குழந்தைகளை அமைதிப்படுத்த திறன்பேசிகளை கொடுப்பது சரியா?
“என்னுடைய இரண்டு வயது குழந்தையை சமாளிப்பது
மிகவும் கடினம், நடக்க
பழகியதிலிருந்து அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பான், பார்த்துக் கொள்ளவும் வீட்டில் யாரும் இல்லை, எனவே மொபைலில் குழந்தைகளுக்கான பாடல்களை கொண்ட
சேனலை போட்டுக் கொடுத்து விடுவேன். அவன் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பான்.”
“நான் வேலைக்கு சென்றுவிடுவேன். எனது கணவரின்
தாயால் என் குழந்தையை சமாளிக்க முடியாது. எனவே அவளுக்காக டிவியில் குழந்தைகளுக்கான
சேனலை எப்போதும் ஆனில் வைத்திருப்போம். அவளும் அதில் வரும் கதாப்பாத்திரங்களை போல
பேச தொடங்கினாள். ஆனால் தற்போது 4 வயதாகியும் அந்த
கதாபாத்திரங்கள் பேசுவதை மட்டுமே பேசுகிறாள்.”
“எனது குழந்தைக்கு எண்கள், வண்ணங்களை குழந்தைகளுக்கான பாடல்கள் மூலம்
சொல்லி கொடுக்கிறேன். அவளும் கண் கொட்டாமல் இந்த வீடியோக்களை பார்ப்பாள்.”
இவை தங்களது குழந்தைகள் குறித்து சில தாய்மார்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்.
ஆனால் "மேலே குறிப்பிடப்படும் எந்தவொரு சூழலும் குழந்தைகளுக்கு உகந்தது
இல்லை," என்கிறார் குழந்தைகள் நல
மருத்துவர் மனோஜ்.
அதாவது குழந்தைகளை அமைதிப்படுத்த விரும்பும் பெற்றோர், ஏதேனும் குழந்தைகளுக்கான
பாடல்களையோ கார்ட்டூன்களையோ தங்களுடைய திறன்பேசியில் போட்டுக் காட்டி அவர்களை
அமைதிப்படுத்துகிறார்கள்.
அப்படி சொல்லும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய சில தகவல்களை பிபிசி தமிழிடம்
பகிர்ந்து கொண்டார் மருத்துவர் மனோஜ். அவருடனான உரையாடலில் இருந்து.
வேண்டாம் அலைபேசி
'இந்தியன் அகாடமி
ஆஃப் பீடியாட்ரிக்ஸ்' இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அலைபேசி கொடுப்பதை
தவிர்க்க வேண்டும் என்கிறது.
2 – 5 வயது
குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான அளவில் மட்டுமே அலைபேசியை வழங்க வேண்டும்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் அவர்கள் அலைபேசியை பயன்படுத்தினால், சில உடல் ரீதியான மற்றும்
மன ரீதியான பிரச்னைகள் வரலாம்.
2-5 வயதில்தான்
குழந்தைகளுக்கு பேசும் திறன் உருவாகும். அதிகப்படியாக அலைபேசியை பார்ப்பதால்
பேசும் திறன் வளர்ச்சி தாமதமாகலாம். சில குழந்தைகள் அதீதமாக நடந்து கொள்ளலாம்.
அதிக நேர மொபைல் பயன்பாட்டால் முக்கியமாக தூக்கம் தடைப்படும். அதிகமாக நீல
ஒளியை பார்த்துக் கொண்டிருந்தால் மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்காது. அது இல்லாமல்
தூக்கம் வராது. தூக்கம் சரியாக இல்லை என்றால் படிப்பிலும் சரியாக கவனம் செலுத்த
முடியாது. சோம்பேறித்தனம் அதிகரிக்கும்.
இதுபோக உடல் ரீதியாக சொல்லப்போனால் உடல் எடை அதிகரிக்கலாம். கண் எரிச்சல்
போன்ற பிரச்னைகள் ஏற்படலாம், சரியாக அமராமல் இருந்தால், கழுத்து வலி, முதுகு வலி என அனைத்தும்
வர வாய்ப்புள்ளது.
ஏடிஹெச்டி குறைப்பாடு (ஹைப்பர் ஆக்டிவ் டிஸ்ஆர்டர்), தொடர் தலைவலி அதன்பின்
கண்ணாடி அணிய வேண்டிய சூழல், இது எல்லாமே அதிக நேரம் அலைப்பேசியை
பார்ப்பதால் வரும் ஆபத்துகள்.
பெற்றோர்களுக்கு கவனம் தேவை
2-5 குழந்தைகளுக்கு
சொல்லப்பட்டுள்ள இந்த ஒரு மணி நேரம் என்பதும் பெற்றோர்கள் உடனிருக்க வேண்டும்.
