ஊக்கமும் உந்துதலும் உனக்குள்ளே
“பலர் எழுதுவதும்
அரைத்த மாவையே அரைப்பதுபோல் — ஒரே மாதிரி — இருக்கிறது. நீங்கள் எப்படி
வித்தியாசமாக எழுதுகிறீர்கள்?” இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் என்மேல்
தொடுக்கப்பட்ட கேள்வி இது.
“எதையும், `இப்படித்தான்
இருக்கவேண்டும்,’ என்று பிறர்
சொல்வதை ஏற்காதீர்கள். அது குழந்தைகளுக்குத்தான் சரி. `ஏன் இப்படி
இருக்கக்கூடாது?’ என்று
சிந்தித்துப்பாருங்கள்,” என்றேன்.
அதன்பின், என்னைத்
தனிமையில் சந்தித்த ஒரு பெண்மணி, “நானும் உங்களைமாதிரிதான் — எல்லாவற்றையும்
வித்தியாசமாக யோசிப்பேன். எழுதவேண்டும் என்று மிகவும் ஆசை,” என்றுவிட்டு, “ஆனால், பிறர் என்ன நினைப்பார்களோ
என்று பயமாக இருக்கிறது!” என்றாள்.
உலுக்கும் உலகு
நம்மைச் சுற்றியிருக்கும் பலரும் நம்மைக் கீழே இழுக்கக்
காத்திருப்பார்கள். நம் எண்ணத்தில் உறுதியாக இருந்தால், தோல்வி
அடைவது அவர்களாகத்தான் இருக்கும்.
இதை ஒட்டித்தான், “பழி வாங்குவது பலகீனமானவர்கள் செய்வது. மன்னிப்பது
திடமானவர்களின் குணம். நம்மை உலுக்குபவர்களை அலட்சியம் செய்வது அறிவுடையோரின்
தன்மை,” என்று அலசுகிறார்
திரு.அனுபவசாலி.
ஆசை இருக்கு. ஆனால் சந்தேகமும் கூடவே வருதே!
நமக்கு என்னென்னவோ செய்யவேண்டும் என்ற ஆசைகள் இருக்கலாம். ஆனால், அதைப்பற்றியே
யோசிக்கும்போது, வேண்டாத
சந்தேகங்களும் எழத்தான் செய்யும். அவற்றைத் தவிர்க்கமுடியாது.
அதற்காக, `இதைச் செய்யலாம், இதைச் செய்யலாம்,’ என்ற கனவுலகிலேயே
சஞ்சரித்து, அதிலேயே திருப்தி
அடைந்துவிட்டால் எப்படி? எதையும் ஆரம்பித்தால்தானே முடிக்க முடியும்?
`இப்படிச்
செய்யப்போகிறேன்,’
என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும் அபாயம்.
கதை::
ரகுராமன் கனவுகளிலேயே நிறைவு காண்பவர். அறிவில் சிறந்திருந்தாலும், `அட! தனக்கு இவ்வளவு
கற்பனை வளம் இருக்கிறதே!’ என்று ஆச்சரியம் கொண்டவராக, தான் நினைப்பதையெல்லாம்
பிறரிடம் கூறுவார்.
நெடுஞ்சாலைகளில் வளைந்த இடங்களில் வாகன விபத்துகள் அதிகம் நிகழ்கின்னறன என்று
படித்ததும், அவருக்கு ஓர்
எண்ணம் உதித்தது. சாலை ஓரமாக, வாகனம் ஓட்டுபவர்களின் கண்ணில் படும் நிலையில்
ஒருவித விளக்குகள் பொருத்தினால் என்ன என்று யோசித்தார்.
தன் எண்ணத்தை `நண்பன்’ என்று
கருதிய ஒருவனிடம் ரகுராமன் தெரிவித்தபோது, அவன் `இதெல்லாம் நடைமுறைக்கு உதவாது,’ என்றான் அலட்சியமாக.
