...எலும்பியல் நோய் பற்றி தெரியுமா?
இளவயதில் மாதவிடாய் நின்றுபோவதால், இந்தியாவில் இளம்பெண்கள் பலர் எலும்பு மெலிதல்
என்று சொல்லப்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்படுவதாகவும், மாறிவரும் வாழ்க்கை சூழல்
காரணமாக ஐந்தில் ஒரு பெண், இந்த நோய் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாகவும் சென்னையைச்
சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அஸ்வின் விஜய் கூறுகிறார்.
மாறிவரும் உணவுப் பழக்கம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து குறைபாடு, உடலுழைப்பு இல்லாததால்
ஏற்படும் அதிக உடல்எடை உள்ளிட்ட பலவிதமான காரணங்களால் எலும்பு மெலிதல் நோய்க்கு
ஆளாகும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை தருவதாக மருத்துவர் அஸ்வின்
விஜய் கூறுகிறார். ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் இந்த நோயால் அதிகம்
அவதிப்படுவதாகவும்,
பெரும்பாலான சமயங்களில் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாமல்
போவதால், இதற்கான கவனமும்
குறைவாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
எலும்பு மெலிதல் நோய் ஏன் அதிகளவில் பெண்களை பாதிக்கிறது என்று கேட்டபோது, ''ஆண்களுக்கு உடலில்
டெஸ்ட்ரோஸ்டோன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. அதேபோல பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் என்ற
ஹார்மோன் சுரக்கிறது. மாதவிடாய் நின்றுபோனால், இந்த ஹார்மோன் சுரப்பது
மிகவும் குறைந்துவிடுகிறது. அதனால், சராசரியாக 48 முதல் 52 வயதில் பெண்களுக்கு இந்த
ஹார்மோன் சுரப்பது பெரும்பாலும் குறைந்துபோகிறது. எலும்புகள் வலுவாக இருப்பதற்கு
ஈஸ்ட்ரோஜென் முக்கியம். அதன் சுரப்பு குறைந்துவிடுவதால், ஆண்களை விட, பெண்களுக்கு எலும்பு
மெலிதல் அதிகமாக தாக்குகிறது,''என்கிறார் மருத்துவர் விஜய்.
அதேநேரம், உணவுப் பழக்கத்தில்
ஏற்பட்டுள்ள மாற்றமும் எலும்பு உறுதியை குலைக்கிறது என்கிறார் அவர். ''பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை அதிகம்
எடுத்துக்கொண்டால்,
ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரிக்கும். தொடர்ந்து ஏசி
பொருத்திய வளாகத்தில் வேலைபார்ப்பது, சூரிய வெளிச்சத்தைப் பார்க்காமல் இருப்பது
போன்றவற்றால், உடலில் கால்சியம்
மற்றும் வைட்டமின்-டி குறைவாகும். இந்த இரண்டும் குறைவாக இருக்கும் நபர்களுக்கு
விரைவில் எலும்பு மெலிதல் நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். சூரிய வெளிச்சத்தில்
கிடைக்கும் வைட்டமின் டி சத்து குறைவாக இருந்தால், கால்சியம் சத்தை
உறிஞ்சும் தன்மை உடலில் குறைவாக இருக்கும். வைட்டமின் டி மற்றும் கால்சியம்
குறைவாக இருந்தால்,
எலும்பு பலவீனமாகும்,''என்கிறார் மருத்துவர் அஸ்வின் விஜய்.
கால்சியம் மாத்திரைகள் மற்றும் வைட்டமின் டி சிரப் உள்ளிட்டவற்றை
எடுத்துக்கொள்வதால் எலும்பு மெலிதலை கட்டுப்படுத்த முடியுமா என்று கேட்டபோது, '' இந்த நோயை முற்றிலுமாகத்
தீர்க்க எந்த மருந்தும் கிடையாது. உணவுப் பழக்கத்தை மாற்றவேண்டும், உடல் உழைப்பு அல்லது
ஏதாவது ஒரு உடற்பயிற்சியை தினமும் செய்யவேண்டும், எளிய பயிற்சியாக
இருந்தாலும், தினமும்
பின்பற்றி மூட்டுகளை வலுவாக்க வேண்டும். ஊட்டச்சத்து மாத்திரைகளை
எடுத்துக்கொண்டாலும், அவை உணவுக்கு ஈடாகாது. சூரிய வெளிச்சத்தில் நிற்பது, வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, கொய்யா உள்ளிட்ட பழங்கள், பச்சை காய்கறிகளை தினமும்
ஒரு வேளையாவது எடுத்துக்கொள்வது, இரவு உறக்கம் , உடற்பயிற்சி மட்டுமே தீர்வாகும்,''என்கிறார் அவர்.
பெண்கள் பலரிடம் எலும்பு மெலிதல் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், அந்த நோய் ஏற்பட்டபோதும்
அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது என்கிறார். உடல்வலி, மூட்டுவலி உள்ளிட்டவை
பொதுவான வலிதான் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதும், வீட்டுவேலைகளில் மூழ்கும்
பெண்கள் பலர் தங்களுடைய வலிகளுக்கு அவ்வப்போது வலி தீருவதில்தான் கவனம்
செலுத்துகிறார்கள் என்கிறார். ''இளம் பெண்களுக்கு கூட எலும்பு மெலிதல் ஏற்படும்
காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதால் , பெண்கள் தங்களுக்கு அதிகமான வலிகளை உணரும்போது, அதைப் பற்றி கவனம் கொண்டு
எலும்புக்கு உறுதி சேர்ப்பது அவசியம். கவனக்குறைபாட்டால் இளம்வயதில் முதியவர்களைப்
போல வாழ நேரிடும்,''என்கிறார்.
:::எழுதியவர்,பிரமிளா
கிருஷ்ணன் -/-பிபிசி தமிழ்
No comments:
Post a Comment