வழுக்கை தலை –

 நீங்கள் நம்பும் 3 கட்டுக்கதைகள்

வழுக்கை தலைக்கு தீர்வு காண்பது என்பது விஞ்ஞானிகளுக்கு பல நூற்றாண்டுகளாக சவாலாக இருக்கிறது.

 

2,000் ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாவற்றுக்கும் பெரும் நம்பிக்கையாக இருந்த மதம் எனும் நம்பிக்கையில் இருந்து விலகி தனது அறிவியல் கண்ணோட்டத்தில் செயல்பட்ட நவீன மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ், தலைமுடி அமைப்பு எப்படி செயல்படுகிறது மற்றும் முடி கொட்டுதலை மாற்றுவதற்கான வழிகளை சோதித்தார்.

 

ஆகவே, இன்றைக்கு நம் தலைமுடி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என மேலும் கூடுதலாக புரிந்திருக்கின்றோம். கூடுதலாக, தலையில் வழுக்கை ஏற்படுவதற்கு பல காரணங்கள் குறிப்பாக மரபியல் முதல் சூழல் வரை உள்ளன. இருந்தபோதிலும் முடி உதிர்வதற்கான காரணங்கள் எவை? என்பது பற்றி இன்னும் பல தவறான கருத்துகள் நிலவுகின்றன.

 

பிபிசி முண்டோவிடம் பேசிய லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முடி உதிர்தல் மற்றும் உச்சந்தலை குறைபாடுகள் தொடர்பான மருத்துவ நிபுணரும் தோல் மருத்துவருமான கரோலின் கோ, "தலை வழுக்கையாக இருப்பது குறித்து மோசமாக நினைக்க தேவையில்லை," என்று கூறுகிறார்.

 

மருத்துவர் கரோலின் கோ, வழுக்கை தலை குறித்த மூன்று கட்டுக்கதைகளை சுட்டிக்காட்டுகிறார்.

 

கட்டுக்கதை 1 - தாயின் மரபணுக்கள் காரணமா?

நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடனான சந்திப்புகளின்போது, தாய்வழி சொந்தங்கள் வழியாக வந்த மரபணுக்கள்தான் வழுக்கைக்கான காரணம் என்று சொல்லப்படுவதை கேட்டிருக்கலாம்.

 

அதைவிடவும் உண்மை என்பது மேலும் சிக்கலானது.

 

பி.எஸ்.ஓ.எஸ் ஜெனிடிக்ஸ் (PLOS Genetics) என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்ட 2017 ஆய்வில், பிரித்தானிய ஆராய்ச்சியாளர் குழுவினர், பரம்பரையாக தலை வழுக்கை கொண்ட 52,000 ஆண்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியில், 287 பேர்களின் முடி உதிர்வு செயல்பாட்டுக்கு மரபணுக்கள் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

 

அவர்களில் 40 பேருக்கு, தாயிடம் இருந்து பெறப்பட்ட எக்ஸ் குரோமோசோம்கள் தொடர்பின் காரணமாகவும், பிறருக்கு மரபணுக்களால் முடிகள் உதிர்ந்தன என்பதும் தெரியவந்தது.

 

எனவே தாயின் குடும்பத்தின் தரப்பில் இருந்து வரும் வலுவான மரபணுக்கள் காரணமாக வழுக்கை ஏற்படுகிறது என்பது உண்மை, என்கிறார் கரோலின் கோ. "ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்கள் வழுக்கையை ஏற்படுத்துவதால் இது இரண்டிலிருந்தும் வந்திருக்கலாம்," என்கிறார்.

 

ஆண்களைப் போலன்றி, பெண்களுக்கு வயதாகும்போதும், அவர்கள் முடியை இழப்பது அரிதாக இருப்பது ஏன் என்பதை புரிந்து கொள்ள, "ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா", அதாவது பரம்பரை என்று விஞ்ஞானிகள் புரிந்துகொள்வதை விளக்குவது அவசியம்.

 

கரோலின் கோவின் கூற்றப்படி, இந்த வகை அலோபீசியாவிற்கு காரணம் என அடையாளம் காணப்பட்ட மரபணுக்கள் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனில் உள்ள ஒரு தனிமத்திற்கு மிகைப்படுத்தப்பட்ட உணர்திறனை ஏற்படுத்துகின்றன. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகளுடன் ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வாகும்.

 

பொதுவாக பெண்களுக்கு வழுக்கை வராது. அவர்கள் பொதுவாக உச்சந்தலையில் இருந்து சிறிது முடியை இழக்கிறார்கள், ஒருவேளை நெற்றிக்கும் காதுக்கும் இடையில் உள்ள பகுதியில் உள்ள முடியை சிறிது சிறிதாக இழக்க நேரிடலாம். ஆண்களைப் போல அதிக டெஸ்டோஸ்டிரோன் இல்லாதது இதற்கு காரணமாக இருக்கலாம், மேலும் நம்மிடம் அதிகமாக உள்ள ஈஸ்ட்ரோஜன்கள் அதை சமநிலைப்படுத்துகின்றன.