தன்மீதுள்ள அக்கறை, தான் தோல்வியுறுக்கூடாது என்ற நல்லெண்ணம் நண்பனுக்கு என்று
எண்ணினார் அந்த அப்பாவி.
பெருமிதத்துடன்,
அதை எவ்வாறு தயாரித்து, எப்படிப் பொருத்தவேண்டும்
என்று விரிவாக விளக்கினார். அதுதான் அவர் செய்த மாபெரும் தவறு.
ரகுராமனுடைய கற்பனையில் உதித்த கண்டுபிடிப்பைத் தானே தயாரித்ததுபோல் அந்த
நண்பன் தகுந்த இடத்தில் கூற, அது நடைமுறைக்கு வந்தது. திருடியவனுக்குப்
பெருமளவு லாபம்!
எந்தத் துறையானால் என்ன! நம் வாயைப்பிடுங்கி, நம் யோசனைகளையெல்லாம்
தமது என்று சொல்லிக்கொள்ளும் இரண்டாந்தார மனிதர்கள் இல்லாமலா போவார்கள்!
இவர்களுக்குச் சுயமாகச் சிந்திக்கும் திறன் கிடையாது. ஆனால், சிந்தனை வளம் உடையவர்களை
ஏளனம் செய்வதுபோல் பாசாங்கு செய்து, உண்மையை வரவழைக்கும் சாமர்த்தியம் உண்டு.
உன்னையே ஊக்கிக்கொள்
நமக்குச் சரியென்று தோன்றுவதை, பிடித்ததைச்
செய்யும்போது பிறரது உந்துதல் தேவையில்லை. பிறர் ஊக்கம் அளிக்கவேண்டும் என்று
எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் விளையும்.
ஊக்கம் என்பது தனக்குத்தானே அளித்துக்கொள்வது.
“தன்னையே நம்புகிறவன்தான் பிறருடைய
நம்பிக்கைக்குப் பாத்திரமாக முடியும்” (யூதர்களின் பழமொழி).
ஒரே இடத்தில் உட்கார்ந்து, யோசனை செய்தபடியே இருந்தால் அவநம்பிக்கை
பெருகிவிடும். அப்போதுதான் பிறரது ஆலோசனையை, அவர்களது பக்கபலத்தை, நாடத் தோன்றுகிறது. நாம்
செய்யப்போகும் காரியத்திற்குப் பிறரது உத்தரவு ஏன்?
`முடியாத காரியம்’
என்று நாம் கைவிட்டதைப் பிறர் எப்படிச் செய்து முடிக்கிறார்கள்?
அவர்களுக்கு அதிகத் திறமை இல்லாமல் இருக்கலாம். பயம் எழும்போதெல்லாம், வேறொரு காரியத்தில்
ஈடுபடுகிறார்கள். அதனால் தெளிவும் பெறுகிறார்கள். விருப்பத்துடன் உழைப்பதால்
வெற்றி அடைகிறார்கள்.
கதை::
மறைந்த என் மகனைப்பற்றி நான் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பிக்கும்போது, அதைப் பிரசுரிக்கும்
எண்ணமே வரவில்லை. என் நினைவுகளைப் பதிவு செய்வதற்காக ஆரம்பித்தேன்.
பல நினைவுகள் ஒரே சமயத்தில் எழ, சில நாட்கள் ஒரே மூச்சில் பதினாறு பக்கங்களைக்
கைப்பிரதியாக எழுத முடிந்தது. பேசுவது குறைந்தது.
“உனக்கு
வேண்டுமானால் அது பெரிய துக்கமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு என்ன வந்தது? நீ எழுதுவதை ஏன்
படிப்பார்கள்?” என்று
அவநம்பிக்கை தெரிவித்தவள், பொறாமையால்
பேசுவது புரிந்து,
அவளை அலட்சியம் செய்தேன்.
