மகாவம்சத்தில் புதைந்துள்ள… (பகுதி 29)

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

 


தமிழ் காப்பியம் குண்டலகேசி, மணிமேகலை [Kundalakesi and Manimekalai] புத்த சமயம் சார்ந்த இலக்கியமாகும். தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தமிழர் மத்தியில் 1ஆம் நூற்றாண்டிற்கும் 6ஆம்  நூற்றாண்டிற்கும் இடையில்  செல்வாக்கு பெற்றிருந்த புத்த மதம், அதன் பின் சைவ நாயனார்களின் வருகையால், முழுமையாக செல்வாக்கு இழந்து விட்டது. எனவே பௌத்தம் என்பது வெறுமனே சிங்களவர்களுக்கு உரித்தான ஒன்று அல்ல. இன்று சிங்களவர்களை தாண்டி பல நாடுகளில் பல மொழி பேசுபவர்களாலும் அனுசரிக்கப்படும் ஒரு மார்க்கம் ஆகும். மேலும் அன்றைய தமிழர்களால் பௌத்தம் பின்பற்றப்பட்ட ஒன்று என்பதையும் தமிழ் காப்பியங்கள் ஊடாகவும் பார்த்தோம். அதன் எச்சங்களே இன்றும் தமிழர் பகுதிகளில் எஞ்சி நிற்கும் சான்றுகள். இவற்றை சிங்கள பௌத்தத்தின் தொடர்ச்சியாக கட்டாயம் எடுத்து கொள்ள முடியாது.

 

லயனல் சரத்தின் "புராதான இலங்கையின் தமிழ் சிங்கள உறவுகள்" [Ancient Ceylon Sinhala Tamil Coordination - Sri Lanka Paperback – 1 Jan. 2006 by [Translated by S.P.D. Buddhadasa] Lionel Sarath (Author)] என்ற புத்தகம், தமிழ் மக்கள் சக நாட்டினர் என்ற உணர்வுடன் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் வேண்டும் என்பதை தக்க ஆதாரங்களுடனும் மற்றும் பாரம்பரியமாக தமிழ் விரோதத்திற்கு மேற்கோள் காட்டப்பெறும் வரலாற்று மூலங்களையே இந்த உண்மையினை வெளிப்படுத்துவதற்கு தடயங்களாக அவர் பாவித்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது. இது 1996 எழுதப் பட்டது. இவர் மேற்கொண்ட முயற்சியைப் போல வேறு சில சிங்கள அறிஞர்களும், உதாரணமாக பேராசிரியர்கள் சிறிவீர, லியன கமகே, லெஸ்லி  குணவர்த்தன, சுதர்சன் செனவிரத்ன, குமாரி ஜயவர்த்தன போன்றோர்களும் ஆற்றியுள்ளனர்..

 

கிருஸ்துக்கு முன்னரே இரு தமிழ் மன்னர்கள் சேனன்- குத்திகன் இருபத்து இரண்டு ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்துள்ளார்கள். எவ்வாறு அதற்கு முன்பு நெடுங்காலமாக, ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளாக, இருந்த அரச குடும்பத்தை இவர்கள் இலகுவாக துரத்தி விட்டது உண்மையில் வியப்பிற்குரியதே. அதற்கு அவர் [லயனல் சரத்] கொடுக்கும் காரணம், அக்காலத்தில் அநுராதபுரத்தில் தமிழ் மக்கள் வசித்து இருக்கலாம், ஏன் என்றால் வடஇந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக ஆரியர் வருவதை விடவும் தென் இந்தியாவில் இருந்து தமிழர்கள் வருவது எளிதாய் இருந்து இருக்கும் என்பதால் என்கிறர். மற்றும் அக்காலத்தில் வசித்த தமிழ் மக்களும் பௌத்த மதத்தை தழுவி இருந்தமைக்கான சான்றுகள் இருக்கின்றன என்கிறார். கி பி 9 - 21 இல் ஆட்சி புரிந்த மகாநாகனின், பட்டத்து ராணி தமிழ் இளவரசி என்றும், அவ்வாறே, சிலகாலங்களின் பின், மன்னராய் இருந்த இலநாகனின் மைந்தனாகிய சந்திரமுக சிவனின் ராணியும் தமிழ் இளவரசியே என்கிறார் [மகாநாகன் - பெரிய நாகன்,  இலநாகன் - இளநாகன் - இளமை பொருந்திய நாகன், / இதே பெயர் ஒத்த மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர், சந்தமுகசிவ - சந்திரமுக சிவ - எல்லாமே தமிழுடன் தொடர்புடைய பெயர்களே]. மேலும் தமிழ் வியாபார தலைவர்களால் பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்பட்ட குகைகளில் மூன்று குறிப்புகள் கண்டு எடுக்கப் பட்டுள்ளன என்றும், அதில் இரண்டாம் நூற்றாண்டிற்குரிய  சிலாசனமொன்று அநுராதபுரத்தில் கண்டு எடுக்கப்பட்டுள்ளது என்றும், மற்றும் இரண்டு சிலாசனங்களும் பெரிய புளியன்குளத்தில் கண்டு எடுக்கப்பட்டன என்றும் கூறுகிறார். பிரசித்தி பெற்ற வல்லிபுரம் சாசனத்திற்கும் முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இதுவாகும். அதுமட்டும் அல்ல, மேல் கூறப்பட்ட தமிழ் தலைவர்கள் பௌத்தர்கள் என்கிறார். இக்காலத்தில் தென் இந்தியா தமிழ் இராச்சியங்களிலும் பௌத்த சமயம் செல்வாக்கு பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது என்கிறார். இவ்வாறு பல உதாரணங்களை தமிழ் சிங்கள உறவுகளுக்கு எடுத்து காட்டுகிறார்.

 

ஒரு மரியாதையின் பொருட்டு பல தலைமுறைகளாகவும், வெவ்வேறு இடங்களிலும் நடைமுறையில் இருந்தாலும், மரபுகளின் நம்பிக்கையில் எதையும் நம்ப வேண்டாம். பலர் அதைப் பற்றி பேசுகிறார்கள், என்பதால் அந்த விடயத்தை நம்ப வேண்டாம். கடந்த கால முனிவர்களின் அல்லது ஆசாரியர்களின் மேல் உள்ள விசுவாசத்தால் எதையும் நம்ப வேண்டாம். கடவுள் உத்வேகம் தந்தார் என்று உன்னை இணங்கவைத்து, நீ உன் கற்பனையின் பிரகாரம், எதையும் நம்ப வேண்டாம். உங்கள் எஜமானர்கள் மற்றும் ஆசாரியர்களின் அதிகாரத்தில் மட்டும் எதையும் நம்ப வேண்டாம். நீங்கள் உங்கள் பாட்டில் ஆராய்ந்து அல்லது சோதித்து, நியாயமானதாகக் நீங்கள் கண்டறிந்தவற்றை மட்டும் நம்புங்கள், அதற்குத் தக்க உங்கள் நடத்தையை இணங்க வையுங்கள் என்கிறார் கௌதம புத்தர். [“Believe nothing, in the faith of traditions, even though, they have been held in honour, for many generations, and in diverse places. Do not believe, a thing, because many people speak of it. Do not believe, in the faith, of the sages of the past. Do not believe, what you yourself have imagined, persuading yourself, that a God inspires you. Believe nothing, on the sole authority, of your masters and priests. After examination, believe what you yourself, have tested and found, to be reasonable, and conform your conduct thereto.” - The Buddha ]  

::கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்.


தொடரும்.....

      👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக 

  👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக

0 comments:

Post a Comment