பொதுவாக என் வேலை மாலை மூன்றரை
மணிக்கு முடியும். ஆனால் அடுத்த நாள்
விடுதலையில் யாழ்ப்பாணம் போக வேண்டி இருந்ததால், தொடங்கிய திட்டச்செயல் வேலையை [project
work] ஓரளவு முடித்துவிட்டு
போகவேண்டி இருந்தது. அப்படிச் செய்தால்தான், எனக்கு மாற்றாக தற்காலிகமாக வருபவரால் அதை தொடர இலகுவாக
இருக்கும். அத்துடன் அவருக்கு அதைப்பற்றி கொஞ்சம் தொலைபேசியிலும் மற்றும்
குறிப்பேட்டிலும் ஒரு விளக்கம் கொடுக்கவேண்டியும் இருந்தது. ஆகவே அன்று என் வேலை
முடிய ஆறு மணி தாண்டிவிட்டது.
கொஞ்சம் களைப்பாக இருந்ததாலும், மற்றும் என்னுடன் பணிமனையில் இருந்து வரும் நண்பர்கள்
எல்லோரும் வீடு போய் விட்டதாலும், நான் தனியவே போக வேண்டி இருப்பதால், பக்கத்தில் இருந்த கடை ஒன்றில் இரண்டு பீர் போத்தல் [bottle
of beer] வாங்கிக் கொண்டு, அருகில் இருந்த பேருந்து நிலையத்திற்கு போனேன். ஆனால்
துரதிர்ஷ்டவசமாக நான் பேருந்தை தவறவிட்டுவிட்டேன். இரவு என்பதால், அடுத்ததுக்கு இன்னும் ஒரு மணித்தியாலம் நிற்கவேண்டும். அது
மட்டும் அல்ல, இங்கு நடைபெறும் சில அரசுக்கு எதிரான கலவரங்களால், ஒன்பது மணியில் இருந்து ஊரடங்கு சட்டமும் ஒருபக்கம். எனவே
குறுக்கு வழியில், ஆற்றின் வழியே நடக்க தொடங்கினேன்.
அன்று முழுமதி நாள் என்பதால், ஆற்றங் கரையோரமாக நிமிர்ந்து நிற்கும் மூங்கில்
மரங்களுக்கும் மற்றும் சோலையில் பூக்கும் மலர்களுக்கும் இடையில், சந்திரன் அழகாக வானில் தவழ்ந்து கொண்டு இருந்தான். அந்த
அழகு என் காதலியின் நினைவை தந்து என்னை துன்புறுத்த செய்தன!
இன்றைய கூடுதலான வேலையும், அவளின் நினைவும், தனிமையும் வாட்டிட, அங்கு உயர்ந்து காற்றுக்கு ஆடிக்கொண்டு இருந்த மூங்கில்
மரங்களுக்கிடையில் இருந்து, நான் கொண்டுவந்த மதுவினை, கொஞ்சம் கொஞ்சமாக அருந்தினேன். நான் மிகவும் சோர்வாக
இருந்ததால், கொஞ்சம் கண்களை மூடினேன். என்னை அறியாமலே அங்கே, மணலில் தூங்கிவிட்டேன்!
"மாலைக் காற்று மெதுவாய்
வீச
பாடும் குயில்கள் பறந்து செல்ல
வெண்நிலா ஒன்று கண் சிமிட்ட
வெற்றி மகளாய் இதயத்தில்
வந்தாளே!"
"வானம் தொடும் வண்ணத்துப்
பூச்சியாய்
வான வில்லாய் ஜாலங்கள் புரிந்து
மனதை மயக்கும் வாசனை உடன்
மனதை நெருடி மகிழ்ச்சி தந்தாளே!"
என் கனவில் வந்த என்வளுடன்கொஞ்சம்
ஆனந்தமாக இருந்த எனக்கு, திடீரென என் கால் மாட்டில் அவளே வந்து கொஞ்சுவது போல உணர்வு வந்தது, இன்னும் களைப்பாக இருந்ததால், கண்ணை திறக்காமலே, காலை உதறினேன். உதறமுடியவில்லை, உண்மையில் யாரோ கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்து இருப்பது
போல இருந்தது. சட்டேன துள்ளி எழும்ப முயற்சித்தேன். முடியவில்லை, கண்ணை முழித்து, நல்லகாலம், முழுமதி நாள் என்பதால், பார்க்கக் கூடியதாக இருந்தது. ஒரு இளம்பெண், அலங்கோலமான அரைகுறை உடையுடன் நினைவுற்று என் கால் மேல் கிடந்தாள். திடுக்கிட்டு பயந்து போனேன். கொஞ்சம் கண்ணை
மேலே உயர்த்தினேன். ஒரு வாலிபன் தனது தொலை
பேசி மூலம் என்னையும் அவளையும் சேர்த்து படம் எடுத்துக்கொண்டு இருந்தார். நான்
எழும்புவதை கண்டதும், அங்கிருந்து ஓடி, மோட்டார் சைக்கிளில் ஆயத்தமாக நின்ற
மற்றோரு வாலிபனுடன் எதோ சிங்களத்தில் பேசிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
நான் விரைவாக அவர்களின் பின் ஓடி, என் தொலைபேசியில் எடுக்கக்கூடிய அளவு வீடியோ எடுத்தேன்.
பின் பக்கம் என்றாலும், அவர்கள் துணியால் மறைத்த இலக்கத்தகடு, ஓடும் வேகத்தில், துணி நழுவி விழ, அது அதை பதித்துவிட்டது.
எனது வெற்று பீர் போத்தலில் ஆற்று நீர் எடுத்து அவள் முகத்தில் தெளித்து, எனக்கு தெரிந்த முதல் உதவியும் செய்தேன். அவள் எதோ
சிங்களத்தில் முணுமுணுத்துக்கொண்டு மெல்ல மெல்ல கண்ணை திறக்க தொடங்கினாள். அது
எனக்கு நிம்மதியை தந்தது. ஏனென்றால், கட்டாயம் அவள் என்ன நடந்தது என்று உண்மை சொல்லுவாள். அப்படி
என்றால் ஒரு பிரச்சனையும் எனக்கு வராது என்று.
ஆனால் ' நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று' என்பது போல, நான் அவளிடம், நீ யார், என்ன நடந்தது என்று கேட்கும் முன்பே காவற்படையினர் பல
வண்டிகளில் வந்து என்னை கைவிலங்கு போட்டு, என்னை ஒன்றும் கதைக்கவிடாமல் அடித்து இழுத்து சென்றனர்.
அவள் எதோ சிங்களத்தில் அவர்களிடம் அழுதுகொண்டு சொல்வது மட்டும் எனக்கு தெரிந்தது.
அவர்கள் இவன் ட்ரஸ்ட்வாதி [பயங்கரவாதி] என எனக்கு முத்திரையே குத்திவிட்டார்கள்.
அதற்குள் மருத்துவ அவசர ஊர்தியும் வர, அவளை அதில் ஏற்றுவது மட்டுமே எனக்கு தெரிந்தது.
யார் அவள், அந்த இரு வாலிபரும் யார், அவளுக்கு என்ன நடந்தது எல்லாமே எனக்கு ஒரு மர்மமாகவே
இருந்தது. என் கால்சட்டை பாக்கெட்டை மெல்ல ஒரு கையால் தொட்டு பார்த்தேன். என்
தொலைபேசி அங்கு இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். என்னை ஒரு நீதிபதியிடம்
கொண்டுபோய், இவன் ஒரு பயங்கரவாதி, ஒரு பெண்ணை கெடுத்து கொலை செய்ய முயற்சித்தான் என குற்றம் சாட்டி, என்னை தங்கள்
காவலில் வைத்து முழுதாக விசாரிப்பதற்கு அனுமதி தரும்படி அவரிடம் கேட்டனர்.
