எம்மை நோக்கி வரும் புதுமைகள்

 

அறிவியல்=விஞ்ஞானம்

சுவர்தொலைக்காட்சி!...

என்னதான் எல்.இ.டி., பிளாஸ்மா அது இது என்று வகை வகையான திரைகள்  கொண்ட தொலைக்காட்சிகள் வந்தாலும், சில ஆண்டுகளில் அவை குப்பைக்குள் சென்றுவிடுகின்றன.

 அவை சூழலுக்கு கேடு என்ற எண்ணம் நுகர்வோர் இடையே பரவத் துவங்கியுள்ளது. மாற்றாக பிரகாசமான படம் காண்பிக்கும் புரஜக்டர் களை அத்தகையோர் நாடுகின்றனர்.

 எனவே  ஆர்வலர்களுக்கு  தனியான ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்யும்,  'கிக்ஸ்டார்ட்டர்'

மற்றும் 'இண்டிகோ' போன்ற இணையத்தளங்களில் இத்தகைய லேசர்புரஜக்டர்களுக்கு தனி சந்தை உருவாகியிருக்கிறது.

 தி காசிரிஸ் ஏ6 4கே என்ற ப்ரொஜெக்டர் அந்த வகையைச் சேர்ந்தது.

 லேசர் புரஜக்டர்கள்  மிகச்சிறிய கருவிகள்தான். ஒரு மடிக்கணினி அளவிற்கு அளவிலிருந்து- தீப்பெட்டி அளவு வரை  லேசர் புரஜக்டர்கள் வந்துள்ளன. சுவர் அல்லது சிறப்புத் திரை மீது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாய்ச்சும் இக்கருவிகளுக்கு மவுசுகூடத்துவங்கியுள்ளது.

 

உடனடி மின்னேற்றம்!...

வண்டியில் பெட்ரோல் நிரப்பும் அதே நேரத்தில் மின் வாகனத்தை மின்னேற்றம் செய்ய முடியுமா? வெறும் பத்து நிமிடங்களில் முடியும் என்கின்றனர், அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

 வேகமாக மின்னேற்றம் செய்கையில், மின்கலன்  வேகமாக சூடேறும்.  இதைத் தவிர்க்க, மின்கலன்களின்  நேர் மற்றும் எதிர் மின் நிலையங்களுக்கு இடையே உள்ள தகடுகளுடன் நிக்கல் உலோக  காகிதங்களையும் வைத்தால் அது சூடு ஏறாது. இதனால் மின் வாகனத்தை பத்து நிமிடங்களில் மின்னேற்றம் செய்யலாம்.

 

நோய் அறியும் இருக்கை

 நோய் வருமுன் காக்கவும் சிறுநீர் சோதனை செய்யலாம். அதைத்தான் செய்கிறது இஸ்ரேலைச் சேர்ந்த ஆலிவ்  டயக்னாஸ்டிக்சின்  நவீன கழிவு இருக்கை.

 இதில் ஸ்பெக்ட்ரோமீட்டர் எனப்படும் அலைக்கற்றை மானியும், சில உணரிகளும், ஒருவர் கழிக்கும்போது சிறுநீர்த்தாரை மீது ஒளியைப் படச் செய்து, புரதங்கள், நைட்ரேட்கள்  போன்றவற்றின் அடர்த்தி-நிறம், வெளியேற்றப்படும் அழுத்தம் போன்றவற்றை அளந்து செயற்கை நுண்ணறிவு செயலிக்கு அனுப்பிவிடுகிறது.

 இதுதான் செயற்கை நுண்ணறிவும் அலைக்கற்றை மானியும்  உள்ள உலகின்  முதல் கழிவு   இருக்கை

 

விளையாட வரும் மூக்கு ...

தலையில் அணியும் கருவி, கைகளில் விளையாட்டு நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் ''கண்ட்ரோலர்'' கருவி. இப்படி மெய்நிகர் விளையாட்டுகளில் கண் காது விரல்கள், ஏன் ஒட்டுமொத்த விரல்களும் பங்கேற்க முடியும். ஆனால் மூக்கை மட்டும் ஆட்டத்தில் யாரும் சேர்க்கவில்லை.

 இப்பொழுது ஸ்வீடனில் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதையும் ஆட்டத்துக்கு சேர்க்க, 'நோஸ்வைஸ்' என்ற கையடக்க வாசனைமானியை உருவாக்கியுள்ளனர். கண்ட்ரோலர் கருவி போலவே இருக்கும் நோஸ்வைஸ் கருவியை விளையாடுபவர் கையால் இயக்கலாம். அக் கருவிக்குள்  சில வாசனைத் திரவியங்கள் இருக்கும். அவற்றை மென்பொருள் மூலம் குறிப்பிட்ட விதங்களில் வெளியே தெறிக்க செய்வதன் மூலம் விளையாடுபவர் அணி கருவி வழியே காணும் காட்சிக்கு ஏற்ப வாசனைகளை உணர்வர்.

 

செயற்கை நாளங்கள் வந்தாச்சு!...

விபத்து அல்லது நோயால் ரத்த நாளங்கள் சேதமடைந்தால் இரண்டுவித சிகிச்சைகள் தான் உண்டு.

 [1]நோயாளியின் உடலில் ஒரு பகுதியிலிருந்து ரத்தக் குழாய்களை எடுத்து ஒட்டுவது,

[2]கொடையாளி ஒருவரின் உடலிலிருந்து எடுத்து வைப்பது.

 

 தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனித ரத்த நாளத்தில் உள்ள ''எலாஸ்டின்'' என்ற புரதத்தை போலவே செயற்கையாக ''ரோபோஎலாஸ்டின் ''என்ற பொருளை உருவாக்கி அதில் ரத்த நாளங்களை வடிவமைத்துள்ளனர்.

 

எலிச்  சோதனைகளில் இதை, இயற்கை ரத்தநாளங்களை போலவே, செயற்கை எலாஸ்ரின் நாளங்களை எலியின் உடல் ஏற்றுக் கொள்வது தெரியவந்துள்ளது. மனித உடலும் இந்த செயற்கை ரத்த நாளங்களை ஏற்றால்  அது சர்க்கரை நோயாளிகளுக்கு வரமாக அமையும். மேலும் விபத்துகளில் சிக்கியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும்  உதவும்.

 

பிரதியாக்கம்: செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment