நல்லவரை இனங்காண்பது
“என் மகள் கல்யாணத்திற்குமுன் கலகலப்பாக
இருப்பாள். இப்போது அதிகம் பேசுவதில்லை. சாந்தமாக, பொறுப்பாக இருக்கிறாள்,” என்று கூறும் பெற்றோர் மகளின் மாற்றம் அவளுக்கு நல்லதுதானா, அல்லது வயது
கூடியதால் நேர்ந்ததா என்று யோசிப்பதோ, அதனால் கவலைப்படுவதோ கிடையாது. ஏனெனில், அனேகமாக எல்லாப்
பெண்களுமே இப்படித்தான் மாறுகிறார்கள்.
::கதை::
பல இளைஞர்கள் தங்கள் நண்பனுடைய திருமணத்திற்கு வெவ்வேறு ஊர்களிலிருந்து
வந்திருந்தார்கள்.
மணமகனுடைய உறவுக்காரப்பெண் மல்லிகா அவர்களுடன் கல்லூரியில் மேற்படிப்புப்
படித்தவள். பழைய நண்பர்களைப் பார்த்ததும் உற்சாகம் பெருக, அவர்களுடன்
உட்கார்ந்து, பழைய
நாட்களைப்போல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.
ஆனால், ஒரு வித்தியாசம்.
மல்லிகாவுக்கு இப்போது கல்யாணம் ஆகி, பிள்ளைகளும் இருந்தார்கள். மாமியார் முகம்
சுண்டிப்போயிற்று.
கல்யாணத்திற்கு முன்பு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். எப்போதும்
அப்படியா!
`இவள் கண்ட
ஆண்களுடன் பேசினால்,
பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்!’ என்று ஆத்திரப்பட்டாள்.
தன் மகனுக்குத் தூபம் போட்டாள்.
காதலித்து மணந்த மனைவியின் போக்கை அவன் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. “நாங்க
எல்லாரும் ஒண்ணாப் படிச்சவங்கம்மா,” என்றான் அலட்சியமாக.
கணவனோ, மாமியாரோ, ஒரு பெண்
செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் கூர்ந்து கவனித்துக்கொண்டு, அதில் குற்றம்
கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால் அப்பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்?
`பெரியவர்களை
மதித்து நட,’ என்று தாயும், கணவரும் போதிக்க, குடும்பத்தில்
பிரச்னைகளைத் தவிர்க்க பழைய போக்கை மாற்றிக்கொள்வாள் — மகிழ்ச்சியுடன் என்று கூற
முடியாது.
::கதை::
காமாட்சிக்குத் தான் பெற்ற குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதோடு திருப்தி
கிடைக்கவில்லை. வீட்டுக்குப் பெரியவள்
என்ற முறையில், பேரக்குழந்தைகளுக்கும்
தானே பெயர் வைக்கவேண்டும் என்பது அவள் நம்பிக்கை.
ஆனால், புதுமையாக, நாகரிகமாக, தான் பெற்ற அருமை
மகளுக்குப் பெயர் வைக்கவேண்டும் என்று ஒரு மருமகள் எண்ணினாள். அப்படி ஒரு பெயரை
யோசித்தும் வைத்திருந்தாள்.
`இந்தத் தெருவில்
எல்லார் வீட்டிலும் அந்தப் பெயர்கொண்ட ஒரு சிறுமி இருக்கிறாள். நன்றாக
இருப்பதால்தானே வைத்திருக்கிறார்கள்!’ என்பது காமாட்சிப்பாட்டியின் எண்ணம்.
`நாளைக்கு என்
குழந்தை தெருவில் போகும்போது அந்தப் பெயரைச் சொல்லி அழைத்தால், பல குழந்தைகள்
திரும்பிப் பார்க்கும்!’ என்பது மருமகளுடைய வாதம்.
`நான் சொல்வதை
யார் கேட்பார்கள்!’ என்று மாமியார் அரற்றினாள். இறுதியில், அவள்
பிடிவாதம்தான் வென்றது.
இவ்வாறு, `நீ என்னைக்
கஷ்டப்படுத்துகிறாய்!’ என்பதுபோல் தன்னிரக்கத்துடன் பேசுவதால் மற்றவர் மனதைத்
துன்புறுத்துகிறோம் என்று சிலருக்குப் புரிவதில்லை.
நம்மிடம் ஓயாது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு, `உன்
நன்மைக்காகத்தான் சொல்கிறேன்,’ என்று
சப்பைக்கட்டுக் கட்டுபவர்கள் உற்றவர்கள் அல்லர்.
::கதை::
“என் பெண்ணின்
முகத்தில் சிரிப்பே மறைந்துவிட்டது. `ஏன் எனக்குக் கல்யாணம் செய்துவைத்தாய்?’ என்று
கோபிக்கிறாள்,” என்று ஒரு தாய்
என்னிடம் குறைப்பட்டாள்.
மாப்பிள்ளை நல்லமாதிரிதான். பின் என்ன குறை?
“வெளியில்
எங்காவது போனால், பட்டுப்புடவைதான்
கட்டிக்கொண்டு போகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறாளாம் மாமியார். இவளுக்கோ, நைலக்ஸ்தான்
பிடிக்கிறது!’
உடுத்துவது ஒவ்வொருவருடைய சொந்த விருப்பம். சிறு சமாசாரம்தான். ஆனால், ஒருமுறை
விட்டுக்கொடுத்தால்,
தம் பிடியை இறுக்கிக்கொள்வார்களே, அதிகாரம்
செலுத்துபவர்கள்!
புன்சிரிப்பு மறையாது, `இதைத்தான் சாப்பிட வேண்டும், இப்படித்தான்
நடக்கவேண்டும்,’ என்று பிறரைத்
தொணதொணத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இறுதியில் ஏமாற்றம்தான் கிட்டும் – அவர்கள்
எவ்வளவு இனிமையாகச் சொல்வதாக நினைத்தாலும்.
இம்மாதிரியானவர்களால் நம் நேரம்தான் விரயமாகிறது. அவர்கள் சுயநலம்
பிடித்தவர்கள், அல்லது
பொறாமையால் அப்படிப் பேசுகிறார்கள் என்று புரிந்துகொண்டால் பிழைக்கலாம். ஏனெனில்
அவர்கள் செய்வது உணர்ச்சிபூர்வமான வதை.
கேள்வி: ஏன் வதை? அக்கறையுடன், நம் நன்மைக்குத்தானே சொல்கிறார்கள்?
பதில்: “உனக்கு சந்தர்ப்பத்துக்குச் சரியாக நடக்கத் தெரியாது. அறிவோ, அனுபவமோ போதாது!”
என்று மறைமுகமாக மட்டம் தட்டுவது போலில்லை?
உடனிருப்பவர் பழித்துவிடுவாரே என்று பயந்து, எந்தக்
காரியத்தைச் செய்யும்போதும் அதீத கவனத்துடன் செய்தால், அல்லது
விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால், ஒருவரது தன்னம்பிக்கை குறைந்துகொண்டே
போய்விடாதா!
“இம்மாதிரி
ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து, உடலும் மனமும் ஒருங்கே பாதிக்கப்பட்டு
வாழ்வதைவிட தனியாக இருந்து ஆரோக்கியமாக இருப்பது மேலானது,” என்கிறார் ஓர்
அனுபவசாலி.
உபயோகமான, மகிழ்ச்சி
மட்டுமே அளிக்கும் உறவுகள் நம் கனவுகள் நனவாக கூடியவரை ஒத்துழைப்பார்கள். அப்படி
இல்லாவிடினும், `இது நடக்கிற
காரியமா!’ என்று அவநம்பிக்கை தெரிவிக்காமலாவது இருப்பார்கள்.
ஒருவர் துக்கத்தில் ஆழ்ந்திருக்கையில் ஆறுதலாக இருக்கும் நபர்தான்
நல்ல நண்பர்.
::கதை::
ஒரு நாளிரவு,
“உன்னை நாளைக்குப் பார்க்கமாட்டேன்னு தோணுது!” என்று கணவன்
சொல்ல, சரோ சிரித்தாள்.
“ராத்திரி அப்படி எங்கே போயிடப்போறீங்க?”
அப்போது இருவருமே எதிர்பார்க்கவில்லை, அவன் இவ்வுலகைவிட்டே போகப் போகிறான் என்று.
சரோவால் அந்த அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை.
`முப்பது வயதுகூட
நிரம்பவில்லை! இவள் என்ன பாவம் செய்தாளோ!’ என்பதுபோல், அவள் காதுபடவே
சிலர் கரித்தார்கள்.
. அடுத்த சில ஆண்டுகளில், சரோ மேற்படிப்பைத் தொடர்ந்து, நல்ல
உத்தியோகத்திலும் அமர்ந்தாள். முன்பு பழித்தவர்கள் இப்போது சொந்தம் கொண்டாட
வந்தபோது அவளுக்கு உலகம் புரிந்தது.
வெளியூரில் இருந்த தன் இல்லத்திற்கு தூரத்து உறவினளான சுந்தரியை வற்புறுத்தி
அழைத்து, நன்கு
உபசரித்தாள். அவளுடைய சுந்தரி வயதில் மூத்தவள்
`ஒரு மாதம், தினமும், இரண்டு மைல்
தொலைவிலிருந்த என் வீட்டிற்கு நடந்தே வந்து, ஆறுதலாகப் பேசினீர்களே! அந்த நன்றியை மறக்கவே
மாட்டேன்!’ என்று திரும்பத் திரும்பச் சொன்னாளாம், நன்றிப்
பெருக்குடன்.
இப்படிப்பட்ட நண்பர்கள் வெவ்வேறு துறையில் ஈடுபாடு கொண்டவராக இருக்கலாம். ஒத்த
மனத்தினராக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. வயது வித்தியாசமும் பெரிதில்லை.
நல்ல நண்பரை எப்படி இனங்கண்டுகொள்வது?
அவருக்காக நாம் மாற வேண்டியிருக்காது. நம் கடந்த காலப் பிழைகள் அவருக்குத்
தெரிய வந்தாலும், எதிர்காலம்
சிறப்பாகத்தான் அமையும் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கிறபடியே நம்மை ஏற்பார்.
பிரதிபலனை எதிர்பாராது, நம்மை ஊக்குவிப்பார்.
நம்மையே நமக்கு உணர்த்துகிறவர். நம் வெற்றிக்காகப் பெருமைப்படுகிறவர்.
நம் இழப்புகள்,
குறைகள் பெரிதாகத் தோன்றாதுபோக, நம்மை நம்மால்
ஏற்கமுடியும்.
அவர் அண்மையில் இருக்கையில், நாம் அதிகம் சிரிப்போம்.
நாம் என்ன சொன்னாலும், மனதில் எதை நினைத்து அப்படிச் சொல்கிறோம் என்பது அவருக்குப்
புரியும்.
இப்படி ஒருவர் கிடைத்தால், அவரை SOULMATE (ஆத்மார்த்தி)
என்கிறோம்.
இப்போதெல்லாம், இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்தால் அவர் நாணுவதில்லை. நல்லவர்களை `ஏமாளி’ என்று எண்ணிவிடும் காலம் இது.
நமக்கென்று சில உண்மையான நண்பர்கள் கிடைக்காமலா போவார்கள்!
::--நிர்மலா ராகவன்
-/-எழுத்தாளர்,
சமூக ஆர்வலர்.
மலேசியா.
No comments:
Post a Comment