நீதிபதி என் பெயர், விபரங்களை பதிவுக்காக கேட்டார். நான் அந்த சந்தர்ப்பத்தில், என் தொலை பேசியை எடுத்து, இதில் ஒரு வீடியோ இருக்கு அதையும் பார்க்கவும் என கொடுத்து, என் முழுவிபரத்தையும் , அன்று நான் பணிமனையில் ஆறு மணிவரை, வேலை செய்ததையும், பீர் வாங்கிய கடையையும், நான் ஒரு பொறியியலாளர் என்பதையும் என் வாக்குமூலமாக
ஆங்கிலத்தில் அவரிடம் சமர்ப்பித்தேன் .
இப்ப விடிய தொடங்கிவிட்டது. என்றாலும்
என் மனதில் அந்த இரவின் மர்மம் புரியவில்லை. அந்த இரு வாலிபரையும் தேடுவதை
விட்டுவிட்டு, என்னை விசாரிப்பதிலேயே அக்கறையாக இருந்தனர். இன்னும் ஒன்றும் எனக்கு மர்மமாக
இருந்தது. எப்படி இத்தனை வண்டிகளுடன் அங்கு காவற் படையினர் வந்தனர். அந்த இருவரை தவிர, வேறு யாரும் அங்கு
இருக்கவில்லை? எப்படி என்னையோ அந்த பெண்ணையோ விசாரிக்க முன் என்னை பயங்கரவாதி என்றனர்? அவளை நான் கெடுத்தனர் என்றனர் ? எல்லாமே மர்மமாக இருந்தது.
என்னை தங்கள் காவல் நிலையத்துக்கு
கொண்டுபோய், ஏற்கனவே அவர்களால் சிங்கள மொழியில் தயாரித்த ஒரு வாக்குமூலத்தை, நான் கொடுத்ததாக அதில் ஒப்பமிடும்படி வற்புறுத்தினர். 'உண்மை, தோற்பது போல் இருந்தாலும், அது கட்டாயம் வெல்லும்'. நான் அதற்கு இசையவில்லை. அந்த நேரம் அந்த நீதிபதியிடம்
இருந்து அவசர அழைப்பு வந்தது, உடனடியாக விடுதலை செய்யும் படியும், என் தொலை பேசியை நீதிபதி பணிமனையில் பெற்றுக்கொள்ளலாம்
என்றும். அவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தபடி, வேறுவழி இன்றி என்னை கைவிலங்கு அகற்றி வெளியே விட்டனர்.
ஆனால் இன்றுவரை அந்த இரு வாலிபர் யார், அவள் யார், அவள் இப்ப எங்கே ? என்ற மர்மம் வெளிவரவே இல்லை. என்றாலும் சமூக வலைத்தளங்களில், அவளின் பெயர் குறிப்பிடாமல், யாரோ பெரும் புள்ளியின் மகனும் நண்பனும் அவளை
அனுபவித்துவிட்டு, இறந்துவிட்டாரென மூங்கில் பத்தையில் போட்டுவிட்டு சென்றதாக மட்டுமே இருந்தது, அதில் என்னைப் பற்றி ஒன்றுமே இல்லை ?
"வாருங்கள், வந்து கை கொடுங்கள்
இமைகள் மூடி பல நாளாச்சு ...
சொல்லுங்கள், என் கண்களை மூடினால்
அந்த மூவரும் வரிசையாய் வருகுது ...
தாருங்கள், தீர்வைதந்து மர்மம் கலையுங்கள்
கேள்விகள் கேட்டு உள்ளம் வதைக்குது ...
கண்களுக்குள் புதையாத மர்மம்
தருகிறேன்
கவனமாக ஒன்று ஒன்றாய் அவிழ்க்க ..."
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment