"காதல் வேண்டாம் போ" [சிறு கதை]



மாலை நேரம் மகாவலி ஆறு, பேராதனை வளாகத்தினூடாக, இன்று ஏனோ மெதுவாக ஓடுகிறது. தனது மனதை யாரிடமோ பறி கொடுத்தது போல தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருக்கிறது. சூரியன் தனது கதிர்களை மடக்கிக் கொண்டு ஆற்றில் குளிக்க போய் கொண்டு இருக்கிறான். பறவைகள் மரக் கிளைகளை நோக்கி ஆரவாரமாக பறந்து கொண்டு இருக்கிறது. வண்டுகள் மலர்களை சுற்றி ரிங்காரம் இடுகின்றன. காதலர்களை வரவேற்பது போல சந்திரன் பிரகாசமாக ஒளி பரப்பிய படி மேகத்தினுடாக எட்டிப் பார்க்கின்றான்.

 

ஒவ்வொரு நாளும் இந்த நேரம் தனது காதலனுடன் ஆற்றங்கரையில் உலா வரும் மூன்றாம் ஆண்டு கலைப் பீட மாணவி தமிழ்செல்வியை இன்று அங்கு காணவில்லை? கற்பாறைகளுக்கிடையில், தன்னை மேல் அங்கியால் இறுக்கமாக போர்த்துக் கொண்டு மகாவலியை  வெறுத்து பார்த்துக் கொண்டு நின்றாள் அவள். வாடைக்காற்றும் இன்று  கொஞ்சம் குளிராக வீசுகின்றது. அவள் நற்றிணை 174 சிலவரிகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். 

 

"வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி

மல்லல் மார்பு மடுத்தனன்

புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?"

 

அவள் மனதில் அமைதி இல்லை. யாரோ ஒரு முதலாம் ஆண்டு மருத்துவ பீட மாணவி ஜெயந்தியை, பகிடிவதை செய்யும் பொழுது தன் காதலன் நண்பியாக்கி விட்டான் என்ற செய்தி  அவளை துளைத்துக்கொண்டு இருந்தது. இங்ஙனம் வேறு ஒருவளிடம் அன்பு வைத்தவனுக்கு என்மேல் எப்படி அன்பு, கனிவு தோன்றும்?; அன்பு இல்லாமல் காமத்தை தணிக்க என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும் நான் வேறு வழி இன்றி அவனைத் தழுவிக் கொள்வதனாலும் என்ன பயன்? மீண்டும் மகாவலியை வெறுத்து பார்த்தாள். அவள் கண்களில் இருந்தே மகாவலி ஊற்று எடுப்பது போல் இருந்தது!

 

சட்டென்று யாரோ  அவளின் பட்டு போன்ற  நீண்ட கூந்தலை மெல்ல வருடுவதை உணர்ந்தாள். திடுக்கிட்டு திருப்பி பார்த்தாள். அவளின் வஞ்சக காதலன் தான் அங்கு நின்றான். அவள் துள்ளி எழும்பி , அவன் கையை தட்டிவிட்டாள். தனக்கேற்றவனாக கருதிய தலைவனை இன்று கோபத்துடன் பார்த்தாள். அவளின் சங்கு கைவளையல் மெல்ல நழுவி ஆற்றில் விழுந்தன. அதை அவள் பொருட்படுத்தவில்லை. அது அவளுக்கு இனி முக்கியமும் இல்லை.

 

ஆனால் அவளின் காதலனோ, தனக்கு கிடைத்த சந்தர்ப்பம் இதுவென, ஆற்றில் குதித்து, அதை எடுத்து, அவளை பின் தொடர்ந்து சமாதானப் படுத்த பல பொய்கள் சொல்ல தொடங்கினான். அவளுக்கு  சிரிப்பு தான் வந்தது. தன் காதலனை காண, தினம் சீவி சிங்காரித்து பொன்மகளென வரும் இவள் இன்று மகா காளியே வந்தது போல, தீ பாயும் கண்களுடன் அவனை பார்த்தாள். உன் புது காதலிக்கு இது என் பரிசு என்று சொல்லி அந்த வளையலை தட்டிவிட்டாள்.

 

அவள் கலைப்பீட மாணவி அல்லவா, அவள் மனதில் சிலப்பதிகாரத்தின் சில கானல் வரிகள் அம்பு போல் அவள் நெஞ்சை குத்திக்கொண்டு இருந்தன. ஐயனே. கடலில் தோன்றும் சங்கையும் முத்துக்களையும் பார்த்து வானத்து நிலாவும் மீன் கூட்டமும் என்று எண்ணிக்கொண்டு ஆம்பல் ஏமாந்து பூக்கும் போல் நான் ஆகிவிட்டேனே ? [விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே, விளங்கும் வெள்ளைப்புரி வளையும் முத்தும் கண்டு-ஆம்பல் பொதி அவிழ்க்கும்] அவள் தன்னையே நொந்தாள், அவன் ஏதோ  சொல்லி சொல்லி சத்தியங்களும் செய்ய தொடங்கினான். அவள் அது எதையும் ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை. ஐயனே, மாதரார் கண்களையும், மலர்ந்த நீல மலர்களையும் பார்த்து எது உண்மையான பூ என்று தெரியாமல் வண்டு ஊசலாடும், அப்படி என் நிலையும் வந்து விட்டதே! [மாதரார் கண்ணும், மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீலப் போதும், அறியாது-வண்டு ஊசலாடும்]

 

'அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு' இவையெல்லாம் களவியலுக்கு மட்டும் தான்!. அது அவளுக்கு நன்றாக தெரியும். கரப்பான் பூச்சியைப் பார்த்தால் விளக்குமாறால் ஒரு  போடு போடும் அவள், காதல் களவியலில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் "ஐயோ! கரப்பான்".. என அலறி காதலன் மேல் சாய்ந்த காலம் இன்று மலையேறி விட்டது. நேராகவே கண்ணகி போல் வாதாட தொடங்கினாள்!

 

இனி தன் சமாளிப்புக்கள், வேடங்கள் சரிவராது என உணர்ந்த அவன், அவள் செருப்பு எடுத்து, துரத்தும் முன், தானாக அவள் மேல் பொய்க்குற்ற சாட்டுக்கள் சுமத்தி நழுவி சென்றான். ஆனால் அவள் துணிந்து விட்டாள். ஏய்  'காதல் வேண்டாம் போ' டா என ஒருமையில் முதல் முதல் விறல் சுட்டிக் காட்டி அவனை திட்டியே விட்டாள்!              

 

அவனும் அங்கு நின்றால் பிரச்சனை வளரும் என்று அஞ்சி, உடனடியாகவே தன் விடுதிக்கு திரும்ப தொடங்கினான். ஆனால்  அவள் மனது ஓயவில்லை. அது தன் பாட்டில் சில வரிகளை இயற்றிக்கொண்டு தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டு இருந்தது! 

 

"காதல் இல்லை கனிவும் இல்லை

காத்தரமான ஒரு வாழ்வும் இல்லை

காலம் முழுதும் அவன் ஏமாற்றி

காமம் தணிக்கும் உடல் நானல்ல !"

 

என்றாலும்:

 

"அன்பு வேண்டி உள்ளம் போராடுகிறது

அணைப்பு தேடி உடல் போராடுகிறது

அயர்ந்து தூங்க கண் போராடுகிறது

அலுப்பு தட்டி உயிர் போராடுகிறது !"

 

அவள் தன் கட்டிலில், உடை கூட மாற்றாமல்  அப்படியே உறங்கி விட்டாள்!    

 

:-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

No comments:

Post a Comment