி பேராசிரியரான ஷபீர் ஏ மதி தடுப்பூசிகள் தீவிர நோய் தாக்குதலுக்கு
ஆளாகாமல் காப்பாற்றுவதில் திறம்பட செயல்படும் அதே வேளையில், வைரஸால் பாதிக்கப்படுவதையோ, வைரஸ் மற்றவருக்கு பரவுவதையோ அவை தடுக்கவில்லை.
"நம்மிடம் உள்ள தடுப்பூசிகளால், வைரஸ் பரவல் குறைந்தாலும், 'ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி' என்ற கருத்துருவில் அர்த்தம் இல்லை,"
என்று ஸ்பெயினில் உள்ள FISABIO
ஆராய்ச்சி நிறுவனத்தைச்
சேர்ந்த டாக்டர் சால்வடார் பீரோ பிபிசி பேட்டியில் கூறினார். மேலும், வைரஸ் விரைவாக புதிய மாறுபாடுகளாக மாற்றமடைகிறது. அவற்றில்
சில திரிபுகள் நிச்சயமாக வேகமாகப் பரவக்கூடியதாகவும் தடுப்பூசிகளால் சமாளிக்க
சிரமமானவையாகவும் இருக்கும். புதிய திரிபுகளுக்கு ஏற்ப தடுப்பூசிகளைத் தொடர்ந்து
புதுப்பித்துக்கொண்டே நாம் அவற்றுடன் வாழ வேண்டும் என்பதையும் இந்த புதிய
மாறுபாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்தச் சூழ்நிலையில், ஒருசிலர் கோவிட் நோயால் நோய்வாய்ப்பட்டாலும் சுகாதார
அமைப்புகளுக்கு அது சிக்கலாக இருக்காது என்பதால், அதிக தடுப்பூசி போடப்பட்ட நாடுகள் இயல்பு நிலையிலேயே
செயல்பட்டன. ஆனால், ஒமிக்ரான் பரவலின் அதிகரிப்பைத் தொடர்ந்து, அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடுகளிலும் பூஸ்டர்
டோஸ்கள் போட மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். அதேபோல சமூக இடைவெளியை
கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் கோவிட் நோயை எவ்வாறு
கையாள்வது என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. பிரிட்டன் போன்ற சில நாடுகள்
கட்டுப்பாடுகளை முன்னரே கைவிட்டாலும் சீனா போன்ற மற்ற நாடுகள் பூஜ்ஜிய கோவிட்
கொள்கையை நீண்ட காலம் கடைப்பிடித்தன.
-பிபிசி
தமிழ்
0 comments:
Post a Comment