நான் எழுதும்போதே அதைப் படித்து, ஊக்கமளித்துவந்த என் கவுன்சிலர்-தோழியோ, `நீ கண்டிப்பாக இதைப்
பிரசுரிக்கவேண்டும். இதனால் பலருக்கு நன்மை,’ என்று வற்புறுத்தினாள்.
கதை::
குழந்தையே வேண்டாம் என்று உறுதியாக இருந்தாள் ஸியூ ஙா. என்னுடன் பணிபுரிந்த
இளம்பெண் அவள்.
நான் எழுதியதை உடனுக்குடன் படித்ததும், சிறு வயதில், தந்தை தன் குடும்பத்தைக்
கொடுமை செய்திருந்தால் என்ன, தான் இப்போது ஒரு நல்ல அம்மாவாக இருக்கமுடியாதா
என்ற எண்ணம் பிறந்தது அவளுக்கு.
`தாய்-குழந்தைக்கு
இடையே இவ்வளவு அருமையான நெருக்கம் இருக்க முடியுமா!’ என்று பிரமித்தாளாம். அதன்
விளைவாக, தன் முடிவை
மாற்றிக்கொண்டாள். சீக்கிரத்திலேயே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
தோழி கூறிய இக்கதையைக் கேட்டவுடன், `யார் பிரசுரிப்பார்கள்?’ என்ற ஐயம் எழுந்தது.
பதிப்பாளர்கள் நம்மைப்பற்றிப் பிறரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்வார்கள்
என்பதால், `ஆங்கில
தினசரிக்கு அடிக்கடி எழுது. அன்றாட நிகழ்வுகளை ஒட்டி இருக்கவேண்டும்,’ என்றெல்லாம்
குடும்பத்தினரால் எனக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
வெளியாகும் ஏதாவது செய்தியைக் குறித்து என் கருத்துக்களை கணினியில்
உடனுக்குடன் எழுதி அனுப்ப முடிந்தது. நான் அனுப்பிய பல கடிதங்கள் Letter of the day என்ற பகுதியில்
வந்தன. அனுப்பிய அடுத்த நாளே பிரசுரமாக, நம்பிக்கை எழுந்தது.
அத்துடன், இந்திய
கலைத்துறையில் விமர்சனம், சமூக இயல் சம்பந்தமான, நகைச்சுவையுடன் கூடிய கட்டுரைகள். (அடிக்கடி
என் கணவரின் மண்டை உருளும்!).
சில நாட்களில்,
மூன்று வெவ்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் வெளியாகின.
ஆரம்பத்தில் எழுந்த தயக்கம் மறைந்தது. பதினான்கு ஆண்டுகள் இப்படிக் கழிந்தன.
`உங்கள் எழுத்துலக
அனுபவங்கள்?’ என்று அயல்நாட்டு
பதிப்பாளர் கேட்டு அனுமதிக்க, தமிழில் எழுதியவைகளையும் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து, புத்தக வடிவில்
கொணர முடிந்தது.
சிலரிடம் எதைப்பற்றியாவது விவாதித்தபின், “நீங்கள் எப்படி எழுதப்போகிறீர்கள்?” என்று ஆர்வத்துடன்
விசாரிப்பார்கள்.
“எப்படி
எழுதப்போகிறேன் என்று எனக்கே இப்போது தெரியாதே!” என்று உண்மையை ஒப்புக்கொண்டால்
கோபிப்பார்கள்.
கரு கிடைத்தவுடன் எழுத ஆரம்பித்தால் அந்த அவசரம் எழுத்துப்படிவத்தில்
வெளிப்பட்டுவிடும். படபடப்பு இல்லாது, நிதானமாக யோசித்து எழுதினால்தான் சுவையாக
இருக்கும்.
இது புரியாது,
பிறர் நம்மைத் தவறாகப் புரிந்துகொண்டால்…, விடுங்கள்!
மனிதர்களை மாற்ற முடியாது. புரிந்துகொண்டால் போதாதா?
::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.
No comments:
Post a Comment