அவர்கள் குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
சரியான இடைவேளையில் ஓய்வு
எடுக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். சரியாக அமர்ந்திருக்கிறார்களா என்பதையும்
பெற்றோர் கவனிக்க வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றாலும் அதிக நேரத்திற்கு தொடர்ந்து அலைபேசியை
பார்ப்பது நல்லதில்லை. குழந்தைகளுக்கு தகுந்த இடைவேளை என்பது அவசியம்.
மொபைலில் பாடல்களையோ வீடியோக்களையோ பார்த்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது
என்பது ஒருவழி கற்பித்தலாக இருக்கும். அதில் எந்த உரையாடலும் இருக்காது.
பெற்றோரோ ஆசிரியரோ கற்பிக்கும்போது ஒத்த வயதுடைய குழந்தைகளுடன் உரையாடும்போது 'உரையாடல் திறன்' அதிகரிக்கும். அவர்கள்
சீக்கிரம் வார்த்தைகளைக் கற்றுக் கொள்வார்கள்.
அதேபோல குழந்தைகளிடமிருந்து நாம் அலைபேசியை திரும்ப வாங்கிவிட்டால், அந்த கணத்தில் அவர்கள்
அதீதமாக நடந்து கொள்வார்கள். எனவே அலைபேசியை கொடுக்காமல் இருப்பதே நல்லது.
மூளை வளர்ச்சியை எந்த அளவிற்கு பாதிக்கும்?
அதிக நேரம் அலைபேசியை பார்ப்பதால் முதலில் ஞாபக சக்தி பாதிக்கப்படும்.
படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள். தூக்கம் குறைவாக இருந்தால் அவர்களால்
ஒரு விஷயத்தை அதிக நேரம் உட்கார்ந்து கவனிக்க முடியாது. கற்றல் திறன் மேம்பாட்டில்
தாமதம் ஏற்படும்.
கொரோனா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. ஆனால் இதன் தாக்கம் அடுத்த
பத்து ஆண்டுகளுக்கு பிறகே தெரியவரும்.
இந்த குழந்தைகள் வளர்ந்து நிற்கும்போதும் அப்போது அவர்களின் செயல்பாட்டில்
அதிக அலைபேசி பயன்பாட்டின் தாக்கத்தை நாம் கண்கூடாக பார்க்க முடியும்.
தீர்வு என்ன?
பொதுவாக இம்மாதிரியாக அலைபேசி பயன்பாட்டிற்கு அடிமையான குழந்தைகளை
மெதுவாகத்தான் அதிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
உடனடியாக அவர்களை நிறுத்தச் சொன்னால் அவர்கள், அதீதமாக நடந்து
கொள்வார்கள் அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.
சரியாகத் தூங்க மாட்டார்கள். சாப்பிட மாட்டார்கள். பெற்றோருடன் சரியாகப் பேச
மாட்டார்கள். எனவே அதிலிருந்து வெளியே வருவதற்கு அவர்களுக்குப் போதுமான நேரத்தை
வழங்க வேண்டும்.
அதேபோல குழந்தைகளை அதிகமாக விளையாடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். அப்போது
அவர்கள் சோர்ந்து போய்விடுவார்கள். அலைபேசியை கோருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல்
போகும்.
சம வயதுடைய குழந்தைகளுடன் அவர்களை விளையாட அனுமதிக்கும்போது திறன்பேசி
பயன்பாடு மீதான நாட்டம் குறையும்.
குழந்தைகளுக்கு உடல் ரீதியான வேலைகளை செய்ய ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள்
அலைபேசி பயன்பாட்டிலிருந்து மெதுவாக வெளியே வருவார்கள் என்கிறார் மருத்துவர்
மனோஜ்.
சில பெற்றோர்கள் அலைபேசியில் வீடியோக்களை பார்ப்பதால்தான் சிக்கல் உள்ளது என்றும்
தொலைக்காட்சியில் அந்த அளவிற்கு சிக்கல் இல்லை எனவும் நம்புகின்றனர்.
இது குறித்து பேசிய மருத்துவர் மனோஜ், “தொலைக்காட்சியோ மொபைலோ 'கன்டென்ட்' என்பது ஒன்றுதானே. ஒரே
விஷயம், டிவியில்
பார்க்கும்போது கண்ணில் ஏற்படும் பாதிப்பு சற்று குறையலாம். பெற்றோர்கள் அதை
எளிதாகக் கண்காணிக்கலாம்,” என்கிறார்.
:--விஷ்ணுப்ரியா ராஜசேகர்-/-பிபிசி தமிழ்
0 comments:
Post a Comment