 

கட்டுக்கதை 2 - தொப்பி அணிவது மற்றும் தலை முடியை அடிக்கடி கழுவது முடியை கொட்டச் செய்யும்

வாரத்திற்கு எத்தனை முறை உங்கள் தலைமுடியைக் கழுவுகிறீர்கள்? நீங்கள் எப்போதும் தொப்பி அணிந்திருக்கிறீர்களா?

 

உங்கள் தலைமுடி உதிர்வதற்கு இவை எதுவும் காரணம் அல்ல.

 

நீங்கள் தலையை மூடிக்கொண்டு யாரையாவது பார்த்தால், அவர்களுக்கு வழுக்கை விழுவதால் அதை மறைக்கிறார்கள், அவர்களுக்கு அதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை" என்று மருத்துவர் கோ நகைச்சுவையாக கூறுகிறார்.

 

தொப்பிகள் அணிவதால் முடி உதிர்தல் ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

 

இந்த இரண்டு கட்டுக்கதைகளும் உண்மையுடன் நெருங்கிய தொடர்புடையவை. நம் உச்சந்தலை எண்ணெய் பசைமிக்க தோல் பகுதிகளில் ஒன்றாகும்.

 

இது வழுவழுப்பான பகுதிகளில் ஒன்று. அதே நேரத்தில் உணர்திறன் மிகுந்த பகுதியல்ல. உண்மையில், உடலின் மற்ற பகுதிகளை விட குறைவான ஒவ்வாமையே உச்சந்தலையில் பதிவாகியுள்ளன” என்று அவர் கூறுகிறார்.

 

சரியான தயாரிப்புகளைப் பயன்படுத்தினால், தினமும் தலைமுடியைக் கழுவுவதில் சிக்கல் இருக்காது என்றும் அவர் கூறுகிறார்.

 

கட்டுக்கதை 3 - முடி கொட்டுதலுக்கு அறிவியல்பூர்வ தீர்வு இல்லை

தற்போது, தலை வழுக்கையாவதைத் தவிர்க்க குறைந்தபட்சம் மூன்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட மாற்று வழிகள் உள்ளன.

 

முடி உதிர்தலுக்கு காரணமான சிக்கலான ரசாயன மற்றும் உயிரியல் அமைப்புகளால் அவை எதுவுமே 100% தீர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. ஆனால் அவை தலை வழுக்கையாவதை மெதுவாக்குகின்றன அல்லது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பச் செய்கின்றன.

 

மினாக்ஸிடில் - இது உச்சந்தலையில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் களிம்பு மற்றும் திரவ வடிவில் விற்கப்படும் ஒரு கலவை. சில முறைசாரா ஆய்வுகளில், மினாக்ஸிடிலின் குறைந்த அளவிலான வாய்வழி மாத்திரைகள் உதிர்ந்த முடிகளை மீண்டும் வளரச் செய்யும் என்ற முடிவுகள் கிடைத்துள்ளன. ஆனால் இந்த வடிவிலான மினாக்ஸிடில் பயன்பாடு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.

 

ஃபினாஸ்டெரய்ட் - இது வாய்வழியாக கொடுக்கப்படுகிறது. இது ஆண்களுக்கு வயதாகும்போது ஏற்படும் புரோஸ்டேட் சுரப்பி விரிவாக்கத்திற்கான சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது குறைந்த செறிவுகளில் முடி உதிர்தலைத் தடுக்க பயன்படுத்தப்படுகிறது.

 

அறுவை சிகிச்சைகள்: தலையில் முடி வளர்ச்சி உள்ள பகுதிகளில் இருந்து மயிர்க்கால்கள் அகற்றப்பட்டு, வளர்ச்சி இல்லாத பகுதிகளில் ஊற்றப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு மாற்று நுட்பங்கள் உருவாகியுள்ளன.

 

இந்த சமீபத்திய சிகிச்சைகளைப் பற்றி தவறான கருத்து இருப்பதாக மருத்துவர் கோ நம்புகிறார். "முடி மாற்று அறுவை சிகிச்சை ஒரு வேளை கடந்த காலத்தில் மோசமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று முடி மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

 

இந்த சிகிச்சைக்கு மிகவும் துல்லியத்தன்மை தேவைப்படுவதால் நல்ல கண் பார்வை உள்ளவர்களிடம் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளும்படி கோ பரிந்துரைக்கிறார்.

 

"இதில் நிறைய கலை இருக்கிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மயிர்க்கால்கள் அது இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு எப்படி வளர்ந்தது என்பதை நினைவில் கொண்டு புதிய இடத்தில் வளர்கின்றன" என்றும் அவர் கூறுகிறார்.

 

எழுதியவர்,ரஃபேல் அபுச்சாய்பே-/-பிபிசி

No comments:

Post a Comment