திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../12/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

திரிகடுகம் தொடர்கிறது.....

 


பாடல் - 56

உயர்ந்த நெறியைத் தூர்க்காதவை

முந்தை எழுத்தின் வரவு உணர்ந்து, பிற்பாடு

தந்தையும் தாயும் வழிபட்டு, வந்த

ஒழுக்கம் பெரு நெறி சேர்தல், - இம் மூன்றும்

விழுப்ப நெறி தூராவாறு

 

விளக்கம்:

இளமைப் பருவத்தில் கற்பதும், தந்தையையும் தாயையும் போற்றி வணங்குவதும், பெரியோரைச் சேர்வதும் உயர்ந்த நெறியாகும்.

 

பாடல் - 57

கொட்டி அளந்த அமையாப் பாடலும், தட்டித்துப்

பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும், துச்சிருந்தான்

நாளும் கலாம் காமுறுதலும், - இம் மூன்றும்

கேள்வியுள் இன்னாதன.

 

விளக்கம்:

தாளத்தோடு சேராத பாட்டும், இரந்து உண்பவனுடைய இரைச்சலும், ஒதுக்குக் குடி இருந்தான் பெரு வீட்டுப் பொருளை விரும்புவதும் இன்பத்தைத் தராது.

 

பாடல் - 58

பழமையை நோக்கி, அளித்தல், கிழமையால்

கேளிர் உவப்பத் தழுவுதல், கேளிராத்

துன்னிய சொல்லால் இனம் திரட்டல், - இம் மூன்றும்

மன்னர்க்கு இளையான் தொழில்.

 

விளக்கம்:

முன்னோரோடு பழகியவர்களைக் காப்பதும், சுற்றத்தாரைக் காப்பாற்றுவதும், நல்லினத்தாருடன் நட்பு கொள்வதும் இளவரசன் செய்ய வேண்டியவைகளாகும்.

 

பாடல் - 59

கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும், பைங் கூழ்

விளைவின்கண் போற்றான் உழவும், இளையனாய்க்

கள் உண்டு வாழ்வான் குடிமையும், - இம் மூன்றும்

உள்ளன போலக் கெடும்.

 

விளக்கம்:

சுற்றத்தார்க்கு உதவாத செல்வமும், விளையும் காலத்தில் காவல் செய்யாத உழவுத் தொழிலும், கள்ளுண்பவன் குடிப்பிறப்பும் நிலைக்காது அழியும்.

 

பாடல் - 60

பேஎய்ப் பிறப்பிற் பெரும் பசியும், பாஅய்

விலங்கின் பிறப்பின் வெரூ உம், புலம் தெரியா

மக்கட் பிறப்பின் நிரப்பி இடும்பை, - இம் மூன்றும்

துக்கப் பிறப்பாய்விடும்.

 

விளக்கம்:

பேயினது பிறப்புடையவர்களின் பெரும் பசியும், பாயும் விலங்கினது அச்சமும், அறிவாகிய பொருளை உணராத மக்களின் வறுமையும் மிக்க துன்பத்தை தரக்கூடியதாகும்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

No comments:

Post a Comment